(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
அரங்காடிகளின் வருகை, அர்த்தம் பொதிந்தது. வருகையின் காலமும் களமும் அவர்களதும் அரங்கினதும் முக்கியத்தை உணர்த்த வல்லன. அரங்கில் நுழையும் எல்லோருமே அரங்காடிகள்தான் எனினும் சிலரின் வரவு பிறரினதை விட முக்கியமானது. மத்திய கிழக்கு நிலைமைகளை அமைதியாக அவதானித்திருந்த சீனா, இப்போது மத்திய கிழக்கு அலுவல்களிற் செல்வாக்குடைய சக்தியாகியிருப்பது தற்செயலல்ல. எனினும், ஏலவே சிக்கலடைந்த சிரிய நெருக்கடியிற் சீனாவின் ஆர்வம் வியப்பூட்டியுள்ளது. சீனாவைப் பொறுத்த வரை, ஒரு வணிகக் கூட்டாளியாகச் சிரியாவின் முக்கியத்துவம் குறைவு. கடந்தாண்டின் இறுதி நாட்களில் சிரிய வெளியுறவு அமைச்சரின் சீன விஜயம் மிகப் பேசப்பட்டது. அதையடுத்த சிரிய எதிர்க் கட்சிக் கூட்டணியினரின் சீன விஜயம், சிரியா பற்றிச் சீனாவின் வெளிப்படையான அக்கறையை எடுத்துக் காட்டியது. இவ்விரு விஜயங்களும் சிரிய நெருக்கடிக்குத் தீர்வு தேடும் சீன முனைப்பைக் குறிகாட்டின.
அதைத் தொடர்ந்து, இவ்வாண்டு சீன ஜனாதிபதி மத்திய கிழக்குக்குப் பயணஞ் செய்தார். இப் பயணம் மத்திய கிழக்கின் அதி முக்கிய நாடுகளான ஈரான், சவூதி அரேபியா, எகிப்து ஆகியவற்றை ஒன்றிணைத்த பயணமாக அமைந்தது. ஈரான் – சவூதி அரேபிய முறுகல் வலுத்துள்ள நிலையில், இரு நாடுகட்கும் சீன அரசுத் தலைவரின் பயணம் மிகுந்த கவனம் பெற்றது. சீனா, இதுவரை பின்பற்றி வந்த அயலுறவுக் கொள்கையிலிருந்து விலகிய ஒரு கொள்கையை நோக்கி நகருகிறதா என்ற வினா எழுந்தது.
சீனாவின் அயலுறவுக் கொள்கை எப்போதும் ஒருசீராகவே இருந்துள்ளது. ஐந்து அம்சங்களின் அடிப்படையில் உருவான சீன அயலுறவுக் கொள்கை அவற்றால் வழிநடத்தப்படுகிறது. (1) நாடுகளின் இறைமைக்கும் பிரதேச ஒருமைப்பாட்டுக்கும் பரஸ்பர மதிப்பு, (2) பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை, (3) ஒரு நாடு மற்றதன் உள் அலுவல்களில் தலையிடாமை, (4) சமத்துவமும் பரஸ்பர நன்மையும் (5) சமாதானமான உடனிருப்பு.
இவ்வடிப்படையில், சீனாவின் தேசிய இறைமையை ஒரு நாடு எவ்வளவு தூரம் மதிக்கிறது என்பதன் அடிப்படையிலேயே, அந் நாட்டுடன் சீன அயலுறவு அமைந்து வந்துள்ளது. இங்கு கூற வேண்டிய கருத்து ஒன்று உண்டு: சீனா இதுவரை எந்தச் சுதந்திர நாட்டினதும் இறைமையை மதித்தே நடந்து வந்தது. எந்த நாட்டிலும் ‘ஆட்சி மாற்றத்தைச்’ சீனா பரிந்துரைத்ததில்லை. அதற்காகச் செயற்பட்டதுமில்லை. இதை அமெரிக்காவின் கடந்த அரை நூற்றாண்டு கால அயற்கொள்கையுடன் ஒப்பிடத் தகும்.
சோஷலிச சீனா கொலனிய எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டங்களை நிபந்தனையின்றி ஆதரித்தது. ஆயினும், தான் ஆதரித்த விடுதலைப் போராட்டம் வென்ற பின் யார் ஆட்சி அமைக்கவேண்டும் என எவரையும் வற்புறுத்தவில்லை. பங்ளாதேஷிலும் இலங்கையிலும் இந்திய நடத்தையுடன் இதை ஒப்பிடின் பாரிய வேறுபாடுகள் விளங்கும்.
இவை அனைத்தின் நடுவிலும் கவனிக்க முக்கியமானது ஏதெனின், இன்றுவரை வேறெந்த நாட்டின் மண்ணிலோ, கடற் பகுதியிலோ, சீனா தனது படைத்தளம் எதையும் நிறுவவில்லை என்பதுடன், வேறு நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்கும் போர்களிலும் இதுவரை சீனாவின் படைகள் அயல்நாடுகளில் நிலைகொண்டதில்லை. இது சீனாவைப் பிற வல்லரசுகளினின்றும் வேறுபடுத்துகிறது.
சீனா இதுவரை இராணுவ மிரட்டல் மூலம் தனது தேவைகளை நிறைவேற்றவில்லை. பிற நாடுகளை, முக்கியமாக வலிமை குறைந்த நாடுகளை வலிந்து மிரட்டுவதைச் சீனா எப்போதுமே நிராகரித்துள்ளது. இவை கவனிப்புக்குரியன.
சீனாவின் கடந்த இரண்டு தசாப்த பொருளாதார விருத்தி அதை எண்ணெய் உட்பட்ட மூல வளங்களைச் சார்ந்திருக்கச் செய்துள்ளது. சீனாவின் அந்நிய முதலீடுகளும் ஏற்றுமதிகளும் பெருகுகின்றன. அமெரிக்காவும் மேற்குலகும் புறக்கணித்த வறிய ஆபிரிக்க நாடுகளும் ஓரங்கட்ட முயலும் இலத்தின் அமெரிக்க நாடுகளும் சீனாவின் புதிய சந்தைகளாகவும் முதலீட்டுக் களங்களாகவும் மூலப்பொருள் ஏற்றுமதியாளர்களாகவும் அமைகின்றன. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வணிகத் தடை, கப்பற் போக்குவரத்துத் தடை என்ற, பேர்களிற் சீனக் கப்பல் மார்க்கங்கட்கு இடையூறு ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் அதிகரித்து வருகிறதே ஒழிய குறையவில்லை. இந் நிலையிற், சீனா செய்யக்கூடியதென்ன என்ற கேள்வி எழுகிறது.
இப் பின்னணியில், மத்திய கிழக்கிற் சீனாவின் புதிய நாட்டத்தை நோக்கலாம். இன்று மத்திய கிழக்கைச் சூழ்ந்துள்ள அமைதியின்மை, சீனாவின் பொருளாதார நலன்களுக்குப் பாதகமானது. குறிப்பாகச், சீனா முன்னெடுத்துள்ள பட்டுப் பாதைத் திட்டத்துக்கு மத்திய கிழக்கின் உறுதியின்மை கேடானது. 2013ம் ஆண்டு சீனா தொடக்கிய ‘பட்டுப்பாதைப் பொருளாதார வலயமும் 21ஆம் நூற்றாண்டுக்கான கடல்வழிப் பட்டுப்பாதையும்’ திட்டம், ஆசிய-ஆபிரிக்க-ஐரோப்பிய நாடுகளின் நெடுஞ்சாலைகள், புகையிரதப் பாதைகள், விமான நிலையங்கள் என்பவற்றை இணைத்தலும் துறைமுகங்களை அமைத்தலும் புதுப்பித்தலும் அதன் மூலம் கடல் வழி வணிக வினைத்திறனை மேம்படுத்தலும் எனும் நோக்கங்களை உடையது.
சீனாவின் சக்தித் தேவைகளுக்கான எண்ணெய், இயற்கைவாயு ஆகியவற்றை வழங்கும் முக்கிய நாடுகள் மத்திய கிழக்குக்குரியன. சீனா பட்டுப்பாதை உருவாக்கத்தின் மூலம் தடையற்ற, செலவுகுறைந்த வழிகளில் அவற்றை பெற முனைகிறது. மத்திய கிழக்கின் அமைதியின்மை இத் திட்டத்துக்குத் தடையாகிறது. எனவே, மத்திய கிழக்கு நிலைமைகளில் சீனாவின் கவனம் திரும்பியுள்ளது. சீன ஜனாதிபதியின் அண்மைய விஜயங்களை இதனோடு சேர்த்தே கருத வேண்டும்.
இவ் விஜயத்தின் போது ஈரானுடன் எட்டிய உடன்படிக்கைகள் முக்கியமானவை. சீனாவும் ஈரானும் 25 ஆண்டுகால மூலோபாய உடன்படிக்கை செய்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பிற நாடுகள் போலன்றி ஈரான் சுதந்திரமாக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகும். ஏனைய நாடுகள் அமெரிக்காவின் தேவைகட்கமையத் தமது எண்ணெய் வர்த்தகக் கொள்கைகளை அமைக்கின்றன.
தன்னுடனான வணிக உறவுகளுக்குப் புறம்பான விடயங்களை ஈரான் கருத்திற் கொள்வதில்லை. அத்துடன் அண்மையில் நீக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளுக்குப் பின், ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதிக்குச் சந்தைகளைத் தேடுகிறது. மறுபுறம், அமெரிக்கா, சீனாவுக்குச் சவாலான செயற்பாடுகளைத் தொடர்கிறது. சீனாவின் எண்ணெய் இறக்குமதி தடைப்படின் அது சீனப் பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே அமெரிக்கா கட்டுப்படுத்த இயலாத, தொடர்ச்சியாக எண்ணெய் விநியோகிக்கக்கூடிய நம்பகமானதொரு கூட்டாளி சீனாவுக்குத் தேவை. இங்கு இரு நாடுகளும் ஒரு பொதுப் புள்ளியை எட்டுகின்றன. இன்னொரு வகையில் மேற்குலகை நம்பாத அயலுறவுக் கொள்கைகளை உடைய இரு நாடுகளின் ஒன்றிணைவாகச் சீன-ஈரானியக் கூட்டணியைக் கூறலாம்.
சவூதி அரேபியாவுடனான சீன உறவு வேறு தேவைகளின் அடிப்படைகளில் உருவானது. சவூதி எண்ணெய் வாங்கும் நாடுகளில் சீனா முதன்மையானது. சவூதி அரேபியாவின் கூட்டாளியான அமெரிக்கா என்றாவது ஒருநாள் சவூதியைக் கைவிடுமாயின் சவூதிக்குப் பொருளாதார ரீதியில் உதவக்கூடிய நாடு சீனா. இவ்விரண்டு காரணங்களாலும் சவூதி அரேபியா சீனாவுடன் நல்லுறவு பேண விரும்புகிறது. சீனாவைப் பொறுத்தவரை, பிரதான எண்ணெய் ஏற்றுமதியாளராக சவூதி அரேபியா தேவையானது. அதற்கு மேலாக மத்திய கிழக்கின் முக்கியமான அரங்காடியாகவும் அமெரிக்காவின் அடியாளாகவும் இயங்கும் சவூதி அரேபியாவுடனான நல்லுறவு சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்துக்குப் பயனுள்ளது.
ஒரே நேரத்தில் ஈரானுடனும் சவூதி அரேபியாவுடனும் நல்லுறவு பேணுவது கடினமானது. ஆனாற் தன் பொருளாதார வலிமையாலும் இராஜதந்திர நகர்வுகளாலும் சீனா அதைச் இயலுமாக்கியுள்ளது. இந்தச் சிறப்பு நிலை, தவிர்க்கவியலாமல் சீனாவை மத்திய கிழக்கின் முக்கிய அரங்காடியாகத் தரமுயர்த்தியுள்ளது. அமெரிக்கா, மேற்குலகம், சவூதி அரேபியா ஆகியவற்றை ஒருபுறமும் ரஷ்யா, ஈரான், சிரியா, லெபனானின் ஹிஸ்புல்லா ஆகியவற்றை மறுபுறமும் கொண்ட இரு-மையக் கெடுபிடியிற் சிக்குண்ட மத்திய கிழக்கில் இரு தரப்பினருடனும் நல்லுறவு பேணும் ஒரு வலிய நாடாகச் சீனாவின் வகிபாகம் ஒரு புதிய கட்டத்தை நோக்கி சீனா நகரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
இவை அனைத்தும் உலக அரசியலிற் சீனாவின் தவிர்க்கவியலாத நிலையைக் குறிகாட்டுகின்றன. மத்திய கிழக்கிற் சீன ஈடுபாடு அரசியல் இலாபஞ் சார்ந்ததல்ல. சிரியாவில், அல் அசாத்தின் ஆட்சி வீழ்வதைச் சீனா விரும்பவில்லை என்பது வெளிப்படை. அதனாலேயே சிரிய நெருக்கடிக்கு அமைதியான தீர்வைத் தொடர்ந்து வலியுறுத்தும் அதே வேளை, சீனா, அல் அசாத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவையும் வழங்கி வந்துள்ளது.
சிரிய நெருக்கடி அமெரிக்க மேற்குலக நலன்கட்குச் சாதகமாக மாறுமாயின், ஈரான் நீங்கலான முழு மத்திய கிழக்கும் மேற்குலகச் சார்பாகும் என்பதைச் சீனா நன்கறியும். எனவே, சீனா அதை அனுமதியாது. அதேவேளை, சீனா முன்னெடுத்துள்ள பட்டுப்பாதைத் திட்டத்துக்குப் பாரிய சவாலாக மத்திய கிழக்குத் திகழ்வதால் சீனா விரும்பாவிட்டாலும் மத்திய கிழக்கு அலுவல்களில் அது இழுபடுவது தவிர்க்கவியலாதது.
மத்திய கிழக்குக்கான பட்டுப்பாதையின் முதலாவது நகர்வைச் சீனா கடந்தவாரம் தொடங்கியது. சீனாவின் வடமேல் மாகாணமான சின்ஜியாங்கிலுள்ள வர்த்தக நகரான யொ-ஹவோவிலிருந்து, ஈரானின் தலைநகரான தெஹரானுக்கான சரக்குப் புகையிரதம் முதன் முறையாகக் கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டது. சீனாவையும் மத்திய கிழக்கையும் புகையிரதப் பாதையால் இணைக்கின்ற முதலாவது முயற்சி இதுவாகும்.
இப் பயணமானது சீனாவின் யொ-ஹவோவில் தொடங்கி கசக்ஸ்தான், துர்க்மனிஸ்தான் ஆகிய நாடுகள் ஊடாக மேற்கு ஆசியாவைக் கடந்து, 14 நாட்களில் 10,400 கிலோமீற்றர் கடந்து, ஈரானின் தலைநகர் தெஹரானை அடையும். இதேவேளை சீன நகரான யொ-ஹவோ, ஏலவே, ஜேர்மனியின் டுயிஸ்பேர்க், ஸ்பெயினின் மட்ரிட் ஆகிய நகரங்களுடன் புகையிரத வழியாக இணைந்துள்ளது.
தரைவழியிலும் கடல் வழியிலும் 15 நாடுகளுடன் நேரடி எல்லைகளைக் கொண்ட நாடான ஈரான், சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்துக்கு மிக முக்கியமானது. பட்டுப்பாதைக்காக ஈரான் அடுத்த ஆறு ஆண்டுகட்கு ஆறு பில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இவை யாவும் மத்திய கிழக்கின் புதிய அரங்காடியின் வருகையைக் கட்டியங்கூறுகின்றன. ஏனைய வலிய நாடுகள் போற் குறுகிய நலன்களுடன் சீனாவின் வருகை நிகழவில்லை. அது நீண்டகால பரஸ்பர பொருளாதார, அபிவிருத்தித் திட்ட நலன்களைக் கொண்டது. முதலில் மூக்கை நுழைப்பது யார் என்பது முக்கியமல்ல. தீர்மானமான சக்தியாக யார் அமைகிறார்கள் என்பது தான் முக்கியமானது. பிந்தி வந்தாலும் புதிதாய் வருவது என்று இதையே அழைக்கிறார்கள் போலும்.