(ஜெம்சித் (ஏ) றகுமான்)
யகபாலனய எனும் கூட்டாற்சியை கலைக்க வேண்டும் என்ற மகிந்தவின் கணக்கு சாத்தியமாகுமா?எனும் கேள்வி அரசியல் ஆய்வாளர்களை சிந்திக்க தூண்டி இருக்கிறது.ஐ.தே.கட்சிக்கும்,சுதந்திர கட்சிக்கும் இடையே கருத்து முறண்பாடு எனும் கறையான் அரிக்க ஆரம்பித்திருக்கிறது.சுதந்திர கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகளை உற்று நோக்குகின்ற போது முழுமையான ஆட்சி அதிகாரத்தை மீண்டும் தங்கள் வசம் இழுத்து கொள்ள வேண்டும் என எத்தனித்து கொள்வதை போல் உள்ளது.2020 ஐ நோக்கிய கூட்டாற்சி பயணம் என கர்ஜித்து கொண்டிருந்த முக்கிய அமைச்சு பதவிகள் வகிக்கும் பலர் சுதந்திர கட்சி ஆட்சியமைக்கும் காலம் வெகுதூரம் இல்லை என கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் மகிந்த ராஜபக்ஷவை வசை பாடித்திரிந்த இவர்கள் தற்போது மகிந்தவின் பக்கத்திற்கு தங்களது துடுப்பை நகர்த்திக்
கொண்டிருக்கின்றனர். இலங்கையில் வரப்போகும் அரசியல் மாற்றம் கூட ஓர் அதிசயமாக அமையக்கூடும் என அறிக்கை விடுகின்றனர்.
இவற்றை விரிவாக ஆராய்கின்ற போது கண்ணுக்குதெரிகின்ற பேயும், கண்ணுக்கு தெரியாத பிசாசும் ஒண்றினைந்து ஆட்சியமைக்கும் திட்டத்தை ஆரம்பித்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகின்றது. இதற்கு உதாரணமாக அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது மகிந்த ”சிறிலங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமராக பணியாற்ற தயாராக இருக்கிறேன்”எனும் கருத்துப்பட உரையாற்றி இருந்ததை நினைவு கூறலாம்.
ஆட்சியை கலைப்பதற்கான மகிந்த ராஜபக்ஷவின் அரசியல் வியூகங்கள் நேர் சிந்தனை இல்லாமல் குறுக்கு வழி பிரயோகங்களாகதான் அமையும்.இதற்காக அவர் இரண்டு வழிகளை பிரயோகிக்கலாம்.
1.இராணுவபுரட்சி
2.மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை தன் பக்கம் குடைசாய வைப்பது.
இந்த இரண்டு வழிகளையும் ஆராய்கின்ற போது இலங்கையை பொறுத்தவரை இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றுவது கடினமான இலக்காகும்.
இதற்கு இலங்கையின் செயற்பாடுகளில் அதிகம் அக்கறை கொள்ளும் நாடுகள் எதிர்ப்பை காட்டி இராணுவப்புரட்சியை ஒடுக்க முயற்சி செய்யும்.இந்த முயற்சியை ஒரு வேளை மகிந்த முன்னெடுத்து தோல்வி அடைந்தால் அவரின் இறப்பு சிறைச்சாலையிலே என்பதையும் நன்கு அறிந்தவர்.எனவே இராணுவப்புரட்சி சாத்தியமற்றது.
இரண்டாவது வியூகம் சிக்கலானது காரணம் தூண்டில் இரைக்கு ஆசைப்படும் மீன்கள் பாராளுமன்றத்தில் அதிகம் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மகிந்தவின் தூண்டலில் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் சிக்குகின்ற போது கூட்டாற்சி அரசாங்கத்தின் பலத்தை நலிவடையச் செய்யமுடியும். இந்த வழியில் மகிந்த காய் நகர்த்துகின்ற போது அவரின் கணக்கு சில நேரம் சரியாக அமைந்து விடலாம்.
மகிந்த ராஜபக்ஷ கட்சிகளையும், உறுப்பினர்களையும் உடைத்தெறிவதில் ஜகஜால கில்லாடி என்பதை அவருடைய ஆட்சி காலத்தில் நடந்தேறிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவல்களை கூறமுடியும். 18 வது சீர்திருத்தத்தை செய்து காட்டியவர் மகிந்த. எனவே அவரால் இதனை செய்ய முடியாது என தற்போதைய கூட்டாற்சி கவனையீனமாக இருந்து விடவும் கூடாது.
யாருடைய காலை பிடித்தாவது மீண்டும் அரியாசனம் ஏற முனையும் மகிந்த கணக்கின் விடை சரியாக அமையுமா அல்லது கணக்கு பிழைக்குமா என்பதை கூட்டாற்சியின் எதிர்கால நடவடிக்கை முடிவு செய்யும்.