(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஸ்தாபிக்கப்பட்டு சுமார் எட்டு ஆண்டுகளாகின்றன. இந்த எட்டு ஆண்டுகளுக்குள் முன்னணி இரண்டு பொதுத் தேர்தல்களில் மாத்திரம் போட்டியிட்டிருக்கின்றது. ஓர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் இரண்டு மாகாண சபைத் தேர்தல்களைப் புறக்கணித்திருக்கின்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை. மாறாக, வேட்பாளர்களைத் தேடுவதில் ஏற்பட்ட சிக்கல்களினால் போட்டியிடவில்லை என்று முன்னணி தற்போது கூறிவருகின்றது. ஆக, மாகாண சபைத் தேர்தல்களை மாத்திரம் முன்னணி புறக்கணித்ததாகக் கொண்டு இந்தப் பத்தி மேலே செல்கின்றது.
2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான ஆசனப்பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறிகளை அடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து, 75 வருட பாரம்பரியத்தைக் கொண்ட, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் வெளியேறியது. வெளியேற்றத்துக்கான காரணங்களாக பல சொல்லப்பட்டாலும், அப்போதும் இப்போதும் அது ஆசனப்பங்கீட்டால் ஏற்பட்ட பிளவு என்றே பெருமளவான மக்களால் நம்பப்படுகின்றது.
கூட்டமைப்பிலிருந்து வெளியே வந்த (அப்பாத்துரை விநாயகமூர்த்தி தவிர்ந்த) காங்கிரஸும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் உட்பட இன்னும் சில தரப்புகளும் இணைந்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை முன்னிறுத்தி, ‘தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி’ என்கிற தேர்தல் கூட்டை அமைத்தன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, காங்கிரஸின் ‘சைக்கிள்’ சின்னத்தில் தேர்தல்களில் போட்டியிடுவதாலோ, அல்லது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ‘தமிழ்த் தேசியப் பேரவை’ என்கிற தேர்தல் காலத்து நாமத்தைச் சூட்டிக்கொண்டதாலோ, முன்னணி என்கிற அடையாளம் மாறப்போவதில்லை.
கடந்த எட்டு ஆண்டுகளில், தமிழ்த் தேசிய அரசியலுக்குள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணியாக, தன்னை முன்னிறுத்த வேண்டும் என்பதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பல பிரயத்தனங்களைச் செய்திருக்கின்றது.
அவை, சாத்தியமான வழிகளைத் திறக்கவில்லை என்கிற போதிலும் முன்னணி என்கிற அடையாளத்தைக் குறிப்பிட்டளவு மேல் கொண்டு வந்திருக்கின்றது.
கடந்த காலத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மாற்றுத் தலைமையாக முன்னிறுத்திய தரப்புகளோ அல்லது அவரை நம்பிக்கையான தலைமையாக ஏற்றுப் பின்செல்லும் இளைஞர்களோ, காங்கிரஸ் அடையாளம், முன்னணி மீது ஒட்டிக்கொண்டிருப்பதை பெரியளவில் விரும்பவில்லை.
அதுபோல, தமிழ்த் தேசியப் பேரவை என்கிற தற்போதைய தேர்தல் நாமத்தின் மீதும் அவ்வளவு நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. ஆக, விரும்பியோ விரும்பாமலோ, வெற்றி தோல்விகளுக்கு அப்பாலும், முன்னணி என்கிற அடையாளம் பேணப்பட வேண்டும் என்பது ஏற்கப்பட வேண்டியது. ஆனால், முன்னணி தனி அடையாளங்களுடன் மேலெழுவது என்பது தேர்தல் கூட்டுகள், நாமங்கள் தாண்டியும் சில அடிப்படைகளோடு முன்னெடுக்கப்பட வேண்டியவை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை, தனியொரு கட்சியாகப் பதிவு செய்து, தனித்துவமான சின்னமொன்றைப் பெறுவது தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.
அது, கஜேந்திரகுமாருக்காக ‘சைக்கிள்’ அடையாளத்துக்குள் தங்கியிருக்கின்றது. சைக்கிள் அடையாளம் என்பது கஜேந்திரகுமாரிடம் இருந்து வரவில்லை. அது, அவரின் பேரனான
ஜி.ஜி.பொன்னம்பலத்தின் அடையாளத்தோடு வருவது. இடையில் ‘மாமனிதர்’ குமார் பொன்னம்பலம் என்கிற அடையாளம் இருந்தாலும், குமார் தேர்தல்களில் சைக்கிள் சின்னத்தைக் கொண்டு வெற்றி பெற்றிருக்கவில்லை.
அதுபோக, குமாருக்கான அங்கிகாரம் என்பது, தேர்தல் அரசியல் சார்பிலானது அல்ல. ஆக, சைக்கிள் சின்னம் என்பது, ஜி.ஜியின் அடையாளத்தோடு வருவதுதான். (தமிழ்த் தேசிய அரசியலில் ஜி.ஜி.பொன்னம்பலம், மு.திருச்செல்வம், அ.அமிர்தலிங்கம் ஆகியோர் மீது எதிர்மறையான அடையாள அரசியல் இங்குண்டு. எப்படி, தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் என்கிற அடையாளங்கள் மக்களிடம் இன்னமும் கவர்ச்சி குறையாமலும் வீழ்ந்துவிடாமலும் இருக்கின்றதோ, அதேயளவுக்கு மற்றைய மூவர் மீதும் அதிருப்தி நீடித்து வருகின்றது.) அதுபோக, மறக்கப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை, மக்களிடம் மீளவும் கொண்டு போய்ச் சேர்த்த தமிழீழ விடுதலைப் புலிகள் போன்றதோர் ஆளுமை செலுத்தும் அமைப்பொன்று இப்போதில்லை.
அவ்வாறான நிலையில், ஜி.ஜியின் அடையாளங்களுக்கு அப்பால் சென்று, சைக்கிள் சின்னத்தை மக்களிடம் அவ்வளவு இலகுவாக கொண்டு சேர்க்கவும் முடியாது.
ஆக, தன்னுடைய அரசியல் பயணத்தில் மேலெழுவது தொடர்பிலான கட்டத்தை முன்னணி, புதிய சின்னத்தைப் பெறுவதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில், தேர்தல் அரசியலில் வெற்றி என்பது பிரதானமானது. அதைப் புறந்தள்ளிவிட்டுக் கொள்கை அரசியலை மக்களிடம் பெரியளவில் சேர்ப்பிக்க முடியாது. தேர்தல் அரசியல் என்பது, கொள்கை அரசியலை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், மக்களின் நாளாந்த மனநிலைக்கு ஏற்ப இயங்குவதிலும், அதனூடாக அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதிலுமே தங்கியிருக்கின்றது. அதுதான், கொள்கைசார் அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் உதவும். இல்லையென்றால், இலங்கையில் இடதுசாரி இயக்கங்களுக்கு ஏற்பட்ட நிலை ஏற்படும்.
கடந்த எட்டு ஆண்டுகளில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மக்களின் சுக துக்கங்களை உணர்ந்து கொண்ட போதும், அவர்களின் அவசரத் தேவை என்ன? முள்ளிவாய்க்காலுக்குப் பின்னராக ‘ஆசுவாசம்’ எவ்வளவு முக்கியமானது என்பதையெல்லாம் உணர்ந்து பிரதிபலிப்பதில் தவறியிருக்கின்றது.
குறிப்பாக, வடக்கு மாகாண சபைத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் மக்களின் மனநிலை- எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் நின்று, விறைப்பான நிலையைப் பிரதிபலித்ததும், முன்னணி மீதான அதிருப்தி அதிகரிப்பதற்குக் காரணமாகும்.
சமூக உளவியலின் தந்தை என்று போற்றப்படுகின்ற கேர்ட் லெவினின் ‘மாற்றக்கோட்பாடு’ (Change Theory) சமூக, வர்த்தகப் பரிபாலனங்களின்போது கவனத்தில் கொள்ளப்படக்கூடியது. ஆரம்பத்திலிருந்து மனிதனின் வாழ்வும் அதனோடு சம்பந்தப்பட்ட அரசியல், வர்த்தகம் உள்ளிட்டவையும் அதன் போக்கில்தான் நிகழ்ந்தும் இருக்கின்றன.
1. நடத்தை பற்றிய உளவியல் நோக்கு
2. சமூக நிலையை முழுமையாக உள்வாங்குதல் (கவனித்தல்)
3. வரலாறுகளுக்குப் பதிலாக நடைமுறைக் காரணிகளை முன்வைத்தல்
4. மாறுகின்ற தன்மையை இயல்பாக்குதல்
இந்த நான்கு படிமுறைகள்தான் மாற்றக் கோட்பாட்டின் அடிப்படை. அதை இலகுவான உதாரணத்தில் சொல்வதானால், தங்கக்கட்டியொன்றிலிருந்து விரும்பிய நகையைப் பெறுவதற்கு அதை வெப்பமூட்டி, வெட்டி, வளைத்து வடிவங்களை மாற்றி, இறுதி செய்து கொள்ள வேண்டும்.
மாறாக, தங்கக்கட்டியை அப்படியே வைத்து, புதிய நகைகளை வடிவமைத்துவிட முடியாது. அங்கு தங்கக் கட்டியை உருக்கும் நிலையும் நகையாக உருமாற்றும் நிலையும் உருமாற்றிய நிலையை உறுதிப்படுத்தும் நிலையும் உண்டு. அப்போதுதான், நாம் விரும்பிய நகையைப் பெறமுடியும். அந்த நிலையைத்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தன்னுடைய அரசியல் கட்டங்களில் கடைப்பிடித்திருக்க வேண்டும்.
அதாவது, தமிழ் மக்களை, தங்களை நோக்கிக் கவர்வது என்பது, அந்த மக்களிடமிருந்து விலகியிருப்பதானால் சாத்தியப்படாது. மக்களின் மனநிலைகளுக்குப் பின்னால் சென்று, அதற்கு வளைந்து கொடுத்து, தன்னுடைய அரசியலைப் புகுத்தி, தன்னுடைய வடிவத்தை இறுதி செய்திருக்க வேண்டும்.
தங்கக் கட்டிகளின் பெறுமதி அதிகமானதுதான். ஆனால், யாரும் தங்கக்கட்டிகளை அணிந்து கொள்வதில்லை. தங்கக் கட்டிகளை உருமாற்றி நகைகளாகத்தான் அணிய முடியும்.
(இங்கு, தங்கம் என்கிற உதாரணம் கையாளப்படுவதால், முன்னணியை மாற்றுக்குறையாக தங்கம் என்கிற தோரணையில் யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். தகரம், பித்தளை போல ஓர் உலோகமாகக் கருதினால் போதுமானது)
தேர்தல் அரசியலில் முன்னணியின் தோல்வி என்பது, தேர்தல் புறக்கணிப்புக் கோசங்கள் சார்ந்தும் உருவாகியவை. (மஹிந்தவுக்கு எதிரான) எதிர்ப்பு அரசியலின் வடிவமாக, வடக்கு மாகாண சபைத் தேர்தலைத் தமிழ் மக்கள் கருதிய போதும், அதற்கு எதிராகத் தேர்தல் புறக்கணிப்பு என்கிற வாதத்தை முன்வைத்தமை முன்னணி மீதான பெரும் அதிருப்தியாக மாறியது.
அதை ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் முன்னணி முன்னெடுத்தபோது, மக்களுக்கு அதிக எரிச்சல் ஏற்பட்டது. அதுவே, கடந்த பொதுத் தேர்தலில் அவர்களின் படுதோல்விக்கும் காரணமானது.
அப்படியான நிலையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துத் தன்னுடைய நிலையைத் தளர்த்திக் கொண்டு முன்னணி வந்திருப்பது முக்கியமான மாற்றம்.
அது, அவர்களுக்கு கடந்த காலத்தில் பெற்ற வாக்குகளைக் காட்டிலும் அதிகமான வாக்குகளைப் பெறுவதற்கும் உதவலாம். ஆனால், அவர்களின் தேர்தல் அரசியல் என்பது, யாழ்ப்பாணத்தை மாத்திரம் பிரதானப்படுத்தியிருப்பது என்பது, தோல்விகளின் பக்கத்துக்கு மீண்டும் அழைத்துச் செல்லலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும், மக்களை மாற்றுவதற்கு முதல், தாங்கள் மாற வேண்டியிருப்பதை ஏற்றுக்கொண்டு அரசியல் செய்ய எத்தனித்திருக்கும் முன்னணியின் முடிவு வரவேற்கப்பட வேண்டியது.