(கிருஷாந் உடன் சாகரன்)
மனித உரிமை மீறல்களால் அதிகம் பாதிக்கப்பட்டு, நீதிக்காக ஏங்கும் நாம், சக மனிதர்களின் வாழ்வுரிமைகள் அழிக்கப்படும்போது கட்டாயமாக குரல்கொடுக்க வேண்டும். மலையக மக்கள் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து அறுபது வருடங்கள் கடந்தும் அந்த மக்கள் அடிமை நிலையிலிருந்து விடுதலை பெறவில்லை. பொருட்களின் விலைகள் மின்னல் வேகத்தில் ஏறினாலும் அம்மக்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவு கூட்டப்படவில்லை.மிக மோசமான உழைப்பு சுரண்டலை எதிர்கொள்கின்றனர். எத்தனையோ மனித உரிமைகள் அமைப்புக்கள், தொழிலாளர் அமைப்புக்கள் இருந்தும் இந்த விடயம் குறித்து கவனம் எடுக்கவில்லை.
இப்போது அவர்கள் 1000 ரூபா கேட்டு தெருவுக்கு வந்திருக்கின்றனர். இந்நேரத்தில் அவர்களின் போராட்டங்களில் எம்மால் கலந்துகொள்ள முடியவில்லையாயினும், போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்போம். இந்தத் தீவிலிருந்து வெளிச்செல்லும் ருசிகரமாசன தேநீரில் மலையக மக்களின் இரத்தம் கலந்திருப்பதை உலகுக்கு தெரியப்படுத்துவோம்.
முதலாளித்துவம் எப்போதும் இலாபங்களை தமக்கிடையேயும் நஷ்டங்களை தொழிலாளர்கள் இடையேயும் பகிர்ந்து கொள்ளும். தற்போதைய பல்தேசியக் கம்பனிகளும் சர்வதேசமயமாக்கலும் இனையே செய்து வருகின்றன. தற்போது எல்லாம் முதலாளத்துவம் பாவிக்கும் நஷ்டம் என்ற சொற்பதம் வருமானத்தில் எதிர்பார்ததைவிட அல்லது கடந்த நிதியாண்டு/ நிதிக்காலப்பகுதியை விட குறைவான வருவாயைப்(Income Lost) பெறுவதையே குறிக்கின்றது. பாவம் தொழிலாளர்கள் இந்த நவீன முதலாளித்துவத்தின் சூட்சம வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் புரியாமல் மௌனம் ஆவதும், போராடாமல் இருப்பதும் உண்டு. தொழிலாளர்கள் அறிவூட்டப்படவேண்டும் இதனையே இந்தத் தொழிலாளர்களின் முற்போக்குத் தலமைகள் புதிஜீவிகள் செய்யவேண்டும்.