(கனகலிங்கம் கோபிகிருஷ்ணா)
மட்டக்களப்பையே – ஏன் இலங்கையில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளையே – அதிர்வடையச் செய்திருக்கிறது, வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டைக் கிராமத்தில் இடம்பெற்ற கொடூரப் படுகொலைகள். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற இப்படுகொலைகளின் விவரங்கள், இன்னமும் வந்துகொண்டிருக்கும் நிலையில், இவற்றுக்குப் பின்னாலுள்ள சமூக, பொருளாதாரக் காரணிகளை ஆராய்தல் அவசியமானது.
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில், தங்களுக்குப் பிறந்த இரண்டாவது குழந்தையின் பிறப்புத் தொடர்பாகச் சந்தேகம் கொண்ட கணவன், தனது மனைவியையும் இரண்டாவது குழந்தையையும் கூரிய ஆயுதங்களால் வெட்டிக் கொன்று, கிணற்றுக்குள் போட்டதோடு, அருகிலுள்ள வீட்டிலிருந்து அச்சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த, மனைவியின் தந்தையையும் வெட்டியுள்ளார். அவரும் பின்னர் இறந்தார்.
கொலையை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணின் கணவன், மதுபோதையில் இருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், மதுபோதையில் கூட, தனது குடும்பத்தையே இவ்வாறு எவ்வாறு ஈவிரக்கமின்றிக் கொல்ல முடியுமென்ற கேள்வி, சாதாரணமானவர்களுக்கு ஏற்படுவது வழக்கமானது.
இப்பிரச்சினையின் முக்கியமான விடயம், இதன் ஆரம்பப் புள்ளி தான். அவர்களுக்குப் பிறந்த முதலாவது பிள்ளை, பிறந்து இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுவதோடு, இரண்டாவதாகப் பிறந்த பிள்ளையின் பிறப்பில் கணவனுக்குச் சந்தேகம் இருந்ததாகவும் அவரது மனைவியின் பொதுவான நடத்தைகளிலும் அவருக்குச் சந்தேகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுவது தான் அந்தப் புள்ளி.
தனது வாழ்க்கைத் துணையின் மீது சந்தேகங்கள் ஏற்படுவது வழக்கமானது என்ற போதிலும், இவ்வாறான மிகப்பெரிய விடயங்களில், நம்பிக்கை என்பது அவசியமானது. இதற்காகத் தான், குடும்பத் திட்டமிடல் விடயங்களில் அதிகமான கவனஞ்செலுத்துதல் அவசியமானது. 8ஆம் இடத்தில் குரு இருப்பதுவும் 9ஆவது வீட்டில் கேது இருப்பதுவும் வேண்டுமானால் அவசியமெனக் கருதலாம். அது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது, ஆனால் அதை விட, குடும்ப வாழ்க்கைக்காக இருவரையும் தயார்படுத்துதலென்பது மிக மிக அவசியமானது.
இந்த விடயத்தில் இன்னொரு முக்கியமான விடயத்தையும் பேசாமிலிருக்க முடியாது. ‘கற்பு’ என்ற பெயரில், பெண்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகள். காலங்காலகமாகவே, பெண்களுக்கு ஒழுக்கம் தேவை, அவ்வாறாயின் தான் அவள் ‘கற்பு’டன் உள்ள பெண் என்று அர்த்தம் என்று, சமூகக் கட்டமைப்புகள் போதித்து வருகின்றன. ஆண்களாலேயே கட்டுப்படுத்தப்பட்ட இக்கட்டமைப்புகள், எதற்காகப் பெண்களுக்கு மாத்திரம் ஒழுக்கத்தைப் போதித்தன என்பது வெளிப்படையானது. ஒழுக்கம் என்ற பெயரில், கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, பெண்களைக் கட்டுப்படுத்தி வைப்பது தான் அதன் நோக்கம். அந்தக் ‘கற்பு’, தொடர்ந்துவந்த காலங்களில், பெண்களைக் கட்டிப்போடும் மிகப்பெரிய சங்கிலியாக மாறிப் போனது. ஒன்றில், ‘கற்பு’ என்பது இரு பாலாருக்குமானதாக இருக்க வேண்டும், இல்லாவிடில் அவ்வாறானதொன்றே இல்லையென்று இருக்க வேண்டும். இங்கும் கூட, மனையிவியின் நடத்தையில் கணவனுக்குச் சந்தேகம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரைப் பொறுத்தவரை, மனைவியின் ‘கற்பில்’ அவருக்குச் சந்தேகம். ‘கற்பு’ என்ற ஒரு கருஃவிடயம் இருந்தால் தானே, அதை வைத்துக் கொண்டு, ஒருவரைக் கட்டுப்படுத்த முயலக்கூடும்? அவ்வாறானதொரு விடயமே இல்லாமலிருந்தால்?
‘குடும்பம் என்ற கட்டமைப்புக்கு, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அவ்வாறான குடும்பக் கட்டமைப்பால், கீழைத்தேய நாடுகளின் கலாசாரங்கள், உயர்வான நிலையில் காணப்படுகின்றன’ என்ற வாதமொன்று முன்வைக்கப்படலாம். நிச்சயமாகவே, இலங்கை போன்ற நாடுகளின் இறுக்கமான சமூகக் கட்டமைப்புகளுக்கு, இறுக்கமான குடும்பக் கட்டமைப்புகள் உதவியிருக்கின்றன. ஆனால், பலவந்தமான திணிப்புகள், எவ்வளவுக்கு உதவ முடியும்? ஆண் – பெண் என்ற இருவர் (கீழைத்தேய நாடுகளில் சமபாலுறவுத் திருமணங்கள் பெரிதாக நடப்பதில்லை என்பதால்) உள்ள குடும்பக் கட்டமைப்புக்குள், ஒருவர் மாத்திரமே அதிக கட்டுப்பாடுகளுடன் வாழ வேண்டிய சூழல் காணப்படுவது, எந்தளவுக்கு நியாயமானது?
‘குடும்பக் கட்டுப்பாட்டை உடையுங்கள், விரும்பியவர், விரும்பியவரோடு இருக்கலாம் என்ற நடைமுறையைக் கொண்டு வாருங்கள்’ என்பது, மேலே காணப்பட்ட பந்திகளின் கருத்தன்று. மாறாக, குடும்பம் என்ற கட்டமைப்பு, இரு தரப்பினருமே சமமாக மதிக்கப்படும் ஒன்றாக மாற்றப்பட வேண்டும். அதற்காக, இரு தரப்பினரதும் ஒழுக்கநெறியைப் பற்றிய கவனம் ஏற்பட வேண்டும், இல்லாவிடில் பெண்களின் ஒழுக்கம் மீதான அதிகபட்சக் கவனம், இல்லாதொழிக்கப்பட வேண்டும். பெண்களின் ஒழுக்கம் மீது செலுத்தப்படும் அதிகபட்சக் கவனம், பல நேரங்களில் ‘ஒழுக்கத்தை’ மீறாத பெண்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி, அவர்களின் உயிர்களைக் குடித்திருக்கிறது.
அடுத்ததாக, மதுபோதைப் பழக்கத்தைப் பற்றிய அதிக கவனத்தைச் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. அண்மையில் ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட தகவலின்படி, சட்டபூர்வ மதுபான விற்பனை அதிகளவில் இடம்பெறும் முதல் 3 மாவட்டங்களாக, யாழ்ப்பாணம், நுவரெலியா, மட்டக்களப்பு ஆகியன இடம்பிடித்துள்ளன. மூன்றுமே, தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டங்கள். அதிகரித்த மதுப்பழக்கத்தின் காரணமாக, குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள், கொஞ்சநஞ்சமன்று. இந்த முக்கொலை இடம்பெற்ற தினத்திலும் கூட, சந்தேகநபர், மதுபோதையிலேயே இருந்ததாக அறிவிக்கப்படுகிறது. உண்மையிலேயே அவருக்குக் கொலை செய்யும் எண்ணம் இருந்திருக்காமல், மதுபோதையில் கட்டுப்பாட்டை இழந்தமையின் காரணமாகவும் இதைச் செய்திருக்க முடியும்.
தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் குடும்பத் தலைவனால் குடும்பங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம் ஏராளம். இவ்வாறான குடிகாரர்களால் ஒழுங்காக உழைக்க முடியாது, நீண்ட காலத்துக்கு உழைக்க முடியாது. 40களிலேயே அல்லது 50களின் தொடக்கத்திலேயே, அவர்களின் தொழில்செய்யும் திறன் இல்லாது போய்விடும். பின்னர் அவர்கள், குடும்பங்களுக்கு ஒரு சுமையாகி விடுவார்கள். ஆகவே, குடிக்கும் போதும் பிரச்சினை, நீண்டகால நோக்கிலும் பிரச்சினை என, குடும்பங்களுக்கான மிகப்பெரிய பிரச்சினையாக மதுவுக்கு அடிமையாகுதல் காணப்படுகிறது.
கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு பிரச்சினை, அப்பெண்ணின் வயது. உயிரிழக்கும் போது அவரது வயது 24. அவருக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருக்கின்றது. இதற்கு முன்னர் குழந்தையொன்று பிறந்து, இறந்துள்ளது. ஆக, அவரது 21ஆவது வயதில் அல்லது அதற்கு முன்னர் அவர் திருமணம் முடித்திருக்க வேண்டும். வறுமை காரணமாகவும் பெண்களை இன்னமும் சுமைகளாகக் கருதுவதாலும் பெண்களுக்குக் காணப்படும் பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் காரணமாகவும் பெண்களின் ஒழுக்கம் குறித்த கேள்விகள் அடிக்கடி எழுப்பப்படுவதாலும், எவ்வளவு விரைவாகப் பெண்களைத் திருமணம் முடிக்க முடியுமோ, அவ்வளவு விரைவாகத் திருமணம் முடித்து அனுப்பும் வழக்கம் காணப்படுகிறது.
இதன் காரணமாக, மனதளவில் போதியளவு முதிர்ச்சியடையாத நிலையில், திருமணம் முடிக்க வேண்டிய நிலை பெண்களுக்கு ஏற்படுவது ஒருபுறமிருக்க, அவர்களது அடுத்தகட்ட முன்னேற்றமும் தடுக்கப்படுகிறது. ஆண்களில் பெரும்பாலானோர், 20 வயதில் பல்கலைக்கழகம் சென்றோ அல்லது வேறு வழிகளிலேயோ, தங்களை முன்னேற்றத் தொடங்குகிறார்கள். 20களின் இறுதிவரை, அதிலேயே கவனஞ்செலுத்துகிறார்கள். பெண்களோ, 20களின் ஆரம்பத்திலேயே திருமணம் முடித்து, தங்களுடைய வட்டத்தைச் சிறியதாக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள். அத்தோடு, தங்களை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படாததால், பொருளாதார ரீதியாக ஆண்களைஃகணவனைத் தங்கியிருக்க வேண்டிய நிலைக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்’ என, ஆண்களின் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டு இருப்பது, திருமணத்துக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை பற்றி, பெண்களுக்குச் சிந்திக்க முடியாதிருப்பதாலாகும். பெண்களைத் தன்மேம்பாடு அடையச் செய்தால், தங்களைத் துன்புறுத்தும் கணவனிடமிருந்து விலகும் முடிவை, அவர்களால் எடுக்கக்கூடியதாக இருக்கும். தற்போதைய நிலையில், ஆண்களில் தங்கியிருக்கும் நிலையிலேயே, குறிப்பிடத்தக்களவு சதவீதமான பெண்கள் காணப்படுகிறார்கள். இதுவும் ஆரோக்கியமானது கிடையாது.
போரால் பாதிக்கப்பட்ட வடக்கிலும் கிழக்கிலும், போரால் நேரடியாகப் பாதிக்கப்படாதவர்கள் கூட, அழுத்தங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பது, தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வருகின்ற ஒன்று. யாழ்ப்பாணத்தில் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படும் வாள்வெட்டுச் சம்பவங்கள் கூட, போரின் வன்முறை காரணமாகத்
தூண்டப்பட்ட ஒன்றாக இருக்கலாம் என்றொரு கருத்து உண்டு. அதேபோலத் தான், இந்தச் சம்பவமும் கூட, இதைப் போன்று இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களும் கூட, போரின் காரணமாக ஏற்பட்ட மறைமுகமான அழுத்தங்களால் உண்டான ஒன்றா என்பதை ஆராய வேண்டிய தேவை இருக்கிறது. தனது மனைவியையும் 18 மாதக் குழந்தையையும் கொல்லுமளவுக்கு, சாதாரண மனிதர்களாலோ அல்லது கோபம் கொண்ட சாதாரண மனிதர்களாலோ முடியாது. எனவே, நல்லிணக்கம், அரசியற்தீர்வு என்பதற்கப்பால், மக்களுக்கான உடனடித் தேவையாக இருக்கின்ற உளவளத் துணையைப் பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
காரணங்கள் எவையாயினும், மூன்று உயிர்கள் பறிக்கப்பட்டு விட்டன. ஆனால், குடும்ப அமைப்பில் பெண்களுக்கான பங்கை உயர்த்தி, அவர்களது தன்மேம்பாட்டையும் அதிகரித்திருந்தால், இந்த அனர்த்தத்தைத் தடுக்கக் கூடியதாக இருந்திருக்கும் என்பது தான், சொல்லப்பட வேண்டியதாக உள்ளது.