செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற தேர்தலில், ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் ‘தேர்வுச் சபை’க்கு, ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அதிகமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதால் பைடனின் வெற்றி உறுதியாகி உள்ளது. ஆனால், எதிர்வரும் டிசெம்பர் மாதமே சட்டபூர்வமாக, பைடன் தெரிவு செய்யப்படுவார்.
இதன் மூலம், 233 வருட அமெரிக்க வரலாற்றில் பதவி வகித்த 45 ஜனாதிபதிகளில், டொனால்ட் ட்ரம்ப், ஒரு முறை மட்டுமே ஜனாதிபதி பதவியை வகித்த 11ஆவது ஜனாதிபதியாகிறார். இவரது தோல்வியின் அறிகுறிகள், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே காணக்கூடியதாக இருந்தன. எனவே, “தேர்தலில் மோசடிகள் இடம்பெறும்” எனத் தேர்தலுக்கு முன்னரே, ட்ரம்ப் கூறிக் கொண்டுதான் இருந்தார்.
வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் போதும், “மோசடி இடம்பெற்றுள்ளது” எனக் கூறிக் கொண்டிருந்தார். அத்தோடு, “தபால் மூல வாக்குகளை ஏற்க வேண்டாம்” எனக் கூறிய அவர், சில மாநிலங்களில் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளிவர முன்னரே, வாக்கு எண்ணும் பணியை நிறுத்துமாறு கோரி வழக்குத் தொடுத்தார். அவை நிராகரிக்கப்பட்டன.
தேர்தல் மோசடி தொடர்பான டொனால்ட் ட்ரம்பின் குற்றச்சாட்டுகள், இலங்கையில் விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அலுத்கமகே, உதய கம்மன்பில போன்ற அரசியல்வாதிகளை, எம் கண் முன்னே கொண்டு வந்தன. ஆனால், ட்ரம்பின் குற்றச்சாட்டுகள் சமூகமயமாவதைத் தடுப்பதில், அமெரிக்க ஊடகங்கள் பெரும் பணியை ஆற்றின. அவை, அந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்து, அவை பொய் என்பதை, உடனுக்குடன் அறிவித்தன.
இனவாதம், அகம்பாவம், நிபுணர்களின் அறிவுறுத்தல்களை மதியாமை, முரட்டுத்தனம் போன்ற, ஓர் ஆட்சியாளருக்குப் பொருத்தமற்ற குணாம்சங்களாலேயே, தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்தார்.
பதவிக்கு வந்து ஏழு நாள்களில் அதாவது, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் திகதி, எட்டு முஸ்லிம் நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவுக்கு வருவதை, ட்ரம்ப் தடைசெய்தார். “அமெரிக்காவுக்குள் பயங்கரவாதிகள் பிரவேசிப்பதைத் தடுப்பதே இதன் நோக்கம்” எனக் கூறினார். உண்மையில், இதனால் அமெரிக்காவே கூடுதலாகப் பாதிக்கப்பட்டது.
இந்தக் கட்டளையை அடுத்து, அமெரிக்காவின் உல்லாசப் பிரயாணத்துறை, 6.8 சதவீதத்தால் குறைந்தது. 2014ஆம் ஆண்டு, இத்துறை மூலம், 1.47 டிரில்லியன் (1 இலட்சத்து 47 ஆயிரம் கோடி) டொலர் வருமானத்தை, அமெரிக்கா பெற்றிருந்தது. இந்த வருமான இழப்பை, அமெரிக்கப் பொருளியலாளர்கள் ‘ட்ரம்ப் சரிவு’ (Trump Slump) என அழைக்கின்றனர்.
கொவிட்-19 நோய், அமெரிக்காவில் பரவத் தொடங்கியதை அடுத்து, அந்நோய்க்குக் காரணமான கொரோனா வைரஸை, ‘சைனீஸ் வைரஸ்’ என, ட்ரம்ப் விமர்சித்து இனவாதம் பேசினார்.
உலக சுகாதார ஸ்தாபனம், சீனாவுக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கூறி, ஜூலை மாதம் ஆறாம் திகதி, அந்நிறுவனத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக, ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்காவே, உலக சுகாதார ஸ்தாபனத்துக்குப் பெருமளவு நிதிப் பங்களிப்பை வழங்கி வந்தது.
2020 மே மாதம் 25ஆம் திகதி, பொலிஸ் அதிகாரியால், அமெரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் புளொய்ட், கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதை அடுத்து, அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், வெள்ளையர்களும் கலந்து கொண்ட போதிலும், ஜனாதிபதி ட்ரம்ப், கறுப்பினத்தவர்களுக்காகப் பரிந்து பேசவில்லை; ஆர்ப்பாட்டங்களைக் கண்டித்தார். இவை, ட்ரம்பின் இனவாதப் போக்கைக் காட்டுகின்றன.
ட்ரம்ப், அளவு கடந்த முரட்டுத்தன குணாம்சத்தைக் கொண்டவர். கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவும் போது, “இது சாதாரண இன்புளுவன்ஸா நோய்” எனக் கூறினார். நியூயோர்க் நகரத்தை முடக்குமாறு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை கூறிய போது, ட்ரம்ப் அதைப் பொருட்படுத்தவில்லை. நகரங்களை மூடுவதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஆதரித்தார்.
முகக்கவசங்களை அணியுமாறு மருத்துவ நிபுணர்கள், மக்களை அறிவுறுத்திய போது, ட்ரம்ப் அதை உதாசீனம் செய்தார். தம்மைக் கொரோனா வைரஸ் தொற்றும் வரை, அவர் முகக்கவசத்தை அணியவில்லை. குணமாகி வந்து மக்கள் முன், தனது முகக் கவசத்தை எடுத்து எறிந்தார். “ஊசி மூலம் ‘சனிடைசரை’ நோயாளர்களுக்கு ஏற்றினால் என்ன” என, பகிரங்க மேடையில் மருத்துவர்களிடம் கேட்டார். பின்னர், ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்தவே, அவ்வாறு கேட்டதாகக் கூறினார்.
ஜனாதிபதி ட்ரம்ப்க்கு, இந்தப் பயங்கர நோய் விளையாட்டாகியது. இன்று, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, பத்து மில்லியனைத் தாண்டிவிட்டது. கொரோனா வைரஸ் தொற்றால், இரண்டரை இலட்சம் மக்கள் உயிரிழந்துவிட்டனர்.
ட்ரம்பின் காலத்தில், அமெரிக்கா பல முனைகளில் மோதல்களில் ஈடுபட்டது. ஐரோப்பிய நாடுகளுடனான அட்லாந்திக் கடல் பிராந்தியத்துக்கான வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப், தமது நாட்டை விலக்கிக் கொண்டார்.
ட்ரம்பின் காலத்தில், சீனாவுடனான வர்த்தகப் போரும் உக்கிரமடைந்தது. ஈரானின் அணு சக்திப் பாவனை தொடர்பாக, ஈரானுக்கும் ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான ஒப்பந்தத்திலிருந்து தமது நாட்டை, ட்ரம்ப் விலக்கிக் கொண்டார்.
2017ஆம் ஆண்டு மே மாதம், சவூதி அரேபியாவுக்கு 350 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக அமெரிக்கா, அந்நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டது. அதே ஆண்டு ஜூன் மாதம், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகக் குற்றஞ்சாட்டி, சவுதி அரேபியா, எகிப்து, பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகள், கடாருக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்தன. அப்போது, ட்ரம்ப் அதை ஆதரித்தார்.
இரண்டு வாரங்களுக்குப் பின்னர், பயங்கரவாதத்துக்கு உதவுவதாகத் தாம் (அமெரிக்கா) குற்றஞ்சாட்டிய கடாருக்கு, 12 பில்லியன் டொலர் பெருமதியான F-15 ரக போர் விமானங்களை விற்பனை செய்தது. இது குழப்பங்களைத் தூண்டிவிட்டு, இரு தரப்பினருக்கும் ஆயுதம் விற்று, ஆதாயம் தேடும் வெட்கக்கேடான நடவடிக்கையாகும்.
அமெரிக்காவில் சிறந்த ஆட்சியாக, ‘பைடன் ஆட்சி’ மாறும் என்பது இதன் அர்த்தம் அல்ல. கடந்த காலங்களில் அமெரிக்கா, உலக ஆதிபத்தியத்துக்காகப் பல கொடூரங்களையும் அநியாயங்களையும் செய்த நாடாகும். பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, ஈராக்கை இரண்டு முறை ஆக்கிரமித்தது. இதன்போது, இலட்சக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். ஈராக் மீது, நீண்ட காலமாகப் பொருளாதாரத் தடையை, அமெரிக்கா விதித்ததன் காரணமாக, ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான ஈராக்கிய சிறுவர்கள் போஷாக்கின்மையால் உயிரிழந்தனர்.
1979ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானை சோவியத் ஒன்றியம் ஆக்கிரமிக்கும் வரை, முஸ்லிம் நாடுகளில் ஆயுதக் குழுக்கள் இருக்கவில்லை. ஆக்கிரமிப்புக்கு எதிராக, ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களிடம் இருந்து எதிர்ப்புகள் உருவாகவே, அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் ‘முஜாஹிதீன்கள்’ என்ற பெயரில் இயங்கிய அந்த எதிர்ப்பாளர்களைத் தனிக் குழுவாகப் பலப்படுத்தாமல், பல குழுக்களாக்கி, ஆயுதங்களை வழங்கி பலப்படுத்தின. சோவியத் ஒன்றியம், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய பின்னர், அந்தக் குழுக்களுக்கு இடையிலான போர்க் களமாக, அந்நாடு மாறியது.
இது, லிபியாவிலும் ஈராக்கிலும் இடம்பெற்றது. இன்று, அந்நாடுகளில் குழுச் சண்டைகள் இடம்பெற்று, ஆயிரக் கணக்கானவர்கள் உயிரிழக்கின்றனர். கடாபியின் காலத்தில், சகலருக்கும் கல்வியும் இருப்பிட வசதியும் உறுதி செய்யப்பட்டு இருந்த லிபியாவில், இன்று சில பகுதிகளில், உணவுக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இவை அனைத்தும், அந்தந்த நாடுகளில் எண்ணெய் வளத்தை, நேரடியாகவோ மறைமுகமாகவோ கட்டுப்படுத்த, தமக்கு அனுமதி வழங்காமைக்கு அமெரிக்கா கொடுத்த தண்டனைகளாகும்.
இந்தக் குழுச் சண்டைகள், மத்திய கிழக்கிலும் பரவின. இங்கு, நாடுகளின் சமய, சித்தாந்த, கோத்திர காரணிகள், மோதல்களுக்குப் பல்வேறு நோக்கங்களைக் கொடுத்தன. அதன் விளைவே, இன்றைய அல்கொய்தா, தாலிபான், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதக் குழுக்களாகும். உலகில் இக்காட்சிகள் அரங்கேறும்போது, அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியோ குடியரசுக் கட்சியோ ஆட்சியில் இருந்தது. எனவே, பைடன் பதவிக்கு வந்தால், உலகில் சமாதானம் மலரும் என்று கனவு காண முடியாது.
உலக நாடுகளில், தமக்குப் பிடிக்காத ஆட்சிகளைக் கவிழ்ப்பதானது, எந்தக் கட்சி ஆட்சி புரிந்தாலும் அமெரிக்காவின் தந்திரமாகும். எனவே, ட்ரம்ப் தோல்வி அடைந்தமையையிட்டு, கவலையடையவோ சந்தோஷப்படவோ காரணங்கள் இல்லை. ஆனால், ஒரு பொறுப்பற்ற ‘முரடன்’, அரசியலில் இருந்து விலகியது நல்லது.