இதேவேளை புலிகளின் பரப்புரைப் பகுதிகள் வன்னி நிலைபற்றி ஏற்கனவே மேற்கொண்டு வந்த புனைவை மேலும் விரிவுபடுத்தி திரிவுபடுத்தி மேலும் பொய்ப்பரப்புரைகளில் ஈடுபட்டன. படையினரின் தாக்குதல்களில் கொல்லப்படும் மக்கள் பற்றிய உண்மைச் செய்திகளுடன் மேலும் பல பொய்களையும் இணைத்துத் தமது பரப்புரையை இவை மேற்கொண்டன. கொல்லப் படும் மக்களின் எண்ணிக்கையை மெல்ல மெல்ல புலிகள் கூட்டிச் சொல்லவும் தொடங்கினர். அதேவேளை அரசுக்கெதிரான கண்டனப் பரப்புரையை யும் அவை தீவிரப்படுத்தின. ஏற்கனவே சமூக அமைப்புகள், சக்திகளைக் குலைத்து தமக்கிசைவான சமூகக் கட்டமைப்புகளை உருவாக்கியிருந்த புலிகள் அந்த அமைப்புகளைக்கூட இயக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். புலிகளின் ஆட்சி, நிர்வாகக் கட்ட மைப்புகள் சகலதும் தகர்ந்து ஆட்டம் கண்டது. போர் தொடங்கிய போதே தமது நிர்வாகக் கட்டமைப்புகள் சகலதையும் போருக்கும் ஆட்சேர்ப்புக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி வந்ததையும் இங்கே குறிப்பிட வேண்டும். புலிகள் அடிப்படையில் ஒரு இராணுவ அமைப்பு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்வது அவசியம்.
இது அவர்கள் பற்றிய விமர்சனம் அல்ல. முழு உண்மை. சகல வளங்களையும் தமது இராணுவ நடவடிக்கைகளுக்கும் வெற்றிக்குமாகவே பயன்படுத்திவரும் இயல்பு புலிகளினுடையது. தமது இராணுவ நடவடிக்கைகளுக்கான ஆதாரத் தளமாகவே அவர்கள் அவற்றைப் பயன்படுத்தினர். பிரபாகரன் எப்போதும் இராணுவ நடவடிக்கைகளிலும் இதற்கான தயார்படுத்தல்களிலும் வளங்களிலுமே கூடிய கவனத்தைச் செலுத்திவந்தார். அவருடைய அணுகு முறையே அரசியலில் இராணுவ மேலாதிக்கத்துக்கு முன்னுரிமை அளிப்பதாக இருந்தது. அதாவது புலிகளின் இராணுவ பலத்தின் மூலம் எதிரியையும் மக்களையும் வெல்ல முடியும் என்று நம்பிக்கை வைத்திருந்தார். தமது படையணிகளைக் கட்டமைப்பதிலும் தளபதி களைப் பெருக்குவதிலும் அவர் காட்டிய ஈடுபாட்டுக்கும் முன்னுரிமைக்கும் சமமாக அவர் பிற துறைகளில் எந்த ஆற்றலாளர்களையும் உருவாக்கவில்லை. எனவே எல்லா நிர்வாகத் துறைகளும் துணை அலகுகளும் அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் அளிப்பவையாகவே இருந்தன. அப்படியே அவற்றைப் பிரபாகரன் உருவாக்கியிருந்தார்.
எனவே சிதைந்த அந்த நிர்வாகக் கட்டமைப்புகள் சனங்களைப் போரை நோக்கித் திருப்புவதில் மும்முரமாகின. சனங்களோ அதுவரையிலும் நிபந்தனையற்ற முறையில் எல்லா வகையான தவறுகளுக்கும் அப்பால் அளிந்துவந்த தமது ஆதரவுத் தளத்தை மாற்றித் ‘தப்பினால் போதும்’ என்ற கட்டத்துக்கு வந்தனர். புலிகளால் சிறிலங்கா இராணுவத்தை வெல்லவும் முடியாது. தங்களையோ சனங்களையோ காப்பாற்றவும் முடியாது என்று அவர்கள் புரிந்துகொண்டனர். எனவே அவர்கள் எப்படியும் வன்னியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் புலிகளின் ஊடகங்கள், இணையதளங்கள் எல்லாம் வேறு கதைகளையே பேசின. தமிழகம் உட்படப் புலம்பெயர் நாடுகள் வரையில் இந்தப் பொய்ப்பரப்புரையின் மண்டலம் நீண்டது, புலம் பெயர் மக்களுக்கு வன்னியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. இந்த அறியா நிலையைப் பிரபாகரன் தனக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இதேவேளை புலிகளும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் ‘புலிக் குடும்பங்கள்’ என்ற உயர்மட்டத் தலைவர்களின் குடும்பங்களும் எப்படியும் படைத்தரப்பை எதிர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று வாதிட்டனர். ‘சிங்களப் படைகளிடம் மண்டியிடுவதை விடவும் இறுதிவரைப் போராடிச் சாவது மேலானது’ என்று அவர்கள் சொன்னார்கள். ‘போராட்டம் என்பது விடுதலையுடனான வாழ்வைப் பெறுவதற்கே’ என்று சிலர் வலியுறுத்தியபோது அதைப் பொருட்படுத்தாது, பிரபாகரன் 300 போர் வீரர்கள் (The Three Hundred) என்ற ஆங்கிலப் படத்தின் தமிழாக்கத்தைத் தனது இயக்கத்தின் உறுப்பினர்களுக்குக் காண்பித்து தனது இறுதி முடிவு இப்படி இருக்கும் என்றார். அதுவே உயர்ந்த வீரம் என்றும் தாய்நாட்டுக்கான தியாகம் என்று சொன்னார்.
ஆனால் வன்னியில் இருந்த புத்திஜீவிகள் சிலர் இதை மறுத்தனர். இந்த முடிவு மிக மோசமானது என்றும் வரலாற்றை மிகவும் பிழையான இடத்திற்கு அழைத்துச்செல்லும் செயல் இது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். சனங்களைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமே தவிர இவ்வாறு உணர்ச்சிவயப்பட்ட தீர்மானங்களுக்குப் போகக் கூடாது என அவர்கள் வாதிட்டனர். ஆனால், பிரபாகனிடம் யாரும் இதற்கான உரையாடலைச் செய்ய முடியவில்லை. அவர் எல்லாவற்றுக்கும் அப்பால் தன்னை நிறுத்திக்கொண்டார். சனங்களுடன் என்றுமே தொடர்புகளையோ உறவுகளையோ கொண்டிராத அவர் சனங்கள் குறித்து எவர் என்ன சொன்னாலும் எதையும் பொருட்படுத்தும் நிலையில் இருக்கவில்லை. தவிரவும் தனது இயக்க உறுப்பினர்களைத் தவிர அவர் வேறு எவரையும் – மக்கள் பிரதிநிதிகளைக்கூட – சந்தித்தவரல்ல. அவ்வாறு பிறரைச் சந்திப்பதாக இருந்தால் அவருடைய இயக்கத்தலைவர்களோ பொறுப்பாளர்களோ சிபாரிசு செய்யும் ஆதரவாளர்களையே சந்திப்பார். அவர்களோ புலிகளின் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் நியாயப்படுத்தும் இயல்பும் குணமுமுடையவர்கள். அவர்களால் ஒரு போதுமே மக்கள் குறித்து நீதியாகவும் நியாயமாகவும் சிந்திக்கவும் முடியாது; செயல்படவும் முடியாது. அப்படியான செயல்வழமையை அவர்கள் கொண்டதுமில்லை. அப்படியொரு பழக்கமும் அவர்களுக்கில்லை. எனவே அவர்களால் புலிகளின் தீர்மானங்களைப் பற்றிய எந்த விமர்சனங்களையும் முன்வைக்க முடியவில்லை.
(அருண் நடேசன்)
(தொடரும்….)