மாகாண சபை முறைமை மட்டுமன்றி, அதிகாரப் பரவலாக்கல் என்ற எண்ணக்கருவையே ஏற்றுக் கொள்வதில்லை என்பதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ் மக்களுக்கு வழங்கிய செய்தியாகும். பதவிக்கு வந்து இரண்டு வாரங்களுக்குள், இரண்டு இந்திய ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பேட்டிகளின் போது, இதைத் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளை, அதிகாரப் பரவலாக்கல் மூலமாகவன்றி, பொருளாதார அபிவிருத்தி மூலமாகவே தீர்க்க முடியும் என அவர் கூறியிருந்தார்.
அத்தோடு விட்டுவிடாமல், மாகாண சபைகளுக்குப் பொறுப்பான இராஜாங்க அமைச்சராக முன்னாள் கடற்படை அதிகாரியான ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை நியமித்தார். வீரசேகர என்பவர், நீண்ட காலமாகத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்து வருபவர். குறிப்பாக, அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டையும் மாகாண சபை முறைமையையும் நிராகரிப்பவர். அந்தப் பதவியை ஏற்றது முதல் அவரும், மாகாண சபை முறைமைக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
ஆனால், கடந்த மாதம் ஆரம்பம் முதல், மாகாண சபை முறைமைக்கு எதிராக அவ்வளவு அழுத்தமாக, அரசாங்கத்தின் தலைவர்கள் கருத்துகளைத் தெரிவிப்பதில்லை. மாறாக, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் அதை எந்தத் தேர்தல் முறையின் கீழ் நடத்துவது என்றும், அவர்கள் இப்போது கலந்துரையாடி வருவதாகச் செய்திகள் கூறுகின்றன.
அரசாங்கத்தின் இந்த மாற்றத்துக்கான காரணத்தை அவர்கள் கூறாவிட்டாலும், இந்தியாவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையும் கொடுத்த நெருக்குவாரங்களே அதற்குக் காரணமாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பது தொடர்பாக, இந்தியத் தலைவர்கள் இப்போது அழுத்தம் கொடுக்க விரும்பாவிட்டாலும், அதிகாரப் பரவலாக்கல் முறைமையையும் மாகாண சபை முறைமையையும் மேலும் வலுவூட்ட வேண்டும் எனத் தெடர்ந்தும் வலியுறுத்தி வருகிறார்கள்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று 24 மணித்தியாலங்கள் செல்லும் முன்னர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டொக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட செய்தியோடு இலங்கைக்கு விஜயம் செய்தார்.
அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது, ‘சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் தொடர்பான இலங்கை தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய தீர்வை அடைவதற்காக, இலங்கை அரசாங்கம் தேசிய நல்லிணக்க செயன்முறையை முன்னெடுத்துச் செல்லும் என்ற இந்தியாவின் எதிர்பார்ப்பை’ ஜனாதிபதிக்குத் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்று 11 நாள்களில் கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்தார். அந்த விஜயத்தின் இறுதியில், இரு நாட்டுத் தலைவர்கள் ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, இந்தியப் பிரதமர் மோடியும் இதே வசனத்தைத் தமது உரையில் உள்ளடக்கியிருந்தார். அதேவேளை, இந்த வசனத்துக்கு வேறு அர்த்தங்களைக் கற்பிக்க இடமளிக்காமல் மோடி, “இதில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்குவதும் உள்ளடங்கும்” என்றும் கூறினார். கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பானுடனும் இந்தியாவுடனும் 2019ஆம் ஆண்டு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளினதும் துறைமுக தொழிற்சங்கங்களினதும் நெருக்குதல் காரணமாக, ஜனவரி 31ஆம் திகதி அமைச்சரவை ஒருதலைப்பட்சமாக இரத்துச் செய்தது.
இதையடுத்து, பெப்ரவரி இரண்டாம் திகதி இந்திய துணைத் தூதுவர் வினோத் ஜே. ஜாகொப், சிவநேசதுரை சந்திரகாந்தனையும் (பிள்ளையான்) விநாயகமூர்த்தி முரளிதரனையும் (கருணா அம்மான்) சந்தித்து, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பாகக் கலந்துரையாடி இருந்தார்.
பெப்ரவரி மாதம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்டது. அக்கூட்டத் தொடரின் போது, இலங்கை தொடர்பாகப் பிரேரணையொன்றும் நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில், இலங்கைக்கு இந்தியாவின் உதவி அத்தியாவசியமாகியது. ஆனால், இந்தியா தமது நிலைப்பாட்டை வெளியிடாமல், “இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைப் பூரணமாக நிறைவேற்ற வேண்டும்” என்று மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தது. ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான இந்திர மணி பாண்டே, “நல்லிணக்கச் செயல்முறை ஒன்றின் மூலமும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதன் மூலமும் இலங்கை தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
இந்தியா, தன்னுடைய நலனுக்காகவே இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளைப் பாவிக்கிறது என்பது தெளிவாக இருந்தாலும், இந்தியாவின் இந்த நெருக்குதலுக்கு எதிராக, இலங்கை அரசாங்கத்தால் எதையும் செய்ய முடியாத நிலையே இருக்கிறது. இலங்கை அரசாங்கம், மாகாண சபை முறைமையை இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்தால், இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படும். அது இலங்கைக்கே பாதகமாக அமையும்.
இந்தப் பின்னணியில், இந்தியா அண்மையில், மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற வேண்டும் என்று மற்றொரு செய்தியையும் இலங்கைக்கு சூசகமாக வழங்கியிருக்கிறது. இந்திய மேலவையில், இலங்கை தொடர்பாக எழுந்த ஒரு விடயத்தில், அ.தி.மு.க உறுப்பினர், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், ‘இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடைபெற வேண்டும் என்பதே, இந்தியாவின் நிலைப்பாடாக இருக்கிறது’ எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்திய பிரதிநிதி இந்த விடயத்தை, மனித உரிமைகள் பேரவையில் எடுத்துரைத்ததையும் தமது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், மாகாண சபைத் தேர்தல்களைத் தற்போது நடத்துவதில் அரசாங்கம், சட்டப் பிரச்சினை ஒன்றில் சிக்கிக் கொண்டுள்ளது. 2017ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றிய ஒரு சட்டத் திருத்தமே, இந்தச் சிக்கலுக்குக் காரணமாகி உள்ளது.
2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், அப்போதைய அரசாங்கம் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்துக்கு திருத்தத்தைக் கொண்டு வந்தது. அந்தச் சட்ட மூலம் தொடர்பான குழு நிலை விவாதம், பாராளுமன்றத்தில் நடைபெறும் போது, அந்தத் திருத்தத்துக்கும் மற்றொரு திருத்தத்தை, அரசாங்கம் கொண்டு வந்தது. அதன் மூலம், மாகாண சபைகளுக்கும் கலப்புத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் பின்னர், 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. அத்தேர்தலிலேயே கலப்புத் தேர்தல் முறை பரீட்சித்துப் பார்க்கப்பட்டது. பெரும் குழப்பமான தேர்தல் முறை என்பது, அப்போது தெரிய வந்தது.
எந்தளவுக்கு குழப்பமானது என்றால், தேர்தல் நடைபெற்று பல வாரங்கள் செல்லும் வரை, பல சபைகளில் தவிசாளர்களைத் தெரிவு செய்ய முடியாத நிலை உருவாகியது. அச்சபைகளில் ஆளும் கட்சி உறுப்பினர்களை விட, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தமையே இதற்குக் காரணமாகும். எனவே, தேர்தல் நடைபெற்ற 340 உள்ளூராட்சி மன்றங்களில், 230க்கு மேற்பட்ட சபைகளை வென்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே, கலப்புத் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்றார்.
இந்தப் பின்னணியில், மாகாண சபைத் தேர்தல்களையும் கலப்புத் தேர்தல் முறையில் நடத்துவது, பெரும் சிக்கலாக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கருதுகின்றன. ஆனால், உரிய சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளதால், கலப்புத் தேர்தல் முறையிலேயே மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும்.
தற்போது இந்த விடயம், அரசியல் கட்சிகளுக்குள் விவாதிக்கப்பட்டு வருகிறது. சில கட்சிகள், விகிதாசாரத் தேர்தல் முறைக்கே செல்ல வேண்டும் என்று வாதிடுகின்றன. சிலர், பொருத்தமான திருத்தங்களுடன் கலப்புத் தேர்தல் முறையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்று வாதிடுகின்றன.
கலப்புத் தேர்தல் முறை தான் வேண்டும் என்போருக்கு இடையிலும், அதற்கான உத்தேச மாற்றங்களைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. ஆளும் கட்சி கூடி, இந்த விடயத்தை ஆராய்ந்த போது, மாகாண சபைகளின் எல்லைகளுக்குள் அமைக்கப்படும் தேர்தல் தொகுதிகளுக்கு, ஒவ்வொரு கட்சியும் மூன்று வேட்பாளர்கள் வீதம் போட்டியில் நிறுத்த வேண்டும் என்று சிலர் வாதிட்டுள்ளனர். இதைச் சிறிய கட்சிகளும் பொதுஜன பெரமுனவின் சில முக்கியஸ்தர்களும் எதிர்த்துள்ளனர். எனவே, இப்போது ஒரு புறம் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என இந்தியா போன்ற சக்திகள் அரசாங்கத்தை நெருக்குகின்றன. அதேவேளை, உடனடியாகத் தேர்தலை நடத்த முடியாத வகையில், அரசாங்கம் சட்டச் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.