(காரை துர்க்கா)
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக, ஜனாதிபதியில் நம்பிக்கை இல்லை; பொருளாதார அபிவிருத்தியால் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது; ஜனாதிபதி செயலணியின் அமைப்பு உருவாக்கம் வேடிக்கை பொருந்தியதாக உள்ளது. அதில் ஒரு பொருட்டாக, நான் இணைந்து கொள்வது தேவையற்றது: இப்படியான பல விடயங்களைச் சுட்டிக்காட்டி, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அண்மையில் கடிதம் அனுப்பி உள்ளார்.
வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களது பொருளாதாரத் தேவைகளை மட்டும் நிறைவு செய்வதன் ஊடாக, அரசியல் உரிமைகளை, அரசியல் அபிலாஷைகளை அவர்களது மனங்களிலிருந்து மெல்ல அகற்றி விடலாம் என்ற எண்ணப்பாடுகள், பெரும்பான்மையின ஆட்சியாளர்களிடம் நீண்ட காலமாகவே குடிகொண்டுள்ளன. சிலர் இதனை வெளிப்படையாகச் சொல்லியும் சிலர் இதனை அடிப்படையாகக் கொண்டும், கருமங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
தமிழர் பிரச்சினைக்கு வறுமை ஒழிப்பே, அதாவது பொருளாதார அபிவிருத்தியே தீர்வாகும் என்ற வாதம், தற்போது தெற்கில் மீண்டும் முன்வைக்கப்பட்டு வருகின்றது; முளைவிட்டு வருகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதனைப் பொது வெளியில் கூறவில்லை; ஆனால், செயலாற்றி வருகின்றார் போலும் என்பதை, அண்மைய நிகழ்வுகள் கூறி நிற்கின்றன.
ஏனெனில், கடந்த ஒரு மாத காலத்தில் அவர், வட பகுதிக்கு இரு தடவைகள் பயணம் செய்துள்ளார். ஆனால், பொதுவாக அனைவராலும் எதிர்பார்க்கப்படும் அரசமைப்புத் தொடர்பில், மூச்சுக் கூடக் காட்டவில்லை; வாய் திறக்கவில்லை.
தொழில்வாய்ப்புகள், பலாலி விமான நிலைய விடயங்கள், வங்கிக் கடன்கள் என, அபிவிருத்திப் புராணத்தையே பாடி விட்டுச் சென்றுள்ளார்.
அபிவிருத்தி என்றால் கூட, அந்தப் பிரதேச மக்களின் தேவைகள், விருப்பங்கள் தெளிவாக இனங்காணப்பட்டு, அவை நிறைவேற்றப்பட வேண்டும். குறித்த பிரதேச வளங்கள் சுரண்டப்படக் கூடாது; சூறையாடக் கூடாது; தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்; அபிவிருத்தியின் பொருட்டு பிரதேசப் பண்பாடு பாதிக்கப்படக் கூடாது; ஒட்டு மொத்தத்தில் அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கப்பட வேண்டும்.
ஆனால் வடக்கு, கிழக்கின் வளங்கள், அங்கு பிறந்து வளர்ந்தவர்கள் கண்கள் முன்பாகவே அபகரிக்கப்படுகின்றன. கடல் வளம் (செல்வம்), அள்ளி அள்ளிக் கொண்டு செல்லப்படுகின்றது. சாரதிகள், சிற்றூழியர்களாகக் கூட பெரும்பான்மையினத்தவர்கள் பெருமளவில் நியமிக்கப்படுகின்றார்கள். சிறு தடியை வெட்டினால் கூடக் குற்றம்; ஆனால் பெரு மரங்கள், நாளாந்தம் தறித்து தென்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
மேலிருந்துவரும் (கொழும்பு) கட்டளைகளும் அறிவுறுத்தல்களுமே அமுல்படுத்தப்படுகின்றன. அபிவிருத்தி தொடர்பில் அங்குள்ளவர்களின் அபிப்பிராயங்கள், ஆலோசனைகள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கிலுள்ளவர்களின் வேண்டாத, விரும்பாத ஏற்காத அபிவிருத்தி திணிக்கப்படுகின்றது. கொழும்பில், குளிரூட்டப்பட்ட அறையில் எடுக்கும் முடிவுகளே செல்லுபடியாகின்றன.
யுத்தம் முடிவடைந்த பின்னர், கடந்த ஒன்பது வருட அமைதிக் காலத்தில், வட பகுதியின் வர்த்தக நடவடிக்கைகளின் வளர்ச்சியை ஆய்வுக்கு உட்படுத்துவோமானால், விடை, வெறும் பூச்சியமாகவே காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கின் இத்தகைய யதார்த்த நிலைவரங்களை, பிரதமர், அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டங்களில், வடக்கு முதலமைச்சர் வௌிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதேசங்களில் கடந்த ஒன்பது வருட காலப்பகுதியில் பெருமளவான தற்கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றுக்கு பிரதான காரணமாக, பொருளாதாரப் பிரச்சினைகளே அமைகின்றன. பலரது சேமிப்புகளை, தெற்கு நிதிக் கம்பனிகள் உறிஞ்சி இழுத்து விட்டன. கணிசமான மக்களை, வாழ் நாள் கடனாளிகளாக்கி விட்டார்கள்.
வடக்கு, கிழக்கு வர்த்தகர்களின் வாணிப நடவடிக்கைகள், சந்தை வாய்ப்புகள், தொழில் வாய்ப்புகள் எல்லாவற்றையும் தென்பகுதியை மய்யமாகக் கொண்ட பெரு முதலைகள் (கம்பனிகள்) விழுங்கி ஏப்பமிட்டுக் கொண்டிருக்கின்றன. தெற்கின் வர்த்தக சுரண்டல்களுக்கு முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் பலர், வர்த்தகத்துக்கு விடைகொடுத்து விட்டனர்.
மொத்தத்தில், தமிழர் பிரதேசங்களில் தமிழர்கள் விரும்பிய, அவர்கள் தெரிந்தெடுத்த அபிவிருத்தியும் இல்லை; தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வும் இல்லை என்ற நிலையே நீடிக்கின்றது.
உண்மையில், நாட்டில் சுமார் 70 ஆண்டு காலமாகத் தீராத சிக்கலாக உள்ள இனப் பிரச்சினை காரணமாகவே, நாடு வறுமையில் மூழ்கிச் சீரழிகின்றது.
இன்று கிழக்கில், தமிழ் மக்கள் இயற்கையாக சிறுபான்மை ஆகவில்லை; திட்டமிட்டு ஆக்கப்பட்டார்கள் என்பதே உண்மை.
தொடர்ந்து ஆட்சிபீடம் ஏறிய பெரும்பான்மையின ஆட்சியாளர்களின் ஆக்ரோஷமான ஆக்கிரமிப்பே, திட்டமிட்டுச் செயற்கையான முறையில் பெரும்பான்மையை இழக்கச் செய்தது.
நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, அரசாங்கம் சார்பில் அன்றைய பிரதமர் பண்டாரநாயக்கவும் தமிழ் மக்கள் சார்பில் தந்தை செல்வநாயகமும், 1957 ஜூலை 26ஆம் திகதி ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டார்கள்.
பண்டா- செல்வா ஒப்பந்தத்தில் முதலாவதாகக் கூறப்பட்ட விடயமே, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்க உதவியுடன் நடைபெற்று வரும் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதாகும். ஆகவே 70 ஆண்டுகால இலங்கையின் சுதந்திர வாழ்வில், தமிழ் மக்களது 60 ஆண்டுகால கருணை விண்ணப்பமாக, பெரும்பான்மையின அரசாங்கத்தின் உதவியுடன் நடாத்தப்படும் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதாகவே அமைந்திருக்கிறது.
அதற்குப் பின்னர், இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக, இலங்கை அரசாங்கத்துடன் தமிழர் தரப்பு நடாத்திய அனைத்துப் பேச்சு மேடைகளிலும், திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது; கோரப்படுகின்றது.
இந்தியப் படைகள் இலங்கையில் இருந்த வேளையில் தியாகி திலீபன், ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து, உயிர்துறந்தார். இந்த ஐந்து அம்சக் கோரிக்கைகளில், திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பதும் முக்கியமான ஒன்றாகும்.
இலங்கையில் இனப்பிரச்சினை நீண்ட காலமாகப் புரையோடி, தீர்க்க முடியாமல் உள்ளது. எந்த அரசாங்கங்களும் மானசீகமாகத் இதைத் தீர்க்க வேண்டும் என, இன்னமும் ஓரடி கூட முன்நோக்கி எடுத்து வைக்கவில்லை.
பெரும்பான்மையின ஆட்சியாளர்கள் தங்களது இனத்தை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் பதவிக் கதிரையைக் கைப்பற்றவும், இனவாதம் நன்கு துணை போயிருக்கின்றது; துணை போகின்றது.
ஆனால், இனப்பிரச்சினை என்ற நோய்க்கு பொருளாதார அபிவிருத்தி என்ற மருந்து ஒரு போதும் தீர்வாகாது. வறுமையைப் போக்கும்படியும் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தக் கோரியும், தமிழ் மக்கள் போராடவில்லை.
இனப்பிரச்சினையும் அதன் வழியே ஏற்பட்ட கொடும் போரும் ஏற்படுத்திய வடுக்கள் மிக மிக அதிகமானவை. நேரிய செல்நெறியுடன், சீர்மையாக வாழ்ந்த சமூகத்தில், குடும்பங்களில், தனிநபர்களின் மனப்பாங்குகளில் ஏற்பட்ட எதிர்மறை மாற்றங்கள் எண்ணிலடங்காதவை; சொல்லிலடங்காதவை.
செல்வச் செழிப்பாக, மீசை முறுக்கி வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வில், இனப்பிரச்சினையே மண்ணை அள்ளிப் போட்டது; மண்ணை விட்டும் தள்ளி வைத்தது. வலிமைமிக்கவர்களாக மிடுக்குடன் வாழ்ந்த சமூகத்தை வலுவிழக்கச் செய்தது; வறுமையின் வாசம் தெரியாதவர்கள் இல்லத்தில், உள்ளத்தில் வறுமை வாசகம் செய்ய வைத்தது. தற்போது தமிழினம் பலமிழந்து, ஊரிழந்து, உறவிழந்து, யாருமற்று நிர்க்கதியாக நிற்கின்ற வேளையிலும், தன் உரிமை வேண்டும் என்பதில் உறுதி தளராதுள்ளது. பனிப்பாறையில் தெரிந்த அம்சங்களாகத் தமிழ் மக்களது கவலைகளும் சோகங்களும் இழப்புகளும் வெளியே தெரிந்தாலும், அவர்களது விடுதலை வேட்கை, உள்ளே மறைந்து கிடக்கின்றது.
இது கூட ஒன்றும் புதுமையானதோ புதினமானதோ அல்ல. ஏனெனில், ஒவ்வோர் இனமும், தங்களது தனித்துவங்களைத் தனித்துவமாக மதிப்பாக, கௌரவமாகப் பாதுகாக்க வேண்டும் என எண்ணுவதில் என்ன தவறு உள்ளது. மறுபுறத்தே, அவற்றை அடுத்த சந்ததியிடம் பாதுகாப்பாகக் கையளிப்பது கூட நடப்புச் சந்ததியின் கடமை அல்லவா?
“நாங்களும் (தமிழர்கள்) இந்த நாட்டின் இறைமையுள்ள குடிமக்களாக எமது பிரதேசங்களில் எம்மை நாமே ஆளக் கூடிய முறையில் வாழ வழி இடப்பட வேண்டும் எனக் கோரினால், நாங்கள் பிரிவினை கோருகின்றோம் என ஒப்பாரி வைக்கின்றார்கள். தொடர்ச்சியான இவர்களின் அழுத்தங்கள், ஒரு நாள் ஓய்வுக்கு வரும்; அது வரை, எமது உரிமைக்கான குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கும்” என்ற வடக்கு முதலமைச்சரின் கூற்று, அரசியல் தீர்வுகள், தமிழ் மக்களின் துன்பங்களுக்கான விடிவுகள், இப்போது கிடைக்கும் என்பது சாத்தியமற்றது என்பதையே விளம்பி நிற்கிறது.