நீண்டதோர் இழுபறிக்குப் பின்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துக்குத் தீர்வு கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால், அது எவ்வாறு, பெற்றுக்கொடுக்கப்பட்டு இருக்கிறது, அதனால் கிடைக்கும் நன்மை, தீமைகள் என்ன? என்பதற்கு எல்லாம் எதிர்காலமே பதில் சொல்லும்.
சம்பள நிர்ணய சபையின் ஊடாகத் தீர்வொன்று வழங்கப்பட்டு இருப்பதால், ‘சம்பள உயர்வு கூட்டொப்பந்தம்’ காலவதியாகிவிடும். எதிர்காலங்களில் சம்பளத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டுமாயின், சம்பள நிர்ணய சபையிடமே மண்டியிட வேண்டும். அதெல்லாம் ஆட்சியாளர்களின் கைகளிலேயே இருக்கும்.
பெருந்தோட்டங்களை, கம்பனிகள் நிர்வகிக்கின்றன என்பதால், அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்தப்பட வேண்டும். இல்லையேல், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன்புரி விடயங்கள் கேள்விக்கு உள்ளாகிவிடும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள விவகாரத்தில், தொழிற்சங்கங்கள் வெற்றிபெற்றாலும், அதைப் பெற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகளில் தொழிற்சங்கங்கள் தோல்வியடைந்துள்ளன எனத் தெரிவித்துள்ள, கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், “சத்திர சிகிச்சை வெற்றி; ஆனால் நோயாளி இறந்துவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையின் போது, 14 நாள்கள் மட்மே வேலை வழங்குவதாக கம்பனிகளின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாயின், ஏனைய நாள்களுக்கான வேலை கேள்விக்குறியாகும். அதேபோல, மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லாமற்போகும்.
ஏனெனில், தேயிலை மலையொன்றில், நாளொன்றுக்கான சம்பளத்தில் தொழிலாளர் ஒருவர் பறிக்கவேண்டிய கொழுந்தின் நிறையை, தோட்ட நிர்வாகமே தீர்மானிக்கும். நாள் சம்பளத்துக்கு மேலே, கொழுந்தைப் பறித்துவிடக்கூடாது என்பதற்காக, கொழுந்தின் நிறையை அதிகரிக்கலாம். ஆகையால், அடுத்தடுத்த நகர்வுகளின் போது, தொழிலாளர்களின் நலன்சார் விடயங்களிலும் தொழிற்சங்கங்கள் அதீத கவனத்தைச் செலுத்தவே வேண்டும்.
1,000 ரூபாய் வெற்றியாயினும், எதிர்காலங்களில் ஏற்படவிருக்கும் நலன்சார் பிரச்சினைகள் தொடர்பில், தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடத்தில் ஒரு தெளிவு இல்லாமல் இருப்பதாகவே, பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால், தேயிலைப் பூக்கள் கருகுவது மட்டுமன்றி, அத்தொழிலையே நம்பியிருக்கும் பலரும் பல்வேறான நெருங்குவாரங்களை எதிர்காலத்தில் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
சம்பளத்தில் மட்டுமன்றி, நலன்புரிசார் விடயங்களிலும் கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், அதை, அவ்வாறே அமுல்படுத்தக்கூடிய விதத்திலும் இறுக்கமான கட்டமைப்பை ஏற்படுத்துவது, தொழிற்சங்கங்களின் கைகளிலேயே தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நாமும் நினைவூட்டுகின்றோம்.