முரளிதரனும், விஜய்சேதுபதியும்


அத்துடன் முத்தையா-முரளிதரனை தமிழினத்துரோகியாகச் சித்தரிக்கின்றார்கள். இவ் எதிர்ப்பலை புலம்பெயர் தமிழர்கள் தொடங்கி தென்னிந்திய திரைத்துறைசார் பிரபலங்கள் வரை வலுப்பெற்று நிற்கிறது.
இது சரியா? தவறா?
இதன் பின்னணி என்ன?
இவ் எதிப்பின் நியாயம் சரியானதா?இதைத்தூண்டிய தரப்பு எது?
என்பதை நாம் நோக்கவேண்டியுள்ளது.
பிரபலங்களை விமர்சிப்பவர்களில் மூன்று வகையினர் உள்ளனர்.
1-தமது தனிப்பட்ட சுயநலமான காழ்ப்புணர்ச்சியை பொதுமையானதாக மாற்றி சமூகத்தில் பரவவிடும் துறைசார்ந்த பொறாமைக்காரர்கள்.
2-பிரபலங்களை விமர்சித்து தாமும் பிரபலமாக மாற நினைக்கும் அற்ப ஆசைபிடித்த ஆசாமிகள்.
3-மற்றவனின் பொய்ப்பிரச்சாரத்தில் மயங்கி உணர்ச்சிவசப்பட்டு திணறும் உண்மையான அப்பாவி உணர்வாளர்கள்.
இதில் 3வது தரப்பினரே பரிதாபத்திற்குரியவர்கள்.அவனவனின் சுயநலத்தில் ஆடும் பம்பரங்கள்.
நான் தமிழ்த்தேசியத்தை ஆதரிப்பவன் என்பதை திடப்படுத்திக் கூறிக்கொண்டு,தூரநோக்கமான இருப்பே ஈழத்தமிழனைக் காக்கும் என்பதனையும் நினைவுறுத்திக்கொண்டு இப்பதிவை தர்க்க ரீதியில் நடுநிலைதழுவி எழுதுகிறேன்.
அந்தவகையில் விஜய் சேதுபதி ஒரு திரைப்பட நடிகர். கலைப்பணியே அவர்பணி.அவரை திட்டமிட்டு கொச்சைப்படுத்துவதை ஏற்கமுடியாது.நடிப்பது அவரின் வேலை.விஜய் சேதுபதியின் நியாயங்களை அறியாது உணர்ச்சிவசப்படுவதும் ,அவரை அவதூறாக விமர்சிப்பதும் தவறானதாகும்.
முரளிதரன் அவர்கள் சிறந்த கிறிக்கட் வீரராக உலகசாதனை புரிந்த வீரர். அவர் இலங்கையின் அடையாளங்களில் ஒருவர்.ஒரு தமிழன்.அவருக்கென்று தனிவரலாறு உண்டு.
அவரின் தனிப்பட்ட கொள்கை என்பது அவரின் சுயம் சார்ந்ததாகவே நோக்கப்படவேண்டியது.
அவர் ஈழவிடுதலைப்போராட்டதற்கு எதிரான சிந்தனை கொண்டவராக இருப்பது அவரின் சுதந்திரம்.போராட்டத்திற்கான ஆதரவும், எதிர்ப்பும்,அவரவரின் பார்வைத்தன்மையிலும், அவர்களின் வாழ்வியல் நிலையிலுமே சார்ந்துள்ளது.சிலகேள்விகளை நாமே எமக்குள் கேட்கவேண்டியுள்ளது உறவுகளே.
1-போராட்டத்தை முத்தையா முரளிதரன் நேரடியாக அழித்தாரா?
2-இலங்கையிலுள்ள தமிழர்கள் எல்லோருமே போராட்டத்தின் ஆதரவாளர்களா?
3-எய்தவன் இருக்க அம்பை நோகலாமா?
4- துரோகி தியாகி என்று முத்திரை கொடுக்கும் அனுமதியை எமக்கு யார் தந்தது?
5-அல்பிரட் துரையப்பாவின் பெயரிலுள்ள விளையாட்டரங்கை யாழ் தமிழர்கள் அழிக்கத்தயாராக உள்ளீர்களா?
6-கடந்த 2020 பாராளுமன்றத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குப்பெற்ற உறுப்பினர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியை சார்ந்தவர் ஆவார். அக்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் அரசியல் வெற்றியாகவே அது பார்க்கப்படுகிறது. அதுபோல வடமாகாணத்தில் இரண்டு ஆசனங்களைப்பெற்றனர் இலங்கை அரசவிசுவாசக் கட்சியாகிய ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியினர்.அதுபோல அரசகட்சியில் மட்டக்களப்பில் அமைச்சர் வியாழேந்திரன் வெற்றிபெற்றார். அதுபோல அரசின் நட்புறவான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அதிகளவு விருப்பு வாக்குக்களுடன் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மட்டக்களப்பில் வெற்றிபெற்றார்.அதுபோல அம்பாறையில்(திகாமடுல்ல) கருணா அம்மான் தோல்வியடைந்திருந்தாலும் அவரால் 7.61%வாக்குக்களை அதாவது தமிழர் மகாசபையானது 29,379 வாக்குக்களைப் பெற முடிந்தது. அப்படியானால் வாக்களித்த அத்தனை பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் தங்கள் பார்வையில் துரோகிகளா?
7-ஏன் இலங்கையிலுள்ள தமிழர்கள் எல்லோருமே போராட்டத்தை ஆதரித்தார்களா?
8-அரசபணியிலுள்ள தமிழர்கள் எல்லோரும் அரசின் சேவகர்களே.அப்படியானால் அவர்களையும் துரோகிகள் என்பீர்களா?
அவர் இருந்த நிலையில் அவர் அரசபக்கம் சார்ந்திருக்கவேண்டிய தேவை இருந்ததையும் அவரின் வாழ்க்கை முறையையும் இங்கு கவனிக்க வேண்டும்.
நான் முத்தையா முரளிதரனின் ஆதரவாளன் அல்ல. அவரை வரலாறாக படம் எடுப்பதை சரியென்றோ தவறென்றோ நான் வாதிடவில்லை. முரளிதரனின் கருத்துக்களில் எனக்கும் வருத்தம் இருக்கிறது.அவரின் கருத்தியலை நானும் ஏற்கமுடியாது.
ஆனால் கருத்தியலை ஆரோக்கியமாக கருத்தியலால் வெல்லவேண்டுமே தவிர அநாகரீகமாக கொச்சைப்படுத்துவதையோ அவரின் துறைசார் திறமையை கேவலப்படுத்துவதையோ ஆரோக்கியமான சிந்தனையாக நான் கருதமாட்டேன்.
அதுபோலவே இச்சம்பவத்தை வைத்து தென்னிந்திய திரைத்துறை விஜய்சேதுபதி மீது சேறுபூசுவதும் தவறானதாகும்.
முரளிதரனைப்பற்றி விமர்சிப்பதாக எண்ணிக்கொண்டு 800படத்திற்கான இலவச விளம்பரம் செய்தவர்களே அதிகமானோர்.
இலங்கை கிறிக்கட் அணியில் தமிழன் ஒருவன் சாதித்தான் என்பது வரலாறாவதில் நாம் தூரநோக்கில் இலங்கை வரலாற்றை நோக்கவேண்டுமே தவிர இங்கு முரளிதரனின் பேச்சையோ அவரின் கொள்கையையோ கடந்து செல்லவேண்டிய தேவையே உள்ளது.
பேசப்படவேண்டிய விடயங்கள் ஏராளம் உண்டு. தனிமனித காழ்புணர்ச்சியை தவிர்க்கும் இனமே பொதுவுடமையைப் பேசும் சக்திவாய்ந்ததாக மாறும்.இதை கடந்து செல்வதே காலத்தின் உசிதம் என்று நான் கருதுகிறேன்.
ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தென்னிந்தியத்தமிழர்கள் நினைத்திருந்தாலோ அல்லது உலகத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒருசேர ஒற்றுமையாக அன்று இணைந்திருந்தாலோ என்றோ தமிழீழம் தமிழர்களுக்குக் கிடைத்திருக்கும்.
மற்றவனின் தியாகங்களில் குளிர்காயவே பலர் விரும்பினார்கள். அவர்களின் தியாகங்களிலேயே இன்றும் அரசியல் செய்கிறார்கள்.
பாவப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் நாம். எமக்குள்ளே வாக்குவாதப்பட்டு எதிர்ப்பை அதிகரித்து, பலதுண்டுகளாகப் பிளவுற்று, ஆளுமைகளைச் சிதைத்து,ஒற்றுமை இழந்து “குண்டுச்சட்டிக்குள் துதிரையோட்டிய கதையாக” எம்மவர்களை நாமே அழித்துக்கொள்ளும் அளவில் காலம் எம்மை நிறுத்தியிருக்கிறது என்பதை நினைக்கும்போதே மனம் வலிக்கிறது.
ஒற்றுமையற்ற இனம் ஒருபோதும் உருப்படாது என்பது மட்டும் நிதர்சனம்.
நன்றி
கலைஇளவரசன்