மக்களுக்கான தேர்தலா….? அரசியல்வாதிகளுக்கான தேர்தலா…?

(சாகரன்)

தேர்தல் நாள் இன்று கனடாவில். தற்போதெல்லாம் வெல்லுவதற்கான கோஷங்களை வைத்தே தேர்தலில் தம்மை பிரச்சாரப்படுத்துகின்றனர் அரசியல்வாதிகள்;. கொள்கையின் அடிப்படையில் அல்ல கோஷங்களின் அடிப்படையில் தேர்தலை சந்திக்கின்றனர். இந்தக் கோஷங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் என்ற அடிப்படையில் மட்டும் செயற்படுகின்றனர் அரசியல்வாதிகள். பின்பு செல்வாக்கு செலுத்தும் இந்தக் கோஷங்களை தமது கொள்கைகள் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுகின்றனர். இதில் மக்களுக்கான அங்கத்துவம் என்பதைவிட தமது சுகமான வாழ்விற்கான பாராளுமன்ற அங்கத்துவம் என்பதே முதன்மை பெறுகின்றது. இது இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கும் பொருந்துகின்றது. வெற்றிக்கான கோஷங்களை பரந்துபட்ட மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த பெரு நிதி தேவைப்படுகின்றது. இது அடிப்படையில் நிதியுள்ளவர்களால் மட்டுமே தேர்தலில் நின்று வெற்றிபெறும் நிலமைகள் எற்படுத்தியிருக்கின்றது. சாதாரண சாமான்ய மக்களின் பிரச்சனைகளை அனுபவரீதியாக உணர்ந்தறியும் நிலையில் இந்த வசதிபடைத்த அரசியல்வாதிகள் இல்லாதபோது இவர்கள் சாதாரண மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் பிரதிநிதிகளாக இருக்க முடியாது. எனவேதான் எம்மைப் போன்ற மக்களுக்கு இந்தத் தேர்தலில் யார் வெற்றி… தோல்வி….. ஐ சந்தித்தாலும் நேரடித் தாக்கங்கள் தற்போதெல்லாம் ஏற்படுவதில்லை. இதனால் தற்போது இருக்கும் முதலாளித்துவ பாராளுமன்ற ‘ஜனநாயக’ முறையில் நாம் எமது வாக்குகளை உபயோகிக்க வேண்டும் என்ற வாதங்கள் அடிபட்டே போகின்றது. எனவே மக்களை உண்மையாக பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய முறமை ஒன்று கண்டேயாகவேண்டும். இதற்கான பொறிமுறையை நாம் கண்டுபிடிக்க தவறினால் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தல் என்ற அடிப்படையில் தமது வாழ்வை மட்டும் உறுதிப்படுத்தும் அரசியல்வாதிக் கூட்டங்கள் பிழைத்துக்கொண்டு போக மறுபுறத்தில் தேர்தல் முறையில் நம்பிக்கையிழந்து தேர்தலில் பங்குபற்றாதவர்களின் தொகை அதிகரித்துக்கொண்டேபோகும்.