மக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை ! ~ அக்சய திரிதியை அன்னிக்கு நகை வாங்கினா யாருக்கு நல்லது?

பாமர மக்களிடம் பணம் எந்த விதத்திலும் தங்கிவிடாமல் பார்த்துக் கொள்ளும் மூடத்தனம் தான் இந்த விசேட நாள்.

அட்சயதிதி என்று சொல்லி ஏழை மக்கள்கூட கடன் வாங்கியாவது நகை வாங்கிட வேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

வழக்கம்போல இதற்கென்று புராணக் கதைகள் – அவற்றைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து விளம்பரம் செய்யும் விவரம் கெட்ட ஊடகங்கள் – எந்த வகையிலும் மக்களை மொட்டை அடித்தே தீருவது என்பதில் மட்டும் உறுதியாக – மிக உறுதியாக இருக்கிறார்கள்.

அட்சயம் என்றால் பூரணத்துவம் பெற்ற – அள்ள அள்ளக் குறையாது வளரக் கூடிய வல்லமை பெற்றது என்று பொருள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் திருதியை திதியில் வரும் நாளே; அட்சய திதியன்று ஒரு தவிட்டுப் பானை வாங்கினாலும் தங்கம் நிறைந்த பானையாக மாறும் என்பது ஜோதிட மொழியாகும்.

[திரவுபதை சூரிய பகவானை வேண்டிப் பெற்ற அட்சய பாத்திரத்தால் அள்ள அள்ளக் குறையாத அன்னத்தைத் தானம் செய்து புண்ணியம் பெற்றார் என்கிறது மகாபாரதம். ஒருமுறை கிருஷ்ண பரமாத்மா திரவுபதையைக் காணப் பசியோடு வந்தார். அந்நேரம் அட்சய பாத்திரம், கழுவிக் கவிழ்க்கப்பட்டிருப்பினும், அதில் ஒட்டியிருந்த ஒரு கீரை மட்டும் கண்டு விஷ்ணுவைப் பிரார்த்திக்க, மீண்டும் அன்னம் பெருகி, அதை கிருஷ்ணருக்குப் பரிமாறிப் பசியாற்றியதோடு அதி திதேவோபவா எனும் உயர்ந்த அறமான விருந்தோம்பலும் நிறைவேறப் பெற்ற புனித நாளும் அட்சய திருதியையாகும் எனக் கூறப்படுகிறது.

வறுமையில் வாடிய குசேலர் பால்ய நண்பன் கண்ணபிரானை பிடி அவலுடன் காணச் சென்றார். அந்த அவலை கண்ணபிரான் மகிழ்ந்து உண்டு அய்ஸ்வர்யம் பெருகச் செய்ததும் இந்நாளே. விஜய சாமுண்டீஸ்வரி மகிசாசுரனை வதம் செய்த நாளாகக் கொண்டாடப் படுவதும் இந்நாளே!

மகாகவி காளிதாசனும் தன்னுடைய உத்திர காவாமாமிருதம் எனும் நூலில் திதியிலேயே மிகச் சிறந்தது அட்சய திருதியை என்பார். ஆராதனைக்கும் சுப நிகழ்ச்சிக்கும் ஏற்ற நாள்.

அட்சய திருதியை நாளில் வெள்ளை, மஞ்சள் ஆடை உடுத்தி இஷ்ட தேவதையை வழிபடுவதும் மாதுளை முத்துக்களை சிவலிங்கத்துக்கு அர்ச்சித்தும், குபேர பூஜை செய்ததும் குண்டுமணித் தங்கம் குன்றளவு பெருகிட அட்சய திருதியையை ஆராதிப்போம் – இவை அத்தனையும் புராணக் கதைகளாகும்.]

இவற்றில் எள் மூக்கு அளவுக்காவது அறிவு ஏற்றுக் கொள்ளும் சங்கதிகள் உண்டா?…

சரி…வேண்டாம்… இவை யாவும் நடந்த கதைகளாகவே இருக்கட்டும்..இன்றைய காலத்துக்கு பொருந்துமா?

முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி ஏமாந்துகொண்டே இருக்கப்போகிறோம்?

இந்த நாளில் ஒரு குன்றிமணி அளவுக்கு நகை வாங்கினால்; குன்று அளவு பெருகுமாமே! அப்படியானால் கடந்த ஆண்டு இதே நாளில் நகை வாங்கியவர்களுள் எத்தனைப் பேருக்குக் குன்று அளவுக்குப் பெருகி யிருக்கிறது – கணக்குக் கொடுக்க முடியுமா?

நகை வாங்கியவர்கள் வீட்டில் தங்கம் பெருகிற்றோ இல்லையோ, நகைக் கடைக்காரர்களுக்கு மட்டும் கொள்ளை வியாபாரமும், வருமானமும் பெருகியது என்பது மட்டும் தான் உண்மை. இந்த நாள் வருவதற்கு முன் நகை வியாபாரிகள் ஏடுகளில் முழு பக்கம் விளம்பரம் கொடுத்து மக்களின் வாயில் எச்சில் ஊற வைக்கின்றனர். இதற்கு முன் ஒரே ஒரு நாள் என்ற நிலை இருக்க – இவ்வாண்டு இரண்டு நாள் அட்சய திருதியை என்று சரடு விட்டு, வியாபாரத்தை இரண்டு மடங்கு பெருக்கிக் கொண்டார்கள்.

தங்கம் என்பது அரசின் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டிய ஒன்று. பண வீக்கம் கட்டுக்குள் இருப்பதற்கு இது இன்றியமையாத நிலைப்பாடாகும்.
பணவீக்கத்தை உண்டாக்கும் வகையில் இதுபோன்ற அறிவிப்புகளைத் தடை செய்ய வேண்டியது பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தலும் மிக அவசியமே

நன்றி
“விடுதலை” தலையங்கம்