இந்தத் தகவலை மூத்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின்போது சொன்னார். பின்னாளில் இதை வேறு சில சிங்கள நண்பர்களும் உறுதிப்படுத்தினர். இது உண்மை என்பதற்கு மேலும் ஒரு சான்று, அப்பொழுது மகிந்த ராஜபக்ஸ அரசாங்கத்துடன் செயற்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியையும் பலவீனப்படுத்தி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாகும்.
அப்பொழுது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் அரசாங்கத்துடன் நெருங்கிச் செயற்பட்டுக்கொண்டிருந்தன. இருந்தும் இவை இரண்டையும் பலப்படுத்துவதற்குப் பதிலாகப் பலவீனப்படுத்துவதிலே ராஜபக்ஸ அரசங்கமும் படைத்தரப்பும் செயற்பட்டன. இதன்படி வடக்கிலே ஈ.பி.டி.பியைக் கரைத்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைத்து விடுவதற்கு சு.கவினர் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தனர். அதேபோலக் கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளைச் சு.கவின் கீழ்க்கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த வேலைத்திட்டத்தில் நாமல் ராஜபக்ஸவும் பஸில் ராஜபக்ஸவும் கடுமையாக வேலை செய்தனர். அப்பொழுது நடந்த தேர்தல்களில் ஈ.பி.டி.பியும் ரி.எம்.வி.பியும் சுயாதீனமாக எந்த முடிவையும் எடுக்க முடியாதளவுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டன. தங்களுடைய வீணைச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஈ.பி.டி.பி விரும்பியிருந்தபோதும் அதை ராஜபக்ஸக்கள் அனுமதிக்கவில்லை. இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சின்னத்திலேயே தேவானந்தாவும் பிள்ளையானும் தேர்தலில் நிற்க வேண்டியிருந்தது. அத்துடன் எந்த விடயத்திலும் சுயாதீனமாக முடிவெடுக்க முடியாதென்ற நிலையை உருவாக்கி, நிர்ப்பந்தித்துக் கொண்டிருந்தது ராஜபக்ஸ அரசாங்கம்.
இவ்வாறு செய்வதன் மூலம் தமிழ்த்தரப்பின் அபிமானத்தை ரி.எம்.வி.பியினாலும் ஈ.பி.டி.பியினாலும் பெற முடியாது என்று கணக்கிடப்பட்டது. பதிலாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தும் வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காகக் கிறீஸ் பூதங்கள் தொடக்கம் நாய்களின் தலைகளை வெட்டி கூட்டமைப்பினரின் வீட்டு வாசலில் வைப்பது வரையிலான சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு செய்வதன் மூலம் கூட்டமைப்பின் மீதான அனுதாபத்தை உருவாக்குவதும் அரசுசார்பான தரப்பின் மீது எதிர்ப்புணர்வை ஏற்படுத்துவதுமாகும். திட்டமிடப்பட்டவாறே ஈ.பி.டி.பியும் ரி.எம்.வி.பியும் இறங்குமுகமாகின. கூட்டமைப்பு ஏறுமுகமாகியது.
ஆனால், 2009 இல் புலிகள் வீழ்ச்சியடைந்ததை அடுத்து என்ன செய்வது, எவ்வாறான முடிவுகளை எடுப்பது என்று தெரியாமல் தடுமாற்றத்துக்குள்ளாகியிருந்த கூட்டமைப்பு இதன்மூலம் தன்னை மீளவும் வலுப்படுத்திக் கொண்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலும் புளோட், ரெலோ போன்ற ஆயுதமேந்திய ஈழவிடுதலை இயக்கங்கள் உள்ளனவே என்று யாரும் கேட்கலாம். அங்கே இந்த இரண்டுமிருந்தாலும் தமிழரசுக் கட்சியே தீர்மானிக்கும் வலுவுடையது என்பதால் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதே நல்லதென சிங்களத் தரப்பினால் கருதப்பட்டது. அன்றைய இந்த மதிப்பீடு இன்று வீண் போகவில்லை என்பதை அண்மையில் நடைபெற்ற சிங்கள உயர்குழாத்தின் சந்திப்பொன்றின்போது சிலர் குறிப்பிட்டுப் பேசியதாக அந்த மூத்த ஊடகவியலாளர் சொன்னார். அவர்கள் எதிர்பார்த்தவாறு இப்பொழுது கூட்டமைப்பு முழுமையாகவே மென்போக்கு அரசியலில் இறங்கி விட்டது. அரசாங்கத்துக்கோ சிங்களத் தரப்புக்கோ எந்த வகையிலும் அது அச்சுறுத்தலைக் கொடுக்கவில்லை. அழுத்தமாகவுமில்லை என்பதுடன், அரசாங்கத்துக்கு வெளியே நிற்பதன் மூலம் எதிலும் பங்கு கேட்காத வெளியாளாகவும் மாறி விட்டது. சரியான அர்த்தத்தில் சொன்னால், சிங்கள அதிகாரத் தரப்பிற்கு இசைவானதாக, உவப்பானதாகி விட்டது கூட்டமைப்பு. அதேவேளை தமிழ்ச் சமூகத்திலுள்ள ஏனைய அரசியல் தரப்பையும் பலவீனப்படுத்தி விட்டது. ஆக மொத்தத்தில் சிங்கள அதிகாரத் தரப்பிற்கு இரட்டை லாபம்.
இதே இடத்தில் இயக்கங்களிலிருந்து உருவாகிய கட்சிகளைப் பலப்படுத்தியிருந்தால் அல்லது அவை பலமாகியிருந்தால் அரசாங்கத்துக்கு உச்ச நெருக்கடியைக் கொடுப்பனவாகவே இருந்திருக்கும். அரசியல் ரீதியாகவும் அவை அழுத்தத்தைக் கொடுத்திருக்கும். அபிவிருத்தி மற்றும் நிதிப்பங்கீடு, அதிகாரப் பகிர்வு போன்றவற்றிலும் உச்ச நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். இயக்கங்களின் பொதுத்தன்மையானது அவை எப்போதும் செயற்பாட்டுத்திறன் கொண்டவை என்பதோடு, மக்களை மையப்படுத்திய அரசியல் பாரம்பரியமுடையவை என்பதாகும். குறைந்த பட்ச நேர்மையும் சமூக உணர்வும் அவற்றுக்குண்டு. ஆனால், தமிழரசுக் கட்சியிடம் இது அறவே இல்லை. அது எப்போதும் வாய்ப்பேச்சு ஜம்ப அரசியலையே அடித்தளமாகக் கொண்டது. அரசாங்கத்தைப் பேச்சளவில் எதிர்ப்பது. அதாவது எதிர்ப்பதாகத் தோற்றம் காட்டுவது.
இதைச் சரியாகச் சிங்களத் தரப்புப் புரிந்து கொண்டது அல்லது கற்றுக்கொண்டது ஜே.வி.பியிடமிருந்தாகும்.
இரண்டு தடவை தோற்கடிக்கப்பட்ட பிறகும் ஜே.வி.பி இன்னும் அடித்தட்டு மக்களோடும் சமூக உணர்வோடுமே தன்னுடைய அரசியலை முன்னெடுத்து வருகின்றது. பாராளுமன்ற அரசியலில் பிரவேசித்த பிறகும் அதனுடைய அடிப்படைக்குணாம்சம் முற்று முழுதாக மாறவில்லை. இன்னும் மக்களுடைய பிரச்சினைகளுக்கு விசுவாசமான குரலாக ஒலிப்பது ஜே.வி.பியுடையதே. தொழிற்சங்கப் போராட்டங்களில் ஜே.வி.பியின் செல்வாக்கு அல்லது பின்னணியே அதிகம்.
இந்த அவதானம்தான் ஈழவிடுதலை இயக்கங்களைப் பலப்படுத்தக் கூடாது என்று சிங்கள உயர் குழாம் கருதுவதற்கான பின்னணிக்காரணமாகும். வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் ஆயுதந்தாங்கிய அரசியல் தரப்புகள் வலுப்பெறவே கூடாது என்பதே இதனுடைய உள்மனக் கிடக்கையாகும். இது தனியே சிங்கள உயர் குழாத்தின் நிலைப்பாடு மட்டுமல்ல. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்தின் விருப்பமும் இதுவே. இதனால்தான் இவை எல்லாம் ஒவ்வொரு தேர்தலின்போதும் கூட்டாக பொது நிகழ்ச்சி நிரலை – நிரல்களை – உருவாக்குகின்றன. அதன்படி மென்போக்குச் சக்திகளின் வெற்றிக்கே வழியை ஏற்படுத்துகின்றன. தீவிர நிலைச் சக்திகள் முன்னிலை பெறுவதைத் தவிர்க்கின்றன.
இந்தச் சுருக்கமாக அரசியல் விளக்கத்தோடுதான் நாம் இன்றைய – நாளைய தமிழ்ச்சமூகத்தின் அரசியலை நோக்க வேண்டியுள்ளது. இப்பொழுது அரசியல் அரங்கில் தலைமைச் சக்தியாக இருப்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே. ஆனால், அது தன்னுடைய இயலாமைகளாலும் குறைபாடுகளினாலும் தன்னுடைய தலைமைத்துவத்தை இழந்து கொண்டிருக்கிறது. பலவீனப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு பலவீனப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான, மாற்றான அரசியல் கூட்டுக்களை அல்லது அணிகளை உருவாக்க வேண்டும் என்ற உணர்வு பல மட்டங்களிலும் காணப்படுகிறது. அதற்கான முயற்சிகளும் பலராலும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், இதுவரையிலான முயற்சிகள் அனைத்தும் பலவீனமான நிலையிலேயே உள்ளன.
அதாவது பலவீனப்பட்டுக்கொண்டிருக்கும் அரசியல் சக்தியொன்றினை முறியடிப்பதற்கான எதிர்ச்சக்திகளும் மாற்றுக்களும் அதையும் விடப் பலவீனமாகவே உள்ளன.
இது எப்படியிருக்கிறது?
கூட்டமைப்பினுடைய அரசியல் நிலைப்பாடும் செயற்பாடுகளும் வெளிப்படைத்தன்மையற்றவை. இரட்டை நிலைப்பட்டவை. ஜனநாயகமற்றவை. உறுதிப்பாடில்லாதவை. போலியானவை எனப் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர். கடுமையாக விமர்சிக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் வரவர அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு அமைப்பின் மீது குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் அதிகரித்துக் கொண்டு வந்தால், ஒரு கட்டத்தில் அந்த அமைப்பை மக்கள் நிராகரிக்கும் நிலை ஏற்படும். பகிரங்கமாகவே எதிர்க்கின்ற சூழல் உருவாகும்.
இவ்வாறான ஒரு நிலைமை ஏற்படாது தடுக்க வேண்டுமானால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தன்னை முழுமையாகப் பரிசீலிக்க வேண்டும். அனைத்துத் தளங்களிலும் முழுமையாக ஒழுங்கமைப்புச் செய்யப்பட வேண்டும். தன்னைச் சீராக்கிப் புதுப்பிப்பது அவசியம். ஆனால், அதை அது செய்யவே செய்யாது. அப்படிச் செய்யக் கூடிய உள்ளடக்கமும் துணிச்சலும் அதனிடத்திலே இல்லை. அதனுடைய அடித்தளமும் கட்டமைப்பும் இந்த அரசியல் முறைமைக்கு மாறானது. அதனுடைய அரசியல் பிரதிநிதிகள் அத்தனைபேரும் பிரமுகர் தன அரசியல் பாராம்பரியத்துக்குரியவர்களே. இன்று புதிதாகச் சேரும் அரசியல் பிரதிநிதிகள் கூட இந்த இயல்பினரே.
அப்படியல்ல, கூட்டமைப்பிடம் முற்போக்கான அம்சங்களுண்டு. தன்னைச் சீரமைக்கக் கூடிய பண்புண்டு என்று யாராவது வாதிடக் கூடும். அப்படியானல் அவர்களை நோக்கி நாம் சில எளிய கேள்விகளை முன்வைக்கலாம்.
அப்படியானால் இதுவரையில் கூட்டமைப்பின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் பரிசீலிப்பதற்கும் பதிலளிப்பதற்கும் ஏன் கூட்டமைப்பு முயற்சிக்கவில்லை? தம்மைச் சுயவிமர்சனத்துக்குட்படுத்தி, குறைகளைக் களைவதற்கான முனைப்புகளை ஏன் மேற்கொள்ளவில்லை?
இரண்டு வாரத்துக்கு முன்பு தமிழரசுக்கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்தது. அந்த மாநாட்டின்போது சமகால, எதிர்கால அரசியல் நிலவரத்தைப்பற்றி கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்படி எந்தப் புதிய சேதியையும் சம்மந்தனோ அந்த மாநாடோ வெளிப்படுத்தவில்லை. பதிலாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மாவை சேனாதிராஜாவினால் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. அந்தப் பிரகடனத்தைப் பார்த்துப் பலரும் காமடி பண்ணினார்கள். அதிலே எந்தப் புதிய சேதியுமிருக்கவில்லை. பெறுமதியான ஒரு வார்த்தை கூடச் சேர்க்கப்பட்டிருக்கவில்லை.
எனவேதான் நிச்சயமாக கூட்டமைப்புக்கு எதிரான – மாற்றான அரசியல் சக்திகள் வலுப்பெற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கான புதிய தரப்புகளை தமிழ்ச்சமூகம் எதிர்பார்க்கிறது.
இதற்கு ஏற்கனவே இவ்வாறான அரசியல் சக்திகள் களத்தில் உண்டா? என்று நீங்கள் கேட்கக்கூடும். இதற்கான பதில் சற்றுக் கடினமானதே. மாற்று இயல்போடுள்ள அரசியற் சக்திகள் உள்ளன. ஆனால், அவற்றை அடையாளம் காண்பதில் மக்களுக்கும் அவற்றை அடையாளம் காட்டுவதில் ஊடகங்களுக்கும் பிரச்சினைகளுண்டு.
பாரம்பரியமான உணர்தல், அறிதல் முறையின்படியே தமிழ் அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அவை எப்போதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் போன்ற அரச எதிர்ப்புச் சக்திகளையே தமது முதற் தெரிவாக்கும். இதனால்தான் கூட்டமைப்புப் பதிலாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியோ சிபாரிசு செய்யப்படுகிறது. ஆனால், இவையும் கூட்டமைப்பைப் போன்றவையே. கூட்டமைப்பின் இன்னொரு வடிவம். அது மோதகம் என்றால் இவை கொழுக்கட்டை. இவை மோதகம் என்றால் அது கொழுக்கட்டை.
அப்பயென்றால் நிச்சயமாக மாற்று அரசியல் சக்திகளையே நாம் நாட வேண்டும். அவ்வாறனவை உண்டு. அவை இயங்கிக் கொண்டுமுள்ளன. ஆனால், அவையெல்லாம் ஏறக்குறைய உதிரிகள் என்ற நிலையிலேயே உள்ளன. சனங்களாலும் அவ்வாறு கணிப்பிடப்பட்டுள்ளன. ஒரு மாற்றாக அடையாளம் காணக்கூடிய அளவுக்கு வலுவான சக்தியாக எந்தச் சக்தியும் இன்னும் வளர்ச்சியடைவில்லை.
என்பதால்தான், வலுவான ஒரு எதிர்க்கூட்டுத் தேவை என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதேவேளை கூட்டமைப்புக்குப் பதிலாக பலரும் கருதியதும் எதிர்பார்த்ததும் முன்னாள் வடக்குமாகாண சபையின் முதலமைச்சராக இருந்த விக்கினேஸ்வரனின் தலைமையேயே. விக்கினேஸ்வரனின் தலைமையை மனதிற்கொண்டே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது. அதை வடக்குக் கிழக்கு முழுவதற்கும் விரிவாக்கம் செய்யும் நோக்கிலேயே “எழுக தமிழ்” நிகழ்வுகளும் நடந்தன.
ஆனால், எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை நோக்கிப் பயணிப்பதற்குரிய அக – புறச் சூழ்நிலைகள் தமிழ் மக்கள் பேரவைக்கு வாய்க்கவில்லை. தன்னுடைய பயணத்துக்குரிய பாதையை நிர்மாணித்துச் சுயமாகப் பயணிக்கக் கூடிய திராணியும் உழைப்பும் அதன் உறுப்பினர்களுக்கில்லாமற் போய் விட்டது.
ஆகவே தமிழ் மக்கள் பேரவை சுயாதீனமாகச் செயற்படுவதற்குப் பதிலாக, பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளுடன் இழுபட வேண்டியதாயிற்று. உண்மையில் பேரவையே கட்சிகளுக்கு மேலே நிற்க வேண்டும். அதை உருவாக்கும்பொழுது அத்தகைய சிந்தனைப்போக்கே அதில் காணப்பட்டது. ஆனால், பின்னர் அது கட்சி ஆதிக்கத்தைச் சந்திக்கின்ற அல்லது அவ்வாறான அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
பேரவையில் அங்கத்துவம் வகித்த கட்சிகளுக்கு அப்பாலானோருடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் போன்றோரும் இணைந்தே ஒரு எதிரணி என்ற தோற்றம் காணப்பட்டது. பேரவையின் ஆரம்ப நிகழ்ச்சிகளில் புளொட் – சித்தார்த்தனும் கூடக் கலந்து கொண்டிருந்தார்.
ஆனால், கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலோடு பேரவை வலுக்குறைந்தது. பேரவையுடன் நெருக்கமாக இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் உருவாகிய இடைவெளி பெரும் விரிசலை உண்டாக்கியது. எந்த வகையிலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு – சுரேஸ் பிரேமச்சந்திரனோடு – அரசியல் கூட்டைத் தம்மால் வைக்க முடியாது என்று பகிரங்கமாக நிலைப்பாடு எடுத்தது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி.
இதனால் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆனந்தசங்கரியோடு கூட்டு வைக்க வேண்டியேற்பட்டது. கஜேந்திரகுமார் தனித்து நின்றார். இதெல்லாம் கூட்டமைப்புக்கு பெரும் வாய்ப்பாகிப் போனது.
இப்போதும் ஏறக்குறைய இதுதான் நிலைமை.
மாகாணசபையின் காலம் முடிந்த பிறகு புதிய கட்சியை ஆரம்பித்தார் விக்கினேஸ்வரன். அவரால் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியானது, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு – சுரேஸ் பிரேமச்சந்திரனோடு அரசியற் கூட்டினை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் – கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் இணைத்து விட வேண்டும் எனப் பலரும் விரும்புகின்றனர். இதில் விக்கினேஸ்வரனுக்கும் சம்மதம். ஏறக்குறைய சுரேஸ் பிரேமச்சந்திரனும் இதற்குத் தயார். ஆனால், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு – சுரேஸ் பிரேமச்சந்திரனோடு – எந்த அடிப்படையிலும் தாம் கூட்டுச் சேர முடியாது என்று கூறிவிட்டார் கஜேந்திரகுமார்.
ஆகவே கூட்டமைப்புக்கு எதிரான அணியை ஒருங்கு திரட்டுவதில், வலுவான கூட்டாக உருவாக்குதில் இடர்பாடுகளே காணப்படுகின்றன. இது பலருக்கும் கவலைகளையும் சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை அரசியலை ஆழமான பொருளில் விளங்குவோரும் மக்களின் மீது அக்கறை கொண்டோரும் மாற்று அரசியலையும் மாற்று அரசியற் சக்தியையுமே எதிர்பார்க்கின்றனர்.
அவர்கள் வெறுமனே கூட்டமைப்புக்கு எதிர்க்கடை போட விரும்பவில்லை. அப்படியான அடிப்படை மாற்றங்களில்லாத எதிர்க்கடை அரசியல் மேலும் தமிழ் மக்களுடைய விடுதலையைத் தாமதமாக்கும். அலைக்கழிக்கும். பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இது புறக்கணிக்க முடியாத – ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையும் கூட.
சமூக, அரசியல், பொருளாதார அடிப்படைகளில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே அவர்களுடைய விருப்பமும் எதிர்பார்ப்புமாகும். இதற்கு முற்றிலும் புதிய சிந்தனை முறையும் புதிய செயற்பாட்டுத் தளமும் தேவை. புதிய அரசியல் பண்பாட்டுருவாக்கம் வேண்டும். இதற்கான அர்ப்பணிப்பு மிக்க களச் செயற்பாடுகள் அவசியம்.
இதற்குரியவாறு ஏற்கனவே ஈழத் தமிழ்ச்சூழலில் ஜனநாயத்தின் மீதும், பன்மைத்துவத்தின் மீதும் பற்றும் நம்பிக்கையுமுள்ள சக்திகள் உள்ளனவா என்றால், உண்டு.
ஆனால், அவற்றின் மீது கடந்த கால விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளுமுண்டு. அதை அந்தச் சக்திகள் சுய விமர்சனத்தின் வழியாகவும் புதிய அரசியல் நுண்ணுர்வுகளின் வாயிலாகவும் ஏற்றுத் தம்மைப்பண்படுத்த முனைந்திருக்கின்றன. சில சக்திகள் இதற்கான பொறுப்புக் கூறலை, அதனுடைய அவசியத்தை உணர்ந்தாலும் அதைச் செய்வதில் தயங்கிய நிலையும் உண்டு. இதெல்லாத்தையும் விட இந்த மாற்றுக்குரிய சக்திகள் தமக்கிடையிலான அரசியல் நிறப்பிரிகைகளைச் சரியான முறையில் கையாளத் தெரியாமல் உள்ளன. தமக்குள் உட்சுருங்கிக் கிடக்கின்றன. தமக்குள் பகைமை கொண்டுள்ளன. சனங்களைப் பற்றிச் சிந்திப்பதற்குப் பதிலாகத் தம்மைப்பற்றிய சிந்தனையிலேயே மூழ்கிக்கிடக்கின்றன. ஒரு நண்பர் கூறியதைப்போல, கடந்த (இயக்க) கால நினைவுகளில் தங்களைத் தாங்களே தாலாட்டிக் கொண்டிருக்கின்றன.
இதையெல்லாம் இவை கடந்து வரவேண்டும். வரலாற்று நிர்ப்பந்தத்தை உணர்ந்து மக்களுக்கு விசுவாசமாகச் செயற்பட வேண்டும். கூட்டமைப்பிற்கு நிகரான தவற்றினை இவை விடக்கூடாது.
இந்தச் சக்திகளை ஒருங்கிணைத்துப் பார்க்கலாம் என்ற முயற்சிகளும் பல தடவை நடந்தது. ஆனால் அதெல்லாம் முயற்கொம்பே. அவற்றைக் குறித்து இன்னொரு போது நிறைய எழுதலாம். அந்தளவுக்கு ஏராளமான நுண்முடிச்சுகளையும் புதிரையும் கொண்டவை நடந்த சம்பவங்களும் பேசிய விசயங்களும்.
ஆகவேதான் மீள ஒன்றை வலியுறுத்திச் சொல்ல வேண்டியுள்ளது, எல்லா விண்ணர்களும் சனங்களுக்கு எதிராகவே தங்களுடைய கப்பலை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர் என.