ஒரு குளத்தின் அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆட்டுக்குட்டியை கண்ட ஒநாய் ஒன்று அதனை கொன்று தின்றுவிட வேண்டுமென்று அவா கொண்டது. அதற்கான ஒரு உபாயத்தை வகுத்துக்கொண்டது. ‘குளத்தை கலக்கி நான் நீர் அருந்த முடியாதபடி செய்துவிட்டாய்’ என்று ஆட்டுக்குட்டியை பார்த்து கத்தியது. ‘குளத்தின் பக்கமே செல்லவில்லை’ என்று பதறியது ஆட்டுக்குட்டி அப்போ உனது சகோதரன் தான் நான் தண்ணீர் அருந்த முடியாதபடி செய்திருக்கிறான்’ என்று ஆட்டுக்குட்டியை அதட்டியபடி நெருங்கியது ஒநாய். ‘எனக்கு சகோதரர்களே கிடையாது’ என்று உண்மையை பவ்வியமாய் சொன்னது ஆட்டுக்குட்டி. ‘‘ஓ! அப்போ நிச்சயமாய் உனது தந்தையாhர் தான் நான் தண்ணீர் அருந்த முடியாதபடி செய்திருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது’’ என்று கூறி ஆட்டுக்குட்டியை கொன்று புசித்து தனது ஆசையை தீர்த்துக்கொண்டதாம் ஓநாய்.
ஈபிஆர்எல்எவ் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதற்கு காரணம் என்ன? என்று கேட்பவர்கள் இந்த கதைக்கூடாகவே காரணத்தை விளங்கிக் கொள்ளலாம்.
உண்மையில் தாக்குதல் நடாத்தியதற்கான காரணத்தை புலிகளிடம் தான் கேட்டிருக்க வேண்டும். ஈபிஆர்எல்எவ் மீதான தாக்குதல் மட்டுமல்ல ரெலோ மீது தாக்குதல் தொடுத்தார்கள், ரெலோ உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கானவர்களை கொன்றார்கள், சமூகத்தை பீதியடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் பலரை உயிரோடு தீயில் போட்டு கருக்கினார்கள். அடுத்து புளொட் இயக்கதினரை அச்சுறுத்தி, அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடச் செய்தார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான் 1986 மார்கழி 13 இல் ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் தொடுத்தார்கள், ஈரோஸ் இயக்கத்தை தடை செய்யாமல் விட்டிருப்பதாக தம்மை நியாயப்படுத்தியும் கொண்டார்கள்.
இந்த தாக்குதல்களுக்கான காரணத்தை புலிகளிடம் கேட்காததும், புலிகளாக சொன்ன காரணங்களை பகுத்தறிவோடு ஆராய்ந்து பார்க்கத் தவறியதும் கூட இன்றைய கையறு நிலைக்கு காரணமாகும்.
புலிகள் இயக்கத்துடன் இணைந்து களத்தில் நின்று போராடியவர்கள், புலிகளின் நடவடிக்கைகளுக்கு தீவிர ஆதரவு வழங்கியவர்கள் பலர் சக இயக்கங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களில் தமக்கு உடன்பாடில்லை. திட்டவட்டமான காரணம் எதுவும் தமக்கு தெரிவிக்கப்படவில்லை. தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக அத்தாக்குதலில் பங்கெடுக்க நேர்ந்தது என பகிரங்கமாக தெரிவித்துவரும் நிலையில் முகநூல் மாவீரர்கள் சிலர் புலிகளின் இந்த அழித்தொழிப்புக்களுக்கு காரணம் கற்பிக்க முனைகின்றனர்.
1986 மார்கழி 13 இல் ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் நடாத்திய புலிகள் அதனை நியாயப்படுத்த முடியாமல் ‘‘எம்மீது தாக்குதல் நடாத்த திட்டம் தீட்டினார்கள் நாங்கள் முந்திக் கொண்டோம்’’ என்றே பொதுவெளியில் கூற முடிந்தது. 1986 இற்கு பின்னர் பிறந்தவர்கள் மற்றும் பருவமெய்தியவர்களிடம் சக இயகத்தவர்களை சமூக விரோதிகள், துரோகிகள் என்று கூறிவருவது போன்று அன்று புலிகளால் மக்களிடம் கூற முடியவில்லை.
இயக்க மோதல் என்று தங்களுக்கு வசதியாக- புலிகள் மீதுள்ள அபிமானம் காரணமாகவும் அச்சம் காரணமாகவும் – உரையாடல்களிலும் எழுத்துக்களிலும் இன்றுவரை எடுத்தாளப்பட்டு வருகின்றபோதும் அது ஒரு மோதல் அல்ல. புலிகள் இராணுவ முகாம் ஒன்றின் மீது எவ்வாறு இரகசியமாகவும், சடுதியாகவும் தாக்குதலை மேற்கொள்வார்களோ அதே போன்று மார்கழி 13 மாலை கருக்கலில் ஈபிஆர்எல்எவ் முகாம்கள், அலுவலகங்கள், உறுப்பினர்களின் தங்குமிடங்களை சுற்றிவளைத்து; தாக்குதல் நடாத்தினார்கள். புலிகள் தாக்குதல் நடாத்துகிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே பல முகாம்கள் தாக்குதலுக்கு இலக்கானது.
இந்த தாக்குதலின் போது எவ்வித குற்றமும் இழைக்காத பலர் கொல்லப்பட்டார்கள், ஆயிரக்கணக்கானவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள், சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இந்த தாக்குதலைத் தொடர்ந்து பலிகளின் அறிவித்தலின்படி புலிகளிடம் சரணடைந்தவர்கள், பெற்றோர்களால் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எனப் பலர் சடலமாகக் கூட ஒப்படைக்கப்படவில்லை.
இதேவேளை முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகள் காணாமல் போனது குறித்து சர்வதேச நீதி விசாரணை நடாத்தப்பட வேண்டுமென புலிகள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. புலிகளால் கைது செய்யப்பட்டவர்கள், புலிகளிடம் சரணடைந்தவர்கள் தொடர்பில் நீதி விசாரணை வேண்டாம் உண்மையை அறிவதற்கான அக்கறையாவது காட்டப்படுமா?
சமூக அமைப்புக்களின், இயக்கங்களின் தவறுகளை மக்களுக்கு சுட்டிக்காட்டுகின்ற கடமை, பொறுப்பு சமூகத்தில் செயற்படுகின்ற எந்த ஒரு அமைப்புக்கும் நபருக்கும் இருப்பதை போன்று புலிகளுக்கும் இருக்கிறது. ஆனால், தவறிழைத்தவர்களை நிராகரித்துத் தண்டிக்கின்ற பொறுப்பு மக்களுடையதே தவிர எந்த இயக்கதிற்குமுரியதில்லை. இருப்பினும் புலிகள் தீர்ப்பு வழங்கும் பொறுப்பை தமது கையில் எடுத்துக்கொண்டார்கள். இதுவே சமூகத்தில் பல விரும்பத்தகாத விளைவுகளுக்குக் காரணமாய் அமைந்தது. கல்வியில் சிறந்ததெனப் பெருமைப்பட்டுக்கொள்ளும் தமிழ் சமூகம் இன்றுவரை இது குறித்து கேள்வியெழுப்பவில்லை.
ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், பேரவை, என்.எல்.எவ்.ரி போன்ற ஆயுதந் தாங்கிய இயக்கங்களின் சுயாதீனமான அரசியல் நடவடிக்கைகளுக்கு புலிகள் தடை விதித்தனர். அவ்வாறு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவர்களுக்கு உதவுபவர்கள் கொல்லப்பட்டு வந்த நிலையில் இந்த இயக்கங்கள் மக்கள் மத்தியில் பகிரங்கமாக செயற்படுவதற்கான வாய்ப்புக்களை இழந்தன.
இதனைத் தொடர்ந்து வெகுஜன அமைப்புக்களும், அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், கல்விக் கூடங்கள், இதர பொதுதுறைகள், ஊடகங்கள், கலை இலக்கிய நடவடிக்கைகள் அனைத்தும் புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தன. புலிகளின் பயிற்றுவிப்புக்கள், போதனைகளிலிருந்து எவரும் தப்பமுடியவில்லை.
குறித்த காலப்பகுதியில் வாழ்ந்த ஒரு தலைமுறை, சமூகம் புலிகளின் பிரச்சாரத்தை மட்டுமே அறிந்து, தெரிந்து, நம்பி நிற்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானது. தமிழ் பேசும் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்ட தலைவர்கள் இதர இயக்கங்கள் தொடர்பாகவும் குறித்த காலப்பகுதியில் வாழ்ந்த இளைஞர் யுவதிகள் புலிகளுக்கூடாகவே தெரிந்துகொண்டிருக்கிறார்கள். துரோகிகள், துணைப்படைகள் என புலிகள் தெரிவித்தவற்றையே அனேகமானவர்கள் நம்பிக்கொண்டும் இருக்கிறார்கள்.
புலிகளை வைத்து பிழைப்பு நடாத்த கிளம்பியிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் சிலரும், சில ஊடகங்களை சேர்ந்தவர்களும் இதனையே தமது மூலதனமாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள். எதிர்கால சந்ததி சுதந்திரமாக உண்மைகளை கண்டறிவதற்கான தேடலை மேற்கொள்ள வேண்டும். மாயைகளை விலக்க வேண்டும்.