புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part5)

சனங்கள் தங்களின் சேமிப்பிலும் சேகரிப்பிலுமிருந்த பொருட்களையே எடுத்துச்செல்ல முடியாத நிலையில் படை நடவடிக்கைகள் தீவிரமடைந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தில் கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்க்கும்படியும், போருத்திகளை மாற்றி அமைக்குமாறும், அமைதிப் பேச்சுக்குத் திரும்பும்படியும் இந்தியாவோடு இணக்கத்துக்குப் போகுமாறும் சிலர் புலிகளை வலியுறுத்தினர். ஆனால் புலிகளின் தலைமையோ பிடிவாதமாக மரபுவழி இராணுவ நடவடிக்கையிலேயே குறியாக இருந்தது. வேறு எவருடைய எந்தவிதமான அபிப்பிராயங்களையும் அது பொருட்படுத்தத் தயாராக இருக்கவில்லை. சனங்கள் படுகின்ற அவலத்தையோ அவர்களின் துயரத்தையோ புலிகள் பொருட்படுத்தவில்லை. சிங்களத் தரப்பை மிகக் கொடூரமான வரலாற்று எதிரி என்று வர்ணித்து அதற்குத் தக்க பாடம் படிப்பிக்க வேண்டும் என்று தமது நடவடிக்கையை மேற்கொண்டனர். கிளிநொச்சியைப் படைத்தரப்பு கைப்பற்றும் வரையில் புலிகள் ஏதாவது உத்திகளைக் கையாண்டு படைத் தரப்பைச் சிதைத்து வெல்வார்கள் என்ற நம்பிக்கை சனங்களுக்கிருந்தது உண்மையே. அந்த நம்பிக்கையோடு தான் அவர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். தமது ஆட்சி, அதிகாரம் அரசுக் கட்டுமானம் என்ற கனவு குலைந்துபோகும் எனப் புலிகள் அஞ்சினார்கள். அதனாலேயே அவர்கள் மரபுவழியான நடவடிக்கையைத் தொடர்ந்தனர்.

கிளிநொச்சியைக் கைப்பற்றிய படையினர் ஆனையிறவினூடாக யாழ்ப்பாணத்துடன் இணைந்தனர். இந்த இணைவோடு யாழ்ப்பாணத்திற்குள் முடக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் இராணுவத்தினரும் படை நடவடிக்கையில் ஈடுபடும் நிலை உருவானது. உடனேயே தொடர்நடவடிக்கையைப் படைத்தரப்பு மேற்கொண்டு புலிகளை மேலும் விரட்டத் தொடங்கியது. ஜனவரி 15ஆம் திகதிக்குப் பின்னரான நிலைமைகள் இதனுடன்தான் ஆரம்பிக்கின்றன. உலகைக் குலுக்கும் நிலைமைகள் 2009 ஜனவரி 15க்குப் பின்னரான நடவடிக்கை வன்னி கிழக்கை நோக்கியது. ஏற்கனவே மணலாற்றில் இருந்து முல்லைத்தீவுப் பட்டிணம் வரையான பகுதியைப் படைத்தரப்புக் கைப்பற்றியிருந்தது. இதற்குள் புலிகளின் முக்கியமான தளபதிகள் பலரும் கொல்லப்பட்டிருந்தனர். அடுத்தது புலிகளின் உறுப்பினர்களிடமும் சனங்களிடமும் பெருமதிப்பைப் பெற்றிருந்த தாக்குதல் தளபதி பிரிகேடியர் பால்ராஜின் மரணம். (இவர் மாரடைப்பால் உயிரிழந்திருந்தார்.) இவை புலிகளைக் கடுமையாகப் பாதித்திருந்தன. அதிலும் கருணா அரசுடன் இணைந்திருந்ததனால் புலிகளின் போருத்திகள், படைவலு, பிரபாகரனின் சிந்தனைப் போக்கு, கள அமைவு எனச் சகலவற்றையும் கருணா படைத்தரப்புக்கு வழங்கியிருப்பார் என்ற அபிப்பிராயமும் உண்டு.

இவ்வாறு நிலைமைகள் பாதகமாக அமைந்திருந்த போதும் புலிகளின் ஊடகங்களும் உறுப்பினர்களில் பெரும்பகுதியினரும் ‘தலைமையின் மீது நம்பிக்கை வையுங்கள். எந்தச் சூழலிலும் நாம் தோற்றுப்போக மாட்டோம்’ என்று மக்களுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தனர். எந்த வகையான தருக்கமுமில்லாமல் வெறும் வாய்ப்பேச்சாகவே இந்தச் சொற்கள் இருந்தன. எவ்வளவுதான் புலிகளின் நம்பிக்கையூட்டல்கள் அமைந்தாலும் அதை நம்புவதற்குச் சனங்கள் தயாராக இல்லை. யுத்தமோ மிக மூர்க்கத்தனமாகச் சனங்களைத் தாக்கிக்கொண்டிருந்தது. இப்போது சனங்களின் சாவு வீதம் சடுதியாக அதிகரிக்கத்தொடங்கியது. கட்டாய ஆட்சேர்ப்பு எல்லா வகையான வரம்புகளையும் மீறிக் குடும்பத்தில் எத்தனைபேரையும் எங்குவைத்தும் எப்படியும் பிடித்துக்கொள்ளலாம் என்றாகியது. முன்னர் போராளிக் குடும்பங்களும் மாவீரர் குடும்பங்களும் ஆட்சேர்ப்பில் விலக்களிக்கப்பட்டிருந்தன. இறுதியில் இந்த வேறுபாடுகள் எதுவும் கடைப்பிடிக்கப்படாமல் கண்டபடி ஆட்சேர்ப்பு நடக்க ஆரம்பித்தவுடன் சனங்களுக்கும் புலிகளுக்குமிடையில் முரண்பாடுகள் அதிகரித்தன. சனங்கள் புலிகளைப் பகிரங்கமாகவே எதிர்க்கவும் தாக்கவும் தொடங்கினர். அவர்களுடைய உடைமைகளுக்கும் வாகனங்களுக்கும் தீவைத்துக் கொளுத்தினர். இந்தக் கட்டத்தில் புலிகளின் கடந்தகால முஸ்லிம் விரோத நடவடிக்கைகளையும் பிற இயக்கங்கள் மீது புலிகள் விதித்த தடைகளையும் மேற்கொண்டிருந்த தாக்குதல்கள்; படுகொலைகளையும் புத்திஜீவிகள் மீதான கொலை அச்சுறுத்தலையும் சிலர் வெளிப்படையாகவே கண்டித்தனர். பிரபாகரனை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் சனங்கள் திட்டினர்.

(அருண் நடேசன்)

(தொடரும்….)

 

புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part6)

இதேவேளை ஜனவரி 15க்குப் பின்னர் வன்னி கிழக்கில் விசுவமடு தொடக்கம் மக்கள் கொல்லப்படத் தொடங்கினர். போர் மிகவும் உக்கிரமாக நடக்கையில் சனங்கள் இனி ஓடுவதற்கு இடமில்லை என்ற நிலை உருவானது. முல்லைத்தீவுக்கு அண்மையில் இருந்த ஓட்டுசுட்டான் புதுக்குடியிருப்புப் பகுதிகளையும் படைத்தரப்பு கைப்பற்றியதுடன் சனங்களின் கதி மிகவும் ஆபத்தாகியது. இங்கிருந்து புலிகள் சனங்களைக் கவசமாகப் பயன்படுத்தத் தொடங்கினர். ஏற்கனவே சனங்கள் வெளியேறுவதற்கு இறுக்கமான தடையை விதித்திருந்த புலிகள் மேலும் பாதுகாப்பு நிலையை உயர்த்திச் சனங்கள் எங்கும் தப்பிச் செல்லாதிருக்கும்படி பார்த்துக்கொண்டனர். சனங்களின் செறிவு அதிகரிக்கும் போது யுத்தமும் சனங்களுக்குக் கிட்டவாக, நெருங்கிய சூழலில் தாக்குதல்களில் சனங்கள் கொல்லப்படத் தொடங்கினர். இந்த நாட்களின் நிகழ்ச்சிகளை விவரிக்கவே முடியாது.

குறிப்பாகப் படையினர் விசுவமடு என்ற இடத்தை நெருங்கியபோது நடத்திய தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உடையார்கட்டுப் பகுதியில் இருந்து இந்தப் படுகொலை நாடகம் மிக உக்கிரமான நிலையில் ஆரம்பித்தது. தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டார்கள். ஏற்கனவே கைப்பற்றிய சில பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான சனங்கள் மட்டும் படையினரிடம் அகப்பட்டிருந்தனர். ஆனால் உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதிமீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் சனங்களை நிலைகுலைய வைத்தன. அவர்களைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் உபாயத்தைப் படைத்தரப்புக் கைக்கொள்ளத் தொடங்கியது. சனங்கள் என்ன செய்வது, எங்கே செல்வது, எப்படித் தப்புவது என்று தெரியாமல் திணறினர். கண்முன்னே சிதறிப் பலியாகும் உடல்கள். இரத்தமும் சிதிலமுமான சூழல். சாவோலம். தீயும் புகையுமாக எரியும் காட்சி. சடங்குகள் சம்பிரதாயங்கள் இல்லாமல் கொல்லப்படும் இடங்களிலேயே சடலங்களைப் புதைக்க வேண்டிய நிலை. சவப்பெட்டிகளே இல்லை. சடங்குகளுக்கு அவகாசமில்லை. ஆனால் சாவுகள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருந்தன. குடும்பம் குடும்பமாகக் கொலைகள் நடந்தன.

கடந்த ஐம்பது ஆண்டுகளாகப் பல நூற்றுக்கணக்கான படுகொலைகளைச் சந்தித்திருந்த ஈழத் தமிழ்ச் சமூகம் இப்போது நடந்த படுகொலைகளை ஜீரணிக்க முடியாமல் திணறியது. அந்தளவுக்கு அதன் அனுபவப்பரப்புக்கு அப்பால் முன்னெப்போதையும்விட மிக மோசமாக இந்தக் கொலைகள் நடந்தன. வீதிகள், காலனிகள், குடிசைகள் எங்கும் எங்கும் பிணக்குவியல்களே.

தாக்குதல்களும் சாவுகளும் இப்படித் தொடர்ந்து கொண்டிருக்கும்போது, அவலம் உச்சநிலையைக் கடந்துவிட்டபோதும் புலிகள் தமது நடவடிக்கைகளை மாற்றவில்லை. பதிலாகத் தமது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காதவர்களுக்கு எதிராகத் தாம் கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்திருப்பதாக அறிவித்துப் பகிரங்கத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். இந்த அறிவிப்புடன் அவர்களின் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. எதிர்ப்பைக் காட்டுகின்றவர்கள் தேசத்துரோகிகள், இனத்துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. இந்தத் தண்டனை சுட்டுக் கொல்லுதல் என்பது வரையில் சென்றது. சனங்கள் என்னதான் வந்தாலும் பரவாயில்லை என்று தீர்மானித்துப் படையினரிடமே தப்பிச் செல்லத் தொடங்கினார்கள். சிலர் கடல் வழியாகத் தப்பிச் சென்றனர். மிகச் சிலர் இந்தியாவுக்குத் தப்பி ஓடினர். இவ்வாறு தப்பிச் செல்லும் மக்களைத் தடுக்கும் நடவடிக்கையை அரசியல் துறையின் துணைப் பொறுப்பாளர் சோ. தங்கன் தலைமையிலான புலிகளின் அணிகள் மேற்கொண்டன. புலிகளின் தடையை மீறிச் சென்ற மக்களின் மீது அவர்கள் ஈவு இரக்கமின்றித் தாக்குதல்களை நடத்தினர். சில சந்தப்பங்களில் மக்களின் மீது எரிகணைத் தாக்குதல்களைக்கூட மேற்கொண்டனர். புலிகளின் இவ்வாறான தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட சனங்கள் கொல்லப்பட்டனர். படையினரின் கொலைவெறித் தாக்குதல்களில் இரண்டாயிரம் வரையான மக்கள் உடையார்கட்டு, சுதந்திரபுரம், வன்னிபுனம், தேவிபுரம், புதுக்குடியிருப்புப் பகுதிகளில் கொல்லப்பட்டனர்.

எனினும் புலிகளின் தடைகள், தாக்குதல்களையும் மீறிப் பதினைந்தாயிரம் வரையான சனங்கள் இராணுவத்தின் பக்கம் சென்றனர். புலிகளின் ஆட்பிடி மற்றும் பலவகையான பலவந்த நடவடிக்கைகள் ஒரு பக்கமும் படையினரின் தாக்குதல்கள் மறுபுறமுமாக இரண்டு தரப்புக்குமிடையில் சிக்கித் திணறினர் மக்கள்.

(அருண் நடேசன்)