அதுவும், வாக்கு அரசியல் கோலொச்ச ஆரம்பித்த புள்ளியில், அவற்றைப் பல்வேறு தரப்புகளும், பல்வேறு வழிகளில் மக்களை நோக்கித் தள்ளுகின்றன.
மதம், மார்க்கம் சுதந்திரத்துக்கும், மதம், மார்க்கம் வெறிக்கும் இடையிலான வேறுபாடுகளை அறியாத சமூகமொன்று, எவ்வளவு உச்சியில் நின்று, நியாயம் பேசினாலும் அது, நியாயமாகக் கொள்ளப்படாது. அதுமாதிரித்தான், சாதிய வெறியும் பிரதேசவாத சிந்தனையும். ‘சமூக அரசியல்’ என்பது, மக்களுக்கான நியாயங்களைப் பேசுவதுதானே அன்றி, மதங்களின், சாதிகளின் வெறிகளைப் பேசுவதல்ல.
திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு உடைப்பும், அதற்கு முன்னரும் பின்னருமான முரண்பாடுகளை, யாழின் முன்னணி ஊடகங்கள் சில எவ்வாறு அறிக்கையிட்டிருக்கின்ற என்பதைப் பார்த்தாலே, அங்கு வெளிப்பட்டிருக்கின்ற வன்மத்தைப் புரிந்து கொள்ள முடியும். அந்த அறிக்கையிடல்கள், வன்மத்தைத் தூண்டி, அதிலிருந்து அறுவடைகளைப் பெறும் நோக்கிலானவை.
நீண்டதோர் ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னாலும், அதன் பெரும் விளைவுகளைத் தாங்கி நிற்கின்ற போதிலும், தமிழ்ச் சமூகம் சாதிய அடையாளங்களையோ, அதுசார்ந்த வெறியையோ விட்டுக்கொடுத்துவிடவில்லை.
அவை, நீறுபூத்த நெருப்பாக, அதுவும் எரிவதற்குண்டான வெம்மையோடுதான் இன்றுவரை இருந்து வருகின்றது. அதற்குத் தாயகம், புலம்பெயர் தேசங்கள் என்கிற வேறுபாடுகள் எல்லாம் கிடையாது. அப்படியான கட்டமொன்றையே, மதம், மார்க்கம் ஆகியவற்றின் வேறுபாடுகளுக்குள்ளும் விதைக்கும் திட்டத்தைச் சில தரப்புகள் திட்டமிட்டு முன்னெடுக்கின்றன.
தமிழ்ச் சூழலில், மதம், மார்க்கம் அடையாளங்களுக்குள் சாதிய அடையாளங்களும் சேர்ந்தே இருக்கின்றன. இது, சைவக் கோவில்களில் ஆரம்பித்து, கிறிஸ்தவ, கத்தோலிக்க ஆலயங்கள் வரையில் நீள்கின்றன.
மக்களிடம் அதன் வீச்சம் பெரிய அளவில் சென்று சேரவில்லை என்கிற போதிலும், இந்த மதம், மார்க்கம் நிறுவனங்களுக்குள் இருக்கும் சாதிய பாகுபாடுகள் என்பது, சொல்ல முடியாதவை. சாதிக்கொரு கோவில் இருப்பது மாதிரி, தேவாலயங்களும் சாதிய ரீதியாகப் பங்கிடப்பட்டிருக்கின்ற தன்மையைக் காணுகின்றோம்.
கோவில் தேரை, இன்னொரு சாதிக்காரன் இழுப்பது தகுதிக்குறைவு என்று நினைத்து, இராணுவத்தினரை வைத்து இழுக்கின்ற மனநிலைபோல, கிறிஸ்தவ, கத்தோலிக்க நிறுவனங்களுக்குள்ளும் சாதிய, பிரதேசவாத பாகுபாடுகள் அனைத்துப் படிநிலைகளிலும் காணப்படுகின்றன. இந்தப் படிநிலைகள், மக்களை நோக்கி வருகின்ற போதுதான், மக்களிடம் காணப்படும் நல்லிணக்க நிலை காணாமற்போகின்றன.
தமிழ்ச் சூழலில், திருக்கேதீஸ்வரத்துக்கும், மடுமாதாவுக்கும் உண்டான புனிதமான மதிப்பு என்பது, எந்தவொரு தருணத்திலும் இழக்கப்பட்டதில்லை. இன்றைக்கும் இரண்டு புனித தலங்களையும் தங்களின் பெரும் அடையாளமாகவே தமிழ்ச் சமூகம் பார்க்கின்றது.
ஆனால், நிர்வகிக்கின்ற தரப்புகளின் மூர்க்கமான அணுகுமுறை சார்ந்துதான் பிரச்சினைகள் மேலெழுகின்றன. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, குறுகிய அரசியல் செய்ய வேண்டும் என்கிற கடும்போக்கு மதம், மார்க்கம், தேர்தல் அரசியல் சக்திகள், சகதிகளை நோக்கி மக்களைத் தள்ளுகின்றன. தற்போதும் பெருமளவில் நிகழ்ந்திருப்பது அதுதான்.
திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு பிரச்சினை என்பது, இரு மத நிறுவனங்களுக்கு இடையிலானது என்கிற கட்டத்தைத் தாண்டி, நீதிமன்றங்களை நாடிவிட்டது. ஓர் இணக்கமான சூழலில் கையாளப்பட வேண்டிய பிரச்சினை, அதன் அடுத்த கட்டங்களை அடைந்துவிட்ட பின்னர், அங்கு மக்களை அழைத்து வருவதும், ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்வதும் இரு மத நிறுவனங்களுக்கும் அழகல்ல.
ஏனெனில், அந்த மத நிறுவனங்களுக்கு அவை, தன்முனைப்புப் போட்டியாக இருக்கலாம். ஆனால், அது, மதவாத சக்திகளுக்கான பெரும் களம். அப்படியான களமொன்று, தமிழ்ச் சூழலில் விரிவது என்பது, எந்தவொரு நன்மையையும் எவருக்கும் வழங்கிவிடாது. தமிழ் மக்களின் முன்னால், இன்றைக்கு இருக்கின்ற பிரச்சினை என்பது, நுழைவு வளைவொன்றை நடுவதோ, புடுங்குவதோ சார்ந்தது அல்ல. அவற்றை மீறிய ஆக்கிரமிப்புகளுக்கு எதிரானது. அந்தக் கட்டங்களை மறக்கடிக்கும் தந்திரங்களின் நின்று, சேற்றை ஒருவர் மீது ஒருவர் வாரியிறைத்து, உரையாட முடியாது. உண்மையில் அதற்கான நேரமும் இதுவல்ல.
மதம், மார்க்கம், பிரதேசவாதம் போன்ற முரண்பாடுகள் எழும்போதெல்லாம், அரசியல்வாதிகளில் அநேகர் ஒழிந்து கொள்கிறார்கள். அந்த முரண்பாடுகள் சார்ந்து நியாயம் பேசுவதால் அல்லது பிரச்சினைகளை முடித்து வைக்க முன்வருவதால், தேர்தல் கால இழப்பு, தமக்கு நிகழ்ந்துவிடும் என்று கருகின்றார்கள்.
திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு பிரச்சினையில், அரசியல் கட்சிகள் தலையீடு செய்ய வேண்டும் என்றில்லை. ஆனால், அந்தப் பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளின், உண்மையான வகிபாகம் என்ன என்பது சார்ந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு உருவாகின்றது.
அந்தக் கேள்விகளுக்கு நியாயமான பதில்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த மக்கள் பிரதிநிதிகள் மீதும் அவர்களின் திட்டங்கள் மீதும் மக்கள் சந்தேகம் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது. அந்தச் சந்தேகங்களின் அளவு, மதம், மார்க்கம், சாதி, பிரதேசவாதம் போன்ற அடையாளங்கள் சார்ந்தும் நோக்கப்படும்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில், குறிப்பாக ஆயுதப் போராட்டம் கோலொச்சிய முப்பது ஆண்டுகளில் மதம், சாதியம், பிரதேச வேறுபாடுகள் இன்றி, அனைவரும் அர்ப்பணிப்பான கட்டங்களை ஆற்றியிருக்கிறார்கள்.
கடும்போக்கு மதம், மார்க்கம் நிறுவனங்களோ, சாதிய வாதமோ கூட, ஆயுதப் போராட்டத்தின் முன்னால் வாலைச் சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டிய கட்டம் இருந்தது. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் பின்னரான காலம் என்பது, பிரதேசங்களைப் பிரித்துக் கொண்டு, ‘ஜமீந்தார்தனம்’ செய்கின்ற நிலையை ஏற்படுத்திவிட்டது.
தனக்கு வாக்களித்த மக்களை நோக்கியே, தரங்கெட்ட வார்த்தையை மக்கள் பிரதிநிதி சொல்லுகின்ற ‘தடித்தனத்தை’ நோக்கித் தமிழ்ச் சமூகம் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆயுதப் போராட்டத்தின் அர்ப்பணிப்புக்கு முன்னால், மதவாதம், சாதியவாதம், பிரதேசவாதம் போன்ற தடித்தனங்கள் எடுபடாமல் போனாலும், அவற்றைப் பற்றிய முறையான உரையாடல்களின் வழி, அவற்றைக் கடக்கவில்லை என்கிற குற்றச்சாட்டும் நீடித்தே வருகின்றது. பல்லாண்டு காலமாக ஊறிய பிற்போக்குச் சிந்தனைகளை, ஆயுதப் போராட்ட இயக்கமொன்று சில காலப்பகுதிக்குள் மாத்திரம் சரி செய்திருக்க முடியாதுதான். ஆனால், அது சார்ந்த உரையாடல்களை, மக்கள் மத்தியில் இன்னும் அதிகமாகவே முன்னெடுத்திருக்க முடியும்.
அதன்மூலம் அதன் அடுத்த கட்டங்களை எட்டியிருக்கலாம். ஏனெனில், ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னரான இன்றைய காலம் என்பது, அனைத்து வகையிலும் மதம், சாதியம், பிரதேச வாதம் கோலோச்சும் நிறுவனங்களின் கைகளிலேயே சென்று சேர்ந்திருக்கின்றன.
அதற்கு, இங்குள்ள எந்தவோர் அரசியல் கட்சியோ, சிவில் சமூக அமைப்புகளோ, பேரவைகளோ விதிவிலக்கல்ல.
மேம்போக்கான உரையாடல்களின் வழி, ‘நாம் எல்லோரும், ஒரு தாய் மக்கள்’ என்கிற எம்.ஜி.ஆர் வழி பசப்பு மொழியால், எந்தவொரு முன்னேற்றத்தையும் கண்டுவிட முடியாது. ஏனெனில், பசப்பு நிலைக்கு அப்பாலான கட்டத்தை அடையும் சூழலொன்றை நோக்கி, நாம் நகர்ந்தாக வேண்டும்.
இல்லையென்றால், சிறு முரண்பாடுகள் எழும்போதெல்லால், அவற்றில் எண்ணெய் ஊற்றிவிட்டுக் குளிர்காய பல்வேறு தரப்புகள் இங்கே ஓநாய்களாகக் காத்திருக்கின்றன. கடந்த சில நாள்களாக, திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு வளைவு உடைப்பை முன்வைத்து, சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளில், பெரும்பாலானவை நியாயம் கோரல்களுக்கு அப்பால் சென்று, மற்றவர்களைச் சீண்டும் தன்மையைக் கொண்டவையாக இருந்தன.
இவ்வாறான கட்டத்தை அடைந்திருப்பது குறித்து, வெட்கமும் வேதனையும்பட வேண்டுமே அன்றி, வெற்றி வீராப்புக் கோசமெல்லாம் போட வேண்டியதில்லை. இந்தச் சிறிய முரண்பாடுகளை, அதன் நியாயப்பாடுகள் சார்ந்து அணுகிப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இல்லையென்றால், எம்முடைய உண்மையான, பிரதான பிரச்சினைகளை மறந்துவிட்டு, அலைக்கழிய வேண்டியிருக்கும். அதனையே, எதிரிகள் எதிர்பார்க்கிறார்கள்.