ஆரம்பத்தில் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூடினோம். அப்போது கட்சி வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை ஒருபோதும் எடுக்கவில்லை அத்தகைய முடிவை தலைவருமத்தியகுழுஉறுப்பினர்களுக்குதெரியாது இஸ்ஸதீன்அவர்களுமே எடுத்தார்கள் பின்னர் தலையாட்டிகளான மத்திய குழு உறுப்பினர்கள் அனைவரும்ஏகோபித்தவர்களாக ஆமோதித்த போது தான் மீண்டும் நிலைப்பாடுமாறுஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க முற்பட்டோம் அதனால் வெட்டி புள்ளி விவகாரம் வெற்றி அளித்தது.டகளஸ் தேவானந்தா அவர்களும் ஜேவிபிஉறுப்பினர்சிலரும் 300க்கும் குறைவான வாக்குகளைப்பெற்ற சேகுதாவுத்அவர்களும் நாடாளுமன்றம்சென்றார்கள்
இதற்கிடையே எப்போதுமே உள்ளூர ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராக இருந்த ஷேகு இஸ்ஸதீன் அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டில் இருந்தார். சிறிமாவுக்கு ஆதரவளிப்பது என்று மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கைவிட்டு, முஸ்லிம் காங்கிரஸ் பிரேமதாசவுக்கே ஆதரவளிக்க வேண்டும் என்ற எண்ணமும் திட்டமும் ஷேகு இஸ்ஸதீனின் உள்மனதில் இருந்துள்ளது. அவர் தனது திட்டத்தைச் செயல்படுத்த மெல்ல மெல்ல அஷ்ரபை மூளைச் சலவை செய்துள்ளார். இஸ்ஸதீனின் தொடர் முயற்சி ஒரு கட்டத்தில் வெற்றியளித்துள்ளது.
இஸ்ஸதீனின் யோசனையை ஆதரிக்க அஷ்ரபுக்கும் ஒரு காரணம் இருந்தது. அதுதான் நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள சிறிமாவின் ரொஸ்மீட் ப்ளேஸ் இல்லத்தில் நடந்த சம்பவம்.
அதாவது, சிறிமாவைச் சந்தித்துப் பேச அஷ்ரப் ரொஸ்மீட் ப்ளேஸ் இல்லத்திற்குச் சென்ற வேளையில் அனுர பண்டாரநாயக்கா அங்கு ஒரு கதிரையில் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்து பத்திரிகை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். பத்திரிகையில் மூழ்கிக் கிடந்த அனுர, அஷ்ரப் வந்ததைக் கண்டிருக்கவில்லை. எனவே அனுர எழுந்து நிற்கவும் இல்லை, அஷ்ரபுக்கு வாழ்த்துச் சொல்லி வரவேற்கவும் இல்லை.
உண்மையில் அனுர பண்டாரநாயக்கா வேண்டுமென்றே அப்படி நடந்துகொண்டிருப்பாரா? அஷ்ரபை அவமானப் படுத்த வேண்டுமென்ற நோக்கமும் அவருக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நம்ம தலைவர்தான் லேசான ஆளில்லையே, அவசரக் காரர் ஆயிற்றே. தவறான முடிவொன்றை உடனடியாக எடுத்து விட்டிருந்தார். எனவே இஸ்ஸதீனின் திட்டத்துக்கு இலகுவாகப் பலியாகி விட்டார்.
அன்றிலிருந்து கட்சியின் மத்திய குழுவுக்குத் தெரியாமல் பிரேமதாசாவுடன் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடந்தேறி வந்துள்ளன. இவை எதுவும் எனக்கும் தெரிந்திருக்கவில்லை.
ஒருநாள் பிரேமதாசாவிடமிருந்து அழைப்பொன்று வந்திருக்கிறது. பிரேமதாசவைச் சந்திக்க அதிகாலை நான்கு மணிக்கு அஷ்ரபும் நிஸாம் காரியப்பரும் ஷேகு இஸ்ஸதீனும் சென்றதாக நினைக்கிறேன். அவர்கள் அவ்வாறு பிரேமதாசாவை சந்திக்கச் சென்றது மத்திய குழுவுக்குத் தெரியாது.
அதற்கு முன்பாக பிரேமதாசாவின் வீட்டில் உதவியாளராக இருந்த ரணசிங்க என்பவர் அடிக்கடி எங்கள் கட்சிக் காரியாலயத்துக்கு வந்து என்னுடன் அழகாகச் சிங்களத்தில் உரையாடுவார். அவர் ஒரு கவிஞனும் கூட.
பிரேமதாசாவைச் சந்திக்கப் போயிருந்த போது அஷ்ரபுக்குக் கொஞ்சம் தடிமலாக இருந்தது. அதை அவதானித்த பிரேமதாசா தன் வீட்டுச் சமையல்காரரை அழைத்து “நான் குடிக்கும் அந்தக் கஷாயத்தில் கொஞ்சம் கொண்டுவந்து மிஸ்டர் அஷ்ரபுக்குக் கொடுங்கள் !” என்றார் பிரேமதாசா. கஷாயம் வந்தது, அஷ்ரபும் எதையும் யோசிக்காமல் தயங்காமல் அந்தக் கஷாயத்தில் கொஞ்சம் வாங்கிக் குடித்து விடுகிறார். அதன் பின்னர் பேச்சுவார்த்தை நடக்கிறது.
பிரேமதாசாவிடம் தலைவர் முன்வைத்த ஒரேயொரு கோரிக்கை அந்தத் தேர்தலில் கல்குடா தொகுதியைச் சேர்ந்த தேவநாயகம், சம்மாந்துறையைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் மஜீத் மற்றும் கல்முனையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம். மன்சூர் ஆகிய மூவரும் அந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். அப்படி நடந்தால்தான் தான் கிழக்கில் ஜெயிக்க முடியும் என்ற எண்ணம் அஷ்ரபுக்கு. ஓட்டப் போட்டியொன்றில் ஏனைய போட்டியாளர்கள் ஓடக்கூடாது, நான் மட்டுமே ஓட வேண்டும், அவர்கள் ஓடினால் நான் ஓடமாட்டேன் என்று சொல்வதைப் போல் இருந்தது.
முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸுக்குத்தான் வாக்களிக்கத் தயாராக இருந்தார்கள். ஆனால் அஷ்ரப் அப்படியான ஒரு கோரிக்கையை முன்வைத்த போது அதனை பிரேமதாசவும் ஏற்றுக் கொண்டார். ஏ.ஆர்.எம். மன்சூர், அப்துல் மஜீத் மற்றும் தேவநாயகம் ஆகிய மூவரிடமும் ‘நீங்கள் தேர்தலில் நிற்கத் தேவையில்லை, நாம் வென்றால் நமக்குக் கிடைக்கும் தேசிய பட்டியல் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உங்களுக்கு நான் எம்.பி. பதவிகள் தருகிறேன் என்று பிரேமதாசா குறிப்பிட்டார்.
மன்சூரும் மஜீதும் மிகவும் சந்தோசமாக ஏற்றுக்கொண்டார்கள். காரணம், தேர்தலுக்குச் செலவளிக்கத் தேவையில்லை, போத்தல்கள் புட்டிகள் வாங்கிப் பகிர வேண்டியதில்லை. அடிபிடி சண்டைகளுக்குப் போகத் தேவையில்லை. எனவே சும்மா இருந்துகொண்டு தேசியப் பட்டியல் எம்.பி. அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்பதால் அவர்கள் பிரேதசாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் தேவநாயகம் மறுத்து விட்டார். அவர் பொதுத் தேர்தலில் நிச்சயமாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றுக் காட்டுவேன் என்று முடிவாகச் சொல்லி விட்டார். அதைக் கேட்ட அஷ்ரப் அப்படியே திரும்பி வந்துவிட்டார்.
நான் அஷ்ரபுக்குச் சொல்கிறேன்: “தேவநாயகம் கட்டாயமாகத் தேர்தலில் இறங்கி வாக்குக் கேட்கவே வேண்டும். நாமும் களத்தில் இறங்கி ஜனநாயக வழியில் கட்டாயமாக அவரைத் தோற்கடித்துக் காட்டியே ஆகவேண்டும். நான் கடந்த 1965 ஆம் ஆண்டிலிருந்து இந்த தேவநாயகத்தை தோற்கடிக்கப் பல்வேறு வியூகங்களை வகுத்தும் உத்திகளைப் பயன்படுத்திப் போராடியும் தோற்றுப் போய் நிற்கிறேன்.
முஸ்லிம்களின் 75% வாக்குகளையும் தமிழர்களின் 25% வாக்குகளையும் பெற்றுத்தான் எப்போதுமே தேவநாயகம் எம்.பி. ஆவார். ஆனால் அவருக்குக் கிடைக்கும் எம்.பி.க்களுக்கான பொது அபிவிருத்தி நிதியிலிருந்து 25% ஐ முஸ்லிம்களுக்கும் 75% ஐத் தமிழர்களுக்கும் செலவுகள் செய்வார். அப்படி அவர் முஸ்லிம்களுக்குச் செய்து தந்திருந்த அற்ப சொற்பச் சேவைகள் அத்தனையையும் மொத்தமாகப் புலிகள் நாசமாக்கி அழித்து விட்டனர்.
மட்டக்களப்பிலிருந்தும் ஏறாவூரிலிருந்தும் செங்கலடியிருந்தும் கிரானிலிருந்தும் ஏராளமானோருக்குக் கடதாசி ஆலையில் தொழில்வாய்ப்புகளைக் கொடுத்தார். ஒருமுறை நான் அவரிடம் கேட்டேன்: “ஐயா, எங்களிடம் பொறியியலாளர்கள் இல்லை, கணக்காளர்கள் இல்லை, காகித ஆலையின் கண்ணாடிகளைத் துடைப்பதற்கும் அங்குள்ள பூக்கன்றுகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்குமா ஓட்டமாவடியில் ஆட்கள் இல்லை ? ” என்று கேட்டேன்.
ஓட்டமாவடியிலிருந்து கொஞ்சப் பேர் அங்கு வேலைக்குச் சென்றார்கள். அது, மர்ஹூம் ஸெய்யத் போர்மன் என்பவரின் முயற்சியால்தான் அந்த நியமனங்கள் கிடைத்தன.
எனவே இந்த தேவநாயகத்தை எப்படியாவது தோற்கடித்தே தீர வேண்டும் என்றொரு உத்வேகம் எனக்குள் இருந்து வந்தது. இப்போது சிறியதொரு நம்பிக்கை சுடர் விடுகிறது. அஷ்ரபின் வருகையும் நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் கோஷமும் தேவநாயகத்தைத் தோற்கடிக்க உதவும் என்றெண்ணினேன்.
இவர்கள் பிரேமதாசவை சந்திக்கப் போய் இப்படிக் கதைத்த விடயம் மறுநாள் காலைதான் எனக்குத் தெரிய வந்தது. நான் தலைவரிடம் கொஞ்சம் காட்டமாக “ஏன் இப்படிச் செய்கிறீர்கள் ? பிரேமதாசாவிடம் கேட்கவேண்டிய விடயங்கள் எவ்வளவு இருக்கின்றன ! இந்தச் சந்தர்ப்பத்தில் பிரேமதாசாவிட்ம் எதைக் கேட்டாலும் தந்திருப்பார்.
பிரேமதாசா ஏற்கனவே நிறையச் சிக்கலில் உள்ளார். தன்னுடைய அதிகாரத்துக்கான போராட்டத்தில்தான் காமினி திசாநாயக்கா, லலித் அத்துலத்முதலி ஆகியோர் பலியாகியுள்ளனர் என்றொரு குற்றச்சாட்டும் அதிருப்தியும் பரவலாக காணப்படுகிறது. எனவே தனது அதிகாரம் குறித்த பலத்த சந்தேகத்தில் தவிக்கிறார். இந்தச் சந்தர்ப்பத்தில் நமது ஆதரவைப் பெற்றுக் கொள்ள நாம் எதைக் கேட்டாலும் அதை நிச்சயம் செய்து தருவார்.
நீங்கள் நமது சமூகம் சார்ந்த முக்கியமான சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கலாமே என்றேன்.. என்னுடைய அந்தப் பேச்சுக்கள் தலைவருக்கு அவ்வளவு உவப்பாக இருக்கவில்லை.
அப்போது மூதூருக்கும் ஓட்டமாவடிக்கும் பொத்துவில்லுக்கும் பிரதேச செயலகங்கள் தேவைப்பட்டிருந்தன. அந்தத் தேவைகள் குறித்து அந்த மக்கள் நீண்ட காலமாகக் குரலெழுப்பி வந்தனர். எனவே அதை ஒரு கோரிக்கையாக முன்வைத்திருக்க வேண்டும். நீண்ட காலமாக முஸ்லிம்கள் – தமிழர்களிடையே நிலவி வரும் காணிப் பிரச்சினைகளை இரு சமூகங்களுக்கும் பாதிப்பில்லாமல் ஓரளவுக்கேனும் சுமுகமாகத் தீர்த்துத் தருமாறு ஒரு கோரிக்கை விடுத்திருக்க வேண்டும்.
பின்வந்த காலங்களில் அமைச்சுப் பதவிகளுக்கு மிகவும் ஆசைப்பட்ட எங்கள் அருமைத் தலைவர் அந்தப் பேச்சுவார்த்தைகளின் போது ஒரு கெபினட் அமைச்சர் பதவியும் ஒரு இராஜாங்க அமைச்சர் பதவியும் இரண்டு தேசியப் பட்டியல் எம்.பி.க்கள் ஆசனங்களையும் கேட்டிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் நாமும் தொடர்ந்து அரசியல் செய்திருக்கலாம்.
அதனூடாகப் பிற்காலத்தில் ஏற்பட்ட – ஒரு தேசியப் பட்டியல் எம்.பி. பதவியின் காலத்தை மூன்றாகப் பிரித்துப் பகிர்ந்துகொண்டு செயல்பட ஹிஸ்புல்லாஹ், மொஹிதீன் அப்துல் காதர் மற்றும் பஷீருக்கு இடையிலான ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லாஹ் மீறி அதனால் எழுந்த பிரச்சினைகளையும் தவிர்த்திருக்கலாம். கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தால் இவை அத்தனையையும் பிரேமதாசா வாரி வழங்கியிருப்பார் நிச்சயமாக !
அஷ்ரப் கூடச் சொல்வார்: “கார் ஓடுவதாகக் கனவு காண்பதாக இருந்தால் ஏன் ஓட்டைக் காரில் ஓடுவதாகக் கனவு காண்கிறீர்கள் ? Benz காரில் ஓடுவதாகக் கனவு காணுங்கள் !” என்று சொல்வார்.
அப்படிச் சொன்னவர்தான் பிரேமதாசாவிடம் இவ்வளவு சாதாரணமான கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.! அது எனக்குக் கொஞ்சம் பிடிக்காத காரியமாக இருந்தது. இவ்வாறுதான் எங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் தோன்றி வளர்ந்து வந்தன. தலைவர் எதைச் சொன்னாலும் அதைச் சரி என்று சொல்கிற மத்திய குழுவொன்று அங்கே இருந்தது.
பின்னர் தேர்தல் முடிவுகள் ஒரு வெள்ளிக்கிழமை தினம் ஒன்றில் வெளிவந்தது. நாங்கள் எல்லோரும் நற்பிட்டிமுனையில் தேசிக்காய் பரிசாரியின் வீட்டில் இருக்கிறோம். ஜூம்ஆ தொழுகைக்கு நேரம் நெருங்குகிறது. தலைவர் பள்ளிவாசலுக்கு உள்ளே இருக்கிறார்.
வானொலியில் செய்தியறிக்கை ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நான் செய்தி அறிக்கைக்குக் காது கொடுக்கிறேன். “…
கல்முனையைச் சேர்ந்த ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்கள் தேசியப் பட்டியல் மூலமாக கப்பல்துறை, வாணிபத்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்..” என்று ஒலிபரப்பாகிறது.. நான் ஆடிப் போனேன்… எனக்கு இது முன்கூட்டியே தெரிந்த விடயம்தான். பள்ளிவாசலுக்குள் ஓடிப்போய் அஷ்ரப் அவர்களிடம் மெல்லச் சொன்னேன் அந்தத் தகவலை ! அவரது முகம் ஏழாவது மாடியிலிருந்து வீழ்ந்த வத்தவப் பழம்போல மாறியது