தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் போன்று இல்லாமல், நடிகர்கள் நடிக்கட்டும், அரசியலுக்கு அவர்கள் வேண்டாம்’ என்று கூடுமானவரை தனித்து நின்று பழகியிருக்கிறது கேரளம். அரசியலுக்குள் திரைப்பட நடிகர்களின் வரவைக் கேரள மக்கள் பாரம்பரியமாகவே விரும்பி வரவேற்காதவர்களாகப் பழகியிருக்கிறார்கள். இது நடிகர்களுக்கு வரமா? இல்லை, சாபமா என்று ஆராய்ந்தால், பலரும் “இது கேரள மக்களின் சாணக்கியத்தனம்” என்று குறும்பு கொப்பளிக்கச் சொல்கிறார்கள்.
எது எப்படியிருந்தாலும், கேரள அரசியலில் நடிகர்களுக்குக் வரவேற்பு கிடைக்காமல் போனதற்கான காரணம் மட்டும் சிதம்பர ரகசியம் போலவே தொடர்கிறது. கேரளத்தில் மிகப் பிரபலமாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் அரசியலில் இறங்கினால், சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் அவர்களுக்கு படவுலகில் கிடைத்துவரும் வரவேற்பும் மரியாதையாதையும் அரசியலில் நுழைந்தால் கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால்தான் அவர்கள் அரசியலில் இறங்கும் விஷப்பரீட்சையில் இதுவரை இறங்கவில்லை.
ரஜினிகாந்த், விஜய் தமிழக அரசியலில் குதிப்பார்களா என்று நடுநடுவே யூகங்கள் கிளம்புகிற மாதிரி, மம்மூட்டி, மோகன்லால் அரசியலுக்கு வருவார்களா என்ற வெறும் யூகங்கள் கூட கேரளத்தில் கிளம்புவதில்லை. ஏனென்றால், அரசியலில் சூப்பர் ஸ்டார்களாக முழு நேர அரசியல்வாதிகள் அநேகர் இருப்பதால், நிழலுக்குக்கூட அரசியல் பக்கம் ஒதுங்க முடியாது என்று மலையாள நடிகர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஒரு சிலரும் வெகுசில விதிவிலக்குகளும்
கேரளம் உருவானது 1956-ல். இந்த 60 ஆண்டுகளில் மலையாளப் படவுலகிலிருந்து தேர்தலில் பங்கெடுத்தோரின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘செம்மீன்’ பட இயக்குநர் ராமு காரியாத் 1965-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இடது கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவுடன் வெற்றி பெற்றார். கேரளத்தின் மார்க்கண்டேயன் என்று புகழப்படும் பிரேம் நசீர் 725 படங்களில் நடித்திருந்தாலும், காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக இருந்தாலும் தேர்தல்களில் சொந்த ஊரில் பஞ்சாயத்து தேர்தலில் கூட போட்டியிடவில்லை.
அந்நாளின் சூப்பர் ஸ்டார்களான சத்யன் , மது போன்றவர்கள்கூட அரசியலிலிருந்து தள்ளியே நின்றார்கள். 1990-களில் இடது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவில் போட்டியிட்ட பட இயக்குநர் லெனின் ராஜேந்திரன், சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற முரளி ஆகியோர் கடந்த காலங்களில் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியைத்தான் தழுவினார்கள்.
ராமு காரியாத் போலவே மற்றோரு விதிவிலக்கு, மலையாள நடிகரான கணேஷ்குமார். இவர் தனது சொந்த ஊரான பத்மனாபபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, போக்குவரத்து அமைச்சரானது கேரள அரசியல் வரலாற்றில் அதிசயமான பதிவு. அமைச்சராக கணேஷ்குமார் சிறப்பாகச் செயல்பட்டு கேரள மக்களின் பாராட்டினைப் பெற்றார். இவரது வெற்றிக்குக் காரணம், சொந்தத் தொகுதியில் இவருக்கும் பிரபல அரசியல்வாதியான இவரது தந்தை பாலகிருஷ்ண பிள்ளைக்கும் இருந்த தனிப்பட்ட செல்வாக்கு. கணேஷ்குமாரின் தனிப்பட்ட செல்வாக்கு சேதாரம் ஆகாமல் இருக்கிறதா என்று 2016 தேர்தல் சொல்லிவிடும்.
தனித்தன்மையை இழக்கிறதா?
2014 நாடாளுமன்றத் தேர்தலில் மலையாள நகைச்சுவை – குணசித்திர நடிகரான இன்னசண்ட், காங்கிரசின் முக்கியத் தலைவரான பி.சி. சாக்கோவை இடது முன்னணி ஆதரவுடன் வெற்றி பெற்றது எல்லாக் கேரள அரசியல் கட்சிகளுக்கும் திருப்பு முனையாக அமைந்துவிட்டது என்கிறார்கள். அதனால், இடது கூட்டணியும் சரி, ஐக்கிய ஜனநாயக கூட்டணியும், பிஜேபி கட்சியும், நான்காம் ஐந்தாம் தர வரிசையில் நிற்கும் நடிகர்களைக் களம் இறக்குவதில் தற்போது அதீத ஆர்வம் காட்டிவருகின்றன.
ஆனால் இந்தக் கட்சிகள் எல்லாம் ஒரு விஷயத்தை வசதியாக மறந்துவிட்டன. சாக்கோ சொந்த தொகுதியான திருச்சூரில் போட்டியிடாமல், பக்கத்துத் தொகுதியான சாலக்குடியில் போட்டியிட்டார். மண்ணின் மைந்தன் இன்னசண்ட் வெற்றி பெற்றதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால் , இன்னசன்ட்டின் வெற்றி ‘ஒரு கண் திறப்பாக’ கேரள அரசியல் கட்சிகள் எடுத்துக் கொண்டிருப்பது ‘அரசியலில் நடிகர்களுக்கு இடமில்லை’ என்ற தனது தனித்தன்மையை கேரளம் இழக்கத்தொடங்கியிருக்கிறதோ எனும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
களத்தில் நட்சத்திரங்கள்
இந்தத் தேர்தலில் இடது முன்னணி, நடிகர் முகேஷை கொல்லம் தொகுதியில் போட்டியிட வைக்கிறது. குணசித்திர நடிகை கேபிசி. லலிதாவுக்கு வடக்கஞ்சேரி தொகுதியை இடது முன்னணி ஒதுக்க, கட்சி ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்க ..”உடல் நலம் சரியில்லை’ என்று சொல்லி லலிதா கழட்டிக் கொண்டுவிட்டார். நடிகர்கள் சித்தீக், ஜெகதீஷ் இருவரையும் தேர்தல் களத்தில் இறக்குகிறது காங்கிரஸ். ஜெகதீஷ், கணேஷ் குமாரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். ஜெகதீஷ் – கணேஷ் குமாருக்கிடையில் தேர்தல் யுத்தம் தொடங்கிவிட்டது.
இந்த ‘பகீர்’ மாற்றம் போதாதென்று கேரளத்தில் நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் தோன்றியுள்ளன. ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகர்களின் படங்களைக் கொண்டாடுகிறார்கள். இவை, கேரளம் கண்டு வரும் மாற்றங்கள். அதனால் நடிகர்களை வேட்பாளர்களாகப் போட்டியிடச் செய்தால், நடிகர்களைப் பிரச்சாரம் செய்யச் செய்தால், தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று தீர்மானித்து கேரள அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வியூகங்களை அமைத்து போட்டியைச் சந்தித்து வருகின்றன.
தாங்கள் சார்ந்திருக்கும் கட்சிக்காக காலந்தோறும் உழைத்து அக்கட்சியின் மீது கொள்கைப் பிடிப்பு மிக்கவர்களாக விளங்கி வந்த நடிகர்களை மட்டுமே, தேர்தலில் கேரள மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். அந்தச் சரித்திரத்தை, 2016 தேர்தலில் போட்டியிடும் நடிகர்கள் மாற்றுவார்களா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.