பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் பிரிட்டிசாரின் நிலவரிச் சீர்த்திருத்தம் கிராமப்பொருளாதாரத்தை உடைத்து நொறுக்கியது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட பஞ்சம், பல்லாயிரக்கணக்கானோரைக் காவு கொண்டது. பல ஆண்டுகள் நீடித்தப் பஞ்சத்தால் பொருளாதார நெருக்கடியில் இருந்து கிராமங்கள் மீளவில்லை. இந்தச் சூழலில், காலனி நாடுகளுக்குக் கூலிகளை அழைத்துச்செல்லும் நடைமுறைகளைப் பிரிட்டிசார் மேற்கொண்டனர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் மக்கள் புலம்பெயரத் தொடங்கினர். இந்தியாவில் ஏற்பட்ட பஞ்சத்திற்குப்பின் பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசுகளின் காலனி நாடுகளுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்தனர்.
1837ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்திய அரசு குடிபெயர்வு சட்டத்தை அறிவிப்பதற்கு முன்பே, தடையற்ற குடியேற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தன. எடுத்துக்காட்டாக, 1817 இல் இலங்கை, 1819 இல் மொரிசீயஸ், 1826 இல் போர்பன், 1833 இல் பர்மா , 1843 இல் மலேசியா மற்றும் பிரிட்டிஷ் கயானா, ஆப்ரிக்கா, சிங்கப்பூர் பிஜி, நியூ கலிடோனியா, அட்லாண்டிக் கரிபியன் கடல் தீவுகளான ட்ரினிட்டாட், டோபோக்கோ போன்ற தீவுகளுக்கு மக்களை அழைத்துச் செல்லத் தொடங்கினர். பிரிட்டிஷ் அரசும் இதை ஊக்குவித்தது.
தமிழகத்திலிருந்தும் அதிக எண்ணிக்கையில் குடும்பம், குடும்பமாக புலம்பெயர்ந்தனர் இக்காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை கமார் இரண்டு கோடியை எட்டுமென கணிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திலிருந்தே அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்துள்ளனர். அதிலும் இலங்கைக்கு சென்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
காலனி ஆதிக்கச்சுரண்டல் பசிக்கு அதிக எண்ணிக்கையில் தங்களின் இருப்பை இழந்தவர்கள் தமிழர்களாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் தொடங்கிய சிதறடிப்பு இருபதாம் நூற்றாண்டு தொடக்கம்வரை நீடித்தது. பல்வேறு நாடுகளுக்கு சிதறிச்சென்ற பலரும் மீண்டும் தங்களின் தாயகத்துக்குத் திரும்பவில்லை.
இலங்கையைக் கைப்பற்றிய பிரிட்டிசார் பெருந்தோட்ட உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்காகத் தமிழகத்திலிருந்து மக்களை அழைத்துச் செல்லத் தொடங்கினார்கள். பெருந்தோட்ட உற்பத்தியில் இம்மக்களின் அயராத உழைப்பு இலங்கை நிலவுடைமை சமூகஅமைப்பில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தத் தொடங்கின. காப்பி, தேயிலை, இரப்பர், தென்னை, கொக்கோ ஆகியவற்றின் உற்பத்தியில் இலட்சக்கணக்கான தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
இந்தியத் தமிழர்களை அழைத்துச் சென்ற பிரிட்டிசார் பெருந்தோட்டப் பகுதிகளை தனித்த ஓர் உலகமாக வைத்திருந்தனர்.
ஐரோப்பியர்கள் மற்றும் உள்ளுர் தோட்ட முதலாளிகளின் மிலேச்சத்தனங்களும் ஒடுக்கு முறைகளும் வெளிவுலகுக்கு எட்டாதவகையில் தோட்டங்களைத் தங்களின் அதிகாரக்கட்டுக்குள் வைத்தனர்.
மலைப்பகுதிகளில் குடியேறி நூறாண்டுகள் கடந்த பின்பும் அடிமைப்படுத்தப்பட்ட இம்மக்களை மீட்டெடுக்க எந்த ஓர் அமைப்பும் முன்வரவில்லை. இந்நிலையில் அடக்குமுறையின் கொடூரங்களை துண்டறி்க்கைகள் மூலம் நாடறியக் கொண்டு வந்த சமூகப் போராளி நடேசய்யரை வரலாறு பதிவு செய்துள்ளது.
இலங்கைப் பொருளாதாரத்தில் பல்லும் சில்லுமாக இருந்தவர்கள் மலையகத் தமிழர்களாகும். இவர்களின் உழைப்பு இலங்கைவாழ் சமூகங்களின் அடிப்படை கட்டமைப்புகளுக்கும் அவர்களின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியது. ஆனால் இவர்கள் ஈட்டித்தந்த வருவாயில் 5% வீதம்கூட தோட்ட மக்களின் நலனுக்குச் செலவிடப்படவில்லை.
தமிழகக் கிராமங்களில் இருந்து வேரடி மண்ணோடு பிடுங்கியெடுத்து இலங்கை மலைப்பிரதேசங்களில் நடப்பட்டவர்களின் தலைமுறையினரே இன்று ’மலையகத் தமிழர்கள்’ என அடையாளப்படுத்தப் படுகிறார்கள்.
இருநூறு ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள இவர்கள் இலங்கை தேசிய இனமாக அங்கீகரீக்கப்படவில்லை. பிரிட்டிசார் வெளியேறிய பின் ஆட்சியாளர்களின் சட்டங்களால் சனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டதுடன், சட்டமென்ற கருவியைக் கொண்டே மலையகத் தமிழர்களின் இன உருவாக்கத்தையும் அடித்து சிதைத்தார்கள்.
ஒரு நூற்றாண்டுக்கு மேலாக பெருந்தோட்ட உற்பத்தியில் கொத்தடிமைகளாக உழைத்த இம்மக்களின் உழைப்பை ஒட்ட சுரண்டிய காலனித்துவம், இலங்கையின் அரசியல் அமைப்புச்சட்டத்தை உருவாக்கும்பொழுது தேசிய இனங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வலுவான சட்டங்களை உருவாக்கவில்லை.
இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்கெதிராக சிங்கள அரசியல்தலைவர்களிடம் தீவிர எதிர்ப்பு இருப்பதை அறிந்தும், சோல்பரி ஆணைக்குழுவின் குடியுரிமை தொடர்பான பரிந்துரை மலையக மக்களின் குடியுரிமை யைப் பறிப்பதற்கு துணைநின்றது.
இம்மக்களை வழிநடத்திய அரசியல் தலைமை, குடியுரிமை பறிப்புச்சட்டத்தை திரும்பப்பெறக் கோரும் போராட்ட வலிமையைக்கொண்ட அணிகளை கொண்டிருந்தபோதும் அதைப் பயன்படுத்தத் தவறியது.
இதுபோன்ற வரலாற்றுத் தவறுகளின் தொடர்ச்சியாகவும் உச்சமாகவும் 1964ஆம் ஆண்டு சாஸ்திரி – சிறிமா உடன்படிக்கை ஏற்பட்டது. பிற்காலத்தில் இம்மக்களை சிதறடிக்கவும் காரணமானது.
பத்து லட்சம் மலையக மக்களின் தேசியம் சார்ந்த உரிமையை ஒரு சாதாரண பிரச்சனையாக இடதுசாரி அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து அமைப்புகளும் எடுத்துக்கொண்டன.
1920ஆம் ஆண்டுகால அரசியல் பிரவேசத்தோடு மலையகத் தமிழர்களுக்கெதிராக தோன்றிய பேரினவாதம் குடியுரிமை பறிப்பில் தொடங்கி நாடு கடத்தும் உடன்படிக்கை யோடும்கூட அதன் தாகம் முற்றுப்பெறவில்லை.
மலையகத் தமிழர்களையும், ஈழத் தமிழர்களையும் ஏன் பிரித்து பார்க்க வேண்டும் என்ற வாதம் தமிழகத்தில் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒரே பூகோளப் பகுதியில் இருப்பை கொண்டுள்ளவர்கள் அல்ல.
வடக்கு, கிழக்கில் வாழும் ஈழத்தமிழர்கள் தங்களது பூர்வீக நிலப்பகுதியை தாயகமாக கொண்டுள்ளார்கள். பெரும்பான்மையாக உள்ள சிங்கள மக்கள் வாழும் தென் மற்றும் தென்மேற்குப்பகுதிகளில் உள்ள சிங்களக் கிராமங்களை சுற்றி உள்ள தேயிலை தோட்டங்களில் கடந்த 200 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக, தினக் கூலிகளாக தங்களது இருப்பை தொடரும் சமூகமாக இந்திய வம்சாவழி மலையகத்தமிழர்கள் உள்ளனர்.
1972, 1975 காலங்களில் மலையகத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட தனியார் மற்றும் கம்பெனிகளிடமிருந்த தேயிலை மற்றும் இரப்பர் தோட்டங்களைக் கையகப்படுத்திய அரசு. தோட்டங்களின் சில பகுதிகளை சிங்களவர்களுக்கு பங்கிட்டு வழங்கியது. ஆனால் இதில் பணிசெய்து வரும் தொழிலாளர், அல்லது வேலையற்று இருக்கும் இவர்களின் பிள்ளைகளுக்கோ அவை வழங்கப்படவில்லை.
நிலம் மற்றும் வீட்டுமனைக்கான உரிமைகளை இவர்களுக்கு வழங்குவதை அரசு மறுத்துவரும் நிலையும் தொடர்கிறது. தேசிய கல்வியுடன் இணைக்காமல் பல்லாண்டுகளாகத் தனித்து விடப்பட்ட தோட்டங்களில் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே கல்வி கொடுக்கப்பட்டது.
1977- 80 காலத்திற்குப் பின்பே இந்தக் கல்விக்கூடங்களை தேசிய கல்வியுடன் அரசு இணைத்தது. இதன்பிறகே தோட்டப்பகுதிகளிருந்து கல்வி கற்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கின. என்றாலும் உயர்கல்விக்கு செல்வோரின் எண்ணிக்கை என்பது தேசிய மட்டத்தில் ஒப்பிடுகையில் மலையக மாணவர்களின் விகிதம் ஆக குறைந்தே காணப்படுவதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
இதேவேளை தோட்ட மாணவர்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ப தினக்கூலியைத்தவிர வேறு வேலைகள் இல்லாத காரணத்தால் பலரும் நகரங்களில் கிடைக்கும் வேலைகளை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால். நகரப்பகுதிகளிலும் ஏனைய சமூகத்தினருடன் இவர்கள் கூடிவாழும் நிலையிலேயே உள்ளனர்.
1958- 77- 81- 83 ஆண்டுகளில் தென்பகுதிகளில் சிங்களவர்களால் மலையகத் தமிழர்கள் தாக்குதலுக்கும் சூறையாடலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள்.
மலையகத்தமிழர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்டுவரும் உரிமையைக் கோரி போராட்டம் நடத்தியதால் ஏற்பட்ட தாக்குதல் அல்ல. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு எதிர்வினையாக சிங்கள பெளத்த பேரினவாதத்தால் உரிமைப் போராட்டம் நடத்தாத மலையகத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
ஈழத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் சிங்களப் பெளத்த பேரினவாதத்தால்தான் ஒடுக்கப்படுகின்றனர். ஆனாலும் இவ்விரு தரப்பினதும் பிரச்சனைகளும் தனித்த வரலாற்றுக் கூறுகளைக் கொண்டுள்ளன. தனித்த அரசியல் வேட்கைகளையும் போராட்டங்களையும் கொண்ட மக்கள் பிரிவினர் இவர்கள். எனவே, பிரச்சனையை தனித்துக் கையாள்வது தேவையின் பொருட்டே ஆகும்.
அவர்களது பிரச்சனைகளுக்கும், சனநாயக உரிமை மறுப்புகளுக்கும் குரல் கொடுப்பதற்கான ஓர் அமைப்பு தேவை. ஆகவே, “மலையகம்- தாயகம் திரும்பியோருக்கான இயக்கம்” தேவையின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதால் இதன் நோக்கத்தையும்,வேலைத் திட்டத்தையும் பின்வரும் வகையில்,
• இலங்கை தீவில் வாழக்கூடிய மலையக அல்லது இந்திய வம்சாவழித் தமிழர்கள் நிலை, வரலாறு, கோரிக்கைகள் தொடர்பில் தமிழ்நாட்டளவில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவைக்கு முகம் கொடுக்க வேண்டும்.
• மலையகத்தில் வாழும் தமிழர்கள் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் பிடியிலும் இன்ன பிற ஒடுக்குமுறை வடிவங்களாலும் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தமிழ்நாட்டில் விவாதப் பொருளாக்க வேண்டும்.
அப்படியான, விவாதம் இல்லாமல் அம்மக்களுக்கு ஆதரவான அடித்தளம் உருவாகவியலாது.
• முதலில், மலையக தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றிய தகவலை, செய்திகளை, அவர்தம் கோரிக்கைகளை, அதற்கான நியாயங்களை தமிழ்நாட்டின் அரசியல்தளத்தில் முன்வைப்பது அவசியமாகிறது.
• தமிழ்நாட்டில் உள்ள ஏதிலி முகாம்களில் இந்திய வம்சாவழித் தமிழார்கள் குடியுரிமை இல்லாமல் ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்ற முத்திரையுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறிமா – சாஸ்திரி உடன்படிக்கைபடி குடியுரிமை வழங்குவதற்கான கோரிக்கை விளக்கக் கூட்டங்களை நடத்தி அரசியல் அரங்கில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. கூடவே, ஏதிலி முகாம்களில் வாழும் ஈழத் தமிழ் ஏதிலிகள் இக்கோரிக்கையை தங்கள் நலனுக்கு ஊறு ஏற்படுத்துவதாக கருதுகின்றனர். இந்த முரண்பாடு தீவிரம் அடையாதபடி நட்பு வகையில் தீர்ப்பதற்கு உரிய கவனம் எடுக்க வேண்டும்.
• தாயகம் திரும்பியோராக பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருவோருக்கான கோரிக்கைகளை தமிழக அரசின் மறுவாழ்வு துறையிடம் கொண்டு சேர்த்தல். இதன் தொடர்பில் செய்யவேண்டிய வேலைகள் குறைவே.
• இலங்கையில் வாழக்கூடிய மலையகத் தமிழர்களை இந்த அமைப்பின்வழி அமைப்பாக்க வேண்டியதில்லை. ஒரு சில முன்னோடிகள் இதில் பங்குபெறும்போதுதான் அங்குள்ள தகவல்களை நம்மால் தெரிந்து கொள்ள இயலும்.
• தமிழ்நாட்டில் முகாம்களில் குடியுரிமைக் கோரக் கூடியவர்கள் மற்றும் தாயகம் திரும்பியோரை அடித்தளமாக கொண்டு இவ்வமைப்பு செயல்பட முடியும். திரளான வெகுமக்களை அணிதிரட்டுவதற்கு உள்ள சாத்தியப்பாடுகள் குறைவு. அதே நேரத்தில், முன்னணியாக இருக்கக் கூடிய சில இளைஞர்களையேனும் அமைப்பாக்கினால் அது நீண்ட நெடுங்காலத்திற்குப் பயன் தரும்.
• இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு தடையாக இந்திய அரசு இருந்துவருகிறது. இதில் ஒரு மாற்றம் ஏற்படாதவரை இந்தியாவின் அருகில் உள்ள பாகிஸ்தான், இலங்கை ,வங்க தேசம், நேபாளம், மியான்மர், பூடான், மாலத்தீவு போன்ற எந்த நாட்டுக்கும் விடிவு கிடையாது.
குறிப்பாக, இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இலங்கை தீவைப் பொருத்தவரை உலகளாவிய ஏகாதிபத்திய போக்கில் குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்படாதவரை அமைதியும் சனநாயகமும் கொண்ட சூழல் உருவாகப் போவதில்ல்லை.
எனவே, இலங்கையில் வாழக்கூடிய மலையகத் தமிழர்களின் பாதுகாப்பையும் சம உரிமையையும் கண்காணித்து உரிய ஆதரவை தர வேண்டிய கடமை தமிழ்நாட்டுக்கு உண்டு. அதற்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த அமைப்பின் நோக்கமாக இருக்கக் கூடும். அதற்கான தயாரிப்புப் பணிகளை இப்போது செய்ய வேண்டி இருக்கலாம்.
• தமிழகத்தில் வாழும் தாயகம் திரும்பியோரின் உளவியல் கட்டுமானம் தமிழ்நாட்டு தமிழரைப் போன்றே இருப்பதாக அறியப்படுகிறது. எனவே, அவர்களை தனி வகையினமாக கருதி அணிதிரட்டக் கூடிய வாய்ப்பு குறைவு. மேலும் அவர்கள் தமிழ்நாட்டின் பலவேறு கட்சிகளிலும் பங்கு பெறுகின்றனர், தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
• செயல்பாட்டு வடிவங்களாக – அறிக்கை கொண்டு வருதல், கோரிக்கைகளை வடிவமைத்தல் , ஜூம் கூட்டங்கள் நடத்துதல், அரங்கக் கூட்டங்கள் நடத்துதல் ஆகியவை இருக்கக்கூடும்.