மலையக தோட்டங்களை தொழிலாளர்களுக்கு வழங்குங்கள் (எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 15)

இலங்கையின் தேயிலைத் தோட்டங்களின் அளவு, அதில் ஈடுபடும் உழைப்பாளர்கள், பெறப்படும் தேயிலை விளைச்சல் போன்ற விடயங்கள் கடந்த பகுதியில் ஏற்கனவே தரப்பட்டனவெனினும் இங்கு அவற்றை மேலும் தெளிவாக அதாவது, மலையகத்தின் தேயிலைத் தோட்ட பொருளாதாரம் பற்றிய தரவுகளையும், அவற்றைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கணக்குகளிலிருந்து பெறப்படும் விடைகளையும் கொண்டு அப்பொருளாதாரம் பற்றிய ஓரளவு துல்லிய சித்திரத்தை காண்பதற்கு முயற்சிக்கலாம். அந்த அடிப்படையிலான ஒரு தொகுப்பை இங்கு முதலில் பார்க்கலாம்.  

இலங்கையில் தேயிலைத் தோட்டங்களென மொத்தமாக உள்ள நிலங்கள் ஏறத்தாழ ஐந்து (5)லட்சம் ஏக்கர்கள். இதில் பெருந் தோட்டங்களிடமுள்ள இரண்டு (2) லட்சம் ஏக்கர் நிலங்களில் சுமார் ஒரு (1) லட்சம் ஏக்கர் பரப்பளவான நிலங்கள் தேயிலை பயிர்களைக் கொண்டதல்ல என அரசாங்கம் கணக்கெடுத்துள்ளது. அண்மைய கணக்கெடுப்பின்படி தனியார்களிடம் – சிறு தேயிலைத் தோட்ட உடைமைகளாக – மூன்று (3)லட்சத்து இருபத்தி ஏழாயிரம் (27000) ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதன் உடைமையாளர்களின் எண்ணிக்கை நான்கரை (4.5) லட்சத்தை தாண்டியதாக ஆகிவிட்டது. இவர்களிடம் உள்ள நிலங்கள் பூரணமாக தேயிலை மரங்களை – செடிகளை மட்டுமே கொண்டன என்றில்லை. ஒவ்வொரு உடைமையாளரும் அதில் ஒரு பகுதியை வேறு பயிர்களுக்காகவும் மற்றும் தமது ஏனைய தனிப்பட்ட தேவைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர் என்பதுவும் இங்கு கணக்கிடப்பட வேண்டிய ஒன்றாகும். அந்தக் கணக்கெடுப்பை அரசாங்கம் திட்டவட்டமாக மேற்கொண்டுள்ளதா என்பதை அறிய முடியவில்லை. எனினும் அதற்காக, மொத்தத்தில் 15 தொடக்கம் 20 சதவீத நிலங்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தாலும் கூட, சிறு தேயிலைத் தோட்ட உடைமையாளர்கள் மொத்தத்தில் தேயிலை உற்பத்திக்கு ஈடுபடுத்தியுள்ள நிலங்களின் மொத்த பரப்பளவு கிட்டத்தட்ட 250000 (இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம்) ஏக்கர் எனக் கொள்ளலாம்.  

தொழிலாளர்களும் சரி, உடைமையாளர்களும் சரி தேயிலைத் தோட்டங்களை நம்பி வாழ முடியாது. 

இந்த நிலங்களிலிருந்து 2018 – 19ம் ஆண்டுகளில் பெற்ற வருடாந்த விளைச்சல் சுமார் 2400 (இரண்டாயிரத்து நானூறு) லட்சம் கிலோக்களாகும். அந்த வகையில் இங்கு ஒரு ஏக்கர் தேயிலை பயிர்களிலிருந்து பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்துகளிலிருந்து தயாரிக்கப்பட்ட தேயிலையின் அளவு கிட்டத்தட்ட 1000 கிலோக்கள் என ஆகின்றது. சராசரியாக 4 கிலோ கொழுந்துகளிலிருந்து ஒரு கிலோ தேயிலை பெறப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் ஒரு ஏக்கர் தேயிலைச் செடிகளிலிருந்து பறிக்கப்படும் கொழுந்துகளின் அளவு சுமார் 4000 கிலோக்களாகும். இந்த கொழுந்துகளை தேயிலை உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு விற்கையில் தற்போது சராசரியாக ஒரு கிலோவுக்கு 80 ரூபாவே கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு தமது நிலத்தில் தேயிலை உற்பத்திச் செயற்பாடுகளை மேற்கொள்கிற பொழுது முழுமையாக குடும்ப உறுப்பினர்களின் உழைப்பில் மட்டும் தங்கியிருக்கவில்லை. வெளியிலிருந்தும் உழைப்பாளர்களை கூலிக்கு அமர்த்துவது வழமையாக உள்ளது.   

இந்த வகையில் இந்த தோட்டக்காரர்கள் தேயிலைக் கொழுந்தை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு வகையிலுமாக மொத்தத்தில் சராசரியாக ஒரு கிலோவுக்கு 30 அல்லது 35 ரூபாக்களை செலவு செய்ய வேண்டியுள்ளது. அதேவேளை தமது சுய உழைப்புக்கான பெறுமதியோ தமது குடும்ப உறுப்பினர்களினுடைய உழைப்பின் பெறுமதியோ உள்ளடங்கவில்லை. எனவே இவர்கள் ஒரு கிலோவுக்கு உயர்ந்த பட்சம் 50 ரூபாவையே நிகர வருமாகப் பெறுகின்றனர் அப்படிப்பார்த்தால் ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து உற்த்தி செய்யப்படும் 4000 கிலோ தேயிலைக் கொழுந்தை விற்று   கிடைக்கின்ற நிகர வருமானம் இரண்டு லட்சம் (200000) ரூபா மட்டுமே. அதாவது மாதக் கணக்கில் பார்த்தால் சுமார் 16000 (பதினாறாயிரம்) ரூபாக்கள் மட்டுமே.  

இங்குள்ள யதார்த்தம் என்னவென்றால் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் (250000) ஏக்கர் தேயிலைத் தோட்டங்கள் சுமார் ஐந்து (5) லட்சம் பேரினது உடைமைகளாக உள்ளன. தனியார் சிறுநில உடைமையாளர்கள் என்ற வரைவிலக்கணத்தின்படி 10 ஏக்கர் வரை உடைமையாகக் கொண்டிருப்பவர்கள் உள்ளடங்குகின்றனர். எனவே, இங்கு 90 சதவீதமானவர்கள் கொண்டிருக்கும் தேயிலைத் தோட்டம் அரை ஏக்கரை அண்மித்தாக அல்லது அரை ஏக்கருக்கும் குறைவானதாகவே உள்ளது. எனவே இவர்கள் தமது தோட்டத்திலிருந்து பெறப்படும் தேயிலையின் மூலமாக கிடைக்கும் வருமானத்தை தமது மொத்த வருமானத்தின் ஒரு பகுதியாக மட்டுமே கொள்ள முடியும். உடைமையாக உள்ள நில அளவு எவ்வளவாக உள்ளது என்பதைப் பொறுத்து கணிசமான பகுதி வருமானமாகவோ அல்லது தமது மொத்த வருமானத்தில் மிகச் சிறு பகுதியாகவோ – அமைகின்றது.  

எனவே, ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் இங்கு தோட்டக்கம்பனிகளின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் மட்டுமல்ல தனியார் தேயிலைத் தோட்ட உடைமையாளர்களிலும் மிகப் பெரும்பான்மையானவர்கள் தேயிலைத் தோட்டங்களை நம்பி தமது பொருளாதார வாழ்வை நகர்த்த முடியாதவர்களாக உள்ளனர் என்பதையே இங்கு காண முடிகின்றது. 

இடையில் இங்கே வாசகர்களுக்கு ஒரு குறிப்பு:- 

(இக்கட்டுரைத் தொடரில் தரப்படும் புள்ளிவிபரங்கள் அரசாங்க அறிக்கைகளையும் பல்வேறு கள ஆய்வு அறிக்கைகளையம் அடிப்படையாகக் கொண்டவை. அவ்வாறு கிடைக்கும் புள்ளி விபரங்களிற் பல சில ஆண்டுகளுக்கு முற்பட்ட நிலைமைகளின் தரவுகளாகவே பெரும்பாலும் உள்ளன. இங்கு தேயிலைத் தோட்டங்கள் தொடர்பான ஆய்வுகளின் போதும் அவ்வாறான பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனினும், மலையகத்தைச் சேர்ந்த அறிவார்ந்த நண்பர்களுடனான கலந்துரையாடல்கள் மூலம் சில சந்தேகங்களுக்கான விடைகளை பெற்றுக் கொண்டே இக் கட்டுரைப் பகுதி வரையப்பட்டுள்ளது. இவ்வாறாக பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளே இக்கட்டுரைத் தொடரின் பல்வேறு இடங்களிலும் தரப்பட்டுள்ளன. இவை தொடர்பில் மிகவும் அண்மைக் கால தரவுகள் கிடைப்பதில் உள்ள சிரமங்களினால் இந்கட்டுரைத் தொடரில் ஆங்காங்கே தரப்படுள்ள கணிப்புகளுக்கும் உண்மையான நிலவரங்களுக்குமிடையில் சில இடைவெளிகள் – வேறுபாடுகள் இருக்கக் கூடும்.  

இருப்பினும் இக்கட்டுரைத் தொடரில் கூறப்பட்டுள்ள ஒவ்வொரு விடயங்கள் தொடர்பாகவும் தரப்பட்டுள்ள சித்திரங்களும் – அவற்றின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களும் யதார்த்தங்களுக்கு பெரிய அளவில்  மாறுபாடானவைகளாக இருக்க மாட்டா என்பதில் உறுதியான நம்பிக்கையுடனேயே இக்கட்டுரைத் தொடர் வரையப்பட்டுள்ளது. மேலும் காலத் தொடர் காரணமாக ஏற்படும் அதிகரிப்புகள் அல்லது குறைதல்கள் தொடர்பான புள்ளிவிபர வேறுபாடுகள் அடிப்படையான உண்மைகளை பெரும்பாலும் வேறுபடுத்திவிட மாட்டா என்பதோடு எந்த இடத்திலும் இங்கு தரப்பட்டுள்ள காட்சிகளுக்கும் யதார்த்தத்துக்கும் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபாடு ஏற்பட்டுவிடாதிருப்பதற்கான கவனமும் இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதை வாசகர்களுக்கு தெரிவிப்பது கடமை என்ற அடிப்படையிலேயே இக்கட்டுரை எழுத்தாளினால் இக்குறிப்பு இங்கே தரப்பட்டுள்ளது.  

மேலும், இக்கட்டுரைத் தொடரின் பல இடங்களில் நிறைய புள்ளி விபரங்களும் ஆங்காங்கே கணக்குகளும் இடம் பெறுகின்றமையானது பெரும்பாலும் பொருளியல் கல்வியை முறையாக பெற்றுக் கொள்ளாத மற்றும் பொருளியற் கட்டுரைகளோடு தொடர்ச்சியான பயிற்சியற்ற வாசகர்களுக்கு அவ்வாறான புள்ளிவிபரங்களையும் கணக்குகளையும் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும் என சில நண்பர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இக் கட்டுரைத் தொடரின் சாராம்சங்களைப் பொறுத்த வரையில் எண்களும் கணக்குகளும் தவிர்க்க முடியாதவை. முடிந்த அளவுக்கு அவற்றைக் குறைத்துக் கொள்ள முயலுகின்ற அதேவேளை, ஒரு கருத்தைச் சொல்லுகிறபோது – அதிலும் நடைமுறையில் பரவலாக நிலவும் கருத்துக்கு மாறான  ஒன்றைச் சொல்லுகிற போது அது என்ன அடிப்படையில் எவ்வகையான ஆதாரங்களின் வழியாக கூறப்படுகிறது என்பதை ஓரளவுக்கு திட்டவட்டமாக முன்வைப்பது அவசியமாகின்றது என்பதையும், இல்லையென்றால் இக்கட்டுரைத் தொடர் ஒரு கதைத் தொடராக ஆகிவிடும் என்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..)  

பெருந் தேயிலைத் தோட்ட நிலங்களை அதன் தொழிலாளர்களுக்கு பகிர வேண்டும் 

*தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்டில் அத்தியாவசியப் பண்டங்களுக்கான விலைவாசிகளுக்கு ஏற்ப கூலி வழங்கப்பட வேண்டும்.  

*வழங்கப்படுகின்ற கூலியின் அளவானது பொதுவாக எற்பட்டுள்ள சமூக பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அத்தியாவசியமாகி விட்ட தேவைகளுக்குரிய பண்டங்களையும் உள்ளடக்கிய வகையில் தொழிலாளர் குடும்பங்கள் கொள்வனவு செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.  

 *காலனித்துவ காலத்து லயன்களெல்லாம் இல்லாது ஒழிக்கப்பட்டு தொழிலாளர்கள் தமது சொந்த வீடுகளில் – போதிய அளவு விசாலம், மின்சாரம், குடிநீர் வசதி போன்ற அடிப்படைகளைக் கொண்டவர்களாக – வசிக்கின்ற நிலைமைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.  

   
*தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் தரமான வைத்திய வசதிகளையும் தகுதியான கல்வியையும் பெறுகின்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 

*தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு மாதத்தில் குறைந்த பட்சம் 22 நாட்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை பெருந் தோட்டக் கம்பனிகள் மேற்கொள்ள வேண்டும்.    

இவ்வாறானவற்றை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டுமென தேயிலை பெருந் தோட்டக் கம்பனிகளை – அரசாங்கமோ, தொழிற்சங்கங்களோ அல்லது தொழிலாளர்களின் நேரடியான போராட்டங்கள் மூலமோ – எந்த வகையில் – வற்புறுத்தினாலும் அதற்கு தோட்டக் கம்பனிகள் தயாராக இருக்க மாட்டா என்பதே பொது அறிவு. ஆனபடியினால் பெருந் தோட்டக் கம்பனிகளிடம் உள்ள நிலங்களை அரசு தனது கையகப்படுத்தி அவற்றை இத் தோட்டங்களில் வேலை செய்யும் ஓன்றரை லட்சம் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போது மலையகத்தில் மேலெழுந்து வருகின்றது. இலக்கியப் படைப்பாளரும் மலையக சமூக பொருளாதார நிலைமைகள் தொடர்பான ஆய்வாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மல்லியப்புசந்தி திலகராஜ் போன்ற இளம் தலைமுறையினர் அதற்கான ஆதாரங்களையும் உரிய வாதங்களையும் முன்வைத்து தோட்டக்கம்பனிகளிடம் உள்ள நிலங்கள் அதன் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையினை பல்வேறு தளங்களிலும் முன்வைத்து வருகிறார்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.  

கடந்த காலங்களில் அரசாங்கம் தேயிலைத் தோட்டங்களை சிறு உடைமைகளாக இலங்கையர்களுக்கு பிரித்துக் கொடுத்த போது மலையகத் தமிழ்த்  தோட்டத் தொழிலாளர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டார்கள் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும். அரசாங்கம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாது பார்த்துக் கொள்வது மட்டுமல்லாது முன்னைய தவறுகளுக்கு ஈடு செலுத்தும் செய்யும் வகையில் மலையகத்து தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் மீது அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும்.  

இன்று நான்கரை லட்சத்துக்கு மேற்பட்ட சிங்கள சமூகத்தவர்கள் தேயிலைத் தோட்ட உடைமையாளர்களாக மாறுவதற்கு ஏற்பாடுகள் செய்த இலங்கை அரசானது, இலங்கையின் நலன்களுக்காக இரு நூறு ஆண்டுகளாக பல தலைமுறையைத் தியாகம் செய்த மலையக தமிழ்ச் சமூகத்திற்கு நன்றியாக செயற்படுவது அவசியமாகும். மலையக பெரும் தோட்டங்களில் தொழிலாளர்களாக உள்ளவர்களுக்கு அந்த தேயிலைத் தோட்டங்களைப் பகிர்ந்தளித்தால், அவர்களால், இப்போது பெருந் தோட்டக் கம்பனிகள் வழங்கும் பொருளாதார பங்களிப்பை விட மிக அதிகமான அளவுக்கு நாட்டின் தேசிய நலன்களுக்கு நன்மையளிக்க முடியும். அந்த நிலங்களில் தொடர்ந்தும் அதே அளவுக்கு தேயிலை பயிர்ச் செய்கையைத் தொடர்வது அவசியமா என்ற கேள்விக்கான விடையைத் தேடுவது ஒரு புறமிருக்க, அதே அளவு நிலங்களை தேயிலைச் செய்கைக்கு தொடர்ந்தும் பயன்படுத்தினாலும் கூட, நேரடியாக தொழிலாளர்கள் தமது உடைமை என்ற உணர்வோடு உற்பத்திகளை மேற்கொள்கிறபோது அவர்களால், தற்போது பெறப்படும் மொத்த தேயிலை உற்பத்தியை விட அதிகமான தேயிலையை உற்பத்தி செய்யவும், அத்தோடு, இலங்கைக்குத் தேவையான ஏனைய உணவுத் தேவைகள் தொடர்பிலும் பாரிய பங்களிப்பினை வழங்கவும் அவர்களால் முடியும்.  

இவ்வாறான சரியான திசையில் சரியான முறைகளில் நல்ல எண்ணங்களோடு திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கையை ஆளுபவர்கள் தயாராகவும் துணிச்சல் கொண்டவர்களாகவும் இருந்தால் இலங்கை பொருளாதார ரீதியில் உருப்படுவதற்குத் தேவையான ஒரு வழியை நிச்சயமாகத் திறக்க முடியும். செய்வார்களா இலங்கையை ஆளுபவர்கள் என்பது கேள்வியே?நடைமுறைகளினூடாக பதில் தர வேண்டியது அவர்களே! ஆனால் ஒன்று மட்டும் உண்மை – அதாவது பெரும் தேயிலைத் தோட்டக் கம்பனிகளிடம் இவ்வளவு பெருந் தொகையான நிலங்கள் உடைமையாக இருப்பதுவும், இத் தோட்டங்களின் கூலி நிலைமை இவ்வளவு மோசமாக இருப்பதுவும் ஒட்டு மொத்தத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மட்டும் பாதகமானதல்ல, அதற்கும் மேலாக, இலங்கையின் பொருளாதாரம் முழுமையும் குறைவிருத்தி நிலையில் இருக்கின்றமையும், அந்நிய சக்திகளை நம்பியே இலங்கை மக்களின் சீவியம் உள்ளமையும் தொடருமே தவிர, இலங்கை ஒரு சுயசார்பான, தன்னிறைவான பொருளாதார நிலையை நோக்கி முன்னேறுவதற்கு வழி விடமாட்டாது என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.  

தொழில் நுட்ப வளர்ச்சியை பிரயோகிக்க முடியாது

நாட்டுக்கோ தொழிலாளர்களுக்கோ நன்மையில்லை

இலங்கையின் மொத்தத் தேயிலை உற்பத்தி சுமார் 350 மில்லியன் கிலோக்கள். இதில் இலங்கையர்கள் நுகரும் தேயிலை 50 மில்லியன் கிலோக்களுக்கும் குறைவான அளவே. இலங்கை மக்களுக்குத் தேவையான அளவு தேயிலையையும், இலங்கையின் பொருளாதார நிலவரங்களுக்கு உரிய வகையில் உலக நாடுகளில் சந்தை வாய்ப்பைப் பெறக் கூடிய வகையான பெறுமதி கூட்டப்பட்ட, தனித்துவமான தேயிலை உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்வதையுமே இலங்கை மேற்கொள்ள வேண்டும். பசுமையான தேயிலை (Green Tea), மூலிகைத் தேயிலை (Herbal Tea) போன்ற தேயிலைகளை இலங்கைக்கே உரிய வகையிலும் மிகுந்த சுகாதாரமான முறைகளிலும் ஆக்க உற்பத்திகள் செய்து உலக நாடுகளில் சந்தைப் படுத்துகையில் அவை விவசாயப் பண்டமாக அல்லாமல் கைத்தொழிற் பண்டங்களுக்குரிய விலைகளைப் பெற முடியும். தேயிலையிருந்து மருத்துவ உற்பத்திகளையும் அழகு சாதன உற்பத்திகளையும் கணிசமான அளவில் இலங்கையால் உற்பத்தி செய்ய முடியும். இந்த அடிப்படைகளில் இலங்கை தேயிலையை உற்பத்தி செய்வதோடு மட்டுப்படுத்திக் கொள்வதே இலங்கைக்கு நல்லது. மாறாக,இப்போது ஏற்றுமதியில் இருக்கும் தேயிலையானது சர்வதேச வர்த்தகத்தில் முதன்மைப் பண்டங்கள் (Primary Commodities) என்ற வகையாகவே உள்ளது. இந்த வகைப் பண்டங்களுக்கு சர்வதேச சந்தையில் கிடைக்கும் விலைகள் அவற்றை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் வர்த்தக மாற்று விகிதத்தை பாதகமான போக்கில் செலுத்துவனவாகவே உள்ளன.  

இந்தியாவின் பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களில் கைகளால் கொழுந்து பறிப்பதை விட இயந்திரமற்றவகையில் வெட்டும் உபகரணங்களைப் பயன்படுத்தியோ அல்லது இயந்திரத்தால் இயக்குவிக்கப்படும் வெட்டுக் கருவிகளைப் பயன்படுத்தியோ தான் தேயிலை அறுவடை நடைபெறுகின்றது. இந்த வகையில் வெட்டுகையில் ஒரு தொழிலாளியால் மேற்கொள்ளப்படும் சராசரி அறுவடை நூற்றுக்கணக்கான கிலோக்களாக உள்ளது. இயந்திரத் தொழில் நுட்பம் முன்னேற்றமடைய கருவிகளைப் பயன்படுத்தி தொழிலாளர்கள் தேயிலை அறுவடையை மேற்கொள்கிறபோது ஒரு தொழிலாளியின் சராசரி அறுவடை அளவு தொடர்ச்சியாக அதிகரிக்கின்றது. யப்பான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் தேயிலைச் செய்கையும் அறுவடைகளும் மிக நவீனமான இயந்திரங்களை ஈடுபடுத்தியே மேற்கொள்ளப்படுகிறது.  

அவ்வாறான இயந்திரங்களைக் கொண்டு சில மணித்தியாலங்களில் ஆயிரக்கணக்கான கிலோ தேயிலையை அறுவடை செய்து விட முடியும். அதேபோல அந்த நாடுகளில் தேயிலை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல், வாட்டல், வறுத்தல், நிறுத்தல், அடைத்தல் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் மிகவும் நவீனமானவை. எவ்வாறாயினும் அந்த நாடுகளின் தேயிலை உற்பத்தியானது அவர்களது நாட்டினரது தேவைக்காகவும் மற்றும் ஏனைய ஆக்கத் தொழில் உற்பத்திகளுக்காகவுமே மேற்கொள்ளப்படுகின்றது.  

மொத்த தேயிலை உற்பத்தில் 85 அல்லது 90 சதவீதத்தை ஏற்றுமதி செய்வதற்கென உற்பத்தி செய்யும் இலங்கையானது அறுவடைகளை அதிகரிக்கக் கூடிய வகையான உபகரணங்களையோ கருவிகளையோ பயன்படுத்த முடியாது எனக் கூறப்படுகிறது. ஏனெனில் அவ்வாறாக அறுவடை செய்து தயாரிக்கப்படும் தேயிலையானது ஏற்றுமதிக்கு உரிய வகையான தராதரத்தைக் கொண்டதாக இருக்கமாட்டாது எனக் கருதப்படுகிறது. இதனாலேயே இங்கே கையினால் கொழுந்துகளைப் பறிக்கும் முறை கைவிடப்படாது கடைப்பிடிக்கப்படுகிறது. அவ்வாறான நிலையில் ஒரு தொழிலாளியால் – அவர் மிகுந்த ஆற்றலுடையவராக இருந்தாலும் -20 அல்லது 22 கிலோவுக்கு மேல் பறிப்பது மிகமிக அரிதாகும். அதுவும் சாதகமாக காலநிலையின் போது மட்டுமே அந்த அளவு சாத்தியமாகும். எனவே இலங்கையின் தேயிலை உற்பத்தியானது அந்த அளவுக்கு உள்ளேயே மொத்த உற்பத்திச் செலவையும் கூலியையும் கணக்கிட வேண்டியுள்ளது. தேயிலை உற்பத்தில் 70 சதவீதத்தை தேயிலை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் கூலி மற்றும் சம்பளங்கள் இடம் பிடித்து விடுவதாக தேயிலை உற்பத்திக் கம்பனிகள் கணக்கிடுகின்றன.  

கூலி மற்றும் சம்பளங்கள் அந்த அளவு பங்கை இடம் பிடித்தும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற கூலியின் அளவானது வறுமைக் கோட்டைத் தாண்டுவதற்குக் கூட போதுமானதாக இல்லை. எனவே, இலங்கையின் தேயிலை உற்பத்தித் துறையானது தொழிலாளர்களுக்கும் நன்மை விளைவிக்கவில்லை, அத்துடன் தேசிய பொருளாதார நலன்களுக்கும் பாதகமான அடித்தளங்களைக் கொண்டதாகவே உள்ளது.    

மலையகத்து வளமான நிலங்களை மாற்று உற்பத்திகளுக்கு மாற்ற வேண்டும் 

தேயிலை உற்பத்தியை ஓர் எல்லை வரை படிப்படியாகக் குறைத்து மாற்று உற்பத்திகளை நோக்கி மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்பதே இக்கட்டுரையாளரின் உறுதியான பரிந்துரை. மலையகத்தின் நிலங்கள் பல மாற்று உற்பத்திகளுக்கு மிகவும் வளம் மிகுந்த தளமாக – களமாகக் கூடியவை. அவற்றிற்குச் சாதகமான கால நிலைகளைக் கொண்டவை. உருளைக் கிழங்கு உட்பட மலைவாழ் தகுதி கொண்ட மரக்கறி வகைகளைப் பயிரிடுவதன் மூலம் தேயிலையை விட மிக அதிகமாகவே பொருளாதார நன்மைகளை அடைய முடியும்.  

நுவரெலியாவில் உருளைக் கிழங்கின் விளைச்சல் சராசரியாக ஏக்கருக்கு 10000 (பத்தாயிரம் கிலோக்கள்). இது ஆறு மாதத்துக்குள் பெறப்படுவது. முறையாகச் செய்கை செய்தால் இந்த விளைச்சலை 16000 (பதினாறாயிரம்) கிலோ வரை உயர்த்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 10000 கிலோ எனக் கொண்டால் கூட, அரைவாசிச் செலவைக் கழித்து விட்டாலும், தேயிலையை விட அதிகமாக வருமானத்தைப் பெற முடியும். வருடத்தில் இரண்டு போகங்களாக இரண்டு வெவ்வேறபட்ட பயிர்களை விளைவிக்க முடியும். உருளைக் கிழங்கின் விளைச்சலுக்கு கிட்டவே ஏனைய மலைவாழ் மரக்கறி வகைகளின் விளைச்சல்களும் அமைகின்றன.          

இலங்கையின் மலைப்பகுதிகள் நீண்டகால மற்றும் குறுங்கால பழ வகை பயிர்களுக்கும் ஏற்றதாகும். இலங்கையர்களின் போசாக்குக்குத் தேவையான மரக்கறிகள் மற்றும் பழ வகைகளின் அளவில் அரைவாசியையே இலங்கை உற்பத்தி செய்கிறது என பல துறைசார் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்தப் பிரச்சினையை மலையகத்தின் மாற்றுப் பயிர்ச்செய்கையால் தீர்த்து வைக்க முடியும். அவற்றில் ஒரு பகுதியை பெறுமதி கூட்டல் வகையாக ஆக்க தொழில் உற்பத்திகள் செய்து உறுதியான ஏற்றுமதிகளையும் மேற்கொள்ள முடியும்.  

இலங்கையின் பால் மா தட்டுப்பாடு எவ்வளவொரு பிரச்சினையாக மாறியிருக்கிறது என்பது அனைவரும் தற்போது அனுபவித்து வருகிற ஒன்றே. இதனை மலையகத்தின் மாற்று உற்பத்தியால் தீர்த்து வைக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. உணவுப் பண்டங்களை இறக்குமதி செய்வதால் அதிகாரக் கதிரைகளில் இருப்போரும் அவர்களை ஒண்டி வாழ்வோரும் இறக்குமதிகளால் தாங்கள் பெரும் நன்மையடைவதாக கருதி, மலையகத்தில் மாற்று உற்பத்திகளின் முன்னேற்றத்தை நோக்கிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டினால் இலங்கையைக் காப்பாற்றுவது கடினமாகும். 

தேயிலைத் தோட்டங்களைப் போலவே, சுமார் மூன்று (3) லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு மேற்பட்ட வளம் மிகுந்த நிலங்கள் றப்பர் தோட்டங்களால் நிறைந்தவையாக உள்ளன. இதுவும் நூற்றாண்டுகளுக்கு மேற்பட்ட கால வரலாற்றை இலங்கையில் கொண்டதாகும் – காலனித்துவம் உருவாக்கிய பொருளாதாரமே. தேயிலைத் தோட்டத் துறை போல றப்பர் உற்பத்தித் துறையும் ஒரு தேக்கமான தன்மையையே கொண்டிருக்கின்றது. இங்கும் மனித உழைப்பின் செறிவை காலத்துக்கேற்ற வகையில் கணிசமான அளவுக்கு தொடரச்சியான வகையில் குறைப்பது முடியாத காரியமாகும். எனவே இலங்கையின் இன்றைய காலகட்டத்தின் பொருளாதாரத்துக்கு இந்த றப்பர் தோட்டத் துறையின் பொருத்தப்பாடு பற்றி மீள்பரிசீலனைகள் செய்யப்பட்டு மாற்று ஏற்பாடுகளை நோக்கிய முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இல்லையெனில் இந்த றப்பர் தோட்ட நிலங்களும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு எதிர்மறையான தாக்கங்களை விளைவிப்பவையாகவே அமையும். 

(கடிதத் தொடர் 16ல் தொடருவோம்.)