மழை வெள்ளத்தில்….! மக்கள் வெள்ளம்……..!!

(சாகரன்)
சாயந்தரம் கிராமத்தை அடைந்ததும் நாமும் உணர்வால் கிராமத்தவர்கள் ஆகிவிடோம். அந்த சூழல் மக்களின் வெள்ளந்தியான பழகும் முறை, விருந்தோம்பும் பண்பும், வறுமையில்லும், வசதியின்மையிலும் நிறைவுகாணும் மனநிலை என்னை ரொம்பவும் கவர்ந்தேவிட்டது. எனது வாழ்க்கைப் பயணத்தில் நான் இது போன்ற பல அனுபவங்களை கடந்து வந்திருந்தாலும் இவ் அனுபவம் இன்னும் ஒரு புதிய அனுபவத்தைவே தந்தது. எம்மை வரவேற்பது போல் நாம் கிராமத்தை அடைந்துதம் மழை கொடோ கொட்டென்று கொட்டியது. மக்கள் மனங்களில் மகிழ்ச்சி, ஆரவாரம், கூதூகலம். சிறுவர்கள் தம்மை மறந்து மழையிற்குள் நனைந்து கூத்தாடினார்கள். வயது வந்தோரும் இந்த சிறுவர்களின் குதூகலிப்பில் கலந்து கொண்டனர். எனது நண்பர் தான் ஒரு உச்சநீதி மன்ற வக்கீல் என்பதையும் மறந்து சிறுவர்களுடனும் இணைந்து கொண்டார்.


என்னை இவர்கள் தம்முடன் இணைத்துக் கொள்ளவில்லை என்ற ஆதங்கம் எனக்குள் இருந்தாலும்…. இருக்கவே இருக்கின்றது பாரதிராஜரின் கனவுக் காட்சிகள், நானும் நனைந்தே கூத்தாடினேன் சேற்றிற்குள். சிறு வயதில் ஆடிய கரகமும், காவடியும், மட்டக்களப்பு நண்பர்களுடன் பல்கலைக் கழகத்தில் ஆடிய மட்டக்களப்புக் கூத்தும் என் கற்பனையில் நன்றாகவே இடம் பிடித்தன. பெண்கள் ‘அண்டா’ பாத்திரங்களில் மழைநீரைச் சேகரித்தனர். செம்புகளில் நேரடி மழை நீரைச் சேகரித்தனர். இது சத்தான தண்ணீர் என்று பின்பு இரவுச்சாப்பாட்டுடன் பரிமாறினர். முணிக்கொருதடவை தமது கறவை மாட்டில் கறந்த பாலில் காப்பி கொடுத்து மழையால் ஏற்பட்ட இளம் கூதலுக்கு ஒத்தடம் கொடுத்தனர். யாரும் மழையை, மழை வெள்ளத்தைக் கண்டு அஞ்சவில்லை.

மழை வெள்ளமும், மேலதிக நீரும் வாய்கால் வழியோடி ஏரிகளில் தேங்கியது. எந்த வீட்டுச் சுவரும் மழை நீர் பாய்சலைத் தடுக்கவில்லை. காலையில் காலைக் கடன் கழிக்க கொல்லைப்புறம் சென்ற போது இந்த மழைநீரே எம்மைச் சுத்தப்படுத்த உதவியது. கிராமங்களில் அவசியம் உருவாக்கப்படவேண்டியது கழிவறைகள் என்ற கருத்து என்னிடத்தில் உறுதியாக இருந்தாலும் இந்த கொல்லைப்புற கலாச்சாரம் ஒரு வகை மகிழ்சியையும், கிராமங்களின் மண்வாசனையையும் எனக்கு உணர்த்துவதில் பின்நிற்கவில்லை.

சென்னையின் வெள்ளத்தை மக்கள் குறை கூறுகின்றனர். வழித்தோடும் கால்வாய்களை அடைத்துவிட்டும் நீரைச் உள்வாங்கும் ஏரிகளை மூடி மாடிகளும் ஆக்கிவிட்டும்…. நீரை உறுஞ்சும் நிலங்களை கட்டங்களால் நிரப்பியும் விட்டால் மழை வெள்ளம் எங்குதான் செல்ல முடியும்? பெருக்கெடுப்பதைத் தவிர வேறு வழியில்லைத்தானே. இயற்கையை அனுசரித்து வாழப் பழகாத மனித கூட்டம் இவ்வாறான மனித அவலங்களை சந்தித்தே தீரும்.

காற்று வீசுவதற்கு வெளிவேண்டும்….. தண்ணீர் பாய்வதற்கு வாய்கால் வேண்டும்… அன்பைச் செலுத்த உள்ளம் வேண்டும்…. கவலையை மறந்து அழுவதற்கு வாய்ப்பு வேண்டும்…. காமத்தை தீர்க்க தாம்பத்தியம் வேண்டும்….. உரிமைகளுக்கு சுதந்திரம் வேண்டும்…. இப்படியான ‘வேண்டும்’ களை இல்லாமல் செய்தால் இவை பெருக்கெடுத்து… போராடி…. தமக்கான வழிகளைத் தேடி நகரத்தான் செய்யும். இதுதான் சென்னையில் இன்றைய மழை வெள்ளத்தின் யதார்த்தம். இந்த யதார்த்தை சென்னை மக்கள் உள்வாங்கிக்கொண்டு எதிர்காலத்தை நோக்கிய சரியான திட்டமிடலுடன் பயணிக்க வேண்டும்…!
(இன்னும் வரும்…….மழை வெள்ளம்……..?)