(அருளினியன்)
மணிப்பிரவாளமும், இலங்கைத் தமிழும்.
“பாடசாலை என்கிறீர்கள், கலாநிதி என்கிறீர்கள், உபதேசம் என்கிறீர்கள் நீங்கள் பேசும் ஈழத் தமிழில்; ஏன் இத்தனை சமஸ்கிருதக் கலப்பு..” எனக் குறைபட்டார்; தனித் தமிழ்ப் பற்றாளரான தமிழ் நாட்டு நண்பர் ஒருவர். ( மேலே கூறிய வார்த்தைகள் எல்லாமே சமஸ்கிருதம்). அவர் சொல்வது உண்மைதான்; நாங்கள் ஈழத் தமிழில் அன்றாடம் உபயோகிக்கும் 50 வார்த்தைகளை பட்டியல் இட்டால் அதில் குறைந்தது 10 வார்த்தைகளாவது சமஸ்கிருதமாக இருக்கும். ( வார்த்தை- சமஸ்கிருதம், சொல்- தமிழ் என்று சொல்பவர்கள் உண்டு. ஆனால், வார்த்தை என்ற தமிழ்ச் சொல், தமிழில் இருந்தே சமஸ்கிருதத்திற்குச் சென்றது என்போர் பக்கம் நான்)
நாங்கள் பேசும் தமிழில் ஏன் இத்தனை சமஸ்கிருத வார்த்தைகள்..? கொஞ்சம் வரலாறு பார்ப்போம். உண்மையில் ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பேசுவது சேர நாட்டுத் தமிழ். இன்னும் சொல்லப்போனால் மலை வாழ் மக்களின் தமிழ். மலையாளத் தமிழ். மணிப்பிரவாளத்தின் தாக்கத்தில் வந்த தமிழ்.
அது என்ன மணிப்பிரவாளம்…? அதற்கு முதல்;
மலையாளிகள் பேசும் மலையாளத்தை உற்றுக் கேளுங்கள் அது; தமிழையும், சமஸ்கிருதத்தையும் மாற்றி மாற்றிக் கோர்த்த மாலை போல இருக்கும்.
அதாவது; மணியும், பவளமும் சேர்ந்து உருவாக்கப்பட்ட மாலை போல, திராவிட மொழியான தமிழும், வட மொழியான சமஸ்கிருதமும் கலந்து எழுதப்பட்ட இலக்கிய நடையே மணிப்பிரவாள நடை.
சங்க காலத் தொகைநூல்களில் ஒன்றான அகநானூறில் உள்ள மூன்று பகுதிகளில்;
‘மணிமிடைப் பவளம்’ ஒன்றாகும். இந்த ‘மணிமிடைப் பவள’த்தில் இருந்துதான்; மணிப்பிரவாளம் என்ற வார்த்தை உருவாகியுள்ளது. ஆனால், மணிமிடைப் பவளம், இரண்டு முற்றிலும் வேறான ஏலியன் மொழிகளை இணைத்து எழுதுவதைக் குறிக்கவில்லை மாறாக, கஷ்டமான சொற்களையும் எளிய சொற்களையும் சேர்த்து எழுதுவதை இது குறித்து நின்றது. இந்த மணிமிடைப் பவளம் மருகியே; நாளடைவில் ‘மணிப்பிரவாளம்’ என்ற பெயர் உருவானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மணிப்பிரவாள நடை; வைணவ உரையாசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது என்போரும் உண்டு. “ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுத அவற்றின் உரையாசிரியர்களால் மணிப்பிரவாள நடை உருவாக்கப்பட்டது. இந்த நடை, பதினோராம் நூற்றாண்டில் துவங்கி இரண்டு நூற்றாண்டுகள் வழக்கில் இருந்தது. இந்தக் கலப்பு உரைநடை, ஏன் இந்தக் காலகட்டத்தில் தோன்றியது, ஏன் வைணவ உரையாசிரியர்களால் கையாளப்பட்டது, ஏன் கைவிடப்பட்டது என்ற கேள்விகள் ஆய்வுக்கு உரியவை” என்கிறார் பேராசிரியர் இ. அண்ணாமலை.
சமஸ்கிருதம் தேவ மொழியாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது. தமிழுடன், சமஸ்கிருதத்தைக் கலந்து எழுதுவதை அக்காலத்தில் உயர்வாக நினைத்தனர். குத்தி முறிந்து; மணிப்பிரவாள நடையில் எழுதுவதைப் பெருமையாக நினைத்தனர்.
அது ஏனோ தெரியவில்லை, வைணவ இலக்கியங்களில் செல்வாக்குச் செலுத்தியதைப் போல; சைவ இலக்கியங்களில் மணிப்பிரவாள நடையால் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. இதுவும் ஆய்வுக்குரியது.
தமிழுடனான, சமஸ்கிருதக் கலப்பை; சோழ மன்னர்கள்தான் ஊக்குவித்தனர். அருண் மொழி என்ற அழகிய தமிழ்ப் பெயரை; இராஜ ராஜ சோழன் என்ற சமஸ்கிருதப் பட்டப் பேராக மாற்றிக் கொள்ளும் அளவுக்கு, சமஸ்கிருதம்தான் தேவ மொழி என யாரோ பிராமணர் இராஜ ராஜ சோழனின் மண்டையைக் கழுவி இருக்க வேண்டும்.
கம்பராமாயணத்தில் சமஸ்கிருத வார்த்தைகள் குறைவு. ஆனால், அதேகாலப் பகுதியைச் சேர்ந்த சோழர்களின் கல்வெட்டுகள் பெரும்பாலானவை மணிப்பிரவாள நடையில் அமைந்திருக்கும். சோழர் ஆட்சியில் இந்தோனேசியா வரைக்கும் தமிழ்க் கொடி பறந்தது. தமிழர்களுக்கு எல்லா வகையிலும் சோழராட்சி பொற்காலமாக இருந்தது. ஆனால், அவர்களின் ஆட்சிக் காலத்தை தமிழ்மொழியின் பொற்காலமாகச் சொல்ல முடியாது என்பது சோழரைக் கொண்டாடும் தமிழர்களுக்கு கொஞ்சம் கசப்பான உண்மைதான்.
அதே நேரம் சேர நாடான இன்றைய கேரளாவில்; வித்தியாசமான வட்டார வழக்கு வழக்கத்தில் இருந்து வந்தது. ( மதுரைத் தமிழ், கோயம்புத்தூர் தமிழ் போல) இந்த மலைநாட்டு வட்டாரத் தமிழ், சமஸ்கிருதத்துடன் கலந்து, ‘மலையாளம்’ என்ற புது மொழியாக உருவெடுத்தது. சுமார் ஒன்பதாம் நூற்றாண்டில்; மலையாளத்தின் தோற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்பது அறிஞர்களின் முடிவு.
உண்மையில் சேர நாட்டு வட்டாரத் தமிழில், சமஸ்கிருதத்தின் தாக்கம் அதிகமாகி சேர நாட்டினர்; மணிப்பிரவாள நடையை தாராளமாகப் பின்பற்றினர். சமஸ்கிருதம் கலந்த சேர நாட்டுத் தமிழ்; காலப்போக்கில் மலையாளம் என்ற புதியதொரு மொழியாக உருமாற்றம் பெற்றது.
மலைநாட்டு வட்டாரத் தமிழுடன் சமஸ்கிருதத்தைக் கலந்து, மலையாளம் என்ற புது மொழி உருவாகப் பிரதான காரணமானவர்கள் கேரளத்து நம்பூதிரிகள். மணிப்பிரவாள நடைதான் உயர்ந்தது என மக்களை நம்பவைத்தது மட்டும் அல்லாமல்; தமிழுடன் வட மொழியான சமஸ்கிருதத்தை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கலந்தனர்.
ஆரியர்களான நம்பூதிரிகள், திராவிட மொழியான தமிழை வெறுத்ததில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. ஆரிய மொழியான சமஸ்கிருதம்தான் உயர்ந்தது என இவர்கள் பிரச்சாரம் செய்தனர். சமூக அந்தஸ்திலும், கல்வியிலும் மேன் நிலையில் இருந்ததால் நம்பூதிரிகளின் கருத்துக்கள் deciding factors ஆகின.
இதேநேரம்; சோழ, பாண்டிய தமிழ் இராச்சியங்களில் இருந்து, மலைநாட்டை கிழக்கே இருந்த மலை பிரித்தது. இதே நேரம் மலை நாட்டில் சுமார் 3 நூற்றாண்டுகளாக ஆட்சியில் இருந்த, சோழரின் செல்வாக்கு குறைந்து, பெருமக்கன்மார் என்ற, மலை நாட்டவர்களின் ஆட்சி ஏற்பட்டது. தமிழக மக்களுடான வணிக உறவுகளில் குறைவுகள் ஏற்பட்டன. இந்தக் காரணங்களினால், சேர நாட்டுத் தமிழ் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாகி மலையாளம் என்ற தனி மொழி பிறந்தது.
இந்தச் சேர நாட்டில் இருந்து வரலாற்றுக் காலத்தில்; ஈழத்தில், மிகப் பெரிய குடியேற்றம் ஒன்று நடந்தது. போர்த்துக்கீயர்களின் ஆவணங்கள் யாழ்ப்பாணத்தவர்களை, “மலபாரிகள்” என்றே அழைக்கிறது. ஈழத்தில் இன்றும் கேரளத்தின் எச்சங்கள் நிறையவே உள்ளன. ஈழத்தில் குடியேறிய இந்த சேர நாட்டுத் தமிழர்கள், சமஸ்கிருதத்தின் பாதிப்புள்ள மலைநாட்டுத் தமிழைப் பேசினர். இதனால்தான் நாங்கள்; இலங்கைத் தமிழர்கள் பேசும் மொழி தமிழாகவும், ஆனால், எங்களின் வாழ்க்கை முறை அசல் மலையாளிகளின் வாழ்க்கை முறையை ஒத்ததாகவும் உள்ளது