திட்டமிட்டு வாழும் வாழ்க்கையே தெவிட்டாத இன்பத்தைத் தருவதுடன் திட்டமிடாத வாழ்க்கை, முன்னேற்றங்களுக்குத் தடையாகவுமே இருக்கும். அதற்காகத்தான் முன்னோர்கள், பல்வேறான பழமொழிகளை வாழ்க்கை தொடர்பில் கூறியிருக்கின்றனர். அவையெல்லாம் வழக்கொழிந்து விட்டதால், விழிபிதுங்கி நிற்போர், வயிற்றையும் சுருக்கி, கழுத்தையும் இறுக்கிக் கொள்கின்றனர்.
தமக்கான வருமானத்தை அப்படியே செலவு செய்துவிடுபவர்கள், மாத இறுதிவரையிலும் தாக்குப்பிடிக்காமல், ‘அன்றாடம் காய்ச்சி’ ஆகிவிடுகின்றனர். இன்னும் சிலர், ‘மீற்றர்’ வட்டிக்குப் பணத்தை வாங்கி, அசலையும் கட்டமுடியாது, விழிபிதுங்கி நிற்பர். பலருக்கு எதிர்காலம் குறித்த சிந்தனையே இருக்காது.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர், வடக்கு, கிழக்குக்கு படையெடுத்த நுண்நிதி இலக்கு கடன்வழங்கும் நிறுவனங்கள், நாளாந்தம், கிழமை, மாதாந்தம் வட்டிக்கென கடன்களை வழங்கின. வங்கிகளை விடவும், இலகுவான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு கடன்களை வழங்கின. அதனால், பலரும் அங்கு படையெடுத்தனர்.
வாங்கிய பணத்துக்கு வட்டி அதிகம் என்பதால், அவற்றை மீளத்திரும்பிக் கொடுக்கமுடியாமல், பல குடும்பங்களின், தலைவன், குடும்பத் தலைவி இன்றேல் குடும்பமே, உயிர்களை மாய்த்துக் கொண்ட கசப்பான சம்பவங்கள், நம்மைக் கடந்து செல்லாமல் இல்லை.
அவ்வாறான நிறுவனங்களில் பல மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்படாதவை என இறுதியில் கண்டறியப்பட்டன. அவ்வாறான நிறுவனங்களே மீற்றருக்கு மேல் வட்டியில் ஓடியிருக்கின்றன.
பெருந்தோட்டங்களைப் பொறுத்தவரையிலும் அடுத்தவர் வாழ்வதைப்போல வாழ முயற்சிக்கும் பலரும் கடன்நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்றனர். நாளாந்த வருமானத்தைத் திரட்டிக்கொள்ள முடியாமல் தடுமாறும் இன்னும் சிலர், மாதக் கட்டுப் பணத்தைச் செலுத்தக்கூட முடியாத தவணைக் கட்டணத்துக்கு வாகனங்களைக் கடனுக்குக் கொள்வனவு செய்துவிடுகின்றனர். இதுவெல்லாம் பெருமைப்படுவதற்காய் செய்யப்போய், முடிவில், அதலபாதாளத்துக்குள் விழுந்த கதைதான்.
இவ்வாறிருக்கையில், கடன்பிடியில் சிக்கியிருக்கும் குறைந்த வருமானம் கொண்ட கிராமிய மக்களை, அந்தக் கடன்பொறியிலிருந்து விடுவிக்க, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் குறைந்த வட்டிவீதத்தில் நுண்நிதி இலகு கடனுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இது நல்லதொரு முயற்சியாயினும், கடனில் இருப்பவர்களையும் அதற்குள் இழுத்தெடுத்துவிடக் கூடாது.
அதேபோல, கடன்பெற்றிருக்கும் ஒருவர், அக்கடனைத் திரும்பிச் செலுத்தமுடியுமா என்பது தொடர்பில் நன்கு ஆராய்ந்து, கடன்வழங்கும் வழிமுறைகளைப் பின்பற்றினால், பல குடும்பங்களைக் காப்பாற்ற முடியும்.
வருமானம் அதிகமாகக் கிடைப்போர், கவலையின்றிச் செலவு செய்யலாம். அதைத்தான், ‘மயிருள்ள சீமாட்டி அவிழ்த்தும் விடலாம்; அள்ளியும் முடிஞ்சுக்கலாம்’ என்ற பழமொழி உணர்த்துகின்றது. எனினும், கடன் வாங்குவதற்குச் செல்லாமல், சொந்தக் காலில் நிற்பதற்குப் பழகுவதே சிறந்தது.