(ரி. தர்மேந்திரன்)
புதிய கலப்பு தேர்தல் முறைமை பெருந்தேசிய கட்சிகளின் முகவர்களாக செயற்படுகின்ற சிறுதேசிய கட்சிகளுக்கே அதிக வெற்றி வாய்ப்பை வழங்குவதாக உள்ளது, எனவே முஸ்லிம் தேசியம் கூட்டமைப்பாக ஒருமித்து, தேசியத்துக்கான பொது சின்னத்தில் ஒன்றுபட்டால் மாத்திரமே தேசியமாக இக்கலப்பு முறைமையில் முஸ்லிம்கள் வெற்றி பெற முடியும், இல்லாவிட்டால் பெருந்தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் மீண்டும் எமது உரிமைகளை இணக்க அரசியல் என்ற மாய வார்த்தையில் இழக்க நேரிடும் என்று கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் பிரதி தலைவர் எச். ஏ. ஆலிப் சப்ரி சிறப்பு பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-
கேள்வி:- எழுச்சி அற்ற நிலையில் கிழக்கின் எழுச்சி இருப்பது போல தெரிகின்றதே?
பதில்:- இலங்கை முஸ்லிம்களின் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் கிழக்கின் எழுச்சி பற்றி 80 களின் இறுதியில் தெளிவாக கூறி அதனை மக்கள் மயப்படுத்திவெற்றியும் கண்டார். துரதிஷ்டமாக அன்னாரின் திடீர் மறைவு எமது சமூகத்தில் பாரிய தலைமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அது இற்றை வரை நிரப்பப்படாமலேயே இருக்கின்றது. அவரால் ஸ்தாபித்து முன்னெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் அவரின் காலத்துக்கு பின்னர் தொடர்ச்சியாக ஏற்பட்ட முரண்பாடுகளால் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் பலர் காலத்துக்கு காலம் பிரிந்து சென்றனர். இதனால் முஸ்லிம் காங்கிரஸின் இயங்கு தன்மையில் கேள்விக்குறி ஏற்பட்டது. பின்னர் 2015 ஆம் ஆண்டு சகோதரர் ரவூப் ஹக்கீம் அவருடைய தலைவர் பதவியை பாதுகாத்து கொள்வதற்காக பெருந்தலைவர் அஷ்ரப்பின் யாப்பை சட்டவிரோதமாக மாற்றி அமைத்தார். இவற்றை தொடர்ந்தே நாம் மக்கள் முன்னிலைக்கு மீண்டும் ஒரு எழுச்சியுடன் வர நேர்ந்தது.எங்களுடைய சிந்தனைகள் மக்கள் மயப்படுத்தப்பட்டு, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் தார்ப்பரியமாகவே இன்று கிழக்கிலும், வடக்கிலும் தலைமைத்துவ சபையை கொண்ட முஸ்லிம் கூட்டமைப்பை மக்கள் வரவேற்கின்றார்கள். இது கிழக்கின் எழுச்சிக்கு கிடைத்த மகத்தான வெற்றி ஆகும். அவசியம் நேர்கின்றபோதெல்லாம் மக்களை நாங்கள் மிக சரியாக வழி நடத்தி கொண்டே இருப்போம் என்பதில் எந்த மாற்றமும் கிடையாது.
கேள்வி:- கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் வஃபா பாருக் கிழக்கு தேசம் என்று ஒரு கோட்பாட்டை புறம்பாக ஸ்தாபித்து முன்னெடுத்து செல்கின்றாரே?
பதில்:- கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் ஸ்தாபகர், ஆரம்ப உறுப்பினர் என்கிற கௌரவமும், அந்தஸ்தும் அவருக்கு என்றும் இருக்கின்றது. கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் முதல் கட்ட நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவு பெற்று உள்ள நிலையில் அவர் கிழக்கின் எழுச்சி சார்ந்த நடவடிக்கைகளில் சற்று ஓய்வு எடுத்து கொண்டு அவருடைய இலக்கிய பணியை முன்னெடுத்து வருகின்றார். கிழக்கு தேசமும் அவருடைய இலக்கிய பயணத்தின் ஒரு அங்கம் என்றே நான்கருதுகிறேன்.
கேள்வி:- எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கிழக்கின் எழுச்சியின் நிலைப்பாடு என்ன?
பதில்:- மக்கள் மயப்படுத்தப்பட்ட கூட்டமைப்பு என்கிற எண்ண கருவை செயல் உருவாக்கம் கொடுத்து, மக்களை ஒன்றுபடுத்துகின்ற எமது நோக்கத்தில் ஓரளவு வெற்றி கண்டு உள்ளோம். இப்போது புதிய கலப்பு முறைமையிலான தேர்தல் பற்றி மக்களுக்கு அறிவூட்டி, வழிகாட்டி தெளிவூட்ட வேண்டி உள்ளது. வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாக வாக்காளர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டி உள்ளது. வட்டார முறையில் தெரிவு செய்யப்படுகின்ற அங்கத்தவர்கள் குறித்து முதலாவதாகவும், விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படுகின்ற அங்கத்தவர்கள் குறித்து இரண்டாவதாகவும்,பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறித்து மூன்றாவதாகவும் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டி உள்ளது. ஏனென்றால் புதிய கலப்பு தேர்தல் முறைமை பெருந்தேசிய கட்சிகளின் முகவர்களாக செயற்படுகின்ற சிறுதேசிய கட்சிகளுக்கே அதிக வெற்றி வாய்ப்பை வழங்குவதாக உள்ளது. எனவே முஸ்லிம் தேசியம் கூட்டமைப்பாக ஒருமித்து, தேசியத்துக்கான பொது சின்னத்தில் ஒன்றுபட்டால் மாத்திரமே தேசியமாக இக்கலப்பு முறைமையில் முஸ்லிம்கள் வெற்றி பெற முடியும். இல்லாவிட்டால் இத்தேர்தல் முறைமைக்கு அமைய பெருந்தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் மீண்டும் மீண்டும் எமது உரிமைகளை இணக்க அரசியல் என்கிற மாய வார்த்தையில் இழக்க நேரிடும்.
கேள்வி: இத்தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?
பதில்:- எனது தந்தையார் ஹசன் அலியை செயலாளர் நாயகமாக கொண்டு ஐக்கிய சமாதான கூட்டமைப்பு எழுந்து உள்ளது. ஐக்கிய சமாதான கூட்டமைப்பும்,சகோதரர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் சேர்ந்து முஸ்லிம் கூட்டமைப்பின் எழுச்சியில் மைல் கல் ஒன்றை உருவாக்கி உள்ளன.
முஸ்லிம் கூட்டமைப்பு தலைமைத்துவ சபை ஒன்றின் கீழ் இயங்குமே ஒழிய இதில் தனிநபர் தலைவர் என்று ஒருவரும் கிடையாது. ஆகவே இதில் தனி நபர் செல்வாக்கு இருக்காது என்பதுடன் தலைமைத்துவ சபையே கூட்டு பொறுப்புடன் வேட்பாளர்களை தீர்மானிக்கும். எது எப்படி இருந்தாலும் இப்புதிய கலப்பு தேர்தல் முறைமையில் தனிநபர் வெற்றியை விட கூட்டமைப்பாக சமூகத்தின் வெற்றியையே நான் விரும்புகின்றேன்.
கேள்வி:- கிழக்கு கிழக்காகவே இருக்க வேண்டும் என்று கூறுகின்ற கிழக்கின் எழுச்சி வெளியிட தலைமையான றிசாத் பதியுதீனுடனான கூட்டை ஏற்று கொள்வதும், அங்கீகரிப்பதும் அதன் கொள்கைக்கு முரணான விடயம் அல்லவா?
பதில்:- கிழக்கு, வடக்கு பிராந்தியத்தில் ஒரு மொழி பேசும் இரு தேசியங்கள் உள்ளன என்பதில் கிழக்கின் எழுச்சி மிக உறுதியாக உள்ளது. தலைவர் அஷ்ரப்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசியல் கட்சியாக பதிய வேண்டும் என்கிற உறுதியான முடிவை எடுப்பதற்கு அடிப்படை காரணமே முஸ்லிம்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதில் எழுந்த பிரச்சினையே ஆகும். ஆகவே எமது பிரச்சினை கிழக்கு கிழக்காகவோ, வடக்கு வடக்காகவோ இருக்க வேண்டும் என்பது அல்ல. மாறாக முஸ்லிம்கள் ஒரு தேசியமாக அங்கீகரிக்கப்பட்டு, சுதந்திர இலங்கையின் முதலாவது புள்ளிவிபரத்துக்கு இணக்கமாக முஸ்லிம்களின் தேசியத்துக்கான நிலங்கள் உறுதிப்படுத்தப்பட்ட அரசியல் ஆட்சி கட்டமைப்பு என்கிற உச்ச பட்ச இலக்கை அடைவதற்கான இலட்சிய பயணத்தையே நாம் மேற்கொள்கின்றோம். எனவே சகோதரர் றிசாத் பதியுதீன் முஸ்லிம் தேசியத்தின் ஒரு தலைமை என்பதால் அவருடனான கூட்டு எமது கொள்கைக்கு முரணானவிடயமே அல்ல.
கேள்வி:- எவ்வகையான தீர்வு திட்டத்தை கிழக்கின் எழுச்சி முஸ்லிம்களுக்கு பரிந்துரைக்கின்றது?
பதில்:- முஸ்லிம்களுக்கான தீர்வு அமைய வேண்டிய விதம் குறித்து முஸ்லிம்களின் முதலாவது கட்சியான முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின்ஸ்தாபகர் எம். ஐ. எம். முஹைதீன் முன்வைத்த பரிந்துரை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம். எச். எம். அஷ்ரப் முன்வைத்த மூன்றுதெரிவுகளை கொண்ட பரிந்துரை ஆகியவற்றை விட மேலதிகமாக தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை. இவற்றுக்குள் மிக சிறந்த தெரிவாக உலகின் பல நாடுகளில்நடைமுறையில் உள்ள நில தொடர்பற்ற பிராந்திய அரசியல் அலகை ஒத்த தீர்வை குறிப்பிடலாம். ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி அல்லது அதிகாரம்கொண்ட மாகாண முறையை கொண்டதாக இத்தீர்வு ஏற்பாடு இருக்கும். கிழக்கு, வடக்கு பிராந்தியத்தில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாககொண்டிருக்கின்ற நிலங்களை உள்ளடக்கியதாக இது அமையும். இத்தீர்வுக்கு வட பிராந்திய முஸ்லிம்களின் சம்மதம் முக்கியமாகும்.
முஸ்லிம் தேசியத்தின் விடயங்கள் பல்வேறு கால கட்டங்களில் தேசிய மற்றும் பிராந்திய பேரினவாத சக்திகளின் அடக்குமுறைகளுக்கு இலக்காகின. சுதந்திரத்துக்கு பின்னர் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலமான குடியேற்றங்கள், புதிய அம்பாறை மாவட்டத்தின் உருவாக்கம், 1987 ஆம் ஆண்டின் புதிய உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயம் போன்ற நடவடிக்கைகள் இன முரண்பாடுகளுக்கான மிகவும் முக்கியமான காரணங்கள் ஆகும். அவை போன்ற ஒரு நடவடிக்கையே இன்று மீண்டும் இந்நாட்டில் நல்லாட்சியின் அரசியல் அமைப்பு மாற்றத்துக்கான முன்னெடுப்புகள் மூலமாகமேற்கொள்ளப்படுகின்றது. இணக்க அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் மாத்திரம் அன்றி தமிழ் அரசியல்வாதிகளும் தூர நோக்கின்றிசெயற்படுவதால் விளைகின்ற அறுவடையை தமிழ் பேசும் சமூகங்கள் அனுபவிக்க நேர்கின்றது.
இதற்கு வரலாற்றில் மிக பொருத்தமான உதாரணமாக மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தில் இருந்து அம்பாறை நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட்டதை குறிப்பிட்டு சொல்ல முடியும். அம்பாறை நிர்வாக மாவட்டம் உருவாக்கப்பட்டதன் உண்மையான நோக்கம் தமிழ் பேசும் சமூகத்துக்கான நிர்வாக கட்டமைப்பைஇலகுபடுத்துவதாகும். ஆனால் டாக்டர் ஏ. எம். ஏ. அஸீஸிற்கு பிற்பாடு தமிழ் பேசும் எந்தவொரு அரசாங்க அதிபரும் அம்பாறை நிர்வாக மாவட்டத்துக்கு நியமிக்கப்படவே இல்லை. மாறாக அம்பாறை கச்சேரி சிங்களமயப்படுத்தப்பட்டு விட்டது. இவ்வரலாற்று துயரத்துக்கான பொறுப்பை தமிழ் பேசும் தலைவர்கள் மாத்திரம் அன்றி அவர்களுக்கு முண்டு கொடுக்கின்ற மக்களும் ஏற்று கொள்ள வேண்டி உள்ளது.
நில தொடர்புகள் அற்ற நிர்வாக கட்டமைப்பை இலங்கையில் செயற்படுத்த முடியும் என்பதற்கு மிக பொருத்தமான முன்னுதாரணங்கள் அம்பாறை மாவட்டத்திலேயே உள்ளன. கல்முனை கல்வி வலயத்துக்குள் அமைந்து உள்ள சிங்கள மொழி மூல பாடசாலை அம்பாறை கல்வி வலயத்தின் கீழ்தான்இயங்குகின்றது. அவ்வாறே பிராந்திய சுகாதார அலுவலகங்கள் அம்பாறைக்கு வேறாகவும், தமிழ் மொழி மூல பிரதேசங்களுக்கு வேறாகவும் இயங்குகின்றன. சிங்கள மொழி ஆதிக்கம் கொண்ட அம்பாறை தொகுதிக்கு ஒரு நிர்வாக முறையும், தமிழ் மொழி ஆதிக்கம் கொண்ட தொகுதிகளுக்கு வேறு ஒரு நிர்வாகமுறையும் என்கிற முறைமையே அம்பாறை மாவட்டத்தில் கைக்கொள்ளப்படுகின்றது. இவ்வாறேதான் கிழக்கு, வடக்கில் ஒரு மொழி பேசும் இரு தேசியங்களுக்குநில தொடர்பற்ற இரு சம அதிகார அலகுகள் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும்.
கேள்வி:- தமிழ் பேசும் சமூகத்துக்கு இத்தருணத்தில் நீங்கள் கூறுகின்ற செய்தி என்ன?
பதில்:- மொழி ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தொன்மையான பாரம்பரியத்தை கொண்ட நாம் சுதந்திரத்துக்கு பிந்திய காலத்தில் இரு சமூகங்களையும் சேர்ந்த தலைவர்களின் தூர நோக்கற்ற செயற்பாடுகளின் விளைவுகளைத்தான் அனுபவித்து கொண்டிருக்கின்றோம், இதற்கு இரு சமூகங்களையும் சேர்ந்த மக்களும் பொறுப்பேற்க வேண்டியும் உள்ளது என்பதை முன்னமே சொல்லி இருக்கின்றோம்.
தற்பொழுது பொருத்தமான ஒரு தீர்வை எட்டுவதற்கு மீண்டும் ஒரு அருமையான சந்தர்ப்பம் பாராளுமன்றம் அரசியல் யாப்பு நிர்ணய சபையாக மாற்றப்பட்டதன் மூலம் ஏற்பட்டு உள்ளது. ஆனால் இச்சபையில் அங்கம் வகிக்கின்ற சிறுபான்மை தலைவர்கள் பெருந்தேசிய கொள்கைவாதத்தால் இயக்கப்படுபவர்களாகவேஉள்ளனர். எனவே நாங்கள் எதிர்பார்க்கின்ற சுமூகமான அரசியல் தீர்வு, அதன் மூலமாக நாம் அடைய வேண்டிய இன உறவு ஆகியன கேள்விக்குறிகளாகவே தெரிகின்றன. இன்றய தூர நோக்கற்ற அரசியலில் மக்களை தெளிவூட்ட வேண்டிய பொறுப்பு இரு தேசியங்களுக்கும் உள்ளது. ஒன்றிணைந்த ஒரு சிவில்சமூகமாக சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு மக்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டியும் உள்ளது. தேர்தல் கால சலுகைகளுக்கு பலி கடாக்கள் ஆக்கப்படுவதில் இருந்து இரு தேசியங்களையும் சேர்ந்த மக்களையும் தடுத்து நிறுத்துவதன் மூலமாகவே சமூக ஒற்றுமைக்கான பெருவெற்றியை அடைய முடியும். முட்டாள்களாக வாக்காளர்கள் இருக்கின்ற வரை மடையர்கள்தான் அவர்களை ஆட்சி செய்து கொண்டே இருப்பார்கள் என்பதை தமிழ்நாட்டு அரசியல்எமக்கு கற்று தந்து உள்ளபோதிலும் இன்னும் இரு தேசியங்களும் இதை உணராமல் இருப்பதே மாபெரும் புதிர் ஆகும்.