10000 மைல்களுக்கு அப்பால் போய் அந்த மண்ணிற மனிதர்கள்மீது (வியட்நாம் மீது) அமெரிக்க இராணுவ உடையணிந்து குண்டுகள் வீசவும் படுகொலை செய்யவும் என்னைக் கேட்கிறார்கள். இங்கு கறுப்பின மக்களை நாய்போல நடாத்தவும் அவர்களது மனித உரிமைகளை மறுக்கவும் செய்கிற வெள்ளை எசமானர்கள் உலகம் முழுமையும் நிற மனிதர்கள் மீதான தமது மேலாதிக்கத்தை நிறுவ முனைகிறார்கள். இவர்களுக்காக அந்த ஏழை மக்களின் வீடுகளை எரிக்கவும் படுகொலை செய்யவும் என்னால் முடியாது. இது முடிவுக்கு வரவேண்டும்.
எனது இந்த நிலைப்பாடு மில்லியன் கணக்கான டொலர்களை இழக்க வைக்கும் என எச்சரிக்கிறார்கள். தமது சுதந்திரத்துக்காகவும் நீதிக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடுகிற மக்களை அடிமையாக்க நினைக்கும் வெள்ளை மேலாதிக்கத்துக்கு நான் ஒரு கருவியாக செயற்பட முடியாது. அதன்மூலம் எனது மதத்தையோ எனது மக்களையோ என்னையோ அவமதிக்கும் விதத்தில் செயற்பட தயாரில்லை.
இந்த யுத்தமானது எனது 22 மில்லியன் மக்களுக்கும் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கொண்டுவரும் என நான் நம்புவேனானால், அவர்கள் என்னை கட்டாயப்படுத்தத் தேவையில்லை. நானாகவே நாளை இணைந்துகொள்வேன். நான் எனது நம்பிக்கைளுக்காக எழுந்து நிற்பதில் எதனையும் இழக்கப்போவதில்லை. எனவே நான் சிறைக்குப் போகத் தயாராக இருக்கிறேன். நாம் ஏற்கனவே 400 வருடங்கள் சிறையில்தான் உள்ளோம்.