(என்.கே. அஷோக்பரன்)
ராஜபக்ஷ எனும் ‘கோலியாத்’தை, காலம், சாபம், அவர்கள் செய்த பாவம் என்று எல்லாம் சேர்ந்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது பொருத்தமற்றதல்ல! இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்ஷர்கள் 2019-2020 தேர்தல்களில் நிரூபித்து, இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ராஜபக்ஷர்கள், தமது 2015ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகு, திட்டமிட்டு, இனவாத உரத்தைக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி, இன-மத தேசியவாதத்தை முன்னிறுத்திப் பெற்ற பெரும் தேர்தல் வெற்றி, இன்று தவிடுபொடியாகிய நிலையில் நிற்கிறது.