மனிதன் இன்று யாருமே சுய வாழ்வியலோடு இல்லை. இறக்குமதி செய்யப்பட்ட பணத்தைப் (imported money) பெற்றுக் கொண்டு வெளிநாட்டவர்களின் கொள்கைகளையும் (imported policy) பின்பற்றியவனாக வாழப் பழகிக் கொண்டான்.
இஸ்லாத்தை உலகம் சல்லடை போட்டு எதிலுமே தவறில்லாத நல்ல கொள்கை என ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தக் கொள்கையைக் கையிலே எடுத்த மனிதன் அவற்றின் அறை குறைகளைத் தவறாக விளங்கிக் கொண்டு முழு மனித குலத்தையுமே கேவலப் படுத்தி மாண்டு போகும் அவலம் இனி.
அவனால் விளங்கிக் கொள்ள முடிந்தவற்றை மட்டுமே அவன் அப்பாவி மக்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்து மதத்தின் தூய விடயங்களை மறக்கடிக்கச் செய்து விட்டான். பாழ் படுத்தி விட்டான். உரிய மத ஆளுமைகள் (Religious personalities) செய்யாத, அல்லது அவர்களால் விடப்பட்ட இடைவெளி மதப் பிரச்சாரங்களை அரைகுறை ஆலிம்கள் செய்ய முற்பட்டதன் பாதக விளைவை உலகம் இன்று கண்டு வருகிறது.
ஒரு விடுதலைப் போரை முஸ்லிம்களால் நடத்த வேண்டிய தேவை ஒருபோதுமே இந்த நாட்டில் இல்லை. ஏனெனில் நாங்கள் விடுதலையோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஓரிரு தப்பிப் பிறந்து எங்கள் மதத்திலே வாழக் கிடைத்த கேவலமானவர்களால் நாங்கள் மிகவும் மன வேதனைப் படுகிறோம். இவர்கள் ஒரு குட்டையில் உள்ள சிறிய குழுவினரே. இவர்களை முஸ்லிம் சமூகம் ஒரு போதுமே அங்கீகரிக்கப் போவதில்லை. இவர்களை முஸ்லிம்களே களையெடுப்பார்கள். இவர்கள் மிக விரைவில் அழிந்தே போய் விடுவார்கள். கொள்கை இல்லாத, பொது மக்களைக் கொன்று போராடும் உரிமையை இவர்கள் எங்கள் மதத்தினூடாக ஒரு போதுமே பெற்றுக் கொள்ள வில்லை. போராட்ட ஒழுங்கை, போராட வேண்டிய காரணங்களை, எவ்வாறு போராட முடியும் என்ற ஒழுக்கத்தை மிகவும் அழகாகச் சொல்லி உள்ளது. அப்பாவிகளைக் கொன்று விட்டு நீ சுவர்க்கம் வர முடியும் என்று எங்கள் மதம் சொல்லவே இல்லை.
மத்திய கிழக்கு இஸ்லாம்
——————————————-
இவர்களே #தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பைத் தோற்று வித்தவர்கள். இது உண்மையில் மன்னர்களின் தயாரிப்பு. அவர்களே நிதியீட்டம் செய்து வளர்த்து வரும் அமைப்புக்கள். இவர்களின் அடிப்படை பணம். பின்னர் #இபாதா (வணக்க வழிபாடுகள்) மட்டும். வேறு எதிலுமே கவனம் கொள்ள மாட்டார்கள். இவர்களில் பயிற்றுவிக்கப் படும் ஒரு சிலர் பின்னர் தீவிரப் போக்குடன் விவாதிப்பார்கள். இறுதியிலே பிரிந்து சென்று வேறொரு பெயரில் ஒரு தௌஹீத் ஜமாஅத்தாக செயற்படுவார்கள். இதுவரை இலங்கையிலே பல தௌஹீத் ஜமாஅத்கள் உருவானதே இவ்வாறுதான். இன்று ஒவ்வொரு பெயரிலும் பல தௌஹீத் ஜமாஅத்கள் உண்டு. அவர்களுக்குள் பலத்த கருத்து தோதல்களும், விவாதங்களும் கூட நடைபெறும். இவர்கள் அவர்களின் கருத்தை மட்டுமே ஏற்றுக் கொள்வதோடு, சமூக ஒற்றுமையை, அடுத்த கொள்கைகளை மதிக்கவே மாட்டார்கள். தான் உருவாக்கிய ஜமாஅத்துக்கான நிதியை மத்திய கிழக்கு நாடுகளிலே உள்ள ஏதாவதொரு நிதி வழங்கும் #சகாத் நிறுவனம், அல்லது தனி நபர்களோடு தொடர்பை ஏற்படுத்திப் பெறுவார்கள். அதற்கென ஒரு மஸ்ஜிதை அமைப்பார்கள்.
முஸ்லிம் சமூகத்துக்குள் பிளவை ஏற்படுத்தும் நோக்கோடு யூத, சியோனிஷ்டுகளின் ஆலோசனைக்கு அமைவாக மத்திய கிழக்கு மன்னர்களால் உருவாக்கப் பட்ட #தௌஹீத் என்ற அமைப்பும், அபூபக்ர் அல் பஃதாதி என்ற யூத உழவாளியால் உருவாக்கப்பட்ட #இஸிஸ் என்ன அமைப்பும் பற்றிய தெளிவை மக்கள் மத்தியிலே சொல்ல வேண்டும். அவை முழுக்கவும் மத்திய கிழக்கு மன்னர்களின், இஸ்லாமிய நடைமுறைக்கு முற்றிலும் முரணான மன்னர்களின் வாரிசு அரசியலைத் தக்க வைப்பதற்காக மத (#இபாதாக்களை) வணக்க வழிபாடுகளை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் தன்மையைப் பொது மக்கள் மத்தியிலே விதைக்கும் கோட்பாடுகளே! எனச் சொல்ல வேண்டிய தருணம் இதுவே.
சிறிய, சிறிய வணக்க வழிபாடுகளில் உள்ள தவறுகளைத் தூக்கிப் பிடித்துச் சண்டை பிடிப்பதை எம்மைப் படைத்த இறைவன் விரும்புவானா? அதையல்லவா காலா காலமாக தௌஹீத் ஜமாஅத் செய்கிறது. சும்மா இருந்த எமக்குள் இரண்டு மஸ்ஜித்கள், இரண்டு நோன்புகள், இரண்டு பெருநாள்கள் என ஏன் வந்தது? அவற்றை விடப் பெரிய மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, எம் பெருமானாரின் வாழ்க்கை வழிமுறை எனப் பல உண்டல்லவா? அடுத்த மக்கள் மத்தியிலே சொல்ல வேண்டியவை.
இலங்கை முஸ்லிம்கள் இனி என்ன செய்ய வேண்டும்
———————————————————————
* பொதுவாக குடும்பத்திலே துண்டா, நெறி பிரழ்வான பிள்ளைகளை மத்தரசாவுக்கு அனுப்பும் நடைமுறை ஒழிய வேண்டும்.
* மத்ரசாக்கள் அவற்றின் பாடத் திட்டங்களை மறுசீரமைக்க வேண்டும்.
* கட்டாயமாக மத நல்லிணக்கம், ஏனைய மதங்களை மதித்தல், சக வாழ்வு பற்றிய பாடங்கள் மத்தரசா முறைமைகளில் கட்டாயமாக உள்வாங்கப்பட வேண்டும்.
* மத பிரச்சாரம் பற்றிய பாடம், முன்மொழிவு (Presentation Skill), மென்மையான பேச்சு (soft speaking), பேச்சின் வகைகள், பேசுவதன் நளினமான நெறி முறை பற்றிய கல்வியை கட்டாயமாக மௌலவி மார்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கான பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
* மஸ்ஜித்துக்குள்ளும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் சத்தமிட்டுக் கத்திப் பேசுவதை, எதிர்மறையாகப் பேசுவதை, மனிதனை நரகம் பற்றிப் பயமூட்டுவதை முற்றாக ஒழித்து, சுவர்க்கம் பற்றிய நல்ல நிலைமைகளை விளக்க வேண்டிய கல்வி முறைமை வேண்டும்.
* கல்வித் தரம் குறைந்த வயது அனுபவமற்றவர்களை வைத்து மதப் பிரசங்கம் செய்வதைத் தவிர்த்தல். மதப் பிரசங்கத்துக்கு உரிய நியமத் தரமுள்ள (standard) ஆலிம்களையே ஊர் மஸ்ஜித்களில் அனுமதித்தல்.
* பணத்தைப் பெற்றுக் கொண்டு வேறொரு நாட்டின் இறக்குமதி செய்யப் பட்ட கொள்கைகளை நமது சமூகத்துக்குள் உள் வாங்குவதை முற்றாகத் தவிர்த்தல்.
* மௌலவிப் பட்டம் பெற நல்ல கொள்கையை உடைய மத்ரசாக்களுக்கு மாணவர்களை உள் நுளையச் செய்தல், அவர்களைப் பெற்றோர் தொடராக கண்காணித்தல்
* உலக அரசியல் நிலைமைகள், உலக முஸ்லிம்களுக்கு நடைபெறும் அநீதிகள் பற்றிய தெளிவை எமது பிள்ளைகள் மத்தியிலே ஏற்படுத்தல்
* முஸ்லிம் ஆண்கள் இஸ்லாமிய ஆடைக் கலாசாரம் என்ற போர்வையில் பாகிஸ்தான் ஆடை கலாச்சாரத்தை உடுத்தலை முற்றாகத் தவிர்த்தல்
* பெண்கள் புர்க்கா எனப்படும் முகத்தை முழுமையாக மூடும் முறையைப் பற்றி ஆலிம்கள் உரிய தீர்ப்பைச் சொல்ல வேண்டும். அது பல்லின மக்கள் உடைய நாட்டுக்கு உரியதாக கலந்து பேசி முடிவை எடுக்க வேண்டும்.
* ஊர்களுக்குள் மற்ற மத சகோதரர்களுடனான நல்லிணக்க முறைமைகளை உருவாக்குதல்
* குறிப்பாக இளைஞர்களைச் சரியாக வழி நடாத்தப் பெற்றோர் பொறுப்புக்களை அதிகரித்தல்
* பயங்கரவாத அமைப்புக்களோடு இளைஞர்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்ற தகவல் தெரிய வரும் போது அவர்களுக்கான உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட ஊர் தலைமைகள் உதவுதல்
* ISIS பற்றிய சகோதரர் றவூப் செய்ன் அவர்களின் புத்தகத்தைப் படிப்பதற்கு ஏற்பாடு செய்யலாம்
இந்த தேசத்தில் நாம் ஒரு ஆகவும் குறைந்த (absolute) சிறபான்மைச் சமூகமாகும். நமது சந்ததியிடம் அச்சம் நிறைந்த, சந்தேக பார்வை உடைய, முஸ்லிம் என்றாலே அவன் ஒரு பயங்கரவாதி என்ற தவறான எண்ணங்களை விதைத்து விட்டுச் செல்வதா? அல்லது மத நல்லிணக்க சமூக உணர்வுகளை விதைப்பதா? சிந்திப்போம்.
ஓர் இஸ்லாமிய தேசத்திலே வாழும் உணர்வுக்கும், சட்ட திட்டங்களுக்கும் நமது இலங்கைச் சூழலுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு. வெறும் கோட்பாடுகள் நடைமுறைக்கு உதவாது. சிந்திப்போம். எமது அப்பாவி மழலைகளுக்கான நல்ல பாதையை வடிவமைப்போம். நமது வாழ்வும், பணியும் முழு இலங்கைத் தேசம், ஏனைய மக்கள் என பிணைந்தே இருக்கிறது என்பதை விளங்கிக் கொள்வோம்.
செயற்படுவோம்.
இதற்குள் உள்ள சருவதேச அரசியல் என்ன தெரியுமா? நியுசிலாந்து மஸ்ஜித் படுகொலைகளோடு உலகிலே முஸ்லிம்கள் மீதான பரிவு அதிகரித்திருந்தது. அதை இலங்கை தேவாலயங்கள் மீதான பயங்கரவாத தாக்குதல் மீளவும் வாங்கிக் கொண்டது.
ஏ.எல். நௌபீர்
BA, PG Dip in Applied Sociology, Dip in Youth Deve. And Dip in English. (Mphil Reading)