“இல்லை! நாம் கூறியிருக்கிறோம்; அந்த, மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பாவித்து, அரசியலில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும் 19 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை, நாம் நீக்கிவிடுவோம்” என, பொதுஜன பெரமுனவினர் கூறலாம்.
உண்மைதான்! அவர்கள், அவ்வாறு கூறித்தான் இருக்கிறார்கள். ஆனால், 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நீக்கிவிட்டு, அத்தோடு நின்றுவிட்டால், நாட்டில் அராஜகமே நிலவும். ஏனெனில், அதற்கு முன்னர் இருந்த அரசமைப்பில் இருந்த ஜனாதிபதிப் பதவி, பிரதமர் பதவி, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கான பிரமாணங்களைத் திருத்துவதற்குப் பதிலாக, 19ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் மூலம், அவை தொடர்பாகப் புதிய பிரமாணங்கள் அரசமைப்புக்குள் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால், ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்றம் ஆகியவை, இல்லாத ஒரு நிலைமை உருவாகும்.
எனவே, அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தைத் திருத்தத்தான் முடியும். பொதுஜன பெரமுனவினர் பதவிக்கு வந்தால், அதைத்தான் செய்வார்கள். ஆயினும், புதிதாக என்ன வகையான மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறார்கள் என்பது, பெரமுனவின் தலைவர்களுக்காவது தெரியுமா என்பது சந்தேகமே. சிலவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் அதைப் பற்றிய ஒரு திட்டம் இருக்கலாம்.
ஆனால், அவர்கள் அதை வெளியிடாமல் தான், அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான அதிகாரத்தை, மக்களிடம் கோருகிறார்கள். எனவே, அது வெற்றுக் காசோலையைக் கோருவதற்குச் சமமாகும்.
அதேவேளை, அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தோடு, அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தையும் நீக்க வேண்டும் என, பொதுஜன பெரமுனவின் சில தலைவர்களும் பெரமுனவைச் சார்ந்த சில பிக்குகளும், தேர்தல் மேடைகளில் கூறி வருகிறார்கள்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தமானது, மாகாண சபை முறையை அறிமுகப்படுத்துவதற்காக, 1987ஆம் ஆண்டு, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதாகும். எனவே, மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் என்றே, அவர்கள் கூறுகிறார்கள்.
ஜனாதிபதியோ பிரதமரோ, எந்தவொரு தேர்தல் மேடையிலும் இதைக் கூறவில்லை. ஆனால், இதைக் கோருவோர், தமது சொந்த அபிப்பிராயமாக இதைக் கோருகிறார்களா, மேலிடத்திலிருந்து கிடைத்த ஆலோசனையின்படி அவ்வாறு கோருகிறார்களா என்பது தெரியவில்லை.
இவர்களுக்குப் புறம்பாக, முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவும், அதே கோரிக்கையை முன்வைத்ததாகச் சில ஊடகச் செய்திகள் கூறின. ஏனையவர்களின் கருத்தை விட, அவரது கருத்து வித்தியாசமானது. ஏனெனில், 18 ஆண்டுகளுக்கு முன்னர், அவர் சமஷ்டி முறையை ஏற்றுக் கொண்டவர் ஆவார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே, 2002ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட போது, பேச்சுவார்த்தைக்கான அரசாங்கத்தின் தூதுக்குழுவில், அக்கால அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், மிலிந்த மொரகொட, ரவூப் ஹக்கீம் ஆகியோரே அங்கம் வகித்தனர்.
இவர்கள், 2002ஆம் ஆண்டு நவம்பர், டிசெம்பர் மாதங்களில், நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, இனப் பிரச்சினைக்கு, சமஷ்டி முறையிலான தீர்வொன்றைக் காண்பதென்ற இணக்கப்பாட்டை, புலிகளுடன் ஏற்படுத்திக் கொண்டனர். அதே மொரகொட, இப்போது மாகாண சபை முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்கிறார்.
மாகாண சபைகளை ஒழிக்க வேண்டும் என்று, ஜனாதிபதியோ பிரதமரோ எந்தவொரு தேர்தல் மேடையிலும் கூறாவிட்டாலும், மாகாண சபை முறையை மட்டுமற்றி, அதிகாரப் பரவலாக்கல் முறையையே அவர்கள் விரும்பாதவர்கள். 2013ஆம் ஆண்டு, வடமாகாண சபைக்குத் தேர்தல் நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது, மாகாண சபைகளின் அதிகாரங்களை மேலும் குறைத்து, அத் தேர்தலை நடத்த முயன்றார்கள்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்ற உடனும், இந்திய அரசாங்கத்தின் கருத்தை நிராகரித்து, அதிகாரப் பரவலாக்கல் முறையை இரத்துச் செய்வதற்கான சமிக்ஞையைக் கொடுத்தார். அவர், ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து 24 மணித்தியாலத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்ஷங்கர், இலங்கைக்கு விஜயம் செய்தார். அப்போது அவர், ‘சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ்ச் சமூகத்தின் அபிலாசைகளை நிறைவேற்றும் தீர்வொன்றை அடைவதற்காக, இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்கத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் என்ற இந்தியாவின் எதிர்ப்பார்ப்பை’ ஜனாதிபதி கோட்டாபயவிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதி, பதவியேற்று 11 நாள்களில், இந்தியாவுக்கு விஜயமொன்றை மேற்கொண்டார். அப்போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இதேகருத்தை, இதேவார்த்தைகளில் ஜனாதிபதியின் முன்னிலையில் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். “இதில் 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதும் அடங்கும்” என்றும் மோடி கூறினார்.
அப்போது அதை நிராகரிக்காத ஜனாதிபதி, மறுநாள், ராஜபக்ஷ குடும்பத்தின் நண்பரும் முன்னாள் அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமியின் மகளும் ‘இந்து’ பத்திரிகையின் ஊடகவியலாளருமான சுஹாசினி ஹைதருக்கு வழங்கிய பேட்டியில், இந்திய அரசாங்கத்தின் கருத்தை நிராகரித்திருந்தார். “நாம் அரசியல் காரணங்களைப் பற்றிப் பேசலாம். ஆனால், 70 ஆண்டுகளாக அவ்வப்போது வந்த தலைவர்கள், ஒரு வாக்குறுதியை வழங்கினார்கள். அதிகாரப் பரவலாக்கல், அதிகாரப் பரவலாக்கல், அதிகாரப் பரவலாக்கல் என்றார்கள்.
ஆனால், இறுதியில் எதுவும் நடைபெறவில்லை. பெரும்பான்மைச் சமூகத்தின் விருப்பத்துக்கும் உணர்வுகளுக்கும் மாறாக, எதையும் செய்ய முடியாது என்று நான் நினைக்கிறேன்” என கோட்டாபய அந்தப் பேட்டியின் போது தெரிவித்தார்.
அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர், இந்தியாவின் ‘பாரத் சக்தி’, ‘எஸ்.என்.ஐ’ இணையவழி ஊடகங்களின் ஆசிரியரான நித்தின் ஏ. கொக்கலேயுடன், கொழும்பில் நடத்திய பேட்டியின் போதும் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
எனவே, பொதுஜன பெரமுன இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில், வெற்றி பெற்றுப் பதவிக்கு வந்தால், அதிகாரப் பரவலாக்கல் முறையைப் பலப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்கள் மாகாண சபைகளையும் ஒழித்துவிடுவார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்தநிலையில், வடக்கில், தமிழ்த் தலைவர்கள், தமிழ் மக்களுக்குப் பல்வேறு எதிர்பார்ப்புகளை வழங்கி வருகிறார்கள். “நாம், தேர்தலில் வெற்றி பெற்றால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் உதவியுடன், இனப்பிரச்சினை தொடர்பாக, இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமஷ்டி முறையை அறிமுகப்படுத்துவோம்” என, அவர்கள் கூறுகிறார்கள்.
இணைந்த வடக்கு, கிழக்கில் இறையாண்மையுடனான உயர்ந்த மட்ட சுயாட்சியை, சமஷ்டி அடிப்படையில் வென்றெடுப்பதாக முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருக்கிறது. அதற்காக, சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறியிருக்கிறது. இந்த விடயத்தில், இந்தியாவை எந்தளவு நம்பலாம் என்பதே, தற்போதுள்ள கேள்வியாகும். இப்போது இருப்பது, 1980களில் இருந்த இலங்கையோ இந்தியாவோ அல்ல. அதேவேளை, இந்தியா எப்போதும், தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே, இலங்கையின் தமிழ் பிரச்சினையைப் பாவித்துள்ளது.
இந்து சமுத்திர வலயத்தில், தமது பிரதான போட்டியாளரான அமெரிக்காவுக்கு ஆதரவாக, ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன செயற்பட்டமையால், அவரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவே, இந்திரா காந்தி, 1980களில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு ஆயுதங்களையும் பணமும் வழங்கினார். மத்தள விமான நிலயம், கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் ஆகியவற்றின் மீது, கண் வைத்துக் கொண்டு இருந்த நிலையிலேயே, 2017ஆம் ஆண்டு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷங்கர், வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பான கோரிக்கையைக் கைவிடுமாறு, ஈ.பி.ஆர்.எல்.எப.இன் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் சூசகமாகத் தெரிவித்தார்.
எனவே, வரப்போகும் காலம் மிகவும் முக்கியமானதாகும்.