அதுவரை அரசியல் பரப்பின் எல்லைகளில் நின்ற இனமத தேசியவாதம், அரசியல் மைய நீரோட்டத்தை நோக்கிக் கொண்டு வரும் கைங்கரியத்தை தேர்தல் அரசியலுக்காக, இந்நாட்டின் தலைவர்கள் எனப்படுவோர் செய்யத்துணிந்தனர்.
இலங்கையின் இனமுரண்பாடானது வரலாறு, கலாசாரம், அரசியல் ஆகியவற்றின் காரணிகளில் வேரூன்றியுள்ளது. கொலனித்துவ காலத்தில் இருந்து சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இன முரண்பாடுகளின் நீண்ட வரலாற்றை இந்நாடு கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், நீண்ட வரலாற்றை சுருங்கக் கூறின், சுதந்திரத்துக்குப் பிந்தைய காலம் தமிழர்களுக்கு எதிரான பாரபட்சமான கொள்கைகளால், பெரும்பான்மையின வாக்குகளைப் பெற்றுக்கொள்ளும் பெருந்தேசியவாதம் வளர்ச்சியடையத் தொடங்கியது.
சிறுபான்மை மக்கள், பெரும்பான்மை இனமத தேசத்தின் மேலாதிக்கத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளார்கள் என்ற தோற்றப்பாடு கட்டமைக்கப்பட்டது. இதை சமன்செய்ய வேண்டும் என்ற எண்ணம், திட்டமிட்ட பேரினவாதப் பிரசாரத்தின் மூலம் பெரும்பான்மையின மக்களிடையே விதைக்கப்பட்டது.
அதன் விளைவாக, சிறுபான்மையின மக்களை, குறிப்பாக தமிழர்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் கொள்கைகள், திட்டமிட்ட வகையில் திணிக்கப்பட்டன. இந்தக் கொள்கைகளில், சிங்களத்தை மட்டுமே அரச கரும மொழியாக அறிமுகப்படுத்துதல்; கைத்தொழில்கள், அரச சேவைகள் தேசிய மயமாக்கல்; கல்வி, வேலைவாய்ப்பில் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டமை ஆகியவை அடங்கும்.
தொடர்ந்து வந்த அரசாங்கங்கள், இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யத் தவறின. பேரினவாதத்தை மட்டுமே நம்பி, இலங்கையின் அரசியல் முன்னகர்த்தப்பட்டது. பெரும்பான்மையின மொழியே, ஒரே உத்தியோகபூர்வ மொழி; பெரும்பான்மை மதத்துக்கு முன்னுரிமை என்பன அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன.
சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் அடக்கு முறைகள், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களின் எழுச்சிக்கு வழிவகுத்தன. இராணுவத்தை நிலைநிறுத்துதல், சித்திரவதைகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உட்பட அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகள் மோதலை மேலும் தீவிரப்படுத்தின.
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போர், மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்தது; மற்றும், பல்லாயிரக்கணக்கான மக்களின் மரணத்துக்கும் வழிவகுத்தது.
2009 இல் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், இனப்பிரச்சினையின் அடிப்படைக் காரணங்களைத் தீர்க்க, இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டன; இன்னும் தவறிக் கொண்டேயிருக்கின்றன.
அரசாங்கத்தின் அணுகுமுறையானது, அரசியல் விருப்பமின்மை; தமது தவறுகளை மறைக்கும் தன்மை; கடந்தகால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யத் தவறியதன் மூலம், இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பிலான அடிப்படைப்படிகளைக் கூட, முன்னகர்த்த முடியாத சூழல்தான் எழுந்துள்ளது.
இன்று, இலங்கை பொருளாதார வங்குரோத்து நிலையில் நின்றுகொண்டிருக்கும் பொழுது கூட, தெற்கின் பெரும்பான்மையின அரசியலானது, இந்த வங்குரோத்து நிலைக்கான பிரதான காரணங்களுள் ஒன்றாக இனப்பிரச்சினை இருக்கிறது என்பதை வௌிப்படையாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றது.
ஊழல், முறைகேடுகள், பொருளாதார திட்டத் தவறுகள், கோவிட்-19, உலகப் பொருளாதாரத்தின் மந்த நிலை என எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார்களேயன்றி, அறையிலுள்ள வௌ்ளை யானையை அவர்கள் இலாவகமாக மறந்துவிடுகிறார்கள்.
இலங்கையில் இன முரண்பாடானது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டுப் போரின் விளைவாக உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன; மற்றும், மக்கள் இடம்பெயர்ந்தமையானது பொருளாதார நடவடிக்கைகளின் சரிவுக்கு வழிவகுத்தது.
இலங்கையின் இனப்பிரச்சினையானது, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி போன்ற சமூகச் செலவீனங்களில் இருந்து, பாதுகாப்புச் செலவினங்களுக்கு வளங்களைத் திருப்பி இருக்கிறது. இன்றும் இலங்கையின் அரச பாதீட்டில் மிக அதிக தொகை, பாதுகாப்புக்கே ஒதுக்கப்பட்டு வருகிறது.
மேலும், இனமுரண்பாடானது வெளிநாட்டு முதலீடு, சுற்றுலா, வர்த்தகம் ஆகியவற்றிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கையை ஒரு மோதல் வலயமாக கருதுவது, வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் கவராமல் இருந்தது.
இவை அனைத்தினதும் விளைவாக, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இலங்கை, பல தசாப்தங்கள் பின்தங்கியே இருக்கிறது. மேலும், பல இலங்கையர்கள், குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், வறுமையில் வாடினார்கள். இன்று பொருளாதாரத்தில் பின்தங்கிய மாகாணங்களாக கிழக்கும், வடக்கும் இருக்கின்றன.
ஊழல் பற்றிப் பேசுபவர்கள் கூட, ஊழலுக்கு இந்த இனமுரண்பாடு வலுசேர்த்தமை பற்றிப் பேசுவதில்லை. இந்நாட்டின் ஊழல், பொறுப்புக்கூறல் இல்லாமை போன்றவற்றுக்கு, இனமுரண்பாடு பெரும் பங்களித்துள்ளது என்றால் அது மிகையல்ல.
இனமுரண்பாட்டுக்கான இலங்கை அரசாங்கங்களின் எதிர்வினைகளை நாம் எடுத்துப் பார்த்தால், பொது மக்களுக்கு நன்மை பயக்கும் அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்வதை விட, வளங்களை அரசியல் உயரடுக்குகளுக்கும் அவர்களது கூட்டாளிகளுக்கும் திசை திருப்புவதை நாம் அவதானிக்கலாம்.
யுத்தத்தால் இலாபமடைந்த வணிகர்களும் அரசியல்வாதிகளும் இங்கு எக்கச்சக்கம். யுத்தம் என்ற ஒன்றைக் காரணம் காட்டி, நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் நடந்த ஊழல், முறைகேடுகள் கொஞ்சநஞ்சமல்ல. இனவாதமானது, தேர்தல் வெற்றியை மட்டுமல்லாது, ஊழல் வெற்றியையும், அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அளித்தது என்றால் அது மிகையல்ல.
நாட்டின் பாதுகாப்பு என்ற மறைவுக்குள், இரகசியக் காப்பின் பாதுகாப்புக்குள் இலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டன. ஆனால், இதைப்பற்றி எல்லாம் எவரும் பேசுவதில்லை.
இனப்பிரச்சினையின் விளைவுகள் இன்றும் இலங்கையில் உணரப்படுகின்றன என்பதுதான் உண்மை. 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான திட்டமிட்ட பாகுபாடு உட்பட இனமுரண்பாட்டின் அடிப்படைக் காரணங்கள் போதுமான அளவில் இல்லாதொழிக்கப்படவில்லை. இது சமூகங்களுக்கிடையில் தொடர்ந்து பதட்டங்களை ஏற்படுத்தியுள்ளது,
மேலும், மீண்டும் வன்முறை ஏற்படும் அபாயத்தையும் உணர்த்தி வருகிறது. இனமுரண்பாட்டால் இலாபமடைந்த அரசியல் அதிகார, வணிக கூட்டமொன்று, முரண்பாடு தீர்க்கப்படுவதை எப்படி விரும்பும்?
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம். இது பாகுபாட்டின் மூல காரணங்களை நிவர்த்தி செய்தல்; கடந்தகால அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்தல்; அனைவருக்குமான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிதல் என்பவற்றை உள்ளடக்கியது.
அனைத்து சமூகங்களுக்கும் வளங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கான பன்முகத்தன்மை, சமமான அணுகலை ஊக்குவித்தல் போன்றவை உள்ளடங்கிய கொள்கைகளுக்கு, இலங்கை அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும். இதைச் செய்யாமல், பொருளாதார மீட்சி என்பது சாத்தியமில்லை.
இலங்கை பற்றி, சிங்கப்பூரின் சிற்பி லீ க்வான் யூ இப்படிச் சொன்னார், “1956 ஆம் ஆண்டு, நான் முதன்முறையாக கொழும்புக்குச் சென்றபோது, அது சிங்கப்பூரை விடச் சிறந்த நகரமாக இருந்தது. கொழும்பு மவுண்ட்பேட்டனின், தென்கிழக்கு ஆசிய கட்டளையின் மையம் இருந்தது. மேலும் அவர்களிடம் ஸ்டெர்லிங் கையிருப்புகள் இருந்தன. அவர்களுக்கு இரண்டு பல்கலைக்கழகங்கள் இருந்தன. போருக்கு முன், படித்த திறமைகளின் அடர்த்தியான அடுக்கினைக் கொண்டிருந்தது.
அமெரிக்க தாராளவாதிகள் அல்லது பிரிட்டிஷ் தாராளவாதிகள் சொல்வதை நீங்கள் நம்பினால், அந்நாடு செழித்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ‘ஒரு நபர்; ஒரு வாக்கு’ என்பது, சிறுபான்மைத் தமிழர்கள் மீது சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. அவர்கள் சுறுசுறுப்பான மற்றும் புத்திசாலித்தனமான தோழர்கள். கடுமையாக உழைத்தனர்; ஆனால் உழைப்புக்குத் தண்டனைதான் கிடைத்தது. மேலும் ஆங்கிலம் விலகப்பட்டது. அவர்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்றவர்கள். சிங்களம் உள்நுழைக்கப்பட்டது. இரண்டு பல்கலைக்கழகங்களில் ஒதுக்கீடு திணிக்கப்பட்டு, இப்போது வெறிபிடித்த புலிகளாகிவிட்டனர். அந்த நாடு மீண்டும் ஒன்றிணைக்கப்படாது. அமைப்பை மாற்றவும், தளர்த்தவும் அல்லது உடைக்கவும் யாராவது அவர்களிடம் இதைச் சொல்லியிருக்க வேண்டும்”.
ஆகவே, இனப்பிரச்சினைக்குத் தீர்வில்லாமல், பொருளாதார மேம்பாடு பற்றிச் சிந்திப்பதெல்லாம், உள்ளுக்குள் இருக்கும் கிருமியால் வந்த புண்ணுக்கு, மாவுக்கட்டு போடுவதைப் போன்றது. அது புண்ணை மறைக்கலாம்; ஆனால், மாவுக்கட்டுக்குள் உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழுகிக் கொண்டிருக்கிறது என்பது, வலியில் துடிக்கும் உடலுக்கு மட்டும்தான் தெரியும்!