எப்போதுமே எதையுமே தொடக்கத்தில் இருந்தே சொல்லவேண்டியிருப்பதே ஒருவகை வரலாற்று அவலம் என்பார்கள். எனினும் அரசியல் வரட்சி தலைவிரித்தாடும் ஈழத் தமிழர்களின் அரசியல் வெளியில் அரசியல் பாலபாடத்தில் கூடத் தேர்ச்சி பெறும் தகைமையில்லாதோரெல்லாம் முகநூலில் சொட்டைப் பதிவுகளிட்டு ஆய்வாளர்களாகிப் போன துன்பியற் சூழலில் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே எடுத்துச் சொல்ல வேண்டியது வரலாற்றுக் கடமை என்றாற் போலாகிவிட்டது. அஃதில்லையெனில் புரட்சிகர சக்திகளாக அணியமாக வேண்டிய தமிழ் இளையோர்கள் பாராளுமன்ற அரசியற் பித்தலாட்டக்காரர்களுக்கான ஓட்டுப் பொறுக்கிகளாக அலையும் துயரத்தை மாற்றியமைக்க வழியிராது. பாராளுமன்ற அரசியலின் கையாலாகாத்தன்மையைக் குறிப்பிட்ட ஒரு கட்சியின் இரண்டகமாகக் கதையளப்பவர்கள், தாம் அவ்வழி நின்று எதுவெல்லாம் செய்வோமெனக் கூற அதையே நம்பி ஏமாறும் இளவட்டங்களும் அரசியல் வரட்சியில் உலவித் திரியும் ஒரு சில முதியோரும் இனியும் ஏமாறாதிருக்க 6 ஆம் திருத்தச் சட்டத்தை அவர்கள் கூடுமிடங்களில் பேசு பொருளாக்கியே தீர வேண்டுமென்றெண்ணி அது குறித்துத் தொட்டுச் சென்று அரசியற் தெளிவூட்டுவதை இப்பத்தி முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது.
1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம், 1956, 1958, 1977, 1981 களில் கட்டவிழ்த்து விடப்பட்ட மிலேச்சத்தனமான தமிழினப் படுகொலைகள், 1972 இல் கொண்டு வரப்பட்ட கல்வியில் தரப்படுத்தல் எனக் கட்டமைக்கப்பட்ட தமிழினவழிப்பை சிங்கள பௌத்த அரச பயங்கரவாதம் தொடர்ச்சியாகச் செய்து வந்த மாந்த குல எதிர்ச் செயற்பாடுகளின் கேவலங்களுக்கெல்லாம் கேவலமாக உச்சக் கட்ட சிங்கள இனவெறியுடன் 1983 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனவழிப்புப் படுகொலையின் பின்னர் துரித கதியில் உலகெங்கிலும் தமிழர்க்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் சென்றுவிடாமல் தடுப்பதற்காக அப்போதைய சிங்கள பௌத்த அரச பயங்கரவாதத்தின் தலைவராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்பவனால் 6 வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழ்த் தேசிய இனத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் வென்றெடுப்பதற்காகத் தமிழீழத் தனியரசு அமைக்கும் வரலாற்று முதன்மை பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976-05-14 அன்று பிரகடனம் செய்த பின்னர் புரட்சிகர விடுதலை இயக்கங்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் அந்தத் தீர்மானத்தைச் செயலாக்க உறுதியாக வரிந்து கொண்டு களத்திலும் புலத்திலும் செயலாற்றியமை பன்னாட்டளவில் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியதும் இதனைத் தடுத்துவிடக் கொடுங்கோலன் குள்ளநரி ஜே.ஆர். ஜெயவர்த்தனா 6 ஆம் திருத்தச் சட்டம் என்ற அடிப்படை மாந்த உரிமைகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்தான்.
1983-08-08 அன்று சிறிலங்காவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான மீறல்களைத் தடுப்பதற்கான திருத்தம் 6 வது திருத்தமாக சிறிலங்காவின் அரசியலமைப்பிற் செய்யப்பட்டது. இந்த 6 வது திருத்தச் சட்டமானது ஐ.நாவின் சாசனங்களையும் அடிப்படை மாந்த உரிமைகளையும் அப்பட்டமாக மீறும் செயலாகும்.
சிறிலங்கா அரசியமைப்பின் 6 வது திருத்தச் சட்டத்தின் 157 (A) பிரிவின் படி, குறிப்பாக சிறிலங்காவின் ஒருமைப்பாட்டிற்கு எதிரான எல்லா வகையிலான மீறல்களையும் தடைசெய்கின்றது.
மேலும் பிரிவு 157 A (1) இன் படி எந்த ஒரு நபரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, சிறிலங்காவிற்குள் இருந்தோ அல்லது வெளிநாடுகளிலிருந்தோ சிறிலங்காவின் எல்லைக்குள் ஒரு தனி நாட்டினை அமைப்பதற்கு ஆதரவளிக்கவோ, அதற்கு இணங்கி நடக்கவோ, ஊக்குவிக்கவோ, நிதியளிக்கவோ மற்றும் ஆதரவு திரட்டவோ கூடாது.
மேலும் பிரிவு 157 (2) இன் படி, எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ அல்லது சங்கமோ சிறிலங்காவின் எல்லைக்குள் தனிநாடமைப்பதனைத் தனது நோக்கங்களில் ஒன்றாகவோ அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகவோ கொண்டிருக்கக் கூடாது.
மேற்போந்த பிரிவுகளில் குறிப்பிட்டுள்ளவற்றை மீறுபவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றால் விசாரணையின் பின்னர் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுத் தண்டனையாகக் கீழ்வருவனவற்றை அனுபவிக்க நேரும் எனப் பிரிவு 157 (3) உறுதிப்படுத்துகின்றது.
அந்த நபரின் குடிமை உரிமைகள் (Civic Rights) 7 ஆண்டு காலத்திற்கு நீக்கப்படும்.
இதன் கீழ்க் குற்றமிழைத்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபரும் அவரது குடும்பமும் வாழ்வதற்குத் தேவையானவற்றைத் தவிர அவருக்கு உரித்துடைய அசையும் மற்றும் அசையாச் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்.
அவர் 7 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறு குடிமை உரிமைகளுக்கு உரித்துடையவராகார்.
அவர் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தால் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்படும்.
பிரிவு 157(4) இன் படி, ஒரு அரசியல் கட்சியோ அல்லது அமைப்போ அல்லது சங்கமோ சிறிலங்காவின் எல்லைக்குள் ஒரு தனிநாட்டை நிறுவ முனைந்தால், சிறிலங்காவின் குடிமகனாகவுள்ள எவரேனும் அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது சங்கம் அல்லது அமைப்புத் தனது இலக்குகளில் அல்லது குறிக்கோள்களில் ஒன்றாகத் தனிநாடமைப்பதைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டு அந்த அமைப்பின் செயலாளரை எதிர்மனுதாரராகக் குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யலாம்.
பிரிவு 157 (5) இன் படி, உச்ச நீதிமன்றம் இந்த முறையீட்டினை ஏற்றுக்கொண்டால், அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது சங்கம் அல்லது அமைப்பு தடை செய்யப்படும்.
மேலும் பிரிவு 157 A இன் கீழ் 7 வது அட்டவணைப்படி மற்றும் பிரிவு 161 (d) (iii) இன் படி பாராளுமன்ற உறுப்பினர்கள் பதிவியேற்கையில் அவர்கள் சிறிலங்காவின் அரசியலமைப்பிற்கேற்ப சிறிலங்காவின் எல்லைக்குள் ஒரு தனிநாடமைக்க நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளிக்க, நிதியளிக்க, ஊக்குவிக்கச் செய்யேன் என சிறிலங்காவின் ஒற்றையாட்சி மீது பற்றுறுதியுடன் உறுதியேற்கிறேன் என உறுதிமொழியேற்க வேண்டும்.
ஆனால், ஒற்றையாட்சி சிறிலங்காவின் ஒருமைப்பாட்டை ஏற்று உறுதிமொழி ஏற்க மறுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை இழந்து அவர்கள் தமது நடவடிக்கைகளை பாராளுமன்றிலும் முன்னெடுக்க முடியாமல் போனதுடன் மக்களோடு மக்களாக அந்த மண்ணில் நின்று நெஞ்சுரத்துடன் உறுதியாகப் போராடக் கூடிய வர்க்கப் பண்பும் அந்த மேட்டுக்குடிக் கனவான்களிடமில்லை என்பதால் இந்தியாவிற்குப் போய் ஒழிந்துகொண்டார்கள்.
வரலாறு இவ்வாறிருக்க………….
பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் (TGTE) கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட பல இரகசியக் கூட்டங்களில் கலந்துகொண்டு விடுதலைப் புலிகளின் இலக்கான தனித் தமிழீழத்தை நோக்கிச் செயற்பட்டு ஆறாம் திருத்தத்தின் வாயிலான அரசியலமைப்புச் சட்டத்தினை மீறியுள்ளனர் எனக் குற்றஞ் சுமத்தி சிங்கள பௌத்த பேரினவாதப் பத்தி எழுத்தாளர்களில் ஒருவரான ரஞ்சித் சொய்சா என்பவன் 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் வைக்கப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக 6 வது திருத்தச் சட்டத்தினை மீறியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருக்கையில், தாம் ஒற்றையாட்சிக்கு உண்மையாக இருக்கப் போவதாகவும் தனிநாட்டுக் கோரிக்கையைத் தாம் ஏற்கவில்லையென்றும் த.தே.கூட்டமைப்பானது பாராளுமன்ற அவைத் தலைவராகிய சபாநாயகருக்கு எழுத்து மூலம் உறுதியளித்துத் தன்னிருப்பைக் காத்துக் கொண்டது. இது நடந்த போது ஆறாவது திருத்தச் சட்டம் என்ற ஐ.நாவின் சாசனங்களை அப்பட்டமாக மீறும் அடிப்படை மாந்த உரிமைகளை மறுதலிக்கும் சட்டத்தினை இல்லாதொழிக்காமல் தமிழரின் தன்னாட்சி உரிமை பற்றி வாயே திறக்க முடியாது என்பதனைப் பேசு பொருளாக்காமல் (புலம்பெயர்ந்த பெரும்பாலானோரின் அறிவு வரட்சியும், கஜேந்திரகுமாரின் அரசியல் அறுவடையும் இதற்குக் காரணங்கள்) சம்பந்தன் இரண்டகம் இழைத்துவிட்டதாகப் பரப்புரை செய்து தனது காங்கிரஸ் கட்சியைக் கட்டியமைக்கும் வேலையை மிகத் தெளிவாகக் கஜேந்திரகுமார் முன்னெடுத்தார்.
(6 வது திருத்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரை சம்பந்தன் மட்டும் அல்ல பாராளுமன்ற அரசியலில் நுழையும் மற்றும் மறப் போராட்டத்தைக் கையிலெடுக்காமல் இருக்கும் அனைவரும் ஈழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையை மறுதலித்து இக்கட்டான காலச் சூழல்களில் இரண்டகம் செய்வர் என்பதை இப்பத்தி எழுத்தாளர் கோடிட்டுக் காட்டுகிறார்)
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் 1966 ஆம் ஆண்டு சாசனம் மற்றும் உடன்படிக்கைகளின் படியும் அத்துடன் 1966 ஆம் ஆண்டு பொருண்மிய மற்றும் சமூக உரிமைகள் தொடர்பிலான பன்னாட்டுச் சட்டத்தின் படியும் (சிறிலங்கா இவற்றில் கைச்சாத்திட்டுள்ளது) 6 ஆம் திருத்தச் சட்டமானது அப்பட்டமான மீறல் என்பதனை மக்கள் திரள் போராட்டங்கள் மூலமும் சட்ட நடவடிக்கைகள் மூலமும் அணுகாமல், சம்மந்தன் தமிழ் மக்களிற்கு இரண்டகம் செய்துவிட்டதாகப் பரப்புரை செய்து சேடமிழுத்துக் கொண்டிருந்த தனது காங்கிரஸ் கட்சியை உயிர்பெறச் செய்வதற்கான வேலையை கஜேந்திரகுமார் முன்னெடுக்க அரசியல் வரட்சியிலிருந்து அரசியல் பேசுவோரும் நுண்ணரசியலை ஆய்ந்தறிந்து அதனை எதிர்கொள்ள மக்களை அணியமாக்கி எமது வளங்களை ஒன்றிணைக்க வேண்டிய தட்டிக் கழிக்க முடியாத தார்மீகக் கடமையை விளங்குமளவிற்கு அறிவு வளர்ச்சி இல்லாதோரும் அதற்கு ஒத்தூத தமிழர்களின் அறவழி அரசியல் வெளி மூடர்களின் மலர்ப்படுக்கையாகிவிட்டமை முள்ளிவாய்க்காலின் பிந்தைய சூழலில் தமிழர்கள் படும் வெம்பாடே.
மாந்த குலத்தின் உறுப்பினர்கள் அனைவரினதும் உள்ளார்ந்த கௌரவத்தையும் சமவுரிமையையும் ஏற்று நடக்க வேண்டியது இந்த உலக அமைதிக்கும் அறத்திற்கும் அடிப்படையானது என்று உறுதிமொழி தெரிவித்த 1948- 12- 10 அன்று நடைபெற்ற உலக மாந்த உரிமைகள் நாளன்று செய்யப்பட்ட மாந்த உரிமைப் பிரகடனத்தின் 19 ஆவது பிரிவின் படி உலகிலுள்ள ஒவ்வொரு மாந்தனுக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உண்டு என்றும் பிரிவு 30 இன் படி இந்த உரிமையை இல்லாதாக்கும் படியான அல்லது மறுக்கும் படியான எந்த நடவடிக்கைகளையும் எந்த நாடோ அல்லது குழுவோ அல்லது நபரோ செய்ய முடியாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1955 இல் ஐ.நாவின் உறுப்பு நாடாக இணைந்த சிறிலங்கா ஐ.நாவின் சாசனத்தில் உள்ளடங்கியுள்ள கோட்பாடுகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய கடமைப்பாட்டில் உள்ளதுடன் தன்னால் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கைகளின் படி நடந்துகொள்ள வேண்டும் என்ற கடமைப்பாட்டிலும் உள்ளது.
ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவசுப்பிரமணியன் தலைமையில் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் உருத்திரகுமாரன் அவர்கள் ஐ.நாவின் மாந்த உரிமைகள் மன்றில் 6 ஆம் திருத்தச் சட்டத்தின் அப்பட்டமான மீறல்கள் குறித்து முறையீடு செய்யப்பட்டதுடன் இது குறித்து உலக வாழ் தமிழர்களிடத்திலும் உலகளவிலான சட்டப் புலமையாளர்களிடத்திலும் ஒரு கையெழுத்துப் பரப்புரை செய்தார். எனினும் இது சட்ட நடவடிக்கையென்ற அளவைத் தாண்டி ஒரு மக்கள் திரள் போராட்ட வடிவம் என்றளவில் இதை முன்னெடுத்துச் செல்லக் கூடிய ஆளுமை அவரிடம் போதியளவு இல்லையென்றே ஐயுறவு கொள்ள வேண்டியுள்ளது.
ஐ.நாவின் சாசனங்களையும் அடிப்படை மாந்த உரிமை மீறல்களையும் அப்பட்டமாக மீறிய விடயங்களை 6 வது திருத்தச் சட்டமாகத் தனது அரசியலமைப்பில் வைத்துள்ள சிறிலங்கா அரச பயங்கரவாதத்தையே சட்ட நடவடிக்கைகள் மூலம் பன்னாட்டளவில் அணுகாமல், ஐ.நா சுற்றுலா சென்று உலகின் வல்லாதிக்க நாடுகளின் திட்டமிடலுடன் முழுப் போசாக்கூட்டலுடன் சிறிலங்கா மற்றும் இந்திய அரச பயங்கரவாதங்களினால் தமிழீழ மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பிற்கா இவர்கள் சட்ட நடவடிக்கைகள் மூலமும் இராசதந்திர முனைப்புடனும் நீதி வேண்டிப் பெறப்போகின்றார்கள்????
இனப்படுகொலையைப் (Genocide) போர்க்குற்றங்கள் (War Crimes) என்றும் மாந்த உரிமை மீறல்கள் என்றும் அதுவும் இறுதிப் போரில் நடந்த மாந்த உரிமை மீறல் (Human Rights Violations at the final stage of the war) என்றும் ஈற்றில் வகுப்புவாத வன்முறை (Communal Violence) என்றளவில் நீர்த்துப்போகச் செய்தமை போல உலக வல்லாதிக்கங்களாலும் இந்திய அரச பயங்கரவாதத்தாலும் பன்னாட்டளவில் 6 வது திருத்தச் சட்டத்திற்கு ஒன்றும் செய்ய முடியாது. பாராளுமன்ற இயலாமையை இரண்டகமாகக் காட்டிக் கொண்டு காலத்தைக் கடத்தாமல், 6 வது திருத்தச் சட்டத்திற்கெதிராக பன்னாட்டளவில் வேலை செய்து அதனை நீக்கி விடுங்கள். அதன் பின்பும் சம்பந்தன் தமிழீழத் தனியரசு தான் தமிழர்க்கான தீர்வு என்று குரல் கொடுக்கவில்லையெனில் அவர் தமிழினத்திற்கு இரண்டகம் இழைத்த கொடியவர்க்குள் கொடியவராக வரலாற்றில் எழுதப்படலாம்.
–மறவன் –