தற்போது நிலவும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு, ஜனாதிபதிக்கும் ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் வாக்களித்த பொதுமக்களே, பொறுப்பை ஏற்க வேண்டும் என்று பசில் அங்கு கூறிய கருத்து, ஏனையவற்றைப் பார்க்கிலும் எவரையும் சிந்திக்க வைத்திருக்க வேண்டும்.
ஜூன் மாதம் ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்திலிருந்து இராஜினாமாச் செய்த பசில், 10ஆம் திகதி இந்த ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார். அந்த மாநாட்டின் போது அவர் வெளியிட்ட பல கருத்துகளும் நடந்து கொண்ட விதமும் பலரது விமர்சனத்துக்கு இலக்காகின.
பொருளாதாரப் பிரச்சினைகளால் நாடு பற்றி எரியும் போது, அந்த நிலைமைக்கு முக்கிய பொறுப்பாளராகிய பசில், மக்கள் படும் கஷ்டங்களைப் பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை என்பதே அந்த விமர்சனமாகும்.
நாட்டின் பொருளாதார பிரச்சினைகளைப் பற்றிய பாரதூரமான கலந்துரையாடலாக அமைய வேண்டிய அந்த ஊடகவியலாளர் மாநாட்டை, நகைச்சுவையான கருத்துகளை வெளியிட்டு, கேளிக்கைக்கான சந்தர்ப்பமாக மாற்றிவிட்டார். ஆனால், ஊடகவியலாளர்கள் அவரை விட்டுவிடவில்லை. நாட்டின் தற்போதைய அவலநிலைக்கு அவரும் காரணமானவர் என்ற அர்த்தத்திலேயே அவர்கள் அவரிடம் கேள்விகளைக் கேட்டனர்.
2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில், அவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கடமையாற்றினார். அக்காலத்தில் ஏனைய அமைச்சுகளும் நடைமுறையில் அவரது கட்டுப்பாட்டிலேயே இயங்கின. மொத்தத்தில் நாட்டின் பொருளாதாரம் அவரிடமே இருந்தது.
2019ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், அவர் அமைச்சுப் பதவி எதையும் ஏற்காவிட்டாலும் அவரே பொருளாதாரத்தை வழிநடத்தினார். பின்னர், கடந்த வருடம் ஜூலை மாதம் நிதி அமைச்சராக மீண்டும் நேரடியாக பொருளாதாரத்தை தமது கையில் எடுத்தார்.
எனவேதான், தற்போதைய நிலைமைக்கும் அவருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகளைக் கேட்டனர். எனினும், அவர் அந்தக் கருத்தை முற்றாக நிராகரித்தார். பொருளாதார நெருக்கடிக்கு தாம் எவ்வகையிலும் பொறுப்பாளர் அல்ல என்றே, அவர் வலியுறுத்திக் கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவர், “தற்போதைய நிலைமைக்கு ஜனாதிபதிக்கும் ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும் வாக்களித்த மக்களும் ஊடகங்களும் பொறுப்பை ஏற்க வேண்டும்” என்றார்.
இது கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்த மக்களை பரிகாசம் செய்வதாக காணப்பட்ட போதிலும், ஒரு வகையில் அதைப் பரிகாசமாகக் கருத முடியாது. ஏனெனில் அவர் கூறிய கருத்தை, முற்றாக மறுக்க முடியாது. ஆயினும், அது தம் மீதும் தமது கட்சியின் மீதும் நம்பிக்கை வைத்து, ஆட்சி அதிகாரத்தைத் தம்மிடம் ஒப்படைத்த மக்களைக் காட்டிக் கொடுக்கும் செயல் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
பசில் ராஜபக்ஷவே பொதுஜன பெரமுனவைக் கட்டி எழுப்பிய சிற்பி என்று வர்ணிக்கப்படுகிறார். கடந்த ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தலின் போது வெற்றிக்கான தந்திரோபாயங்களை வகுத்தவர் என்றும் பலர் அவரை வர்ணிக்கின்றனர். எனவே, அவரும் அவரது கட்சியுமே மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கும் வகையிலான சூழ்நிலைமைகளை உருவாக்கினர்.
எனவே, தற்போதைய நிலைக்கு பொது மக்களும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கூறுவது, ஏமாற்றியவர், ஏமாந்தவரை ஏமாந்ததற்காக குறைகூறுவதற்குச் சமமாகும். இந்த இடத்தில் தான், அவரது கூற்று பரிகாசமாக மாறுகிறது.
அவர் கூறியதை, எவராலும் மறுக்க முடியாது. ஆனால், அரசியல் அறிவோ பொருளியல் அறிவோ இல்லாத கோட்டாபயவின் ‘இமேஜை’ சகலவற்றிலும் வல்லவனாக ஊதிப் பெருப்பித்து, மிகவும் மோசமாக இனவாதத்தையும் தூண்டி, தமது கட்சிக்கு வாக்களிக்கும் வகையில் தாமும் பொதுஜன பெரமுனவின் ஏனைய தலைவர்களும் மக்களை ஏமாற்றியமை, பசிலுக்கு தெரியாமல் இருக்க முடியாது. எனவே மக்களும் தற்போதைய நிலைக்கு காரணமானவர்கள் என்பது உண்மையாயினும், அதைக் கூற பசிலுக்கு தார்மிக உரிமை இல்லை.
பசில் கூறியதைப் போல், உண்மையிலேயே மக்களும் ஊடகங்களும் தான் தற்போதைய நெருக்கடிகளுக்குப் பொறுப்பை ஏற்க வேண்டுமா என சிலர் சந்தேகிக்கலாம். ஏனெனில், அரசியல்வாதிகள் இந்நிலைமைக்கு காரணமானவர்கள் அல்ல என்பதைப் போல் தான், அவரது கருத்து அமைந்துள்ளது.
உண்மையிலேயே மக்களோ ஊடகங்களோ, இந்தப் பிரச்சினையின் போது முதல் பிரதிவாதி அல்ல. முதல் பிரதிவாதி எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி அரசியல்வாதிகளே ஆவர். அவர்கள் உருவாக்கிய சூழ்நிலைமையின் காரணமாகவே, சிந்திக்காமல் மக்கள் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு கட்சிக்கும் வாக்களிக்கின்றனர்.
உலகில் பல நாடுகளோடு ஒப்பிடுகையில், இலங்கை மக்கள் எழுத்தறிவில் முன்னணியில் உள்ளனர். அவ்வாறு இருந்தும், தமது சொந்த அனுபவங்களையாவது பகுத்தறிவோடு முறையாக ஆராய்ந்து, முடிவெடுக்க முற்படாத மடமையின் காரணமாகவும், அரசியல் என்பது தமது வாழ்க்கை வசதிகளை நிர்ணயிக்கும் பிரதான காரணி என்பதை உணராது, அதனை வெற்றி தோல்விக்கான சூதாட்டமாக கருதும் பண்பின் காரணமாகவும் மக்கள் தேர்தல் காலங்களில் தவறான முடிவுகளை எடுக்கின்றனர். அதன் மூலம் மக்களைப் பற்றி பசில் கூறிய கருத்து எப்போதும் உண்மையாகிறது.
மக்களும் தற்போதைய நிலைக்கான காரணங்களில், தமது பங்கை ஏற்கத்தான் வேண்டும். அதன் மூலம் பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டில் வீணாக இடம்பெறும் மரணங்கள், தற்கொலைகளுக்கும் அவர்களும் பொறுப்பை ஏற்க வேண்டும். ஆகவே, பசில் பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கூறிய கருத்தாக இருந்தாலும், மக்களைப் பற்றிய பசிலின் அக்கருத்தை நிராகரிக்க முடியாது.
இதை சற்று விரிவாக ஆராயலாம். கடந்த அரசாங்கத்தின் ஆரம்பத்தில் இருந்து, சுமார் ஒரு வருட காலத்தில் அப்போதைய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இதன் விளைவாக நம்பிக்கையை இழந்த மக்கள், 2018ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தனர்.
இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் வெற்றி பெறுவதற்காக பொதுஜன பெரமுன, முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்களை மீண்டும் முடுக்கிவிட்டது. அதே ஆண்டு அம்பாறை, திகன போன்ற பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்களில் அவர்களது கைவரிசை காணப்பட்டது.
இதன் விளைவே, 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதலாகும். தாக்குதலுக்கு தலைமை தாங்கிய ஸஹ்ரான் அதனை ஒரு வீடியோவிலும் கூறியிருந்தார். அந்த வீடியோவை பொலிஸாரே ஊடகங்களுக்கு விநியோகித்து இருந்தனர். பொதுஜன பெரமுன, அந்தச் சம்பவத்தை மிக மோசமாக அரசியலுக்காக பாவித்தது. தாக்குதல் இடம்பெற்று ஆறு நாள்களுக்குப் பின்னர், “நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளேன்” என்பதாக கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்தார்.
புலிகளுக்கு எதிரான போர் வெற்றியின் முழுப் பெருமையையும் அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவுக்கு வழங்கியிருந்த மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள், பொன்சேகா 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதை அடுத்து, அந்த முழுப் பெருமையையும் கோட்டாவுக்கு வழங்கலாயினர். எனவே, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை பாவித்து, கோட்டாவின் ‘இமேஜை’ ஊதிப் பெருக்குவது பொதுஜன பெரமுனவுக்கு மிகவும் இலகுவாகியது.
அத்தோடு, அத்தாக்குதலையே பாவித்து பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான ஊடகங்கள் முஸ்லிம்களுக்கும் இஸ்லாம் மதத்துக்கும் எதிராக பெரும் பிரசாரத்தை முடுக்கிவிட்டன. முஸ்லிம் தனியார் சட்டம், முஸ்லிம்களின் இனப்பெருக்கம், சிங்களவர்களின் இனப்பெருக்கத்துக்கு எதிரான முஸ்லிம்களின் சூழ்ச்சிகள் என்று பல்வேறு கதைகள் பரப்பப்பட்டன. டொக்டர் ஷாபியின் விவகாரமும் அதில் ஓரங்கமாகும்.
அதன் மூலம், நாடு பெரும் ஆபத்தில் இருப்பதாகவும் அதனை எதிர்கொள்ள பலமானதொரு தலைமை நாட்டுக்குத் தேவை என்றதோர் அபிப்பிராயமும் கட்டி எழுப்பப்பட்டது. அந்தப் பலமான தலைமையாக கோட்டா சித்திரிக்கப்பட்டார்.
அத்தோடு, நாகலோகத்திலிருந்து ஒரு நாகராஜன் புத்தரின் சில சின்னங்களை தாங்கி வந்து தந்ததாகவும் அது புதிய தலைமையொன்றின் அறிகுறியாகும் என்றும் இலங்கையில் மிக முக்கியமான விகாரையான களனி விகாரையின் பிரதம பிக்கு அறிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் இந்தத் தந்திரோபாயங்கள் வெற்றியளித்தன. கோட்டா ஜனாதிபதியானார்; பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்தது.
இவற்றைப் பற்றி, அக்காலத்திலேயே சிங்கள – பௌத்த புத்திஜீவிகள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், மக்கள் அதை ஏற்கவில்லை. இப்போது கோட்டா தலைமையிலான அரசாங்கம் தோல்விடைந்த நிலையில், “நாம் ஏமாந்துவிட்டோம்” எனப் பலர் சமூக ஊடகங்களில் புலம்புகின்றனர்.
எனவே, மக்கள் தமது அறிவைப் பாவித்து வாக்களிக்கவில்லை என்பதும் ஊடகங்கள் அவர்களுக்கு முறையான தகவல்களை வழங்கவில்லை என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அந்தவகையில் மக்களும் ஊடகங்களும் நாட்டின் தற்போதைய பரிதாபகரமான நிலைக்கு பொறுப்பாளர்கள் என்று பசில் கூறுவது முற்றிலும் உண்மையேயாகும்.