ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, தேசத்துக்கு புதன்கிழமை (25) இரவு ஆற்றிய விசேட உரையில், “பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத, பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் , எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம்” என வலியுறுத்தியிருந்தார்.
தேசத்துக்கான உரையின்போது, பல விடயங்களையும் மிகக்காத்திரமாக முன்னவைத்திருக்கும் ஜனாதிபதி, மக்கள் ஆணை திரிபுபடுத்தியதாக காணப்பட்டமையால், பாராளுமன்றத்தை கலைத்தேன் என்றார். ஆக, பொதுத்தேர்தலின் வெற்றியை பிடித்துக்கொள்ளவே பல கட்சிகளும் முயலுகின்றன.அதுவும் ஜனநாயக உரிமையாகும்.
வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அந்த நம்பிக்கையை ஒவ்வொருவரும் வென்றெடுக்கவேண்டும் என்பதே பலரது எதிர்பாரப்பாகும்.
எமக்கு அதிகாரத்தை கையளிக்கையில் ‘மாற்றம்’ ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது. மாற்றம் என எமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்துவிதமான மோசமான பண்புகளை மாற்றுவதையாகும். தற்போது அது நிரூபனமாகியுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சகல பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காணமுடியாது. ஆனால், ஞனரஞ்சக தீர்மானங்களை எடுக்கும் அதேவேளை, அதிரடி முடிவுகளை அவசியம். கடந்த அரசாங்கங்களில் விலைகள் குறைக்கப்பட்டன. ஆனால், அமுல்படுத்தப்படவில்லை. அதனை கண்காணிக்கவும் இல்லை. இதனால், சாமான்ய மக்களே பாதிக்கப்பட்டனர்.
ஜனாதிபதி அனுர பதவியேற்றதன் பின்னர் முட்டையின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஆனால், முட்டை ஆப்பம், முட்டை ரொட்டி, முட்டையை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவு பண்டங்களின் விலைகள் குறைக்கப்படவில்லை. அதனை கண்காணித்து, நுகர்வோர் உரிமை சட்டங்களை மீறுவோருக்கு எதிராக எவ்விதமான தயவு தாட்சியம் இன்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பாடசாலைகளில் தவணை பரீட்சைகளில் சகல பாடங்களிலும் எவ்விதமான புள்ளிகளையும் பெறாத மாணவர்களுக்கு பூஜ்ஜியம் போடுவது கடந்தகாலங்களில் வழக்கமாக இருந்தது. அதனை முட்டை வாங்கிவிட்டார் என்றே கூறுவதை கேள்விப்பட்டிருக்கின்றோம்.
எனினும், நவம்பர் 21ஆம் திகதியன்று நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி, மிகமுக்கியமான பரீட்சையில்,5,740,179 வாக்குகளைப் பெற்று வெற்றிப்பெற்றுள்ளது. இது சாதாரண வெற்றியல்ல. அதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமாயின், சாமான்ய மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவேண்டும். விலைகள் குறைந்தால் அமுல்படுத்த வேண்டும். இல்லையேல், முதல் முட்டையே மாற்றத்துக்கான வெற்றியை அபகரித்துவிடும் என்பதே எமது அவதானிப்பாகும்.
(Tamil Mirror)