(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஜனநாயகம், ஒரு வசதியான போர்வை. எதையும் எவ்வாறும் அப்போர்வையால் மூடி மறைக்க முடியும் என்பதோடு, மறைத்ததை அங்கிகரிக்கும் அதிகாரத்தையும் பெறலாம். இன்று, ஜனநாயகம் ஜனநாயகமாகச் செயற்படுவதில்லை என யாவரும் அறிவர். ஆனால், ஜனநாயகத்தின் பெயரால் நடப்பவை அச்சந் தருகின்றன. ஒரு படையெடுப்பையோ, ஆக்கிரமிப்பையோ, தாக்குதலையோ, அடக்குமுறையையோ, வேறெதையுமோ, ஜனநாயகத்தின் பெயரால் நடத்தக்கூடிய சூழலில் நாம் வாழ்கின்றோம். ஜனநாயகம், அதன் பெயரால் அனைத்தையும் செய்யக்கூடியவாறு ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மட்டும் உறுதியாகக் கூற இயலும்.
மியான்மாரில் அண்மைய நிகழ்வுகள், உலகின் கவனத்தை எட்டாமலுள்ளன. கடந்தாண்டு நடந்த தேர்தல்களில், சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகியின் கட்சி வென்று ஆட்சி அமைத்ததிலிருந்து, மியான்மார் ஜனநாயகத்துக்குத் திரும்புகிற நல்லாட்சி நடக்கும் நாடு என்ற படிமம் உருவாகியுள்ளது. ஆனால், பௌத்தப் பெரும்பான்மை நாடான மியான்மாரில், ரொஹின்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் மீது தொடர்ந்தும் கட்டவிழும் வன்முறைகள் பற்றி இப்போது அடக்கி வாசிக்கப்படுகிறது. மியான்மார் அரசாங்கம், ஜனநாயக வழிக்குத் திரும்பி விட்டதாக அமெரிக்காவும் மேற்குலகும் விடாது கூறுகின்றன.
பங்களாதேஷ், இந்தியா, சீனா, லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் எல்லைகளையுடைய தென்கிழக்காசிய நாடான மியான்மார் (முன்பு பர்மா) நீண்ட காலமாக பிரித்தானியக் கொலனியாக இருந்து, 1948இல் சுதந்திரமடைந்தது. 1962இல் இரத்தஞ் சிந்தா இராணுவப் புரட்சி மூலம் பர்மீய இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அவ்வாட்சி, 2011ஆம் ஆண்டு, இராணுவம் ஆட்சியதிகாரத்தை மீளக் கையளிக்கும் வரை தொடர்ந்தது. இக்காலப்பகுதியில் அமெரிக்கா உட்பட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இராணுவம் ஆட்சியை மீளக் கையளித்தபின், கடந்தாண்டு நடந்த பொதுத் தேர்தலில், ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய சங்கம் வெற்றிபெற்றது. இது, மியான்மாரின் ஜனநாயகத்தை நோக்கிய திருப்பம் எனப் புகழப்பட்டது. பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டன. மேற்குலகு, மியான்மார் அரசாங்கத்துடன் மிக நெருக்கமான உறவுகளை மேற்கொள்ளத் தொடங்கியது. இந்தப் பின்புலத்திலேயே, மியான்மாரில் இப்போது நடந்தேறுபவைகளை நோக்க வேண்டியுள்ளது.
ஆங் சான் சூகி, பர்மாவின் தேசபிசா எனப்படும் ஆங் சானின் இளைய மகளாவார். பர்மா கம்யூனிஸ்ட் கட்சி நிறுவகர்களுள் ஒருவரான ஆங் சான், பின்பு தேசியவாதியாகி, ஜப்பானுடன் பிரித்தானியர்கட்கெதிராக ஒத்துழைத்தார். அதன்பின், ஜப்பானிய நோக்கங்கள் பற்றிய ஐயங்களால், ஜப்பானுக்கெதிராக நேசநாடுகளுடன் ஒத்துழைத்து, போரின் பின் பிரித்தானியருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பர்மாவின் சுதந்திரத்தைப் பெற்றார். பர்மா இடைக்கால அரசாங்கத்தின் துணைத் தலைவராயிருந்தபோது, அவரைப் பிரித்தானியத் தொடர்புடைய கொலைகாரர்கள் படுகொலை செய்தனர்.
ஆங் சான் சூகி, 1988இல் மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கெதிரான போராட்டங்களை முன்னெடுத்ததால் உலகறியப் புகழ்பெற்றார். போராட்டங்களின் பயனாகத் தடுப்புக் காவலுக்கு உட்பட்டு, 2010ஆம் ஆண்டு விடுதலையாகும் வரை, 15 ஆண்டுகள் மறியலில் இருந்த சூகி, 21ஆம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான அரசியல் கைதியாக அறியப்பட்டார். 1991ஆம் ஆண்டு அவருக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஊடகங்கள், மியான்மாரின் ஜனநாயக முகமாக அவரை அறிவித்தன. அதனாலேயே இராணுவ ஆட்சி முடிந்த பின் சூகியின் தலைமையிலான ஜனநாயகத்துக்கான தேசிய சங்கம் ஆட்சிக்கு வந்ததெனச் சிலாகிக்கப்படுகிறது.
நோபல் பரிசு பெற்ற ஜனநாயகவாதி எனப் புகழப்படும் ஆங் சான் சூகி, தனது ஆட்சியில் மியான்மாரின் ரொஹின்கிய முஸ்லிம்கட்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து மௌனங் காக்கிறார். ஐ.நா.வின் கூற்றுப்படி, ரொஹின்கிய முஸ்லிம் மக்கள் உலகில் அதிக இன்னற்படும் இனமாவர். அவர்கள், அரசு வழிநடத்தும் வன்முறைகட்கு ஆளாகிக் குடியுரிமை மறுக்கப்பட்டுப் பல தசாப்தங்களாக ஒடுக்கப்படும் ஓர் இனக்குழுவாவர். நிலங்கள் பறிக்கப்பட்டு, கட்டாய உடல் உழைப்புக்கு ஆளாகும் அவர்களிடம், தனியாக வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலை ஜனநாயகம் மலர்ந்ததாகச் சொல்லப்படும் இன்றைய மியான்மாரிலும் தொடர்கிறது. கிட்டத்தட்ட 150,000 ரொஹின்கியர்கள், மியான்மார் அரசின் சித்திரவதை முகாம்களில் உள்ளனர்.
ரொஹின்கிய மொழி வங்காள-அசாமிய மொழிக் குழுவுக்குரியது. எட்டு இலட்சம் எனக் கணிக்கப்பட்ட மியான்மார் ரொஹின்கியர்களிற் பெரும்பாலோர் ரக்கீன் மாகாணத்தில் வாழ்கிறார்கள். தம்மை மியான்மாரின் பூர்வகுடிகள் என்று கருதும் இவர்கள், பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து (இன்றைய பங்களாதேஷ்) மியான்மாருக்கு வந்தவர்கள் என்று, மியான்மரின் பெரும்பான்மை மதவாதிகள் கூறுகின்றனர். 1950ஆம் ஆண்டுக்கு முந்திய பர்மிய ஆவணமெதிலும் ரொஹின்கியா என்ற சொல் இல்லை என்ற அடிப்படையில், மியான்மார் அரசாங்கம் இவர்களைச் சட்டவிரோத வந்தேறிகளாகக் கருதுகிறது. அதனால், இவர்களுடைய அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்படுகின்றன.
1948இல், மியான்மாரை விட்டுப் பிரித்தானியர் நீங்கிய பிறகு அமைந்த அரசாங்கம், ரொஹின்கியரைத் தனித் தேசிய இனமாக அங்கிகரிக்க மறுத்தது. 1978இல் ரொஹின்கிய மக்கள், இராணுவச் சர்வாதிகார ஆட்சியாற் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். 1982ஆம் ஆண்டின் புதிய குடியுரிமைச் சட்டம், ரொஹின்கியர்களின் குடியுரிமையைப் பறித்தது. அதனால் அவர்கட்குக் கடவுச்சீட்டு உட்பட்ட வரன்முறையான ஆவணங்கள் கிட்டவில்லை. கடந்த சில ஆண்டுகளாகப் பௌத்த பேரினவாதிகள் அவர்களைக் குறிவைத்துத் தாக்குகின்றனர். தாக்குதல்கட்குப் பௌத்த மதகுருமார் தலைமை ஏற்கின்றனர்.
2013ஆம் ஆண்டு, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம்ஸ் இதழின் முன் உறை ‘பௌத்த பயங்கரவாதத்தின் முகம்’ என்ற தலைப்பில், அசின் விராத்து என்ற பௌத்த துறவியின் படத்தைப் பிரசுரித்தது. அந்த இதழ், இலங்கையில் தடைசெய்யப்பட்டமை சிலருக்கு நினைவிருக்கலாம். நியூ யோர்க் டைம்ஸ் நாளேட்டின் செய்திக் கட்டுரையில் ‘அன்பும் கருணை உள்ளமும் வேண்டியன தான் அதற்காக ஒரு விசர்நாயுடன் உறங்க முடியுமா?’ என அசின் விராத்து கூறிய ஒரு நேர்காணல் வெளியானது. இவை இராணுவ ஆட்சியில் நடப்பதாகவும் ஜனநாயகம் மலர்ந்தால் இவை நடைபெறா எனவும் மேற்குலக ஊடகங்கள் எழுதின. 2015ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியையடுத்த ஊடகவியலாளர் சந்திப்பில் ரொஹின்கியர்களின் நிலைமை பற்றி ஆங் சான் சூகியிடம் கேட்டபோது, வன்முறையைக் கட்டவிழ்க்கும் பௌத்த இனவெறியர்களையும் அவ்வன்முறையால் ஒவ்வொரு முறையும் பாதிக்கப்படும் ரொஹின்கியர்களையும் அவர் சமநிலையில் வைத்தார். பௌத்த இனவாதத்தை வன்மையாகக் கண்டிப்பதற்கு மாறாக, ‘மாற்றுத் தரப்பு பற்றிய அச்சம் இரு தரப்பிலும் உள்ளதாகவும்’ ‘இரு தரப்பினரும் சுமுகமாக இருக்க வேண்டும்’ எனவும் சொன்னார். இது ‘சமாதான தேவதை’யின் உண்மை முகம்.
2015ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற, ரொஹின்கியர்களின் உரிமைகள் பற்றிப் பெரும்பான்மை இனத்தவரின் பகை உணர்வு கருதி, ஆங் சான் சூகி மௌனங் காத்தார். ரொஹின்கியர்கட்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்ததில் அவரது நெருங்கிய சகாக்களின் பங்கு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நிலவரம் இப்போது அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளது. கடந்த வாரம் மியான்மாருக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் ஆங் சான் சூகிக்கும் இடையிலான சந்திப்பில், ‘மியான்மார் முஸ்லிம்களை ரொஹின்கியர் என அழைக்க வேண்டாம். அவர்கள் நாட்டின் குடிமக்கள் அல்ல. ரொஹின்கியர்கள், மியான்மாரின் அங்கிகரிக்கப்பட்ட 135 இனக் குழுக்களில் அடங்கார். எனவே ரொஹின்கியர்கள் என்ற சொற்பிரயோகம் தவறானது’ என ஆங் சான் சூகி தெரிவித்ததாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
ஆங் சான் சூகியினதும் ஆட்சியிலுள்ள ஜனநாயகத்துக்கான தேசிய சங்கத்தினதும் ஆதரவுத் தளமும் அவர்களது நிலைப்பாடும் பற்றிய பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆங் சான் சூகியின் முக்கியமான ஆதரவாளர்களுள் பௌத்த இனவாதத் துறவிகள் அடங்குவர். ஆங் சான் சூகியின் சார்பில் அவர்களே போராட்டங்களை முன்னெடுத்தனர். அவர்களே இப்போது ஆட்சியில் செல்வாக்குடையோராய் உள்ளனர்.
கடந்தாண்டு நடந்த தேர்தலுக்கு முன் இராணுவ ஆட்சி ரொஹின்கியர்கட்கு வாக்குரிமையை வழங்கியபோது ஆங் சான் சூகியின் கட்சி அதை எதிர்த்து வீதிகளிற் போராடியது. அதில் ஈடுபட்டோர் இப் பௌத்தத் துறவிகளே. அவர்கட்குத் தலைமை தாங்கிய ‘பௌத்த பின் லாடன்’ என அறியப்பட்ட அசின் விராத்து, ஆங் சான் சூகிக்காகப் போராட்டங்களை முன்னிற்று நடாத்தினார் என்பது இங்கே கூறத்தக்கது.
அமெரிக்காவும் மேற்குலகும், மியான்மாரில் ஆங் சான் சூகியின் தலைமையிலான ஆட்சி மலர கடந்த பத்தாண்டுகட்கு மேலாக முயன்றுள்ளன. இராணுவ அரசாங்த்துக்கெதிரான போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தற்கான நிதியுதவி அமெரிக்க, பிரித்தானியத் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது. பௌத்த தீவிரவாதியான அசின் விராத்து தலைமையிலான கும்பலுக்கும் ஏராளமான நிதி வழங்கப்பட்டமையும் வெளிப்பட்டுள்ளது. இவை, பௌத்த துறவிகளின் போராட்டங்களால் மியான்மாரில் உறுதியின்மையை உருவாக்கி அதன் மூலம் ஆட்சியை மாற்றும் நோக்குடையன.
மியான்மார் மீதான மேற்குலக அக்கறை, மனித உரிமையின் பாற்பட்டதல்ல. மாறாக அமெரிக்காவின் பிராந்திய நலன்களும் அது சார்ந்த வர்த்தக விஸ்தரிப்புமே அதன் நோக்கங்கள். இராணுவ ஆட்சி நீண்டகாலம் நிலைத்தபோதும் மியான்மார் தன்னிறைவுப் பொருளாதாரங் கொண்ட நாடாயிருந்தது. அதனாலேயே பொருளாதாரத் தடைகளை மீறித் தப்பிப் பிழைக்க முடிந்தது. இப்போது ஆங் சான் சூகியின் ஆட்சி நவதாராளவாதத்தை முழுமையாக ஏற்றுப் பல்தேசியக் கம்பெனிகள் நாட்டைச் சூறையாட வழி செய்துள்ளது. ஆங் சான் சூகி அதற்கு வழங்கும் முழுமையான ஆதரவு கருதி இப்போது மியான்மாரில் நிகழும் மனித உரிமை மீறல்களோ கொலைகளோ கவனம் பெறுவதில்லை. இப்போது மாற்றுக் கருத்தாளர்கள் சிறையிடப்படுகிறார்கள், அரச எதிர்ப்பாளர்கள் கடும் அடக்குமுறைகட்கு ஆளாகின்றார்கள், பல தசாப்தங்களாகத் துன்புறும் ரொஹின்கியர்களைக் கொல்வதை அரசாங்கமே அனுமதிக்கிறது. இவையனைத்தும் மனித உரிமைகளின் பேராலும் ஜனநாயகத்தின் பேராலும் நடந்தேறுகின்றன. ஜனநாயகத்துக்கான போராட்டம் என்பது இருக்கின்ற கொஞ்சத்தையும் பிடுங்கக்கூடிய ஜனநாயகத்திலும் முடியலாம் என்பதை இன்று மியான்மார் காட்டுகிறது.
ஒரு காலத்தின் மனித உரிமைக் காவலர்கள், இன்னொரு காலத்தின் அதிபெரிய மனித உரிமை மீறல்கட்குப் பொறுப்பானவர்கள் என்பதை வரலாறு இன்னொரு முறை சொல்லிச் செல்கிறது.