உறுதிமிக்க மனம்தான் மனிதனின் உண்மைப் பலம். யானையின் பலம் தும்பிக்கையிலே, மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்று, அடுக்கு வசனமாய்ப் பலர் மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். பேசுவது சுலபம், செயல்படுத்துவதுதான் கடினம். ஆனாலும், மனம் மட்டும் உறுதியாகிவிட்டால், நாம் நினைத்ததைச் சாதிக்கலாம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. மனதை ‘அகம்’ என்றும் உடம்பைப் ‘புறம்’ என்றும், நம் இலக்கியங்கள் பேசுகின்றன. அத்திவாரத்தின் பலம் தான் கட்டிடத்தின் பலம். அகம்தான் புறத்தின் வலிமையை உறுதி செய்கிறது. அதனாற்றான், “உள்ளத்தனைய உயர்வு” என்கிறார் வள்ளுவர். இன்று பலரும் உடம்பைப் பற்றிக் கவலைப் படுகின்றனரே தவிர, உள்ளத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை ஆண்கள் உடலை உறுதிசெய்ய நினைந்து, ‘ஜிம்’களில் குவிகின்றனர்.
பெண்களில் பலர் உடம்பை அழகுபடுத்தக் கருதி, ‘பியூட்டி பாலரே’ கதியெனக் கிடக்கின்றனர். உள்ளத்தில், பலமும் அழகும் வராத பட்சத்தில், உடலில் அவை நிரந்தரமாய் வர வாய்ப்பேயில்லை! எனும் உண்மைபாவம் அவர்களுக்குத் தெரிவதேயில்லை. அத்திவாரத்தைப் பலப்படுத்தாமல், கட்டிடத்தைப் பலப்படுத்த நினைக்கும், அவர்களின் அறியாமையை யாரிடம் சொல்லி அழ? குட்டி போட்டிருக்கையில் பூனை நாயையும் மிரட்டுகிறது. குஞ்சு பொரித்திருக்கையில் கோழி பருந்தையும் துரத்துகிறது. அன்பின் மிகுதியால் உளத்தில் பலம் வர, அச்சிறு ஜீவன்கள், தம்மைவிடப் பலம் பொருந்தியவற்றை, எதிர்த்து வெல்வதைக் கண்கூடாய்க் கண்டிருக்கிறோம். அதிலிருந்து பலம் உடலைப் பொறுத்த விடயம் அல்ல, உள்ளத்தைப் பொறுத்த விடயம் என்பதை, நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அதேபோற்றான் உடல் அழகும். உண்ணாவிரதத்தால் வாடி இருந்த காந்தியும், சிலுவையில் தொங்கும் இயேசுவும், தவத்தால் மெலிந்த பரமஹம்சரும், கூனித்துவண்ட அன்னை தெரேசாவும், அழகாய்த் தெரிவதன் காரணம் என்ன?
சந்தேகமே இல்லை அவர்களது உள்ளத்தினழகே, உடல் அழகாய் வெளிப்படுகிறது. உள்ளத்தில் வீரத்தையும், அழகையும் ஏற்றக்கூடிய, பயிற்சி நிலையங்களைத்தான் இனி நாம் ஆரம்பிக்க வேண்டும். இலக்கியங்களும் சமயங்களும் அந்தப் பயிற்சியைத்தான் எமக்கு ஊட்டுகின்றன. ஆனால், அவற்றை இன்றைய தலைமுறை அதிகம் அணுகுவதில்லை. கல்வி நிலையங்களிலும் அவற்றிற்கு இரண்டாம் இடம்தான். அதனாற்தான், இன்றைய தலைமுறை, உண்மை அழகும் வீரமுமிழந்து, சுயமற்று ‘குருக்கன்’ அடித்த வாழைகளாய், ஈர்ப்பின்றிக் கிடக்கின்றது. அதனால், இந்த வார அதிர்வில், மனதின் பலம் பற்றிய சில விடயங்களை, சொல்லலாம் என நினைக்கிறேன். உள்ளம் உடலைக் கட்டுப்படுத்துமா? உங்களில் சிலருக்கு சந்தேகம் வரலாம். கட்டுப்படுத்தும் என்பதற்கான, நானறிந்த ஓர் உதாரணத்தைச் சொல்லுகிறேன். இளமைக் காலத்தில் நண்பர்கள் என்னை, ‘சைக்கிளில்’ ‘டபிள்’ ஏற்றிச் செல்வார்கள். ‘என்னது உன்னையா?’ என்று ஆச்சரியப்படாதீர்கள். இன்று போல் அன்று எனது உடம்பு இவ்வளவு பருத்திருக்கவில்லை. ஆனால் அப்போதும் நான் ஓரளவு குண்டாய்த்தான் இருப்பேன்.
அதைவிடுவோம் சொல்லவந்த விடயம் அதுவல்ல! என்னை ‘சைக்கிளில்’ ‘டபிள்’ ஏற்றிச் செல்லும் நண்பன். சில வேளைகளில் பேச்சுச் சுவாரஸ்யத்தில், வீதியில் இருக்கும் குழிகளைக் கவனிக்க மாட்டான். அதனால் குழியில் ‘சைக்கிள்’ விழப்போகும், அப்படி விழுந்தால் என் பாரத்தினால், நிச்சயம் ‘றிம் ரியூப்’பில் இடிக்கும் என்பது தெரியும். ‘றிம் ரியூப்’பில் இடித்தால் காற்றுப் போய்விடும்,
அவ் அச்சத்தால், நான் மனதால் உடம்பை “எக்கித்தம்” பிடிப்பேன். உடனே என் உடல் பாரம் குறையும். அப்போது குழியில் ‘சைக்கிள்’ விழுந்தாழும், ‘றிம்’ இடிக்காமல் இருக்கும் அதிசயத்தை, பல தரம் கவனித்திருக்கிறேன். உடம்பு முழுவதும் சைக்கிளில் இருக்கையில், அதன் முழுப்பாரமும் சைக்கிளில்தான் பொறுக்க வேண்டும். ஆனால், நான் மனதால் “எக்கித் தம்பிடித்தால்”,