பொறுப்புக்கூறலில் இரட்டை வேடம்

ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செயிட் ராட் அல் ஹுஸைன், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையின் முற்கூட்டிய பிரதி, கடந்த மூன்றாம் திகதி வெளியிடப்பட்டது. இதற்குப் பின்னர் கலப்பு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இருவேறு கோணங்களில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தும் வகையில் சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது.

இந்த அறிக்கை, அரசாங்கத்துக்கு முன்கூட்டியே கிடைத்திருந்தது. பெப்ரவரி 10ஆம் திகதியே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு, இலங்கை அரசாங்கத்தின் கவனத்துக்காகவும் பதில் அளிப்பதற்காகவும் கையளிக்கப்பட்டிருந்தது.

ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர், தனது அறிக்கையில் மீண்டும் கலப்பு விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தியிருந்த பின்னர்தான், அதனை நிராகரிக்கும் கருத்துகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடத் தொடங்கினார்.

பொலன்னறுவவில் பலாலியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் என்று இதுபற்றிய விடயங்களுக்கே அவர் முன்னுரிமை கொடுத்திருந்தார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை கிடைத்து, 24 மணித்தியாலங்களுக்குள்ளாகவே, தாம் அதனை நிராகரித்துப் பதில் அனுப்பி விட்டதாகச் சுதந்திரக் கட்சி மத்திய குழு கூட்டத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன் மூலம்,தமக்கு முதுகெலும்பு உள்ளது என்று சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தி விட்டதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அதேவேளை, அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்ட மறுநாள், கடந்த மார்ச் நான்காம் திகதி, யாழ்ப்பாணம் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பலாலி படைத்தளத்தில் நிகழ்த்திய உரையின் சாரம் வேறுபட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முப்படைகளின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர், பலாலியில் உள்ள யாழ். படைகளின் தலைமையகத்துக்கு மேற்கொண்ட முதலாவது அதிகாரபூர்வ பயணம் இது.

பலாலி விமானப்படைத் தளத்தின் தரிப்பிடத்தில், 400 படையினர் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி,கலப்பு விசாரணைக்கு அனுமதிக்கப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தியதுடன், படையினர் மீது குற்றப்பத்திரங்களைத் தாக்கல் செய்யவிடமாட்டேன், அவர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவேன் என்றும் உறுதியளித்திருந்தார்.

இங்கு உரையாற்றிய போது ஜனாதிபதி, அரசசார்பற்ற நிறுவனங்கள் கூறுவது போன்று படையினர் மீது நடவடிக்கை எடுக்கவோ ஆட்சியை நடத்தவோ தாம் தயாரில்லை என்றும் கூறியிருந்தார்.

இதிலிருந்து விளங்கிக் கொள்ளக் கூடியது, உள்ளக விசாரணையில் வெளிநாட்டவர்களுக்கு இடமில்லை என்பது மாத்திரமல்ல. படையினர் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த அனுமதிக்கமாட்டேன் என்பதையும்தான்.

ஆனால், மூன்றாம் திகதி வௌ்ளிக்கிழமை கொழும்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைப் பொறிமுறையில் ஈடுபடுத்துவதற்கு எதிரான கருத்தை வேறொரு விதத்தில் முன்வைத்திருந்தார்.

2015ஆம் ஆண்டில் கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஐ.நா மனித உரிமைகள் பேரவை முன்வைத்தமைக்கு, அப்போது இலங்கையின் நீதித்துறை நம்பகமானதாக இருக்கவில்லை என்பதே காரணம் என்றும் எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நீதித்துறை சுதந்திரம் உறுதி செய்யப்பட்டிருப்பதால், இப்போது அது தேவையில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

ரணில் விக்கிரமசிங்கவின் உரை, 2015இல் கலப்பு விசாரணைப் பொறிமுறை முன்வைக்கப்பட்ட சூழலை ஏற்றுக் கொள்வதாகவே இருந்தாலும், இப்போது நீதித்துறை சுதந்திரமானதாக இருப்பதால் அது தேவையற்றது என்று வாதிடுவதாக உள்ளது.

அதேநேரத்தில், ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும் கூட, நீதித்துறை சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலான பல விடயங்கள் இம்முறை சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளக விசாரணைப் பொறிமுறையில் அனுமதிப்பதாக இருந்தால், அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்; அதனை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியும்தான் நிறைவேற்ற வேண்டும். அது அரசியல் ரீதியாகச் சாத்தியமில்லை என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.

இலங்கையின் அரசியல் சட்டத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதற்கு இடமில்லை என்பது உண்மையே. 2015 ஆம் ஆண்டு ஜெனீவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய போது,இலங்கை அரசாங்கத்துக்கு இது தெரியாத விடயமல்ல.

ஆனாலும், இழுத்தடித்துக் காலத்தை வீணடிப்பதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால்தான் அப்போது அரசாங்கம் அதற்கு இணங்கியது.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கும் வகையில் சட்டத்தைக் கொண்டு வர நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன், சர்வஜன வாக்கெடுப்பையும் நடத்துவது; அரசியல் ரீதியாகச் சாத்தியமற்றது என்றால், இதே நடைமுறையைப் பின்பற்றி, புதிய அரசியலமைப்பை அரசாங்கம் எவ்வாறு கொண்டு வரப்போகிறது என்ற கேள்வி எழுகிறது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் கலப்பு விசாரணைப் பொறிமுறையை உருவாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, அதனை உருவாக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் தான் காரணம் என்று கூற முடியாது.

அத்தகைய ஒரு விசாரணைப் பொறிமுறைக்கு இணங்கக் கூடாது என்பதே முதல் காரணம்.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறைக்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவை பரிந்துரைத்தமைக்கு, இலங்கையின் நீதித்துறை சுதந்திரமானதாக, நம்பகமானதாக இருக்கவில்லை என்பதே பிரதான காரணம்.

அதனை ஏற்றுக்கொண்டு விட்டு, இப்போது நம்பகமான நீதித்துறையை உருவாக்கி விட்டோம் என்று கூறி, கலப்பு நீதிமன்றத்துக்கு மாற்றீடான ஒரு பொறிமுறையை உருவாக்குவோம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.

எவ்வாறாயினும், ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தை பிரதமர் ரணல் விக்கிரமசிங்க முன்வைக்கவில்லை.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துகளில் படையினருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கக்கூடாது, அதற்கு அனுமதிக்க முடியாது என்ற தொனியே தென்படுகிறது.

படையினர் மீது குற்றப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அவரது கருத்து, குற்றமிழைத்த படையினரைப் பாதுகாக்கும் உத்தரவாதத்தை அளிப்பது போலவே உள்ளது.

இந்த விடயத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் வெவ்வேறு கருத்துகளை முன்வைத்திருப்பது அரசாங்கத்துக்குள் நிலவுகின்ற தெளிவான பிளவினைக் காட்டுகிறது.

குற்றமிழைத்த படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை அனுமதிக்க முடியாது என்றால், இந்த இடத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்று தான் அர்த்தம்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில்உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது அதிகளவில் போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும் அந்தளவுக்கு தனது அரசாங்கத்தில் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். முன்னைய ஆட்சியில் இப்படி போராட்டம் நடத்தினால், வெள்ளை வான் வந்து தூக்கிச் சென்றிருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

முன்னைய ஆட்சியை விட வித்தியாசமான ஓர் ஆட்சியை நடத்துகிறேன் என்பதை இதன்மூலம் கூற முனைந்த ஜனாதிபதி, படையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அனுமதியேன் என்ற விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவைப் போலத்தான் நடந்து கொள்வேன் என்றும் அடம்பிடிக்கிறார்.

அது மாத்திரமன்றி, வெளிநாட்டுத் தொடர்புகளில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் சொற்படி, தாம் ஆட்சியை நடத்தத் தயாரில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பலாலியில் இராணுவத்தினர் மத்தியில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் அவ்வாறு குறிப்பிட்டதற்கு, சிவில் சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரையே காரணம் எனக் கருதப்படுகிறது.

கலப்பு விசாரணைப் பொறிமுறையைப் பரிந்துரைத்த இந்த செயலணியில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்தான் இடம்பெற்றிருந்தனர். இதன் அறிக்கையைக் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் பெற்றுக் கொள்ளவில்லை.

இந்தக் கலந்தாய்வு செயலணியின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் தனது பிந்திய அறிக்கையிலும் வலியுறுத்தியிருக்கிறார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் உரையில் கூட, நல்லிணக்கப் பொறிமுறைகளை வடிவமைப்பது தொடர்பாக இந்தச் செயலணியின் அறிக்கையை அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்பட்டிருக்கிறது..

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, அரச சார்பற்ற நிறுவனங்களின் சொற்படி தாம் ஆட்சியை நடத்தப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். அவ்வாறாயின் கலந்தாய்வு செயலணியின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அவர் தயாராக இல்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.

போர்க்குற்ற விசாரணைகளை நடத்தாமல் ஆட்சியை நடத்திச் செல்ல விரும்பும் ஜனாதிபதியும் ஒப்புக்காக ஒரு விசாரணைப் பொறிமுறையை உருவாக்கிக் காலத்தைக் கடத்த முனையும் பிரதமரையும் கொண்ட அரசாங்கம், தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற நீதியையோ, நியாயத்தையோ எவ்வாறு வழங்கப்போகிறது என்று தெரியவில்லை.

சர்வதேச சமூகம் ஒருவேளை இவர்களின் செயற்பாடுகளால் திருப்தியடையலாம். ஆனால், பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்கள் அவ்வாறு திருப்தியடைய முடியாது.

ஐ.நாவின் ஒவ்வொரு அறிக்கையிலும் பாதிக்கப்பட்ட தரப்பினரைத் திருப்திப்படுத்தும் வகையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றிருப்பது வழக்கம்.

ஆனால், அவர்களை, அவர்களின் கருத்துகளை யாரும் கணக்கில் எடுத்ததாகவே தெரியவில்லை. அதற்கு ஐ.நாவும் விதிவிலக்கல்ல.

(சஞ்சயன்)