ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் அண்மையில், ஹட்டனில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு முடிவடைந்த பின்னர், ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு, அவர் மேலும் தெரிவிக்கையில், “முப்பது ஆண்டு காலப் போருக்குப் பின்னர், அரசியலில் ஏற்பட்டுள்ள ஜனநாயக ஆட்சிமுறைமையின் பலாபலன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்னமும் மக்களைச் சென்றடையவில்லை என்று தான் கூற வேண்டும். ஏனெனில், கடந்த 10 ஆண்டுகளாக, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் இருந்த கட்சி, மக்களுக்காக என்ன செய்துள்ளது? இந்தக் கேள்வியை எழுப்பும் போது, அந்தந்தக் கட்சிகளில் உள்ளவர்களே, திருப்தி அடைய முடியாத அளவுக்குத்தான் நிலைமை உள்ளது. எனவே, முட்டி மோதும் அரசியலைக் கைவிட்டு, போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனவும் கலாநிதி சுரேன் ராகவன் கூறினார்.
“கடந்த 10 ஆண்டுகளாக, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் இருந்த கட்சி, மக்களுக்காக என்ன செய்துள்ளது?” 10 ஆண்டுகளாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, நாடாளுமன்றத்தில் இருந்த கட்சி எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பையே சாடுகின்றார் போலும்.
இந்தக் கேள்வியையும் சாடலையும் உருவகித்தே, பலரும் பலவிதத்திலும் கேள்விகளைக் கேட்டும் விவாதித்தும் கூட்டமைப்பை விமர்சித்து வருகிறார்கள். இது, ஒரு சர்ச்சைக்குரிய விடயமாகவே உள்ளது. உண்மையில், குற்றங்களைச் சுமத்த வேண்டும் என்பதற்காகவோ, அறியாமையாலோ இதுபோன்ற எழுந்தமானமாகக் கதைக்கின்ற கதைகள் தோற்றம் பெறுகின்றன. இவை அர்த்தமற்றவை; காகிதப் பூக்கள் போன்றவை.
ஏனெனில், 2009ஆம் ஆண்டு, ஆயுதப் போராட்டம் மௌனம் கண்டது. அதையடுத்து, அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டமைப்பு, 18 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடத்தியது. ஆனால், உருப்படியாக எதுவும் நடைபெறவில்லை; செயற்படுத்தப்படவில்லை. போர் வெற்றியும் தாம் பெரும்பான்மையினம் என்ற மமதையும் அனைத்தையும் கெடுத்தன; தடுத்தன.
அடுத்து, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் மக்களினது உச்சப்படியான பங்களிப்புக் காரணமாகவே, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆனார்.
தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களும் தங்களது வாக்குகளை அள்ளி வழங்கி இருந்தார்கள். அத்துடன், எதிரும் புதிருமாக இருந்த ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திரக் கட்சியும் இணைந்து, ‘நல்லாட்சி’ என்ற பெயரில் ஆட்சி அமைத்தார்கள்.
இதில் கூட, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களது அதிகப்படியான ஆசனங்களை வென்ற (16) கூட்டமைப்பு, புதிய அரசமைப்பு உருவாகுவதன் ஊடாக, இனப்பிணக்கைத் தீர்க்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன், தனது உச்சபட்ச ஆதரவை, நிபந்தனைகள் இன்றி வழங்கி வந்தது.
ஏனெனில், தமிழ் மக்கள் இன்று அனுபவித்து வருகின்ற அனைத்துப் பிரச்சினைகளுமே, இனப்பிணக்கு என்ற ஒற்றைப் பிரச்சினையுடனேயே பின்னிப்பிணைந்து உள்ளன.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், நல்லாட்சி அரசாங்கத்தை ஒருபடி மேலாகவே நம்பினார். காலம் காலமாகத் தமிழ் மக்களால், ‘கறுப்பு நாள்’ ஆகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் இலங்கையின் சுதந்திர தின நிகழ்விலும் பங்குபற்றினார்.
அடுத்து, நம்பிக்கையின் உச்சக்கட்டமாக, பல பண்டிகைகளை கால எல்லையாக முன்வைத்து, அதற்கு முன்னதாக அரசியல் தீர்வு கிடைக்கும் எனத் தமிழ் மக்களுக்கு வாக்குக் கொடுத்தார். ஆனால், வழமை போன்றே அவை பொய்ப்பிக்கப்பட்டு விட்டன. இவ்வாறாக, நல்லாட்சிக் காலத்தில் அரசியல், இராஜதந்திர ரீதியில் விட்டுக் கொடுப்புகளைச் செய்து, தீர்வைப் பெற்றுக் கொள்ளக் கூட்டமைப்பு முயன்றது. ஆனால், அந்த விட்டுக்கொடுப்புகள் எதுவும் பிரயோசனமற்றுப் போனதால், அல்லது அந்த விட்டுக்கொடுப்புகளின் பெறுமதியை, ஆட்சித்தரப்பு உணர மறுத்ததால், தமிழ் மக்கள் மத்தியில் இன்று, கூட்டமைப்பு நலிவுற்ற நிலைக்குச் சென்றுள்ளது.
ஆனால், சம்பந்தன் முழுமையாக நம்பிய புதிய அரசமைப்பு வருகைக்கு ஈற்றில் என்ன நடந்தது? பெரும் ஏமாற்றம் மட்டுமே மி(எ)ஞ்சியது. கடந்த நல்லாட்சிக் காலத்தில், புதிய அரசமைப்பு வருகைக்கு, அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்களிப்போ, கலாநிதி சுரேன் ராகவன் சார்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பங்களிப்போ இருக்கவில்லை; அப்படி இருந்தாலும், அது என்னவென்றே தமிழ் மக்களுக்குத் தெரியவில்லை.
இதில் இன்னொரு விடயமும் கூடவே உள்ளது. கலாநிதி சுரேன் ராகவன் கூறுவது போல, கடந்த 10 ஆண்டுகளாக, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் இருந்த கட்சிகள், மக்களுக்காக என்ன செய்தன என்பதற்கு அப்பால், இனப்பிணக்கைத் தீர்த்து, அதன் ஊடாகத் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர, கடந்த 70 ஆண்டுகளாகத் தமிழ் மக்களது அரசியல் பிரதிநிதிகள், பல ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஆட்சியாளர்களுடன் மேற்கொண்டார்கள். ஆனால், அதன் வழியே தமிழ் மக்கள் அமைதியைக் கண்டார்களா?
இவ்வாறான ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் சமாதான சக வாழ்வை உண்டாக்கும் எனத் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட தருணங்கள் யாவும், சிங்கள இனவாத அரசியல்வாதிகளால், மிகக் கடுமையாக மறுக்கப்பட்ட தருணங்களாகவே வரலாற்றில் பதியப்பட்டு உள்ளன.
இவை இரகசியமோ, இல்லாதவற்றை இட்டுக்கட்டியவைகளோ அல்ல. இலங்கையின் கடந்த 70 ஆண்டு கால அரசியல் தடங்களை, மிகவும் எளிய அவதானிப்புகளூடாகக் கண்டு கொள்வதன் ஊடாக, இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
உண்மையில், தமிழ் மக்களது உளப்பூர்வமான உணர்வுகள் தொடர்பில் நினைப்பதற்கு மறுக்கும் மக்கள் கூட்டமாக, சிங்கள மக்கள் உருவாக்கப்பட்டு விட்டார்கள். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், தமிழ் மக்கள், ஒரு தனித்துவமான தேசிய இனம் என்ற விடயம், சராசரி சிங்கள மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை.
மாறாகத் தமிழ் மக்கள், சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மை இனம் எனச் சிறுமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக, வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் இருந்த கட்சி, அவர்களுக்காக என்ன செய்துள்ளது எனக் கேட்பதை, என்னவென்று சொல்வது?
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அன்று பிரகடனப்படுத்திய சிங்கள மொழி மட்டும் சட்டமே (1956) தமிழ் மக்களை இருட்டுக்குள் தள்ளியது. ஒரு மொழி மட்டும் சட்டமே, இரு நாடு என்ற கருவைத் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு பண்ணியது. அதையடுத்து, 1958ஆம் ஆண்டு இனக்கலவரம், தமிழ் மக்களுக்கு எதிரான மாபெரும் கலவரம் ஆகும்.
நிலைமைகள் இவ்வாறிருக்கையில், என்ன நியாயத்தின் அடிப்படையில் தமிழ்க் கட்சி(கள்) மீது குண்டைப் போடுகின்றார்கள். மற்றவர்கள் எல்லோரும், முதலில் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்ட பூமியில், இன்று நாம் வாழ்கின்றோம்.
மற்றவர்களைக் குறை கூறுதல் என்பது, எ(ம்)ன் மீது தவறில்லை என்று, சாக்குப் போக்குக் கூறித் தப்பித்துக் கொள்வதற்கான சுலபமான வழி ஆகும்.
ஒரு விடயத்தைச் செய்யவோ, ஒரு பொருளைக் கொடுக்கவோ அடிப்படையில் விருப்பம் இருந்தாலன்றி, அதைப் பிடுங்கி எடுக்க முடியாது. இது போலவே, சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுக்கு அடிப்படையில், இனப்பிணக்குக்கு இணக்கப்பாடான தீர்வைக் காண வேண்டும் என்ற மன(மாற்றம்)நிலை வர வேண்டும்.
இலங்கைத் தீவில் 70 ஆண்டு காலமாகத் தொடர்ந்து வருகின்ற அரசாங்கங்கள், உதட்டளவில் மாத்திரமே இனப்பிணக்குத் தொடர்பில் உறவாடி, உரையாடி வருவதே, தீர்வு இன்னமும் பின்நோக்கிச் செல்வதற்கான ஒரேயொரு காரணம் என்பதை இவர்கள் அறியாமல் உள்ளனர்?
மேலும், “தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சாதாரண உரிமைகள் வழங்கப்பட வேண்டும்” என, அங்கு தெரிவித்திருந்த கலாநிதி சுரேன் ராகவன், இதற்கான பாதையை உருவாக்குவதற்காகவே, நான் சுதந்திரக் கட்சியில் இருக்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதில் கூட, கலாநிதி ராகவன் மூன்று விடயங்களைக் கவனிக்கத் தவறி விட்டார் என்றே கூற வேண்டும்.
முதலாவது, தமிழ் மக்கள் 70 ஆண்டு காலமாக, வேண்டி நிற்பது சாதாரண உரிமைகள் அல்ல; மாறாக, தனது இனத்தின் சுயநிர்ணய உரிமையையே ஆகும். சுயநிர்ணய உரிமையைக் கோருவது, தனிநாடு கோருவது என்று அர்த்தப்படாது.
இரண்டாவதாக, இனப்பிணக்குக்குத் தீர்வாகக் கொண்டு வரப்பட்ட அரை குறைத் தீர்வான மாகாண சபை முறைமையையே, இல்லாது ஒழிக்க வேண்டும் எனப் பேரினவாதம் சன்னதம் ஆடுகையில், உரிமைகள் என்ன உரிமைகள்?
மூன்றாவதாக, இலங்கையின் அரசியலிலும் வருகின்ற தேர்தலிலும் மொட்டுக் கட்சியுடன் இணைந்து, சுதந்திரக் கட்சி பயணித்தாலும் சுதந்திரக் கட்சியின் குரல் அங்கு அடங்(க்)கியே வாசிக்கப்படுகின்றது.
இந்நிலையில், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லி விட்டு, மறதியின் பிரமாண்டமான வாசல் வழியே சுலபமாக வெளியேறிச் செல்லலாம் என்ற நிலை தொடரும் வரை, இவ்வாறான உரையாடல்களும் தொடரவே போகின்றன.