அதேவேளை 30 / 1 தீர்மானத்திற்கு அரசு வழங்கிய இணை அனுசரணையை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று இந்நாட்டினை நேசிக்கும் சக்திகள் அரசிற்கு வழங்கிய அழுத்தங்களை கணகில் எடுக்காது தொடர்ந்தும் அனுசரணை வழங்க முன்வந்திருப்பதானது இலங்கையின் உள்வீட்டு விவகாரங்களில், மேற்குலகுக்கு விரிக்கும் செங்கம்பளமாகவே பார்க்கப்படுகின்றது.
மறுபுறத்தில் இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விவகாரத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்று பொறிமுறை ஒன்றை வரைந்து எல்லைகளை போட்டுள்ள மனித உரிமைகள் ஆணையகமானது, புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்காக அவ்வியக்கத்தினை நீதியின் முன்நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டுள்ளதாக உணர முடிகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தில் சகல தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்பது யாவரும் ஏற்றுக்கொள்ளவேண்டிய கசப்பான உண்மையாகும். விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் ஆயுதம் தூக்கிய சகல அமைப்புக்களும் மனித நேயம் அற்றும் சட்டத்தை மதியாமலும் சக மனிதனின் உரிமைகளை மீறி காட்டு மிராண்டித்தனமாக செயற்பட்டார்கள்.
ஆனால் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என தங்களை தாங்களே பிரகடனப்படுத்திக்கொண்ட புலிகள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் எண்ணில் அடங்காதவை. இதன் காரணமாகவே அமெரிக்க ஐக்கிய ராச்சியம் புலிகள் அமைப்பை உலகிலுள்ள அதிபயங்கரமான காட்டுமிராண்டித்தனமான இயக்கம் என்று வரையறை செய்திருந்தது.
ஏகப்பிரதிநித்துவ மோகம் பிடித்தலைந்த புலிகள் அமைப்பு இலங்கையில் செயற்பட்ட சகல போராட்ட மற்றும் அரசியல் கட்சிகளையும் தடை செய்து அவர்களின் அரசியல் உரிமையை மாத்திரம் அல்ல வாழ்வுரிமையையே பறித்தது. இயக்ககங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொட்டு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் வரை கொத்து கொத்தாக கொன்றொழித்தது.
புலிகளின் பாசிஸப் கொள்கைளை ஏற்க மறுத்த மற்றும் அவற்றை விமர்சனம் செய்த சிவில் சமூகத்தைச் சேர்ந்த சகல வர்க்கத்தினரும் கொன்றொழிக்கப்பட்டனர்.
மக்களின் அடிப்படை சுதந்திரமான எழுத்து பேச்சு சுதந்திரம் புலிகளால் பறிக்கப்பட்டது. அவ்வமைப்பு ஒலி-ஒளி பரப்புகின்றவற்றையும் அவர்களது வெளியீடுகளையும் மாத்திரமே மக்கள் வாசிக்கவும் கேட்கவும் பார்க்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
சுதந்திமான நடமாட்டத்திற்கு தடைபோடப்பட்டது. புலிகள் பலவந்தமாக தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்த பிரதேசங்களுக்கு வெளியே மக்கள் செல்லவும், வெளியேயிருக்கும் மக்கள் உள்நுழையவும் பலத்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. அப்பிரதேசத்திலிருந்து ஒருவர் வெளியேறுவதனால், பெற்றோர் உறவினர்கள் பிணை நிற்கவேண்டிய சூழ்நிலை காணப்பட்டது. மேலும் அவ்வாறு வெளியேறுவோர் குறிக்கப்பட்ட காலத்தினுள் திரும்பாதவிடத்து பிணை நின்றவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர்.
சிறுவர்கள் படையில் பலவந்தமாக இணைக்கப்பட்டு யுத்தமுனையில் பலியிடப்பட்டார்கள். அவ்வாறு தமது பிள்ளைகள் பலியிடப்படுவதை எதிர்த்த பெற்றோர் கொல்லப்பட்டும் சித்திரவதைக்கும் உள்ளானார்கள்.
யுத்தம் ஆரம்பமானபோது தோல்வி நிச்சயம் என்பதை தெரிந்திருந்தும் புலிகள் மக்களை மனித கேடங்களாக பயன்படுத்தினார்கள். இலங்கை அரசினால் யுத்த சூனிய வலையம் பிரகடனம் செய்யப்பட்டது. அப்பிரதேசங்களினுள் மக்கள் பாதுகாப்பு தேடிச் சென்றபோது அப்பிரதேசங்களிலிருந்து படையினர் மீது ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். அதன் விளைவாக தாக்குதல் நடாத்தப்பட்ட இடத்திற்கு படையினர் திருப்பி தாக்கியபோது பொதுமக்கள் பலியாவது தவிர்க்க முடியாததாகியது. எனவே இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மக்கள் அழிவிற்கு புலிகளே காரண கர்த்தாக்களாக இருந்திருக்கின்றார்கள் என்பது வெளிப்படை உண்மை.
மேலும் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பியோட முற்பட்ட நூற்றுக்கணக்கான பொது மக்கள் புலிகளால் வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்த அப்பட்டமான மனித உரிமை மீறல்களிலிருந்து உயிர்தப்பிய மற்றும் கண்கண்ட சாட்சியங்கள் இன்றும் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் சாட்சியங்களை ஐ.நா ஏன் பதிவு செய்து கொள்ளவில்லை என்பதும் புலிகளின் கொடிய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐ.நா என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை.
புலிகள் கர்ப்பிணிப்பெண்களைக் கூட தற்கொலைகுண்டுதாரிகளாக உருமாற்றினார்கள்.
யுத்தத்தில் காயமடைந்து அவயங்களை இழந்து நடமாட முடியாதிருந்த புலிகளை மூளைச்சலவை செய்து கடலில் தற்கொலைப் படகுகளில் தற்கொலைதாரிகளாக பயன்படுத்தினார்கள்.
புலிகளியக்கத்திற்காக சண்டையிட்டு அங்கவீனர்களாகவிருந்த பலர் இறுதி நேரத்தில் புலிகளால் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர்.
பொது இடங்கள், மற்றும் பயணிகள் பஸ், ரயில்களில் குண்டுகளை வைத்து பொதுமக்களை தாக்கினார்கள்.
இந்நாட்டின் அரச தலைவர் ஒருவருக்கு விபூதி அணிவித்த இந்து சமய பூசகர் ஒருவரை சுட்டுக்கொன்றார்கள். இதன் ஊடாக புலிகள் மத சுதந்திரத்திற்கு இடையூறு விளைவித்தார்கள்.
இஸ்லாமிய மற்றும் பௌத்த வணக்கஸ்தலங்கள் மீது மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டு அங்கு வழிபாட்டில் ஈடுபட்டிருந்தவர்களை புலிகள் கொன்றொழித்தார்கள்.
பொதுமக்கள் யுத்த முடிவில் இராணுவத்தினரால் கைப்பற்றபட்ட பிரதேசங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தபோது, பொதுமக்களோடு பொதுமகள் போன்று உடையணிந்து சென்ற பெண்புலி ஒருத்தி உடம்பில் கட்டியிருந்த குண்டினை வெடிக்கவைத்ததில் உடன்சென்ற பல மக்கள் பலியாகினர்.
இவ்வாறு புலிகளின் மனித உரிமை மீறல்கள் பட்டியல் நீண்டு செல்லும். ஆனாலும் புலிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிக்காக இதுவரை எவரும் குரகொடுக்க முன்வரவில்லை. ஐ.நா இலங்கை அரசை பொறுப்புக்கூறலுக்கு நிர்பந்திக்கும் அதே பாணியில் புலிகள் தரப்பையும் நிர்பந்திக்காதவிடத்து அது பக்கசார்பாக நடந்து கொள்கின்றது என்பதை வெளிப்படையாக காட்டுகின்றது.