முதலாவது, ‘சிறுபான்மை மனநிலையையுடைய பெரும்பான்மை’.
இரண்டாவது, ‘பெரும்பான்மை மனநிலையையுடைய சிறுபான்மை’.
இரண்டாவது விடயம், கொஞ்சம் சிக்கலானது. இலங்கைத் தமிழர்கள் கொலனித்துவக் காலத்தில், ஆங்கிலக் கல்வியைப் பெற்றுக்கொண்டு, அவர்களது இனவிகிதாசாரத்துக்கு அதிகமாகப் பொதுச் சேவைகளிலும் அரச பதவிகளிலும் இடம்பிடித்தமையும் பல கோடி தமிழர்கள், வெகு அருகில் தென்னிந்தியாவில் இருப்பதும், இந்தத்தீவில் சிறுபான்மையாக இருக்கும் தமிழர்கள், பெரும்பான்மை மனநிலையைக் கொண்டிருப்பதற்கான காரணங்களாக விவரிக்கப்படுகின்றன. ஆனால், தமிழர்கள் அரச பதவிகளை வகித்ததால், பெரும்பான்மை மனநிலையைக் கொண்டிருந்தார்கள் என்ற கூற்றுக்கு ஆதாரங்கள் இல்லை.
உண்மையில், தமிழர்கள் தாம் பல்லாண்டு காலமாக வாழ்ந்த மண்ணில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் கூடத் தமது திறமையால், முயற்சியால் மிக உயர்ந்த பதவிகளையும் செல்வாக்கையும் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு உதாரணங்கள் நிறைய இருப்பினும், சிங்கப்பூர் ஒரு முக்கிய உதாரணம் ஆகும்.
‘சிங்கப்பூரின் சிற்பி’ லீ க்வான் யூவின் வலது கரமாக இருந்த யாழ். வட்டுக்கோட்டையில் பிறந்த எஸ். ராஜரட்ணம், மிக முக்கிய உதாரணம். சிங்கப்பூரின் வௌிவிவகார அமைச்சராக ஏறத்தாழ 15 வருடங்கள் பதவி வகித்த ராஜரட்ணம், சிங்கப்பூரின் பிரதிப் பிரதமராகவும் முதலாவது சிரேஷ்ட அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். மண்ணின் மைந்தரல்லாது, புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழரின் திறமையைப் பயன்படுத்தி, தன்னை வளர்த்துக் கொண்ட நாடு சிங்கப்பூர்.
சிங்கப்பூர் மீது வேறு அடிப்படைகளில் பல விமர்சனங்கள் இருந்தாலும், இனம், மதம், மொழி என்பவற்றை அரசியலிலிருந்து ஒதுக்கி வைத்து, எந்த வளமுமற்ற ஒரு குட்டித் தீவை, அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றிய லீ க்வான் யூவின் தொலைநோக்கு அரசியல் வியக்கத்தக்கதாகும். இன்றும் இலங்கைத் தமிழ் வம்சாவளியில் வந்த தர்மன் ஷண்முகரட்ணம், சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சராகப் பதவி வகிக்கிறார். வெறும் 3.2% தமிழ் பேசுபவர்களைக் கொண்ட சிங்கப்பூரில், தமிழர்கள் உண்மையில் வந்தேறு குடிகள்தான். ஆனால், அங்கு அவர்கள் அவ்வாறு நடத்தப்படவில்லை. மாறாக, சிரேஷ்ட அமைச்சர்களாக, பிரதிப் பிரதமராக, வைத்தியம், சட்டம், நிர்வாகம், பாதுகாப்பு என்று அனைத்துத் துறைகளில் அவர்களுடைய திறமையை, சிங்கப்பூர் பயன்படுத்திக் கொள்கிறது. சிங்கப்பூரின் பெரும்பான்மையான சீனர்களும் மலாயர்களும் தமிழர்களை தமக்கான அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை.
மறுபுறத்தில், ஒரு வேளை தமிழர்கள் பெரும்பான்மை மனநிலையோடு நடந்துகொள்கிறார்கள்; அதனால்தான் இனமுறுகல் ஏற்படுகிறது என்பதை வாதத்துக்காக, ஓர் எடுகோளாக எடுத்துக்கொண்டால் கூட, அப்படியானால் பெரும்பான்மை சமூகத்தின் அச்சம் தமிழர்கள் சார்ந்ததாக மட்டும்தானே இருக்கவேண்டும்?
ஆனால், தமிழ்-சிங்கள இனப்பிரச்சினை முறுகலடைய முன்பே, சிங்கள-முஸ்லிம் இனப்பிரச்சினை வேர்கொண்டு, கலவரமாக வெடித்திருந்தமைதான் வரலாறு. அப்படியானால், இலங்கை வாழ் முஸ்லிம்களும் ‘பெரும்பான்மை மனநிலையைக் கொண்ட சிறுபான்மையா’ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியாது.
அப்படியானால், இங்கு என்ன பிரச்சினையாக இருக்கிறது என்று நோக்கும் போது, கே.எம். டி சில்வா பதிவு செய்த கூற்றின் முதற்பகுதியான, ‘சிறுபான்மை மனநிலையை உடைய பெரும்பான்மை’ என்பதை, நாம் ஆராய வேண்டியதாக இருக்கிறது.
இது பற்றி நிறைய ஆய்வாளர்கள் பல கருத்துகளை முன்வைத்திருக்கிறார்கள். ‘சிறுபான்மை மனநிலை’ என்பது ஒருவகையான பாதுகாப்பற்ற மனநிலையை, அதாவது தமது இருப்பும் அடையாளங்களும் பறிபோய்விடக்கூடிய, ‘மற்றவர்களின்’ மேலாதிக்கத்தால் தாம் அடக்குமுறைக்கு உட்பட்டுவிடக்கூடிய அச்சத்தைக் கொண்ட மனநிலையைக் குறிப்பதாகவே கருதவேண்டியிருக்கிறது.
இந்த இலங்கைத் தீவின், மிகத்தௌிவான பெரும்பான்மை, சிங்கள மொழியைப் பேசும், பௌத்த மக்களாவர். அநகாரிக தர்மபாலவைத் தொடர்ந்தான ரிச்சர்ட் கொம்ப்ரிச், கணநாத் ஒபேசேகர ஆகியோர் விளிக்கும், ‘புரட்டஸ்தாந்து பௌத்தத்தின்’ எழுச்சியின் பின்னராக, அவர்கள் தம்மைச் ‘சிங்கள-பௌத்தர்’களாக அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
சிங்கள மொழி இலங்கையில்த்தான் தோன்றியது. இந்தத் தீவைத்தாண்டி சிங்கள மொழிக்கு அடையாளம் கிடையாது. தென்னாசியாவில் தேரவாத பௌத்த மதம் பெரும்பான்மையாகவுள்ள ஒரே நாடு இலங்கை மட்டும்தான். (தென்னாசியாவின் மற்றைய பௌத்த நாடு பூட்டான்; ஆனால், அங்கு வஜ்ராயண பௌத்தம் பின்பற்றப்படுகிறது). ஆகவே, ‘இந்தத் தீவு மட்டுமே, தமக்குரிய ஒரே நாடு’ என்ற பாதுகாப்பற்ற எண்ணம், ‘சிங்கள-பௌத்த’ மக்களிடையே இருக்கிறது.
ஒரு முறை, இலங்கையின் புகழ் மிக்க பௌத்த துறவிகளுள் ஒருவராக இருந்த வள்பொள ராஹூல தேரர் கருத்துத் தெரிவிக்கும் போது, “இலங்கைதான் உலகின் ஒரேயொரு சிங்கள-பௌத்த நாடு. நாம் இங்கே வாழாவிட்டால், எல்.ரீ.ரீ.ஈயும் சில தமிழ்க்கட்சிகளும் எங்களை கடலுக்குள் குதிக்கவா கேட்கின்றன” என்று கேள்வியெழுப்பி இருந்தார்.
இதே தொனியிலான, இதனை ஒத்த கருத்துகள், அரசியல் தலைவர்கள், பௌத்த துறவிகள், இராணுவத் தளபதிகள், கற்றறிந்த மக்கள் எனப் பலரிடமிருந்தும் காலாகாலமாக வௌிப்பட்டிருக்கின்றன; வௌிப்பட்டு வருகின்றன. இவை ஒவ்வொன்றும் கே.எம்.டி. சில்வா குறிப்பிட்ட ‘சிறுபான்மை மனநிலையைக் கொண்ட பெரும்பான்மை’ என்ற கருத்தை, ஆமோதிப்பதாகவே அமைகிறது.
ஆனால், மனநிலை என்பது தானாக வருவது என்பது ஒன்று; அதைத் திட்டமிட்டு உருவாக்குவதும் பரவலாக்குவதும் என்பது இன்னொன்று. ஒரு விடயத்தைப் பார்த்து, ஒரு குழந்தை அச்சப்படும் போது, அதன் தாய், அதன் அச்சத்தைப் போக்கித் தைரியம் கொடுக்கலாம்; அல்லது, அந்தக் குழந்தையின் அச்சத்தை ஆமோதித்து, ஊக்குவித்து அந்தக் குழந்தையின் அச்ச உணர்வுக்கு உரமூட்டலாம்.
சிங்கப்பூரில், லீ க்வான் யூ செய்தது, முதல் வகையைச் சாரும். இலங்கையின் அரசியல் தலைவர்கள் செய்தது, இரண்டாவது வகையைச் சாரும். ராஜரட்ணத்தை “வந்தேறு குடி” என்று, லீ க்வான் யூ சிங்கப்பூர் மக்களிடையே முன்னிறுத்தவில்லை. சீனர்கள் பெரும்பான்மையாகவுள்ள சிங்கப்பூரில், ஒரு சீனரான லீ க்வான் யூ, மிக இலகுவாக சீன இனத்தை முன்னிறுத்திய அரசியலை முன்னெடுத்திருக்கலாம். ஆனால், அதை அவர் செய்யவில்லை.
மாறாக, இனம், மதம், மொழி வேறுபாடுகளுக்கு அரசியலில் இடமில்லை என்ற லீ க்வான் யூவின் பிடிவாதமான கொள்கைதான், அந்தக் குட்டித் தீவு மிகச் சில வருடங்களிலேயே மிகப் பெரும் வளர்ச்சியை அடையக் காரணம். இதற்கு நேரெதிர்மறையாக, இலங்கை மக்களிடையே இன, மத, மொழி ரீதியாகப் பிரிவினையையும் நம்பிக்கையீனத்தையும் சந்தேகத்தையும் குரோதத்தையும் அச்சத்தையும் விதைத்து, அதையே தமது அரசியல் முதலீடாக்கி, அந்த அரசியலினூடாகப் பெரும்பான்மையினர் மனங்களில் சிறுபான்மையினர் பற்றிய அச்சத்தை உருவாக்கி, பெரும்பான்மையினரின் அடையாளத்துக்கும் இருப்புக்கும் நிலைப்புக்கும் சிறுபான்மையினர் பெரும் சவாலாக இருக்கிறார்கள் என்ற தவாறன அடிப்படையற்ற கருத்துருவாக்கத்தை கட்டியெழுப்பி, இத்தகைய கீழ்த்தரமாக அரசியலுக்கு உரம் போட, சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு, வளம் கொளிக்கும் இந்தத் தீவை, 65 ஆண்டுகள் கடந்த இனப்பிரச்சினையால், இன்று கிட்டத்தட்ட பிச்சைக்கார நாடாக ஆக்கிவிட்டிருக்கிறார்கள்.
சொல்லொணாக் கொடுமைகள், இரத்த ஆறு, பேரழிவு என்று 65 ஆண்டுகள் கடந்தபின்னும் கூட, இன்னமும் அதே கேவலமான இன மைய அரசியலை முன்னெடுத்துக்கொண்டு, பெரும்பான்மையினரை சிறுபான்மை மனநிலையில் வைத்துக்கொண்டு, அவர்களுக்கு அரசியல் கிளு கிளுப்பூட்ட சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைகளை, இனவாத அரசியல் முன்னெடுத்து வருகிறது.
பெரும்பான்மையினரின் இந்த இனவெறி அரசியலுக்கு எதிராக, பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் கேட்கும் சிறுபான்மை அரசியலும் இங்கு இல்லாமல் இல்லை. இந்த இரண்டும் முட்டி மோதி, அழிவைப் பேரழிவாக்கும் சாதனையைத் தான் செய்து கொண்டிருக்கின்றன.
இந்தப் போலி இனவெறி அரசியலை, மக்களைத் தேவையற்ற வெறுப்பிலும், அச்சத்திலும் ஆழ்த்தி வைத்திருக்கும் இந்த கேவலமான அரசியலை, மாற்றியமைக்க ஒரு நம்பிக்கை ஒளி தரும் அரசியல் மறுமலர்ச்சி மட்டும்தான், இந்தத் தீவுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. அது எப்போது ஏற்படுகிதோ, அப்போதுதான், இந்தத் தீவுக்கு விடியல் பிறக்கும்.