சென்னை வெள்ள நிவாரணப் பணிகளில், மக்கள் தாமாகவே முன்வந்து ஒருவருக்கொருவர் உதவுவதைக் காணலாம். மதம், சாதி வேறுபாடுகள் கடந்து, மனிதநேயத்துடன் உதவுகின்றனர். இயற்கைப் பேரழிவுகள் எத்தனை துயர் மிக்கதாயினும், மனிதர்கள் யாவரும் ஒரே இனம் என்ற உண்மையையும் உணர்த்துகின்றன.
“முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும்” சொன்னவர்கள் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு என்ன செய்தார்கள்? “தமிழர் அல்லாத வெளி மாநிலக்காரர்களை வெளியேற்ற வேண்டும்” என்று சொன்னவர்கள், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன செய்தார்கள்?
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.” இந்த நெருக்கடிக் காலத்தில், முஸ்லிம்களும், வெளி மாநிலத்தவர்களும் செய்யும் உதவிகள் அத்தகையன.
இனவாதம், தேசியவாதம், மதவாதம் போன்றன கறிக்குதவாத ஏட்டுச் சுரைக்காய்கள். அவை எதுவுமே மக்களுக்கு ஆபத்துக் காலத்தில் உதவப் போவதில்லை என்பது மீண்டும் ஒரு தடவை நிரூபிக்கப் பட்டுள்ளது.
மக்களுக்கு இடையிலான இந்த ஒற்றுமை, மழை, வெள்ளம் வடியும் வரைக்கும் நீடிக்கலாம். அதற்குப் பிறகும் அந்த ஒற்றுமையை கட்டிக் காப்பது, மனிதநேயவாதிகளின் கடமை. “இன ரீதியாக, அல்லது மத ரீதியாக பகைமை பாராட்டும் மக்கள் ஒன்று சேர முடியாது” என்பன போன்ற கற்பனைக் கதைகளை, சென்னை மக்கள் தவறென்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.
இலங்கையில் சுனாமி வந்த காலத்திலும், இது போன்ற நிலைமை காணப்பட்டது. கிழக்கு மாகாணத்தில், இன முரண்பாடுகளை மேவிக் கொண்டு மனிதநேயம் வெளிப்பட்டது. சிங்கள மக்களும், தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர். இராணுவ வீரர்களும், புலிகளும் ஒருவருக்கொருவர் உதவிய சம்பவங்களும் நடந்துள்ளன.
சுனாமி பேரழிவு நடப்பதற்கு முன்னர், இப்படி எல்லாம் நடக்கும் என்று சொன்னால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள். இப்போதும் நம்ப மாட்டார்கள். (Kalaiyarasan Tha)