– தேசிய காங்கிரஸ் மகளிர் அணி தலைவி சூளுரை
பெண் சமைக்க மாத்திரம் பிறந்தவள் அல்ல, சாதிக்கவும் பிறந்தவள் என்பதை எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் மூலமாக வட மாகாணத்தில் குறிப்பாக வன்னியில் நிரூபித்து காட்டுவார் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், இக்கட்சியின் மகளிர் பொறுப்பாளருமான ஜான்சிராணி சலீம் தெரிவித்து உள்ளார்.
இவர் தேசிய காங்கிரஸில் இணைந்த பிற்பாடு பேஸ்புக் போன்ற சமூக இணைப்பு தளங்கள் ஊடாக பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவது குறித்து பொலிஸ் முறைப்பாடுகள் மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருப்பது குறித்து நேற்று விடுத்து உள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு உள்ளார்.
இவ்வறிக்கையில் இவர் மேலும் குறிப்பிட்டு இருப்பவை வருமாறு:-
சமூகத்தை பற்றிய சிந்தனையும், பிரக்ஞையுமே என்னை வட மாகாணத்தில் குறிப்பாக வன்னி களத்தில் தீவிர அரசியலில் ஈடுபட வைத்து உள்ளது. நான் ஒரு பெண்ணாக இருப்பதால் அரசியலில் எதையுமே என்னால் சாதிக்க முடியாது என்று அரசியல் பின்னணி உடைய சில ஆணாதிக்கவாதிகள் கொக்கரிக்கின்றனர். வன்னியில் நான் அரசியல் செய்வது என்பது நிரபராதி ஒருவர் ஆயுததாரி ஒருவரை வலிந்து போருக்கு அழைப்பதற்கு ஒப்பானது என்று எனக்கு ஆலோசனையும், எச்சரிக்கையும் வழங்குகின்றனர். அவர்களால் கூறப்படுகின்ற இந்த எச்சரிக்கையின் உட்கிடையான அர்த்தத்தையும் மிக நன்றாகவே நான் அறிவேன்.
ஆனால் நான் இன்றைக்கு நேற்று அரசியலுக்கு வந்தவள் அல்ல. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலம் சென்ற மசூர் ஹாஜியாரின் பாசறையில் வளர்க்கப்பட்டவள். இன்றைய வன்னி அமைச்சரின் கோட்டைகள் என்று கூறப்படுகின்ற பல பிரதேசங்களுக்குள் தேர்தல் காலங்களில் புகுந்து ஓட்டைகளை ஏற்படுத்தியவள். இப்போது தேசிய காங்கிரஸ் மூலமாக அரசியலுக்குள் மீள்பிரவேசம்தான் எடுத்து உள்ளேன். தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா என்னை சரியாக சரியான நேரத்தில் அடையாளம் கண்டு எனக்கு தேசிய காங்கிரஸில் வட மாகாண அமைப்பாளர் பதவி, மகளிர் அமைப்பாளர் பதவி ஆகியவற்றை வழங்கி கௌரவித்து உள்ளார்.
தேசிய காங்கிரஸ் அதன் செயற்பாடுகளை வட மாகாணத்துக்கு குறிப்பாக வன்னிக்கு விஸ்தரித்ததையும், தேசிய காங்கிரஸ் மூலமாக வன்னி அரசியலை மாற்றி எடுக்க நான் சபதம் எடுத்ததையும் கண்ணுற்று அதன் காரணமாக ஏற்பட்ட அச்சத்தில் அரசியல் பின்னணி உடைய அந்த ஆணாதிக்கவாதிகள் என் மீது பாலியல் அவதூறுகளை சுமத்துகின்றார்கள். அத்துடன் சமூக இணைப்பு தளங்கள் மூலமாக என்னை பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகின்றார்கள். முகமூடிகளுக்கு பின்னால் நின்று செயற்படுகின்ற இவர்களின் முகங்களை சமுதாயத்துக்கு வெளிப்படுத்தி காட்ட வேண்டும் என்பதாலேயே பொலிஸ் முறைப்பாடுகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுத்து உள்ளேன்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வட மாகாணத்தில் குறிப்பாக வன்னியில் தேசிய காங்கிரஸ் போட்டியிடும். தேர்தல் வியூகம் குறித்து தலைவர் எம்மை விரைவில் அழைத்து பேசுவார். பெண் சமைக்க மாத்திரம் அல்ல, சாதிக்கவும் பிறந்தவள் என்பதை வருகின்ற வன்னி தேர்தல் களம் அந்த ஆணாதிக்கவாதிகளுக்கு கற்பித்து கொடுக்கும்.