ஹெக்ரயர் ஒன்றுக்கான நெல்விளைச்சல் 4000 கிலோவை இன்னும் தாண்டவில்லை. இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை நீர்ப்பாசனம்தான். இதை விட உப உணவுப் பயிர்ச் செய்கை, தெங்குச் செய்கை, மந்தை வளர்ப்பு, நன்னீர் மீன்பிடி, குடிநீர் என்பவையும் இந்த நீர்ப்பாசன குளங்களில் தங்கியுள்ளன.
விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமாயின் நீர்ப்பாசன வளத்தை பெருக்க வேண்டும். ஆதலால், அரசாங்க அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் அரசும் பல திட்டங்களை உருவாக்கியுள்ளது. அதில் ஒன்றுதான் ‘முந்தானை ஆற்றுப்படுக்கைத் திட்டம்’.
இது மட்டக்களப்பு மாவட்டத்தில் ‘முந்தானை’ என்று அழைக்கப்பட்ட போதிலும், அம்பாறை மாவட்டத்தில் ‘றம்புக்கன் ஓயா’ என்றே அழைக்கப்படுகிறது. அங்கு அந்த ஆறு மூன்று கிளைகளாக உள்ளது.
இத்திட்டத்தின் பிரதானியாக எந்திரி. கே.சிவபாலசுந்தரம் பொறுப்பேற்றுள்ளார். அவர் இத்திட்டம் பற்றி விபரிக்கிறார்.
கேள்வி: இத்திட்டத்தின் நோக்கம் பற்றி சுருக்கமாகக் கூறுங்கள்.
பதில்: நெற்பயிருக்கும், மாற்றுப் பயிர்ச் செய்கைக்கும் நீர்ப்பாசன வசதியளிப்பது இத்திட்டத்தின் நோக்கம். இப்பொது இப்பயிர்ச் செய்கைகளுக்கு உள்வாங்கப்படடிருக்கும் நிலப்பரப்பை விட இன்னும் மேலதிக நிலப்பரப்பை இதற்குள் உள்வாங்குதல் வேண்டும். மழையை நம்பி செய்கை பண்ணப்பட்டு வரும் நெற்காணிகளை நீர்ப்பாசனத்தை நம்பி செய்கை பண்ணப்படும் நெற்காணிகளாக மாற்றுதல் அவசியம். இப்போது பெறப்படுகின்ற ஒன்றுதிரட்டிய நெல் விளைச்சலை இருமடங்காக்குதல், மந்தை வளர்ப்பு, நன்னீர் மீன்பிடி ஆகியனவற்றை ஊக்குவித்தல் இதன் நோக்கமாகும். அவற்றை விசாலித்தல். வெள்ளப் பெருக்கைத் தடுத்தல், குடிநீர்வசதிக்கு உதவுதல் என்பனவும் இவற்றுள் அடங்குகின்றன.இதனால் நெற்செய்கையில் விளைதிறன் அதிகரிக்கப்படும். மந்தை வளர்ப்பு அதிகரிப்பதால் பால் உற்பத்தி பெருகும். மரக்கறிச் செய்கையினூடாகவும், மாற்றுப் பயிர்ச செய்கையினூடாகவும் விவசாயகள் அதிக ஆதாயம் பெறுவர். குளம் விசாலமடைவதால் புதிய மீன்பிடியாளர்களுக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கும்.
கேள்வி: இத்திட்டத்திற்கான நிதி உதவிபற்றிக் கூறுங்கள்.
பதில்: இத்திட்டத்திற்கு பிரான்ஸ் நாட்டு நிதி நிறுவனமே பாரிய அளவிலான முதலீட்டைச் செய்கிறது. 30000 மில்லியன் ரூபா கடனாகக் கிடைக்கிறது. இதற்கு லேதிகமாக 2400 மில்லியன் ரூபா அன்பளிப்பும் கிடைக்கிறது. இத்திட்டம் 2025இல் நிறைவுறும். இப்போது திட்டமிடலையும், தரவுகள் சேகரிப்பதையும், வரைபடங்கள் தயாரிப்பதையும் செய்து கொண்டிருக்கிறோம். 2021ம் ஆண்டிலேதான் வேலைகள் ஆரம்பிக்கப்படும்.
கேள்வி: உறுகாமம், கித்தூள் ஆகிய இரு குளங்களும் அருகருகே அமைந்துள்ளன. இவற்றை இணைத்து விசாலமானதாக்கி, நீரின் கொள்ளளவை அதிகரிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவை பற்றி முழுமையாகக் கூறுங்கள்.
பதில்: இப்போது ஒரு புதிய குளம் உருவாகப் போகிறது. அக்குளத்தினுள் இவ்விரு குளங்களும் சங்கமமாகி விடும். நாம் முந்தானையாற்றுக்குக் குறுக்கே 2.3 கிலோ மீற்றர் நீளம் கொண்ட மண்அணையைக் கட்டியே புதிய குளத்திற்கான நீரைப் பெற இருக்கிறோம். அப்போது குளத்தின் ஆளம் 27 அடியாக மாறி விடும். குளக்கட்டு 5.5அடி உயர்த்தப்பட்டு 72000 ஏக்கர் அடி தண்ணீர் கொள்ளக் கூடியதாக அது மாறும். இப்போது இருக்கின்ற குளத்தைப் போல 4மடங்கு விசாலமானதாக புதிதாக கட்டி முடிக்கப்படும் குளம் இருக்கும்.15000 ஏக்கர் நிலங்கள் புதிதாக விவசாயச் செய்கைக்கு உள்வாங்கப்படும். அதற்கான 75 கிலோ மீற்றர் நீளம் கொண்ட புதிய கால்வாய்கள் உருவாக்கப்படும்.
கேள்வி: இவை விசாலமாகும் போது இன்னும் மேலதிகமான காணிகள் சுவீகரிக்கப்படுமா? மக்கள் வெளியேற்றப்படுவார்களா? அவ்வாறாயின் அவர்களுக்கு நட்ட ஈடு கிடைக்குமா?
பதில்: காணிகள் வீடுகள், குடிமனைகள் என்பன சுவீகரிக்கப்படும். குளம் விசாலமடையும் போது அதற்குள் இருப்பவை அழிந்து விடும். ஆதலால், அவை ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விடும். அவற்றுக்கான நட்டஈடு வழங்கப்படும். நட்டஈடுகள் யாவும் சமகாலப் பெறுமதியை அடிப்படையாக வைத்தே வழங்கப்படும். இவ்விடயத்தில் ஒரு சிறு தவறு கூட ஏற்படா வண்ணம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. நட்டஈடு விலைமதிப்புத் திணைக்களத்தின் சிபாரிசுக்கிணங்கவே தீர்மானிக்கப்படும்.
கேள்வி: இத்திட்டத்தின் மூலம் புதிதாக எத்தனை ஏக்கர் நிலம் பெரும்போக, சிறுபோக நெற்செய்கைகளுக்கு உள்வாங்கப்படும்? இத்திட்டம் நிறைவுற எவ்வளவு காலம் எடுக்கும்? இதற்கான நிதி எவ்வளவு பெறப்பட்டிருக்கிறது?
பதில்: இத்திட்டத்தின் மூலம் இப்போது 10,800 ஏக்கர் காணிகள் நீர்ப்பாசன வசதியை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதை விட 15256 ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகள், குளம் நிர்மாணிக்கப்பட்டதும் வழங்கப்படும். இக்காணிகள் இருபோக நெற் செய்கைக்கும், மாற்றுப் பயிர்ச் செய்கைக்கும் உள்வாங்கப்படும்.
கேள்வி: மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சைக் குளம் விசாலமானதாகவும், அதிக நீரைக் கொண்டதாகவும் உள்ளது. அதனோடு ஒப்பிடும் போது இக்குளம் நிறைவுற்ற வேளையில், எப்படி இருக்கும்?
பதில்: இதுதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விசாலமான குளமாகவும், அதிகளவு தண்ணீரைத் தேக்கி வைக்கும் குளமாகவும், அதிகளவான நெற்காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்கும் குளமாகவும் மாறும். இதனூடாக 6331 குடும்பங்கள் நேரடியான பலனைப் பெற இருக்கின்றன.
கேள்வி: குளக்கட்டை உயர்த்துவதாயின் அதற்கான மண் எங்கிருந்து பெறப்படும்?
பதில்: இக்குளக்கட்டுக்கான மண்ணை குளத்தின் உள்பரப்பில் தோண்டி எடுக்கவே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மண் குளக்கட்டை கட்டுவதற்கு பொருத்தமானதா என ஆய்வு செய்யப்பட்ட போது அதன் முடிவு திருப்தியாக இருந்தது.
கேள்வி: இக்குளத்தில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்ற மீனவர்கள் சுமார் 300 பேர் தமது தொழிலை, குளம் திருத்தி அமைப்பதால் இழக்க வேண்டி வரும். அவர்கள் மீண்டும் தமது தொழிலை ஆரம்பிக்கும் வரை அவர்களது ஜீவனோபாயத்திற்கு என்ன வழி?
பதில்: மீனவர்கள் ஒரு சிறுபோக காலத்திற்கு மட்டுமே மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாமற் போகும். அக்காலத்தில் அவர்களின் தொழில் பாதிப்பையும், ஜீவனோபாயத்தையும் கருத்தில் எடுத்து, அவர்கள் பாதிக்கப்படா வண்ணம் நட்டஈடு வழங்கப்படும்.
கேள்வி: இத்திட்டத்தோடு இணைந்ததாக ‘கல் ஒடை’ நீர்த் தேக்கமும் அமைக்கப்பட இருப்பதாக அறியப்படுகிறது. அது உண்மையா?
பதில்: 56000 ஏக்கர் அடி நீர் கொள்ளக் கூடிய ‘கல் ஓடை’ நீர்த் தேக்கத் திட்டம் உருவாகப் போகிறது. இப்போது இதற்கான ஆரம்ப அறிக்கைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.-
எஸ்.தவபாலன்…
புளியந்தீவு குறூப் நிருபர்