மக்கத்துச் சால்வை Slm Hanifa பச்சோந்தியான கதை தொடர் 1 ..

கட்டுரை 1969 தொடக்கம் அவர் ஹெலி விபத்தில் பலியான மாபெரும் துயரம் வரை அஷ்ரபின் சுமார் 50 ஆண்டு கால அரசியல் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதாக அமைகிறது.

50 வருடங்களின் நினைவுகளா ? அவ்வளவு பெரியதொரு கட்டுரையா ? என நீங்கள் ஆச்சர்யப்படலாம். அப்படியல்ல, நான் அவ்வாறு பெரிய கட்டுரைகளை எழுதுவதில்லை, முக்கியமான சின்னச் சின்ன நிகழ்வுகளை மாத்திரமே நினைவூட்டி எழுதுகிறேன்..

எங்கள் தேசத்தில் அந்தக் கட்டுரைத் தொடரை எழுதிக் கொண்டிருக்கும்போது மேற்கொண்டும் அதைத் தொடர முடியாமல் தவித்தேன். ஏனெனில் என்னளவில் அந்தக் காலம் அஷ்ரபுடைய மகோன்னதமான நாட்கள்.

இப்பொழுது அஷ்ரபுடைய இன்னொரு பக்கத்தையும் எழுத வேண்டும். அந்தப் பக்கத்தை எழுதினால் அவருடைய ஸஹாபா பெருமக்கள் (நபிகளார் உயிருடன் வாழ்ந்தபோது அவர்களுடன் இருந்த நெருங்கிய நண்பர்கள். நபிகளார் தனக்கென, தன்னைச் சூழ்ந்திருக்கும் பக்தர்களை உருவாக்கி இருக்கவில்லை) என் மீது பொங்கிப் பாய்வார்கள்.

நாங்கள் அஷ்ரபை – முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்குப் பிறகு இந்த உலகில் பிறந்த அதிவிஷேசமான ஒரு பெருமகனாகவே அவரைக் கருதி அவர் மீது பெரும் பக்தி கொண்டு, கண்மூடித்தனமான ஒரு தீவிர வழிப்பாட்டு உணர்வைக் கட்டமைத்திருந்தோம், தமிழ் நாட்டில் ஒரு ஜெயலலிதாவைப் போல.

ஜெயலலிதாவுக்கு அவரது கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் தொண்டர்களும் அந்த அம்மையாரின் பாதங்களில் வீழ்ந்து சிரம் பணிவது எவ்வளவு விருப்பமானதாக இருந்ததோ அதே மாதிரி நமது அஷ்ரப் அவர்களுக்கும் அவரது தொண்டர்கள் அவரை மேடையில் வைத்துக்கொண்டே முகத்துதிக்காக அவரை வானளாவ உயர்த்திப் போற்றிப் புகழ்ந்து பேசுவது அஷ்ரபுக்கும் மிகவும் விருப்பமானதாக இருந்தது.

ஒருகாலத்தில் அஷ்ரப் அவர்கள் ‘வாழ்நாளில் எவரும் எனக்கு ஒருபோதும் மாலை அணிவிக்கக் கூடாது !’ என்று எனக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவின் தலைவரான ஹஸீனா ட்ரேடர்ஸ் நிறுவத்தின் உரிமையாளருமான அல்ஹாஜ் எம்.எல்.எம். சுபைர் அவர்களுக்கும் கண்டிப்பான ஒரு கட்டளையை இட்டிருந்தார்.

இன்னோர் இரவு நாங்கள் எல்லோரும் ஓட்டமாவடியில் எங்கள் வீட்டில் தூங்கும்போது தலைவர் அவர்கள் ‘இன்று முதல் உங்களில் யாரும் ஒருபோதுமே பொய் சொல்லக்கூடாது !’ என்றொரு சத்தியவாக்கை எங்களிடமிருந்து பெற்றிருந்தார்கள். அதைக் கேட்டு நாங்கள் அசந்து போனோம்.

மறுநாள் காலையில் ஹஸீனா ட்ரேடர்ஸ் உரிமையாளர் சுபைரும் நானும் எங்களது வயலுக்குப் போகின்றபோது வழி நெடுகிலும் தலைவரின் மகத்துவம் பற்றிப் பேசிக்கொண்டே போனோம்.

ஒரு கட்டத்தில் ‘இன்றிலிருந்து நாங்கள் பொய் சொல்லக்கூடாது சாச்சா’ என்று சுபைர் என்னைப் பார்த்துச் சொன்னார். நான் அவரைப் பரிதாபமாகப் பார்த்தேன்.

பொய் சொல்லாமல் வாழ்வது சாத்தியமான காரியமாக எனக்குத் தோன்றவில்லை. அதுவும் இந்தச் சமூகத்தில் உண்மை பேசுகிறர்கவர்கள் எல்லோரும் ‘தீயவர்களாக’வே பார்க்கப்படுவார்கள். சந்தர்ப்பத்துக்கு ஏற்ற விதமாகப் பொய் பேசத் தெரிந்தவர்களே “வாழத் தெரிந்தவர்களாக”க் கொண்டாடப்படுவார்கள். நானோ என் வாழ்நாள் முழுவதிலும் இத்தகைய பொய்யும் புரட்டும் நிறைந்த வாழ்வுமுறையை முற்றிலுமாக மறுப்பவன் !
அந்தப் பொதுத் தேர்தல் காலத்தில் தலைவர் அவர்களுக்கு என் மீது சில மயக்கங்கள், தெளிவின்மைகள், ஐயங்கள் எழத் தொடங்கின.

முதலாவது விஷயம், “நான் ஹிஸ்புல்லாஹ்வுக்கு வேலை செய்யும் ஆள்’ என்றொரு மனப் பதிவை எங்களது கட்சி மத்திய குழு உறுப்பினர்களில் சிலர் தலைவருக்கு ஏற்படுத்தி இருந்தனர். தேர்தல் காலத்தில் நான் மொஹிதீன் அப்துல் காதருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்திருந்தேன் என்று மிகவும் அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி மத்திய குழு உறுப்பினர்களில் சிலர் என்னைத் தலைவரிடம் ‘போட்டுக் கொடு’த்திருந்தார்கள்.

எந்த விதமான விசாரணையும் செய்யாமல், தனக்குக் கிடைத்த தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தலைவர் அவர்களும் ஒருதலைப்பட்சமாக அந்தப் பொய்யை அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரு கட்டத்தில் என்னிடம் ‘எஸ்ஸெல்லெம், நீங்கள் கல்குடா தொகுதியில் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டாம், நீங்கள் என்னுடன் வாருங்கள், நீங்கள் எனக்குத் தேவை, நாம் இலங்கை முழுவதும் சுற்றிப் பறந்து பிரச்சாரங்களை முன்னெடுப்போம் !’ என்று தலைவர் என்னைப் பணித்து விட்டார். எனக்கோ பெரும் கவலை. அந்தத் தேர்தலில் எப்படியாவது நாம் தேவநாயகத்தைத் தோற்கடித்துக் காட்டுவோம் என்று ஏற்கனவே தலைவருக்கு வாக்குறுதி அளித்திருந்தோம். இப்போது நான் கல்குடாவில் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட முடியாது, அதனால் என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று நான் கலங்கிப் போய்விட்டேன்.

(ஆயினும் இறைவனின் பேரருளால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கல்குடா தொகுதி மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குப் பெருமளவில் வாக்களித்திருந்தனர்)

நான் இலங்கை முழுவதும் தலைவருடன் ஹெலிகொப்டரில் பறந்தேன். ஹெலிகொப்டரில் ஏறியதும் தலைவர் என் மடியில் சாய்ந்து தூங்கி விடுவார். எம்முடன் இன்னொருவரும் ஹெலிகொப்டரில் பயணிப்பார். நாம் அழைத்தாலும் அழைக்கா விட்டாலும் அவர் தானாகவே வந்து ஹெலிகொப்டரில் ஏறி விடுவார். அவர்தான் மாளிகைக்காடு மஜீத் அவர்கள்.

இத்தகைய பயணங்களின் போது ஹெலிகொப்டரில் ஏறி அமர்ந்தவுடன் தலைவர் எனது மடியில் சாய்ந்து தூங்கத் தொடங்கி விடுவார். இவ்வாறு தலைவர் என் மடியில் சாய்ந்து தூங்கும்போது நான் ஏதாவது சில பாடல்கள் பாட வேண்டும் தலைவருக்குத் தூக்கம் வரும் வரை. தலைவர் சொல்வார் ‘எஸ்ஸெல்லெம்.. ஒன்று, இரண்டு பாட்டுக்கள் பாடுங்கள்’ என்று.

அப்போது நானும் என்னுடைய வழக்கமான ஒருசில பாடல்களைப் பாடுவேன். “எஜமான் பெற்ற செல்வமே, என் சின்ன எஜமானே…”எனும் பாடலைப் பாடுவேன். சில வேளைகளில் ” துன்பம் சூழும்பொழுது யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா…?” போன்ற பாடல்களையும் பாடுவேன். தலைவர் அப்படியே அமைதியாகத் தூங்க்கிப் போவார்.

இறங்கும் இடம் வரும்போது தலைவரை மெல்லத் தட்டி எழுப்பி விடுவேன். இது தலைவரின் வழக்கமாக இருந்தது.

இந்தக் காட்சிகளைக் காணும்போது மாளிகைக்காடு மஜீத் அவர்கள் ‘எனக்குப் பொறாமையாகக் கிடக்கிறது’ என்று. அதற்கு நான் ‘எத்தனையோ பேர் சாய்ந்த மடி, தலைவரும் சாய்ந்து வரட்டுமடா..’ என்பேன் நகைச்சுவையாக.

இப்படியாகப் போய்க் கூட்டங்களில் பேசிவிட்டுக் களைத்துப் போய் நாங்கள் திரும்பி வருவோம். இப்படியாகத்தான் எனக்கும் தலைவருக்கும் இடையிலான உறவு இருந்தது. ஆனாலும் தலைவருக்கு என் மீது ஏதோ சிறு சந்தேகம் மட்டும் இருந்துகொண்டே வந்தது…

நான் மட்டுமே தலைவர் தனது உரையில் விடும் அரசியலின் வரலாற்று பிழைகளை உடனுக்குடன் எடுத்துரைப்பேன்… இதெல்லாம் தலைவருக்கு உவப்பில்லை. தலைவன் பேசினால் கைகட்டி வாய்மூடி தலைகுனிந்து கேட்டுக்கொண்டு சபாஷ் போட வேண்டும், இதுதான் நடைமுறை, நானோ இதற்கு நேர் மறை !

அந்தப் பொதுத் தேர்தல் காலங்களில் அவ்வப்போது நான் கல்முனைக்குச் சென்றால் அங்கு கடை வைத்திருந்த பரக்கத்துல்லாஹ்வின் தந்தையாரை பர்வீன் அரிசிக் கடையில் சந்தித்து உரையாடுவது வழக்கம்.

இந்த இடத்தில் பரக்கத்துல்லாஹ் அவர்களைப் பற்றிச் சில வரிகள் எழுத வேண்டும். அவர் இப்போது ஓர் ஆய்வாளர், எழுத்தாளர், சமூகப் பற்றுள்ளவர். அண்மையில் கல்முனைக்குடி குறித்து ஒரு வரலாற்று நூலையும் எழுதி இருந்தார். மேலும் முஸ்லிம்களின் பூர்வீகக் கிராமம் வெலிகமவைப் பற்றியும் ஒரு நூல் எழுதியுள்ளார். அந்த நூல்களுக்கெல்லாம் என் ஆருயிர் நண்பர் பெருமதிப்புக்குரிய பேராசிரியர் எம். ஏ. நுஃமான் அவர்கள் மிகுந்த பிரயாசைப்பட்டுப் பெறுமதியான முன்னுரைகளை எழுதியுள்ளார்கள்.

பரக்கத்துல்லாஹ்வின் இலக்கிய, சமூகப் பங்களிப்புகள் குறித்து இன்னும் இந்தச் சமூகம் சரியாகக் கண்டுகொள்ளவில்லை.

பரக்கத்துல்லாஹ்வின் தந்தையார் இளையம்பி எனது இளமைக்கால நண்பர். அவருடன் நான் இளமைக்காலத்தில் வேட்டையாடச் செல்லவும் பல்வேறு சந்தோஷமான விடயங்களில் ஈடுபடவும் பழகியிருந்தேன். அவருடனான அந்த அனுபவங்களை, நினைவுகளை பரக்கத்துல்லாஹ்விடமும் நேரம் காலம் அமையும்போதெல்லாம் பகிர்ந்துகொள்ளப் பழகியிருந்தேன்.

அந்த நாள்களில் நானும் இளையம்பியும் மர்ஹூம் மன்சூர் அமைச்சரின் வீட்டுக்கும் சில தடவைகள் சென்று உரையாடிவிட்டு வந்துள்ளோம். இந்தக் கதைகளையெல்லாம் தலைவரின் செவிகளுக்கு எத்திவைப்பதற்கென்றே அன்று ஒரு நண்பர் இருந்தார். அவரும் எங்கள் கட்சியின் முக்கியமான ஓர் உறுப்பினர்தான். இன்றும் அவர் உயிர் வாழ்கிறார்.

இவ்வாறு மர்ஹூம் மன்சூரின் வீட்டுக்குச் சென்று உரையாடிவிட்டு வந்ததும் என் மீது இன்னொரு கோபம் தலைவருக்கு.
பின்னாளில் நான் வடக்கு – கிழக்கு மாகாணசபை உறுப்பினராகச் சென்றதும் அங்கு EPRLF தோழர்களுடனும் ENTLF தோழர்களுடனும் அவர்களுடைய தலைமைத்துவங்களோடும் மிகவும் நெருக்கமாகப் பழகி வந்தேன்.

அங்குள்ள பகுதித் தலைவர்கள் எல்லோரும் மாகாண சபையில் நான் உரை நிகழ்த்தும் நாட்களை அவதானித்து வைத்து என்னுடைய உரைகளைச் செவிமடுக்கத் தவறாமல் வருவார்கள். என்னுடைய உரைகளில் தமிழ் முஸ்லிம் உறவுகள் பற்றி நிறையப் பேசுவேன். இந்தத் தமிழ் அரசியல் இயக்கங்களுடனான என்னுடைய நெருங்கிய தொடர்புகளும் என் மீது தலைவருக்குச் சந்தேகங்களை ஏற்படுத்தின.

நான் எங்கள் கட்சியின் ‘மாபெரும் ரகசியங்களை’ தமிழ்க் கட்சிகளோடும் அவர்களின் தலைமைத்துவங்களோடும் கதைத்துக் கொள்வதாகத் தலைவரும் அவருக்குப் ‘போட்டுக் கொடுக்கும் சிலரும்’ கதைத்துக் கொள்வார்களாம். நான் இவ்வாறு இந்தத் தோழர்களுடன் உறவாடுவதை அப்போது மாகாண சபையில் இருந்த இன்னொரு மாகாண சபை உறுப்பினரான ஜவாத் அவர்கள் தலைவருக்குப் ‘போட்டுக் கொடுத்து’க் கொண்டே வந்தார்….
(தொடரும்…)