(எம்.எஸ்.எம். ஐயூப்)
கடந்த வாரம் அரசாங்கத்தினால் கைவிடப்பட்ட 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தையும் அதேவாரத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தையும் பார்க்கும்போது, இந்த அரசாங்கத்துக்கு, நல்லதொரு விடயத்தையாவது சர்ச்சைகள் இல்லாமல் செய்ய முடியாதா என்ற கேள்வி எழுகிறது. அந்த இரு சட்ட மூலங்களையும் சர்ச்சைகளுக்கு வழிவகுக்காமல் இதைவிட இலகுவாக நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால், அரசாங்கமே சர்ச்சைகளை உருவாக்கி, அவற்றில் சிக்கிக் கொள்ள நேரிட்டது.
சுருக்கமாகக் கூறுவதாயின், அரசாங்கம் 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் அநாவசியமான சில வாசகங்களைப் புகுத்தி, நீதிமன்றம் உட்பட, பலர் அவற்றை எதிர்த்த போது, அந்த வாசகங்களை நீக்கிவிட்டு, பின்னர், மொத்தமாக அந்த அரசமைப்புத் திருத்தத்தையே குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டது.
கலப்புத் தேர்தல் முறையை, முன்னதாகவே மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் சேர்க்காமல், பின்னர் அதை அச்சட்ட மூலத்தில் திணிக்க முற்பட்டதில், அரசாங்கம் அநாவசியமாக மற்றொரு சர்ச்சையில் சிக்கிக் கொண்டது. அதை ஆரம்பத்திலேயே அச் சட்ட மூலத்தில் சேர்த்திருந்தால், அதை நிறைவேற்றும்போது, நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியை ஓரளவுக்காவது தவிர்த்திருக்கலாம்.
20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் நோக்கம், சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களைத் தற்போது நடைபெறுவதைப் போல், கட்டம் கட்டமாக நடத்தாமல், ஒரே நாளில் நடத்துவதே எனக் கூறப்பட்டது. நல்ல விடயம். எவருமே அதை எதிர்க்க முடியாது. தேர்தல் கண்காணிப்புத் தொழிலில் ஈடுபடுவது எப்போது என்று ஏங்கிக் கொண்டிருக்கும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மட்டுமே, அந்த நோக்கத்தை எதிர்த்து இருந்தன.
அரசாங்கம் எதைச் செய்தாலும் எதிர்க்கும் ஒன்றிணைந்த எதிரணி என்றழைக்கப்படும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களும் இந்த நோக்கத்தை எதிர்க்கவில்லை. அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போடுவதற்காக இந்தச் சட்ட மூலத்தை முன்வைத்ததாகவே அவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
அரசாங்கம் மாகாண சபைகளின் உரிமைகளைப் பறிக்கும் சில வாசகங்களையும் இந்த அரசமைப்புத் திருத்தத்தில் புகுத்தி இருந்தது.சில சந்தர்ப்பங்களில் மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரமும் மாகாண சபைகள் கலைக்கப்பட்டு இருக்கும் காலத்தில் அவற்றின் அதிகாரங்களும் நாடாளுமன்றத்துக்கு வழங்க, இச்சட்ட மூலம் வழி வகுத்து இருந்தது.
அதனால் மாகாண சபைகள், இந்தச் சட்ட மூலத்தை எதிர்த்தன. மாகாண சபைகளின் உரிமைகள் சம்பந்தப்பட்டதால் அச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு மாகாண சபைகளின் இணக்கமும் தேவைப்பட்டது. அதற்காக அது மாகாண சபைகளுக்கு அனுப்பப்பட்ட போது, சில மாகாண சபைகள் தமது அதிகாரங்களைப் பறிக்கும் வாசகங்கள் இருப்பதனால் அதை நிராகரித்தன.
எனவே, அந்தப் பிரச்சினைக்குரிய வாசகங்களைச் சட்ட மூலத்திலிருந்து நீக்க, அரசாங்கம் முடிவு செய்தது. அதை மாகாண சபைகளுக்கு அறிவிக்கவே, சில மாகாண சபைகள் அதற்கு இணக்கம் தெரிவித்தன. அவ்வாசகங்களை நீக்க எடுத்த முடிவு, அச் சட்ட மூலத்தைப் பரிசீலித்து வந்த உயர் நீதிமன்றத்துக்கும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏனோ நீதிமன்றம் அதைக் கருத்தில் கொள்ளவில்லை.
அதேவேளை, மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போட முடியாது என்றும் நீதிமன்றம் கூறியது. எனவே, சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறுவது மட்டுமல்லாது, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம், மக்களாலும் அங்கிகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.
தாம் நீக்கிவிடப் போவதாக அறிவித்த வாசகங்களை நீக்கிவிட்டு, தேர்தல்களை ஒத்திப் போடாத வண்ணம், அந்த அரசமைப்புத் திருத்தத்தை மீண்டும் மாகாண சபைகளுக்கும் நீதிமன்றத்துக்கும் சமர்ப்பித்து இருந்தால், அரசாங்கம் அந்த அரசமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றியிருக்க முடிந்திருக்கும். ஆனால் அதைச் செய்யாது, அரசாங்கம் அந்தத் திருத்தத்தை ஒட்டு மொத்தமாக தூக்கியெறிந்துவிட்டது. அவ்வாறாயின் அரசாங்கம் அந்தத் திருத்தத்தின் மூலம் என்ன எதிர்ப்பார்த்தது என்பது எவருக்கும் விளங்கவில்லை.
மற்றைய சட்ட மூலத்தின் முக்கிய நோக்கம், மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் போது, அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் தமது வேட்பாளர் பட்டியல்களில் 30 சதவீதத்தைப் பெண்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பதைச் சட்டமாக்குவதேயாகும். எனவே, அதையும் எவரும் எதிர்க்கவில்லை. ஆனால், அரசாங்கம் அந்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றிக் கொள்ளும் போது, அதற்கான நாடாளுமன்ற விவாதத்தின் குழு நிலையின் போது, அதற்கு ஒரு திருத்தத்தைக் கொண்டு வருவதாக அறிவித்தது. அதை எதிர்க் கட்சிகள் பெரும் சர்ச்சையாக்கின.
ஆனால், அந்தத் திருத்தமும் எதிர்க்க வேண்டியதல்ல. அதன் உள்ளடக்கம் சர்ச்சைக்குரியதல்ல. தற்போதைய விகிதாசார தேர்தல் முறைக்குப் பதிலாக விகிதாசார முறையினதும் தொகுதிவாரி தேர்தல் முறையினதும் கலப்பு முறையின் கீழ், மாகாண சபைத் தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும் என்பதே அந்தத் திருத்தத்தின் மூலம் கூறப்பட்டது. ஏற்கெனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைக் கலப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கலப்பு முறையின் கீழ், தொகுதி வாரியாக எத்தனை வீதம் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் விகிதாசார முறையில் எத்தனைப் பேர் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதைப் பற்றிய சர்ச்சைகள் இருக்கின்றன. ஆனால், கலப்பு முறை தான் வேண்டும் என்பதை எவரும் எதிர்க்கவில்லை.
ஆனால், பெண்களின் பிரதிநிதித்துவம் பற்றிய சட்டமூலத்தின் திருத்தமாகக் கலப்பு தேர்தல் முறையை சேர்க்க முற்பட்ட போது, அது பெரும் பிரச்சினையாக மாறிவிட்டது. ஒன்றிணைந்த எதிரணியினர் நாடாளுமன்றத்தின் நடுவே வந்து கூச்சலிடத் தொடங்கினர். அவ்வாறான எதிர்ப்புகள் மத்தியிலேயே அச்சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் எவரும் எதிர்க்காவிட்டால், கலப்பு தேர்தல் முறையையும் எவரும் எதிர்க்காவிட்டால், அந்த இரு விடயங்களையும் ஒரே சட்ட மூலத்தின் மூலமாகக் கொண்டு வருவதை ஏன் எதிர்க்க வேண்டும்?
ஒரு சட்டத்துக்கு அதன் குழு நிலை விவாதத்தின் போது, சிறு சிறு திருத்தங்களைக் கொண்டு வருவதே வழமை.ஆனால், இந்த விடயத்தில், அடிப்படைச் சட்ட மூலம், ஓரிரு வாசகங்களாகவே இருந்தது. ஆனால், திருத்தமோ அதை விடப் பல மடங்கு நீடித்த ஒன்றாக இருந்தது.
பிரச்சினை அதுவல்ல; அரசாங்கம் ஏன் ஆரம்பத்திலேயே இரண்டு விடயங்களையும் ஒரே சட்ட மூலத்தின் மூலம் கொண்டு வரவில்லை என்ற கேள்வி எழுகிறது. அல்லது இரண்டு விடயங்களையும் இரண்டு சட்டமூலங்களாகக் கொண்டு வர முடியும். ஒரு சில வாசகங்களைக் கொண்ட பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான விடயத்தை, அடிப்படைச் சட்ட மூலமாகவும் கலப்பு தேர்தல் முறையை திருத்தமாகவும் கொண்டு வருவது தடையல்ல; சட்டவிரோதமானதும் அல்ல. ஆனால், அது சற்று வித்தியாசமான செயலாகவே தெரிந்தது. அந்த நிலைமையையே, குழப்பம் விளைவிப்பதற்காக காத்துக் கொண்டு இருக்கும் மஹிந்த அணியினர் பாவித்தனர்.
20 ஆவது அரசமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் சில மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டிவரும். அல்லது முன் கூட்டியே நடத்த வேண்டிவரும். ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்ட மாகாண சபைகள், தமது பதவிக் காலம் முடிவடையும் முன் கலைய விரும்பாததால், விரைவில் கலையவிருக்கும் மாகாண சபைகளின் பதவிக் காலம் நீடிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
அதாவது, விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் ஒத்திப் போடப்படலாம் அல்லது அவற்றின் பதவிக் காலம் நீடிக்கப்படலாம் எனக் கூறப்பட்டது.
எனவே, தேர்தல்களை எதிர்நோக்க முடியாது, அவற்றை ஒத்திப் போடுவதற்காகவே அரசாங்கம் இந்த அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதாக ஒன்றிணைந்த எதிரணியும் சில தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் அரச சார்பற்ற அமைப்புகள் கூறிவந்தன. அந்தத் திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியவுடன் அதைக் கைவிட்ட அரசாங்கம், பெண்கள் பிரதிநிதித்துவத்துக்கான சட்ட மூலத்துக்குள் கலப்பு தேர்தல் முறை தொடர்பான திருத்தத்தைத் திணிக்க முற்பட்ட போது, கூட்டு எதிரணி அதையும் மாகாண சபைகளை ஒத்தி வைப்பதற்கான ஒரு தந்திரமாகவே வர்ணித்தது.
ஒரே நாளில் சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை நடத்துவதை நோக்கமாகக் கொண்ட 20 ஆவது திருத்தத்துக்கு மீண்டும் வருவோம். கிழக்கு, வட மத்திய மற்றும் சபரகமுவ ஆகிய மூன்று மாகாண சபைகளினதும் பதவிக் காலம் முடிவடைந்து, அவற்றுக்காக தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், அச்சட்ட மூலம் ஏன் கொண்டு வரப்பட வேண்டும்? அந்தத் தேர்தல்கள் முடிவடைந்த பின் கொண்டு வர முடியாதா என்ற கேள்வியும் சிலருக்குள் எழலாம். அதேவேளை, சில மாகாண சபைகளுக்கான தேர்தல்களை, இதற்காக ஒத்தி வைத்தால் என்ன குறைந்து போகப் போகிறது என்ற கேள்வியை மற்றொரு சாரார் எழுப்பலாம்.
சகல மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள், ஒரு போதும் ஒரே நாளில் நடைபெற்றதேயில்லை. 1988 ஆம் ஆண்டு மாகாண சபைகளுக்கான முதலாவது தேர்தல்களும் மூன்று கட்டங்களாகவே நடைபெற்றன. இரண்டாவது மாகாண சபைத் தேர்தல்கள் 1993 ஆம் ஆண்டு நடைபெற்ற போது, இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாண சபையைத் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்கள் நடைபெற்றன. அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் ஒரு போதும் ஒரே நாளில் நடைபெறவில்லை.
1990 ஆம் ஆண்டு, வடக்கு, கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டது. போர் நடைபெற்ற காரணத்தால் அச்சபைக்கான தேர்தல் உடனடியாக நடைபெறவில்லை. 2006 ஆம் ஆண்டு, உயர் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. அதன் பின்னர், கிழக்கு மாகாணத்தில் 2008 ஆம் ஆண்டிலும் 2013 ஆம் ஆண்டு வட மாகாணத்திலும் மாகாண சபைத் தேர்தல்கள் முதன் முதலாக நடைபெற்றன.
மாகாண சபைகளுக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல்கள் ஒரே நாளில் நடைபெறாமல் கட்டம் கட்டமாக நடைபெறுவதால் ஏற்படும் பாதகமான விளைவுகளைப் பற்றி நாட்டு மக்களுக்கு அனுபவம் இருக்கிறது. இதனால் அரசாங்கத்துக்கு மட்டுமல்லாது அரசியல் கட்சிகளுக்கும் மேலதிக செலவு ஏற்படுகிறது. அதேவேளை, முதல் கட்டத் தேர்தல்களின் முடிவுகள் அடுத்த கட்டத் தேர்தல்களின் போது, வாக்காளர்களைப் பாதிக்கிறது. அதாவது, அவர்களும் முதற்கட்டத்தில் வெற்றி பெற்ற கட்சிக்கே, வாக்களிக்கத் தூண்டப்படுகிறார்கள். இது, ஜனநாயகத்தைப் பாதிக்கும் நிலைமையாகும்.
ஆனால், தற்போதைய நிலையில், தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவதாயின், சில மாகான சபைகளின் தேர்தல்களை ஒத்திப் போட வேண்டும். மேலும், சில மாகாண சபைகளின் தேர்தல்களை உரிய காலத்துக்கு முன்னதாகவே நடத்தவும் நேரலாம்.
ஆனால், தேர்தல்களை ஒத்திப் போடுவதனால் வாக்காளர்களின் வாக்குரிமை மீறப்படுவதாகவும் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதனால் மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடையும் வரை அவற்றை நடத்த மக்கள் வழங்கிய ஆணை மீறப்படுவதாகவும் சில அரச சார்பற்ற அமைப்புகள் வாதிடுகின்றன. இந்த வாதங்களை ஏற்பதாக இருந்தால், மாகாண சபைத் தேர்தல்களை ஒரு போதும் ஒரே நாளில் நடத்த முடியாது போய்விடும்.
தேர்தல்கள் ஒரே நாளில் நடைபெறுவதை உயர் நீதிமன்றம் எதிர்க்கவில்லை. தேர்தல்களை ஒத்திப் போட முடியாது என்றே கூறியது. அதாவது, சில மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதன் மூலம் தேர்தல்களை ஒரே நாளில் நடத்த முடியும்.
அதற்காக 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை வகுக்கும் போது, அதிகாரப் பரவலாக்கல் முறையை மேலும் சீர்செய்வதாக சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் தொடர்ந்து வாக்குறுதியளித்து வரும் அரசாங்கம் மாகாண சபைகள் கலைக்கப்பட்டால், அவற்றின் அதிகாரங்களை நாடாளுமன்றம் அமுலாக்கும் என்ற சட்டப் பிரமாணங்களை ஏன் அறிமுகப்படுத்தியது என்பது விளங்காத புதிராகவே இருக்கிறது.
மாகாண சபைகளின் அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் சட்டப் பிரமானம் காரணமாகவும் தேர்தல்களை ஒத்திப் போடும் பிரமாணங்கள் காரணமாவும் உயர் நீதி மன்றம் 20 ஆவது அரசமைப்புத் திருத்தம் அரசமைப்புக்கு முரணானது என்றும் அதை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும என்றும் தீர்ப்பு வழங்கிய போது, அதிகாரப் பரவலாக்கத்தை எதிர்க்கும் மஹிந்த அணியினர் வெகுவாக மகிழ்ந்தனர். மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிக்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறிய போது, அவர்கள் தமது கொள்கையின் படி கவலையடைய வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் திட்டமொன்று எந்தக் காரணத்துக்காகவாவது முறியடிக்கப்படுகிறதே என்பதற்காகத் தமது கொள்கையையும் மறந்து அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
உண்மையிலேயே, ஒன்றிணைந்த எதிரணியினருக்கு 20 ஆவது அரசமைப்புத் திருத்தத்தில் எதிர்ப்பதற்கு எதுவுமே இருக்கவில்லை. ஒரே நாளில் தேர்தல் நடத்துவதை அவர்கள் எதிர்க்கவில்லை. மாகாண சபைகளின் உரிமைகளைப் பறிப்பதும் அவர்களது கொள்கைக்கு முரணானது அல்ல.
ஒரே நாளில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தப் போவதால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப்போட முயற்சிக்கிறது என அவர்கள் கூச்சலிட்டார்கள். ஆனால், தேர்தல் முறை சீர்த்திருத்தம் தொடர்பாக மஹிந்த அணியின் முக்கியஸ்தரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தனவின் தலைமையில், 2003 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, 2004 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அதன் இடைக்கால அறிக்கையிலும், மாகாண சபைத் தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது. மாகாண சபைத் தேர்தல்களின் போது, வேட்புமனுப் பத்திரங்களில் 30 சதவீதம் இடம் வழங்குவதற்காக மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்ட மூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அது மாகாண சபைகள் தொடர்பானது என்பதால், அதை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும்முன், மாகாண சபைகளின் அங்கிகாரத்துக்கு அனுப்ப வேண்டும் என தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் வாதிட்டார்.
தேர்தல்கள் மத்திய அரசாங்கத்துக்குரிய அதிகாரம் என்ற அடிப்படையில் அது சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டது. இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், அதிகாரப் பரவலாக்கலையும் அதனால் மாகாண சபைகளையும் எதிர்க்கும் ஒருவர், அரசாங்கத்தின் திட்டம் ஒன்றைக் குழப்புவதற்காக மாகாண சபைகளின் உரிமைகளை வலியுறுத்த முற்படுவதேயாகும்.
உண்மையிலேயே, இச்சட்ட மூலத்தை எதிர்க்கவும் ஒன்றிணைந்த எதிரணிக்கு எந்தவித நியாயமான காரணமும் இருக்கவில்லை. பெண்கள் பிரதிநிதித்துவத்தை அவர்களால் எதிர்க்க முடியாது. அதேவேளை, அச்சட்ட மூலத்தில், பின்னர் சேர்க்கப்பட்ட கலப்பு தேர்தல் முறையையும் அவர்களால் எதிர்க்க முடியாது. கலப்பு தேர்தல் முறையை தினேஷ் குணவர்தனவின் தலைமையிலான நாடாளுமன்ற தெரிவுக்குழுவே பரிந்துரை செய்திருந்தது.
அச்சட்ட மூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றொரு முக்கியமான விடத்தையும் அம்பலப்படுத்தினார். கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவருமான உதய கம்மன்பிலவின் சட்டத்தரணி, 20 ஆவது திருத்தம் மாகாண சபைகளின் ‘இறைமை’யைப் பாதிப்பதாக வாதிட்டார் என சுமந்திரன் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
இவ்வாறு, மாகாண சபைகளின் ‘இறைமை’யை வலியுறுத்தும் கம்மன்பிலவும் அதிகார பரவலாக்கலையும் மாகாண சபைகளையும் கடுமையாக எதிர்ப்பவர் என்பது தெரிந்ததே. இச் சம்பவங்கள் அனைத்தும், ஒன்றிணைங்த எதிரணியினர் எந்தளவு சந்தர்ப்பவாதிகளாக இந்த இரண்டு சட்டங்களின் போது நடந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
உண்மையிலேயே, அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை ஒத்திப் போட விரும்பியிருந்தால், அடிப்படையில் நல்லதோர் சட்ட மூலத்தைப் பாவித்து, அரசாங்கம் அதைச் சாதித்துக் கொண்டது. அச்சட்ட மூலத்தில் சிறுபான்மையினர் விரும்பாத சில அம்சங்கள் இருப்பது வேறு விடயம்.
ஆனால், பொருளாதார நிலைமை மோசமாகிக் கொண்டு வரும் நிலையிலும் மத்திய வங்கி பிணைமுறிப் பிரச்சினை போன்ற ஊழல்கள் காரணமாகவும் தேர்தல்களை ஒத்திப் போடுவதால் அரசாங்கம் நன்மையடைய முடியாது. மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர ஒரு முறை கூறியதைப் போல் இது போன்ற நிலைமைகளில் காலம் எதிர்க் கட்சிகளுக்கே சேவை செய்கிறது.