உயர்திரு நீதியரசர் அவர்கட்கு! முதலமைச்சருக்கு என்று விளிக்காமல், பழைய ஞாபகத்தில் நீதியரசருக்கு என, நான் விளித்திருப்பதாய் நினைப்பீர்கள். அப்படியில்லாமல் தெரிந்தேதான் உங்களை, நீதியரசராய் விளித்தேன். காரணம், என்றும் நீங்கள் நீதியரசராகவே இருக்கவேண்டும் எனும், என் உள விருப்பே! அவ்விருப்புடனேயே இக்கடிதத்தை வரையத்தொடங்குகிறேன். அண்மைக்காலமாக உங்களை விமர்சித்து நான் எழுதியவற்றை வைத்து, என்னை உங்களின் பகைவனாய் பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் நீங்கள் என் பகைவர் அல்லர். என் மனதில் உயர்ந்த ஒரு இடத்திலேயே, உங்களை இன்றும் நான் வைத்திருக்கிறேன். தாங்கள் உச்சநீதிமன்ற நீதியரசராய்ப் பதவி வகித்த காலத்தில், எந்தச் சமுதாய அமைப்பிலும் உறுப்பினராய் ஆக மறுத்து வந்தபோதும், என் கோரிக்கையை ஏற்று,எங்கள் கம்பன்கழகத்தின் பெருந்தலைவராய் செயலாற்ற முன்வந்தீர்கள். எங்கள் கழகத்தின் பெருந்தலைவர் பதவியில், தாங்கள் அமர்ந்ததால் நாங்கள் பெருமையுற்றோம்.
உங்களிடம் இருந்த இயல்பான தமிழ், இலக்கிய, ஆன்மீக ஈடுபாடு, இயற்கையாய் தங்களிடம் அமைந்திருந்த நிமிர்வு, தோற்றப்பொலிவு என்பவை அனைத்தும், எங்கள் கழகத்தினது பெருமையை நிச்சயம் உயர்த்தின. இவற்றிற்கப்பால் என்மேல் தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையும், மதிப்பும், என்னால் என்றும் மறக்கமுடியாதவை. அத்தகைய உறவோடு கூடிய உங்களை, பகைவராய் நினைக்கவேண்டிய தேவை எனக்கு எப்படி வரும்? ஈழத்தமிழினம் தங்கள் உரிமைக்காகப் போராடி, பேரழிவைச் சந்தித்திருந்தவேளை, தமிழர்களைக் கிள்ளுக்கீரைகளாய் நினைத்திருந்த பேரினவாதிகளுக்கு, நம் இளைஞர்களெல்லாம் தம் உயிரைத் துச்சமென மதித்து, தமிழர்களின் வீரத்தையும், சுதந்திர வேட்கையையும் தெளிவுபட எடுத்துரைத்தனர். அவர்தம் உயிர்த்தியாகங்கள் அனைத்தும், எவருக்கும் பயனில்லாமல் இனத்தின் அழிவுக்குக் காரணமாகி, வீணாய்ப் போயிற்று என இன்று பலர் உரைக்கின்றனர்.
நிச்சயம் நான் அப்படிக் கருதவில்லை. காலாகாலமாக இனக்கலவரங்கள் என்ற பெயரில், தமிழர்களைச் சீண்டி விளையாடிய இனவெறியர்கள், அஞ்சி நடுங்கும் அளவிற்கு, அந்த இளைஞர்கள் ஆற்றல் காட்டியே மறைந்திருக்கின்றனர். அதுமட்டுமல்ல உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாய்த் தோன்றும், சின்னஞ்சிறு இலங்கையின் உள்ளிருந்த சிறுபாண்மை இனமாகிய தமிழர் இனம்பற்றி, இன்று அமெரிக்காவும், பிரித்தானியாவும், இந்தியாவும், ஐ.நா.சபையும், அக்கறையோடு ‘கொடு இவர்கள் உரிமையை’ என்று, வரிந்து கட்டி நிற்கின்றன என்றால், அதற்குக் காரணம் ஆயுதம் ஏந்திப்போராடத் தலைப்பட்ட, அத்தனை இளைஞர்களினதும் உயிர்த்தியாகங்களே. பெரிய நாடுகளின் கைப்பொம்மைகளாகிப் பேதப்பட்டு, ஆயுதக் குழுக்கள் ஒன்றோடு ஒன்று மோதி பலயீனப்படாது இருந்திருந்தால், இன்று நமக்காக யாரும் பேசாமல், நாமே நம் உரிமையைப் பெற்றிருத்தல் கூடும்.
கைக்கெட்டிய தூரத்தில் கனி வந்தபோது கால் தவறி வீழ்ந்தவர்களானோம். என்ன செய்வது? விதியின் விளையாட்டு! வலிமையுற்ற தமிழ்த்தலைவர்கள் பலர், தமது முதுமையாலும், நம்மவரின் முட்டாள்தனத்தாலும் மடிந்து போனதால், போராளிகள் முற்றாய் அழிக்கப்பட்டு போர் முடிந்த நிலையில், மீண்டும் ஜனநாயக வழியில் தமிழர்கள் நடக்கவேண்டி வந்தபோது, ஆங்காங்கு சிதறிக் கிடந்த அத்தனை தலைவர்களையும் ஒன்றுதிரட்டி, புதிதாய்த் தம் தலைமையைக் கட்டியெழுப்பவேண்டிய சூழ்நிலை தமிழர்க்கு ஏற்பட்டது. புலிகளின் காலத்தில் அஞ்சி ஒடுங்கி அலமந்து போயிருந்த, இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்டத் தலைவர்கள் எல்லாம், தாம் இனத்திற்காகச் செய்த சிறு சிறு தியாகங்களைக்கூட, பூதக்கண்ணாடியூடு காட்டி தமிழர்களிடம் புகழ் பெற நினைந்தார்கள்.
உயிர் அச்சம் நீங்கியதுமே அவர்கள் அனைவரையும் பதவிக்காய்ச்சல் பற்றிக் கொண்டது. தமிழர்க்கான, ஆற்றலும், அறிவும், தியாகமும் மிக்க தலைவர்கள் தொகை, இல்லையெனும்படியாய் அருகிவிட்டதை அறிந்து, பொறுப்புள்ள சமுதாயப் பிரமுகர்கள் பலர், அத்தகுதிகளைக் கொண்ட ஒருவரையேனும், புதிதாய்த் தலைமைக்கட்டிலில் ஏற்றவேண்டுமென, பொறுப்போடும் விருப்போடும் முனைந்தனர். அதனால்தான் வடமாகாணசபைத் தேர்தல் வந்தபோது, மேற்தகுதிகளைக் கொண்ட ஒரு தலைவரைத் தேடத் தலைப்பட்டு, அத்தகுதிகள் உங்களிடம் இருப்பதை அறிந்து, அத்தனைபேரும் உங்கள் இல்லம் நோக்கிப் படையெடுத்தனர். ஆயிரம் தயக்கங்களின் பின்னர் நீங்கள் அரசியலில் அடியெடுத்து வைத்தீர்கள். அப்போது உங்கள் வருகைக்காய் வாதாடியவர்களில் நானும் ஒருவனாய் இருந்தேன்.
அளவுக்கதிகமான உணர்ச்சிவயப்பாடுதான் உங்களின் குறை! முதலமைச்சர் பதவிக்காய் கூட்டமைப்புக்குள் போட்டியிட்டவர்கள், வேறு வழியின்றி உங்களுக்கு அப்பதவியை விட்டுத்தர, நீங்களோ அவர்களைத் தியாகிகளாய்ப் போற்றி, அவர்களின் வழிகாட்டுதலிலேயே அரசியல்பாதை அமைப்பேன் என, அளவுக்கதிகமாய் அப்போது உணர்ச்சிவயப்பட்டு அறிக்கைகள் விட்டீர்கள். அதுவே எனக்கு மிகையாய்தான் பட்டது. அரசியலில் கால் வைத்த அத் தொடக்ககாலத்தில், உங்களிடம் பல தடுமாற்றங்கள். அப்போது அதுகுறித்து உங்களுக்கு முதல்முதலாய், “செயற்தக்க அல்ல செயற்கெடும்” என்ற தலைப்பில், நான் ஒரு பகிரங்கக் கடிதம் வரைந்தேன். அக்கடிதத்தில் உங்களிடம் நான் கண்ட சில குறைகளை, எடுத்துக்காட்டியிருந்தேன்.
ஆனால் அந்த எனது விமர்சனம், உங்களின் கண்ணில் பட்டதாகவே தெரியவில்லை. மாறாக அக்கடிதம் உங்கள் மீதான எனது பகையின் வெளிப்பாடு என, உங்களுக்கு வேண்டிய சிலரால் செய்தி பரப்பப்பட்டது. வருந்தினேன். பின்னர் காலப்போக்கில் உங்களிடம் நிறைய மாற்றங்கள். உங்கள் செயற்பாடுகளில் நிறையக் குழப்பங்கள். அவற்றையெல்லாம் நான் அவ்வப்போது சுட்டிக்காட்டத் தவறவில்லை. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் காலத்தில், உங்களை அரசியலுக்கு அழைத்து வந்த அணிக்கு எதிராகவே, நீங்கள் செயற்பட்டதாய்த் தெரிந்தபோது மிகவும் மனம் வருந்தினேன். யாரோ சிலர் உங்கள் மனதில் விஷ வித்துக்களை விதைத்து விட்டதாய் நினைந்தேன்.
ஆனாலும் அங்ஙனம் நடுநிலை தவறி நீங்கள் நடக்கமாட்டீர்;கள் எனும் நம்பிக்கை, அப்போதும் என் மனதின் மூலையில் துளி அளவு இருக்கவே செய்தது. ஆனால் அந்த நம்பிக்கையும் சில காலத்தின் முன் நாசமாயிற்று. ‘தமிழ்மக்கள் பேரவை’ அமைக்கப்பட்ட போது தங்களின் செயற்பாடுகள், நீங்கள் தடுமாறி நிற்கிறீர்கள் என்பதைத் தெளிவாக்கிற்று. பேரவை அமைக்கப்பட்ட விதம், அதில் ரகசியமாய் நிகழ்ந்த தங்களின் பங்கேற்பு, அங்கு வெளியிடப்பட்ட மாறுபாடான தங்களின் அறிக்கைகள் என்பவை, தங்கள் குழப்பத்தை வெளிச்சம் போட்டுக் காட்டின. அதுவரை விமர்சனங்களுக்கு அப்பாலானவர் என்று கணிக்கப்பட்டிருந்த நீங்கள், கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகத் தொடங்கினீர்கள். அதுகண்டு என் நெஞ்சம் வலித்தது. கூட்டமைப்பின் தலைமையிலும் சில குழப்பங்கள் இருந்ததால், கூட்டமைப்பை முழுமையாய் நீங்கள் அங்கீகரிக்கவேண்டும் என, நான் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அவர்களில் இருந்த தவறுகளை தாங்கள் திருத்த முயற்சிக்காததும், அவர்களின் தவறுகள் திருத்தப்பட முடியாதவை என இனங்கண்ட பட்சத்தில், கட்சியையும், பதவியையும் துறந்து வெளிவந்து, புதிய தலைமையை ஸ்தாபிக்க நினைக்காததும், எனக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தன. அவற்றின் மேலாய் மாற்று அணிகளுடன் மறைமுகத் தொடர்புகள் பேணி, தலைமைக்குள் தாங்கள் உட்பகை விளைக்க முற்பட்டபோது, நான் பெரிதும் கவலையுற்றேன். கொழும்பிலேயே பலகாலம் வாழ்ந்ததால், சிங்கள மக்களுடனும், சிங்களப் பிரமுகர்களுடனும், சிங்களத் தலைவர்களுடனும், தொடர்புபட்டு வாழ்ந்த தாங்கள், தமிழர்களின் தலைமையேற்றபோது, தமிழர்க்கும் சிங்களவர்க்குமான நட்புப்பாலம் வலிமைபெறும் என்று நினைத்திருந்தேன்.
ஆனால் அந்த எனது கனவு நனவாகவில்லை. நீங்களும் சாதாரண அரசியல் தலைவர்களைப் போல, பேரினத்தைச் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் என, பலருடனும் பகைத்து நின்று, கொஞ்சநஞ்சமிருந்த நட்புப்பாலத்தை மேலும் சிதைக்கத் தலைப்பட்டீர்கள். சிங்கள இனத்துடன் நீங்கள் காட்டிய பகை, தமிழ்மக்களின் ஆதரவைத் தங்களுக்கு அதிகம் பெற்றுத் தந்தது என்னவோ உண்மைதான். தாங்கள் தலைமையேற்ற மாகாணசபையின் செயற்பாட்டின்மையைக் கூட, அந்த ஆதரவு ஓரளவு மறைத்துவிட்டது என்றே சொல்லவேண்டும். கடந்த முப்பதாண்டுகளாக பகையும், போருமாய் வாழ்ந்துவிட்ட பழக்கத்தால், நம் தமிழ் மக்களுக்கு பகைபற்றி உரத்துக் கூவும் தலைவர்களையே அதிகம் பிடித்தது.
நடைமுறைச் சாத்தியமற்ற அரசியல் நகர்வுகளை, ஆதரித்து ஆதரித்து அடிவாங்கிய அனுபவம் பெற்றபின்னும், தமிழர்களின் அனுபவ அறிவாற்றல் வளர்ந்ததாய்த் தெரியவில்லை.
அரசியலில் குதித்துத் தாங்கள் தேர்தலில் பெருவெற்றி பெற்றபோது, சிங்கள மக்களிடம் நம் சமாதானச் செய்தியைக் கொண்டு செல்லுங்கள் என்று, உங்களிடம் கோரிக்கை விட்டிருந்தேன். இந்நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் பௌத்தபீடங்களை நாடிச்சென்று, அங்கிருந்து ‘தமிழர்கள் சிங்களவர்களின் பகைவர்கள் அல்லர்’ எனும் செய்தியை, உரத்து உரையுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதுபற்றி எனது கடந்தவாரக் கட்டுரையில் கூட குறிப்பிட்டிருக்கிறேன். அவை ஏதும் கவனிக்கப்பட்டதாய் அப்போது தெரியவில்லை.
ஆனால் ஆச்சரியமாய் கடந்த வாரத்தில், மனதை மகிழ்விக்கும் ஒரு செய்தியைப் பத்திரிகைகள் சொல்லின. தமிழில் தேசியகீதம் பாடப்பட்டதைப் பாராட்டி, நீங்கள் யாழில் உள்ள நாகவிகாரைக்குச் சென்று வழிபாடியற்றிய செய்தியே அது. நாகவிகாரையிலிருந்து, ‘பேரினத்தார் சமாதானப் பாதையில் ஓரடியை முன்வைத்தால், தமிழர்கள் பத்தடியை முன் வைப்பார்கள்’ என்று, தங்களால் வெளியிடப்பட்ட செய்தியை, சிங்கள ஊடகங்கள் அனைத்தும் பரபரப்பாய் வெளியிட்டன. அதுகண்டு அளவற்ற மகிழ்ச்சி கொண்டேன். நமது திருவள்ளுவர் தலைவர்களுக்கான இலட்சணம் உரைக்கையில், அதிமானத்தை ஓர் குற்றமாய் உரைக்கிறார். மானம் குற்றமாகுமா? என்று கேள்வி பிறக்கும். ஆணவத்தினால் விளையும் அளவுக்கதிகமான மான உணர்ச்சியும், அரசர்க்குக் குற்றமேயாம்!
தான் சொன்னது தவறென்று தெரிந்த பிறகும், பிடிவாதமாய் அதுதான் சரி என்று ஒரு தலைவன் நிற்பானாகில், அதனால் அவன் மட்டுமன்றி, அவனைச் சார்ந்திருந்த இனமும் அழியும் என்பதாலேயே, வள்ளுவப் பெருந்தகை மானத்தைக் குற்றமாய் உரைத்தார் என்பார்கள் அறிஞர்கள். நம் புலிகள் விடயத்திலும் இவ் அதிமானமே அழிவுக்குக் காரணமாயிற்று. தங்களிடமும் இந்த அதிமான உணர்ச்சியைக் கண்டு, நான் வருந்தியதுண்டு. ஆனால் இப்போது மற்றவர் கருத்தைப் புறந்தள்ளி விட்டு, தாங்கள் கீழ் இறங்கி நடக்கத் தலைப்படுவதைக் கண்டு உளம் மகிழ்கிறேன். என்னைப் பொறுத்தவரை தாங்கள் அரசியலிலும், ஒரு நீதிபதியாகவே இயங்க வேண்டும் என்பதே விருப்பமாகவுள்ளது.
கடந்த வாரத்தில், அண்மையில் நடந்த மாகாணசபைக் கூட்ட நிகழ்வொன்றை, ஒளிப்பதிவு செய்து இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன. அங்கு நடந்த வாதத்தில் தாங்கள், குறித்த ஓரணிக்காக வாதிட்டதையும், உங்களை எதிர்த்து உங்கள் கட்சியைச் சார்ந்த பலரே தர்க்கித்ததையும் கண்டு மிகவும் மனம் வருந்தினேன். ஐயா! உடனடியாக இந்நிலையில் மாற்றத்தைத் தாங்கள் ஏற்படுத்தவேண்டும். நீதிமன்றங்களில் எத்தனையோ வழக்குகளை நேர்படத் தீர்த்தவர் தாங்கள். அரசியலிலும் அதனைச் சாதிப்பது தங்களுக்கு கடுமையான விடயமல்ல என்று நினைக்கிறேன். தவறுதலான ஒரு பாதையில் அறியாமல் சில தூரம் சென்று விட்டால், அப்பாதை பிழையெனத் தெரிந்ததும் திரும்பி சரியான பாதையில் நடப்பது தானே, அறிஞர்தம் செயலாய் இருக்கமுடியும்.
பிழையென்று தெரிந்தபிறகும் தோல்வியை ஒத்துக்கொள்ளமாட்டேன் என, பிழையான பாதையில் தொடர்ந்து நடக்க நினைப்பது, எங்ஙனம் அறிவுசார் விடயமாகும்? தங்களைப் போன்ற ஓர் உயர் அறிஞர் அத்தவற்றினை, எக்காரணம் கொண்டும் செய்யலாகாது என்பது என் கருத்து. நீங்கள் உடனடியாகச் செய்யவேண்டிய விடயங்களாய், என் மனதில்படும் சில கருத்துக்களை கீழே தருகிறேன். உடனடியாக கூட்டமைப்பில் இடம்பெறும் அனைத்துத்தலைவர்களையும் ஒன்றுகூட்டி ஓர் பேச்சுவார்த்தைக்கு ஒழுங்கு செய்யுங்கள். அப் பேச்சுவார்த்தையில் இருபக்கத்தினரும் விட்டுக் கொடுப்புக்களோடு, நடந்து முடிந்த தவறுகளை நேர்செய்ய முயலுங்கள். முடிந்தால் கூட்டமைப்புத் தலைமையோடு பேசி இன்றிருக்கும் தமிழ்த்தலைமைகள் அனைத்தையும் ஓர் அணியின் கீழ் திரட்ட உங்களால் முடிந்தவற்றைச் செய்யுங்கள்.
மனந்திறந்து பேசி ஐயங்களுக்கு அப்பாற்பட்டவராய் உடனடியாக உங்களை ஆக்கிக் கொள்ளுங்கள். புதிய திட்டங்களை அறிவிக்கும் போது, மக்களை ஈர்க்கும் அதன் இலட்சிய உயரங்களை மட்டும் கணக்கில் எடுக்காமல் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறை பற்றியும் சிந்திக்கச் செய்யுங்கள். பெரும்பான்மையினத்தின் முக்கிய தலைவர்கள் பலரையும் ஒவ்வொருவராய் மாகாண சபையின் விருந்தினராய் அழைப்பித்து நேசத்தோடு உரையாடி அவர்கள் மனங்களில் மாற்றங்கள் விளைவிக்க முயலுங்கள். அளவுக்கதிகமான உணர்ச்சிவயப்பாட்டால் நாம் அடையப்போவது ஒன்றுமில்லை என்பதை தமிழ்மக்களுக்கு உணர்த்துங்கள். மாகாணசபைக்குள் தாங்கள் சத்தியத்தின் சார்பானவரேயன்றி எந்தத் தனிநபரினதும் சார்பானவர் அல்லர் என்பதனை மற்றவர்கள் விளங்கும்படி உணர்த்துங்கள்.
கட்சிக்குள்ளும் மாகாணசபைக்குள்ளும் பிறந்திருக்கும் உட்பகைகளை உடன் நீக்க ஆவன செய்யுங்கள். ஆயிரம்தான் நீங்கள் உங்களை தனிப்பட்டவர் எனச் சொல்லிக்கொண்டாலும் ஒரு கட்சியின் அழைப்பின்பேரில் வந்து அக்கட்சியின் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றவர்தான் நீங்கள். எனவே முரண்பட்டாலும் எக்காரணங்கொண்டும் அக்கட்சிக்குத் துரோகம் இழைக்கமாட்டேன் என உங்களை திசைதிருப்ப நினைப்போரிடம் உறுதிபட எடுத்துரையுங்கள். தமிழ் மக்கள் பேரவையை அணிசாரா அவையாக உண்மையில் ஆக்கி, அதனுள் கூட்டமைப்புத் தலைவர்கள் அனைவரையும், ஏன்? மற்றைய தமிழ்த்தலைவர்களைக் கூட பங்குபெறுமாறு அதனைப்புதிப்பித்து தங்களை நடுநிலையாளராய் நிரூபிப்பதோடு அவ்வவையால் தமிழினம் உண்மைப்பயன்பெறும்படி செய்யுங்கள்.
மற்றவர் சொல்லி நான் செய்வதா? என்று நினைக்காமல், உங்கள் நிiலியிலருந்து இறங்கி வந்து, நாகவிகாரை சென்று தாங்கள் சாதித்துக் காட்டியது போல், மேற்கண்ட விடயங்களையும் ஆளுமையோடு தாங்கள் கையாளத்தலைப்பட்டால், உங்கள் உண்மை ஆதரவாளர்கள் அத்தனை பேரும் மகிழ்வார்கள். வரலாறு உங்களுக்கு ஒரு இடம் தந்திருக்கிறது. அதை வைத்து நீங்கள் உயரப்போகிறீர்களா? இனத்தை உயரச் செய்யப் போகிறீர்களா? இதுதான் தற்போதைய கேள்வி. நீங்கள் தாழ்ந்தேனும் இனத்தை உயர்த்துவீர்களேயானால், மீண்டும் ஓர் உயர் தலைமை தமக்கு வாய்த்ததில், தமிழினம் மகிழ்ச்சியும் பயனும் கொள்ளும். செய்வீர்களா?
-கம்பவாரிதி ஜெயராஜ்-