இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற குல்பூஷண் ஜாதவ் என்ற இந்தியருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குல்பூஷணை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விசாரித்தது, தண்டனை வழங்கியது என்று எல்லோமே பரம ரகசியமாக வைக்கப்பட்டது. ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகளை சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும், அத்துடன் அவருக்கு மேல்முறையீடு செய்யும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். மேலும், ஜாதவ் தொடர்பான புலன் விசாரணையிலும் வழக்கு விசாரணையிலும் அப்பட்டமாக வெளியே தெரியும் வகையில் பல குறைபாடுகள் இருக்கின்றன. 2016 மார்ச்சில் அவரைக் கைது செய்த உடனேயே அவருடைய ஒப்புதல் வாக்குமூலம் என்ற அறிவுப்புடன் பத்திரிகை நிருபர்கள் சந்திப்பில் ஒலிபரப்பப்பட்ட தகவல்கள் முரண்பட்டி ருந்தன. அந்த ஒப்புதல் வாக்குமூலம் சட்டப்படி நீதிமன்றத் தால் ஏற்கப்படக் கூடியது என்று ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும், அதை நிரூபிக்கும் வகையில் எந்தவொரு சாட்சியத்தையும் பாகிஸ்தானால் முன்வைக்க முடியவில்லை.
பலூசிஸ்தானில் கைது செய்யப்பட்ட ஜாதவ், சீனா – பாகிஸ்தான் பொருளாதாரத் தொழில் பிரதேசத்துக்கு எதிராகச் சதிசெய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை. குல்பூஷணுடன் இந்தியத் தூதரகம் பேச அனுமதிக்க வேண்டும் என்று இந்தியத் தரப்பிலிருந்து 13 முறை வேண்டு கோள் விடப்பட்டது. ஆனால், இந்த விசாரணையில் இந்தியா ஒத்துழைப்பதாக இருந்தால் மட்டுமே பரிசீலிப்பதாக பாகிஸ்தான் கூறியது.
இதுநாள் வரை பாகிஸ்தான் அரசிடம் வேண்டுகோள் விடுக்கும் பயனற்ற நடவடிக்கையை மட்டுமே இந்திய அரசு எடுத்துவந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஈரானில் தங்கியிருந்தார் ஜாதவ் என்று தெரிகிறது. எனவே, முதலில் ஈரானுடன் இது தொடர்பாக இந்தியா பேச வேண்டும். பாகிஸ்தானுக்குள் அவர் எப்படிக் கொண்டுவரப்பட்டார் என்று விசாரிக்க வேண்டும். ஜாதவ் மீதான குற்றச்சாட்டுகளை சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும், அத்துடன் அவருக்கு மேல்முறையீடு செய்யும் உரிமையும் வழங்கப்பட வேண்டும். நேபாளத்திலிருந்த பாகிஸ்தான் தரைப்படை அதிகாரி ஒருவர் காணாமல் போய்விட்டார் என்ற சமீபத்திய செய்தி வந்தவுடனேயே குல்பூஷணை உளவாளி என்று முடிவுகட்டி, மரண தண்டனை விதித்திருப்பது கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் பேசும் நடைமுறையைக் கைவிட்டதால், இதைப் போன்ற பிரச்சினை களைச் சுமுகமாகப் பேசித் தீர்க்கும் வாய்ப்பு குறைந்துவருகிறது. 2016 ஜனவரியில் பதான்கோட் தாக்குதலுக்குப் பிறகு, இருதரப்பு பேச்சுகளை நடத்துவதில்லை என்று இந்தியா முடிவெடுத்தது. இந்தியர் ஒருவரின் உயிர் தூக்குக் கயிறில் ஊசலாடிக் கொண்டிருக்கும்போதும் இப்படிப் பேசாமலிருக்க முடியாது. இந்நிலையில், மூன்று முனைகளில் இந்தியா செயலாற்றியாக வேண்டும். குல்பூஷணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்று முதலில் வற்புறுத்த வேண்டும். இந்த விசாரணை நடைமுறையில் உள்ள குறைகளை சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூற வேண்டும். ஜாதவ் பத்திரமாக நாடு திரும்பப் பேச்சுவார்த்தை நிபுணர்களை அனுப்பிவைக்க வேண்டும்.
(The Hindu)