பொருளாதாரத்தில் சமூக ஒழுங்கில் பின்னிலைப்பட்ட மக்கள் தமது உரிமைகளை நோக்கி குரல் எழுப்பும் மக்களாக… அவர்களைப் போல் உழைக்கும் மக்களின் குரலாகவே எப்போது செயற்பட்டாக வேண்டிய இயல்பு நிலையே அவர்களிடம் இந்த இடதுசாரித்துவம் சமத்துவ சிந்தனை அவர்களை அறியாமலே உள்ளே புகுந்து விடுவதுண்டு.
அவர்கள் கல்வி அறிவை பெறும் போது அது ஒரு சித்தாந்தமாக அவர்களால உணரப்பட்டு அமைப்பாகி போராடுவதற்குரிய மாபெரும் சக்தியாக அது உருவெடுக்கும். அப்படியான ஒரு பின்புலத்தில் இருந்து உருவானவர்தான் தோழர் லெனின் மதிவானம்
சோவியத்தின் உடைவும் வீழ்ச்சியும்….? சீனாவின் பொருளாதார வல்லரசாகும் கனவும் 1990 களின் பின்னராக காலத்தில் உலகம் முழுவதும் இடதுசாரிக் கருத்தியலின் சமூகமாக அமைப்பாக எழுந்துவருதல் மத்திய தென் அமெரிக்க கண்டத்தை தாண்டி அதிகளவில் வலுப் பெற்றிருக்கவில்லை.
வியட்நாம் தனக்கான பாதையில் பயணத்தை மேற்கொள்கின்றது. கியூபா தனக்கான உறுதிப்பாட்டுடன் இடதுசாரி பாதையில் பலரின் நம்பிக்கையைப் பெற்று பயணப்படுகின்றது.
இந்நிலையில் முது(மை)ம்பெரும் இடசாரி என்று அழைக்கப்படும் பல இடதுசாரிகளையே நாம் பல நாடுகளில் காணக் கூடியதாக இருந்தது இள இரத்தங்கள் பலவும் இந்த இடதுசாரி கருத்தியல் பற்றிய அறிவுகள் பெற்றிருந்தவர்கள் கூட அமைப்பாக கட்சியாக ஒரணியில் திரண்டு மாபெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முயலுவதில்லை.
இதனையும் மீறி இடதுசாரிக் கட்சிகளாக தம்மை பிரகடனப்படுத்திச் செயற்படுபவர்கள் வாக்கு அரசியலுக்குள் தம்மை சமரசம் செய்து கொண்டதே அதிகம்.
இதனை நாம் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் கம்யூனிஸ்ட்களில் தேர்தல் தோல்விகள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
ஒரு காலத்தில் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் அல்லது கேள்விக்குள்ளாக்கும் பலம் மிக்க சக்திகளாக விளங்கிய இடதுசாரிகளின் நிலை இவ்வாறுதான் தற்போது இருக்கின்றது.
கருத்தியல் ரீதியில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு கட்சி என்ற அளவில் ஆளணியில் குறைவாக இருந்தாலும் இவர்கள் பலமாக சரியாக இருக்கின்றார்கள் என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாமே ஒழிய அதற்கு மேல் ஆட்சியில் மாற்றங்களை கொண்டுவரும் அளவிற்கு தேர்தல் அரசியலில் இவர்களால் ஜொலிக்க முடியவில்லை.
உலகமயமாக்கல் காப்ரேட் நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதை எதிர்த்து குரல் கொடுக்கும் போதெல்லாம் ‘வேலை வாய்ப்பை உருவாக்குகின்றார்கள்….. அவர்கள் இல்லாவிட்டால் வேலை வாய்ப்பு ஏற்படாது பொருளாதாரம் வளராது….’ என்று சொல்லியே மூலதனத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் திரட்டி தனியுடமையும் ஆக்கிவிட்டனர் முதலாளிகள்.
இதற்கு எதிராக வலுவாக குரல் கொடுத்து போராடும் தொழிற்சங்க அமைப்புகளையும் பலவீனப்படுத்தியும்விட்டனர். தொழிற் சங்கங்களை அதிகம் இயக்கிய கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்களையும் பலவீனப்படுத்தி விட்டனர்.
இந்நிலையில்தான் இளம் கம்யூனிஸ்ட் சிநத்தனையாளராக செயற்பாட்டாளராக அதுவும் கற்கைத் துறையில் இருந்து புத்தி ஜீவிகள் மத்தியில் உருவாகி செயற்பட்டுக் கொண்டுடிருந்த இளம் இடதுசாரியை நாம் இழந்து நிற்கின்றோம். அவ்வாறுதான் தோழர் லெனினி இழப்பை பார்க்க முடிகின்றது.
இது இளம் கம்யூனிஸ்ட்களில் எழுதலை முன்தள்ளுவதில் ஒரு கல்லை தகர்த்திருக்கின்றது அதுவும் நம்ம மலையகத்தில்.
அந்த வகையில் சிறுக சிறுக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் லெனின் மதிவானம் மரணம் ஏற்பட்டிருப்பது முழு இலங்கையிற்கும் அவரின் அதிகம் கவனம் பெற்ற மலையகத்திற்கும் பேரிழப்பாகும். இவ்வாறுதான் என்னால் உணரப்படுகின்றது.
நேரடி அறிமுக வாய்ப்புகள் அதிகம் எற்பட்டிருக்காவிட்டாலும் என் சக தோழர்களின் அவருடனான தொடர்பு இலக்கிய கலந்துரையாடல்கள் எமக்கு அவரின் மேல் மிகுந்த நம்பிக்கையையும் மதிப்பையும் ஏற்படுத்தியிருந்தன.
எழுத்தாளர், கல்வியாளர், விமர்சகர் என்று பலராலும் அறியப்பட்ட காசல்ரீயை பிறப்பிடமாக கொண்ட அவர், ஆசிரியராக தொழில் தொடங்கிய அவர் வெளிவாரியாகவே இளநிலை, முதுநிலைப் பட்டங்களைப் பெற்றதோடு ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளராகவும் செயற்பட்டவர்.
இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையிலும் தேர்ச்சி பெற்றவர். அதனைத் தொடர்ந்து இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் உதவி ஆணையாளராகவும் பணிபுரிந்தவர்.
மலையகத்து ஹட்டன், காசல்ரீ தோட்டத்தில் பிறந்து வளர்ந்த இவரது நிர்வாக ஆளுமைக்கு அப்பால் இலக்கிய உலகில் விமர்சகராக, விளிம்பு நிலை மக்களின் விடிவிற்கான செயற்பாட்டாளராக தன்னை பரவலாக அடையாளப்படுத்தி பலரின் நன்மதிப்பையும் பெற்றவர்.
‘மலேசிய தமிழரின் சமகால வாழ்வியல் பரிமாணங்கள் – சில அவதானிப்புகள்’ ‘பேரா.க.கைலாசபதி: சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்’ ‘மலையகம் தேசியம் சர்வதேசம்’ ‘ஊற்றுக்களும் ஓட்டங்களும்’ ஆகிய நூல்களை எழுதி அதில் தனது இடசாரிப் பார்வைகளை ஆழமாக பதித்தவர்.
கடந்த மூன்று வருடங்களாக அவர் தனது செயற்பாடுகளை உடல் நலக் குறைவால் குறுக்கி இருந்தமை உடல் நலம் பெற்று அவரின் மீள் எழுச்சிக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதாகவே நாம் நம்பி இருந்தோம். ஆனால் லெனின் மதிவானம் தனது சிந்தனையை சில தினங்களுக்கு முன்பு நிறுத்திக் கொண்டார்.
அவரின் சிந்தனை செயற்பாடுகளை நாம் காவிச் செல்வோம் தோழருக்கு மரியாதை கலந்த அஞ்சலி வணக்கங்கள்.