மலையக பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான தோட்டங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகளின் அநேகம்பேர் கொழும்பில் ஏதோ ஒரு தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள், அதில் அதிகமானவர்கள், சிற்றுண்டி சாலைகளிலும், வியாபார நிலையங்களில் சிப்பந்திகளாகவும், யுவதிகளை பொறுத்தவரை “காமெண்டுகளிலும் கடமையாற்றுகிறார்கள், ஒரு தொழிலாளிக்கு உரிமையுள்ள எட்டு மணி நேர வேலை என்பது இவர்களுக்கு எப்போதும் பகல் கனவுதான், அடிப்படை சம்பளமும் அற்ற ஒரு நிலைதான், கொழும்பு நகரில் பெரும்பாலான வியாபார ஸ்தாபனங்களில் இவர்கள் இல்லாவிட்டால் அதோ கதிதான் காரணம் இவர்களின் உழைப்பு, முதலாளி விசுவாசம், நேர்மை, கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொள்வது.
கொழும்பு நகரில் உழைத்து பெரிய ஆளாக வந்துவிடலாம் என்று படையெடுக்கும் மலையக இளைஞர்களில் ஒருசிலர் தமது முயற்சிகளால் முன்னேறித்தான் இருக்கிறார்கள், அதே நேரம் பல வருடங்களாக வயோதிபம் வரும்வரை சிப்பந்திகளாகவே இருக்கும் பல ஆயிரக்கணக்கானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஏழ்மை, குடும்ப வறுமை, வேலையின்மை, குடும்ப பின்புலம் இப்படி இவர்களை பாதி கல்வியோடு தலைநகர் கனவு காய் நகர்த்துகிறது.
அண்மையில் வெள்ளவத்தை கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்த புத்தனை பகுதியை சேர்ந்த இளைஞனின் மரணம் வேதனையை உண்டு பண்ணியிருந்தது, அவரின் குடும்ப பின்புலம் மிகவும் வறுமை நிறைந்த ஒன்று, இவரின் இழப்பு அந்த குடும்பத்துக்கு இன்னும் வறுமையை ஏற்படுத்திவிட்டே சென்றுள்ளது, இப்படியான புதிய கட்டிடங்கள் அமைக்கும் நிறுவனங்கள் பொதுவாகவே அந்த கட்டிடத்துக்கும் அங்கு பணியாற்றுபவர்களுக்கு சேர்த்து இழப்பு காப்புறுதி செய்திருக்க வேண்டும் எனவே சட்டம் தெரிந்த நமது மலையக சட்டத்தரணிகள் இதுபோன்ற விடயங்களில் தலையிட்டு அந்த காப்புறுதி பணத்தை பெற்றுக் கொடுக்க முன்வருவார்களா?
(வரதன் கிருஸ்ணா)
மலையக மக்களின் அவலம் மலையகத்திற்கு அப்பால் வடக்கு கிழக்கு தலை நகர் எங்கும் ஒரே மாதிரியான சுரண்டல்களுக்குள் உள்ளாக்கப்படுகின்றது இதில் மலையகத் தலமைகள் உட்பட யாரும் இவர்களின் அடிப்படை உரிமைகள் ஏனைய இலங்கையர் அளவிற்கேனும் உறுதி செய்யப்படுவதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை நாம் போராடித்தான் பெறவேண்டும் என்பது வரலாறு எம்மீது சமத்தப்பட்ட பொறுப்பாகவே நான் இதனை உணர்கின்றேன் கரம் கோர்ப்போம் உரிமையை மீட்டெடுக்க
(Saakran)