‘பணக்கார உலகுக்கான சூத்திரம் எது? சமத்துவம், சுதந்திரம், நீதி!’ எனும் கட்டுரையில், கார்ல் மார்க்ஸ் காலத்திலிருந்தே மனித இனத்தின் முன்னேற்றத்துக்கான உலகாயதமான காரணங்களையே நாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறோம் என்கிறார் தெய்ர்த்ரே என்.மெக்கிளாஸ்கி. அப்படியென்றால், மார்க்ஸ் காலத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள உழைப்புச் சுரண்டல்கள் யாவும் பொய்யானவையா?
மூலதனப் பெருக்கத்துக்குக் காரணமான உபரி உழைப்பின் அளவை அதிகரிக்கும் அதீத பேராசை எப்படியெல்லாம் மனித உரிமைகளையும் குழந்தைகள் நலனையும் உழைப்பவரின் அவசியத் தேவைகளையும் புறக்கணித்தன என்பதை நாம் அறிவோம். மார்க்ஸ் இந்த உண்மையை அறிவியல் முறையில் பகுப்பாய்வு செய்து வெளியிட்ட பிறகுதான், பல்வேறு உரிமைகளையும் உழைப்பவருக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயம் பல நாடுகளிலும் ஏற்பட்டது.
இன்று குறைந்தபட்ச ஊதியம் பற்றியெல்லாம் நாகரிக சமூகம் பேசுகிறதென்றால், அதற்குக் காரணம் மார்க்ஸ்தான். உலகின் பெரும்பகுதி செல்வமும் ஒரு சிலரிடம் மட்டுமே குவிந்துவருவது குறையுமானால், பணக்காரர்களிடமிருந்து பறிக்க வேண்டிய தேவையும் குறைந்துபோகும். பணக்கார உலகுக்கான சூத்திரம், ‘சமத்துவம், சுதந்திரம், நீதி’ என்கிறார் கட்டுரையாளர். ஆனால், பணக்கார உலகுக்கு இச்சூத்திரம் எப்படிப் பொருந்தும் என்றுதான் தெரியவில்லை.
(மருதம் செல்வா)