(விஜய பாஸ்கரன்)
இது புலிகளின் மாவீரர் வாரம். சிலர் புலிகளை போராளிகளாக தியாகிகளாக நினைக்கின்றனர். நாங்கள் அவர்களை ஒரு பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றோம். அவர்கள் நமது மண்ணில் நடாத்திய கொலைகள் மோசமானவை.போராட்டத்தின் பெயரால் நாட்டின் அனைத்து மக்களையும் அச்சுறுத்தியவர்கள். ஆயுதம் ஏந்திய சகல அமைப்புகளும் ஏதோ ஒரு வகையில் கொலைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள். ஆனால் அதற்கு அடிப்படையாக புலிகளே காரணமாக இருந்துள்ளனர். புலிகள் சக அமைப்பினர் அவர்களது ஆதரவாளர்கள் மீது வன்முறைகளை ஏவி விடவில்லை என்றால் சக அமைப்பினர்கள் நடாத்திய வன்முறைகள் கொலைகள் தானாகவே கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.
பிரபாகரன் அவரது அமைப்பான புலிகள் இவர்களின் இலக்கு விடுதலை அல்ல. அவர்களுக்கு தமது அதிகாரத்தை தக்க வைப்பதே இலக்கு. மட்டக்களப்பு மைக்கலில் ஆரம்பித்த தனிநபர் பழிவாங்கலில் ஆரம்பித்த கொலையை பிரபாகரன் இறுதிவரை நிறுத்தவே இல்லை. உமா மகேஸ்வரன் இறக்கும்வரை அவரை கொல்லும் அந்த பழிவாங்கல் குணத்தை அவர் விடவே இல்லை. இரண்டு தடவைகள் உமாவை கொல்ல அனுப்பியவர்களை புளொட் கைது செய்து திரும்ப ஒப்படைத்தது. ஆனாலும் கொலைவெறி அடங்கவில்லை. போராளி என்பவனுக்கு பழிவாங்கல் குணம் இருக்கக்கூடாது.
உமாதான் தனிப்பட்ட பகையாளி என்றால் ஒபரோய் தேவன்,ரெலி ஜெகன் போன்றவர்களை ஏன் கொன்றார்கள். சபாரத்தினம், பத்மநாபா ஆகியோரைக் கொல்ல உள்ளே ஆட்களை அனுப்பியதேன். இந்த கொலை வெறியை புலிகள் கைவிடாததால் சில சந்தேகங்களின் அடிப்படையில் அவர்களும் கொலைகாரர்கள் ஆனார்கள். அவர்களையும் கொலைகாரர் ஆக்கியது புலிகளே. மொத்தத்தில் சகல அமைப்புகளினாலும் நடாத்தப்பட்ட கொலைகளுக்கு மூல காரணம் புலிகளே. இவர்களின் கொலைகளே சங்கிலியையும் சுரேஷ் பிரேமசந்திரனையும் உருவாக்கியது. திறீ ஸ்ரார் என்ற அமைப்பையும் உருவாக்கியது.
புலிகள் செய்தது கொலைகள். மற்றவர்கள் செய்தது தற்காப்பு கொலைகள். இரண்டும் வேறு வடிவம் கொண்டவை.
புலிகளை வளர்த்து ஊக்குவித்த அமிர்தலிங்கம்,யோகேஸ்வரன்,ஏன் கொன்றார்கள். எந்தக் கொலைகளுக்கும் அவர்களிடம் சரியான காரணம் கிடையாது.
அவர்கள்தான் ஆயுதம் ஏந்தியவரகள். கல்லூரி அதிபர்களான ஆனந்தராசா, இராசதுரை இவர்கள் ஏன் கொல்லப்பட்டனர். அரசியலுக்கே சம்பந்தம் இல்லாத இவர்களை ஏன் கொன்றார்கள். ராஜினி திராணகம எதற்காக கொல்லப்பட்டார்.
ஒரு சமூகத்தை அச்சுறுத்தி நிர்மூலமாக்கிய இவர்களை புனிதர்கள் என்று எப்படி கொண்டாடுவது. உயிரோடு மனிதர்களை எரியும் நெருப்பிலே போட்டு மரணத்தை வேடிக்கை பார்த்த இவர்கள் போராளிகளா….? மாவீரர்களா….? பள்ளிவாசலுக்குள், கிராமங்களுக்குள் புகுந்து வஞ்சமே அறியாத மக்களை, பிஞ்சுக் குழந்தைகளை சுட்டுப் பொசுக்கிய இவர்கள் போராளிகளா இல்லை மிருகங்களா….? சொந்த மக்களையே கைது செய்து சிறையில் அடைத்து சித்திரவதைகளை செய்தவர்கள். வீட்டுக்குள் பிடிக்காதவர்கள் அடைத்துவைத்து குண்டு வைத்து தகர்த்து வேடிக்கை பார்த்தவர்கள். சிறுவர்களைகூட இரக்கமின்றி கொன்றவர்கள். இவர்களுக்கு ஒரு அஞ்சலி தேவையா
கருணா பிரிவின் பின்னால் தமது சொந்த உறுப்பினர்களான புலிகளுக்கு என்ன நடந்தது. அவர்கள் வெருகல் ஆற்றங்கரையில் நடாத்திய வெறியாட்டம் மிகவும் உச்சமானது. ஒழுக்கம் என்று சொல்லிக்கொள்ளும் புலிகள் சொந்த பெண்போராளிகளை கற்பழித்தே கொன்ற கொடூரமான செய்திகள் அவர்களின் ஒழுக்கம் என்ன என்பதை வெளிக்காட்டின. புதைக்கப்பட்ட பிணங்களைத் தோண்டி எடுத்து இறந்த பிணங்களில் கூட பழி தீர்த்த ஈனத்தனமான செயல்களை செய்தவர்கள் புலிகள்.
நானோ மற்றவர்களோ வக்கிரத்தனமான எண்ணங்களோடு புலிகளை விமர்ச்சிக்கவில்லை. புலிகளின் வக்கிரத்தனங்களை,உண்மைகளை வெளியே சொல்கிறோம். புலிகளுக்கு எதிராக வைக்கப்படும் எந்த குற்றச்சாட்டுக்களுக்கும் புலிகளிடம் இருந்து பதில் இல்லை. மாறாக இன்னொரு குற்றச்சாட்டு, துரோகி, அரசின் கைக்கூலி, அல்லது இந்திய கைக்கூலி என்ற பட்டம் சூட்டப்படும். ஆனால் இந்த பட்டங்கள் கூட அவர்களுக்கே பொருந்தும்.
ஆனந்தராசாவை இராணுவத்துடன் தொடர்பு கொண்டார் என கூறி கொலை செய்தவர்கள் சில மாதங்களின் பின் இராணுவத் தளபதி ஜெயந்த கொத்தலாவல அவர்களுடன் வலம் வந்தனர். இவரைப் பிரபாகரனும் சொர்ணம் என்பவருடன் சேர்ந்து சந்தித்தார். இந்திய உளவுப் படை சொன்ன காரணத்துக்காக அனுராதபுரத்தில் நுழைந்து அப்பாவி பொது மக்களை சுட்டனர். இந்திய இராணுவத்திடம் இருந்து தப்ப இலங்கை அரசுடன் முதலில் கூட்டு வைத்தவர்கள் புலிகளே. புளொட் முகாம்கள் மீது தாக்குதல்கள் நடாத்த இலங்கை இராணுவ உதவியை நாடினர். கருணா குழு மீதான தாக்குதல்களை நடாத்த வாகரையில் இறங்க இல்ங்கை இராணுவ உதவிகளை பெற்றனர். இப்படி இவர்களே கூலிக் குழுக்களாக செயற்பட்டுவிட்டு மற்றவர்களை கூலிப்படை, துரோகி, கொலையாளிகள் என கூறுவது எந்த விதத்தில் நியாயமானது.
பெற்ற தாய் கூடப்பிறந்தவர்கள் கதறி அழ எத்தனை மனிதர்களை இழுத்துச் சென்றிருப்பார்கள். அவர்கள் கண்முன்னால் எத்தனை பேரைக் கொன்றிருப்பார்கள். இராணவத்திடம்கூட உயிர்ப்பிச்சை கேட்க முடியும் புலிகளிடம் அதை எதிர்பார்க்க முடியாது. அவ்வளவு கொடூரமானவர்கள்.
இவர்களை போராளிகளாகவோ, தியாகிகளாகவோ, மாவீரர்களாகவோ எப்படி கருத முடியும். ஆயுதம் ஏந்தியவன், கொலைகள் செய்தவன் எல்லாம் போராளிகள் அல்ல. மனித உயிர்களின் பெறுமதி என்னவென்று தெரியாதவர்கள் புலிகள். அவர்கள் தியாகிகளா…?
தவறுகள் எல்லோரிடமும் உண்டு. சகல அமைப்புகளும் தங்கள் தவறுகளை ஒத்துக்கொண்டனர். இதுவரைக்கும் புலிகளோ அதன் ஆதரவாளர்களோ தங்கள் தவறுகளை ஒத்துக்கொள்ளவில்லை. நியாயப்படுத்தவே செய்கின்றனர்.
துப்பாக்கி முனையில் உண்மைகளை உறங்க வைத்தனர். அந்த உண்மைகளே புகைந்து நெருப்பாக எரிகின்றது. எங்களைப் போல பலரது நெஞ்சுகள் எரிகின்றது. புலிகளால் உறவுகளை இழந்தவர்கள் நெஞ்சு எரிந்தபோதும் மாவீரர் கல்லறைகளைப் பார்த்து சிரிக்கின்றனர்.
உலக வரலாற்றில் கல்லறைகள் (சுடலை)கட்டி அழகு பார்த்த ஒரே தலைவன் பிரபாகரன். அவர் அறிவுக்கு கல்லறைகளே கட்டமுடிந்தது. பல மனிதர்களை கொன்றவர்கள் உறங்கும் இடமே மாவீரர் இல்லம்.